பக்கம் நோக்கி நிற்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டைவாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக்கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.
பொ-ரை :- அவன் வருவதற்குரிய பக்கத்தையே நோக்கிக் கொண்டு நிற்பாள், வருந்துவாள் என்று அன்னையராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; தக்க கீர்த்தி நிறைந்த திருக்குறுங்குடியிலேயுள்ள நம்பியை நான் பார்த்தபிறகு, கோவைக்கனி போன்ற பிரகாசம் திரண்டிருக்கிற திரு அதரமும் நீண்ட புருவங்களும் தக்கனவான தாமரை போன்ற திருக்கண்களும் பாவியேனாகிய என்னுடைய உயிரிடத்திலே தங்கி நலியாநின்றன.
வி-கு :- ஆவியின்மேலன: என்பதில், மேல் என்பது, ஏழாம் வேற்றுமையுருபு. ஆவியினிடத்தன என்பது பொருள். ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என் உயிர்நிலையிலே நலியாநின்றன என்கிறாள்.பக்கம் நோக்கி நிற்கும் – அவன் வருகைக்குச் சம்பாவனையுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று. 2“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை, ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தையுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.” என்றது, 3அரக்கியர்களைப் பார்ப்பதோடு புஷ்பங்களையும் பழங்களையுமுடைய மரங்களைப் பார்ப்பதோடு வாசி அற்று இருக்கிறது காணும் இவளுக்கு. அருகிருந்தவர்களையும் பாராளாயிற்று என்றபடி. நையும்-அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள். என்று அன்னையரும் முனிதிர் – 4அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்தபடியை அறியும் நீங்களும் முனியாநின்றீர்கோள்.1“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள்தன்படி. தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் – சொன்னபடி எல்லாம் தகும்படி இருக்கிற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை அக்கீர்த்தியினையே ஜீவனமாக இருக்கும் நான் கண்டபின். தொக்க சோதித் தொண்டை வாயும் – 2“கோலம் திரள் பவளக் கொழுந்துண்டம்” என்னுமாறு போன்று, ஒளிப்பொருளே திரண்டாற் போலே இருக்கிற தொண்டை போன்ற திருவாயும். தொண்டை – கோவை. இதனை, அதரத்துக்கு ஒப்பாகச் சொல்லக் கடவதன்றோ. நீண்ட புருவங்களும் – 3உபமானம் அற்றதாய், தனக்கு ஓர் அவதி இல்லாமையாலே தன்னேற்றமே சொல்லும்படியிருக்கிற திருப்புருவங்களும். தக்க தாமரைக் கண்ணும் – அதனுடைய நெடுமைக்கு எல்லை இல்லாதது போன்று அளவிட்டு அறிய முடியாததாய், அப்புருவங்களுக்குத் தகுதியாயிருக்கிற தாமரைக் கண்களும். 4தாமரையை ஒரு போலியாகச் சொல்லில் சொல்லலாமத்தனை. பாவியேன் ஆவியின் மேலனவே-உயிர் நிலையிலே நலியாநின்றன. 5அகவாயில் வெளிச்சிறப்பு அழகிது. அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.
அப்படிப் பார்த்துக்கொண்டிருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இந்தச் சீதை’ என்று தொடங்கி.
“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்பபல த்ருமாந்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம்ஏவ அநுபஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“அன்னையரும்” என்ற உம்மைக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அறியாக்
காலத்துள்ளே’ என்று தொடங்கி. அதனைத் திருஷ்டாந்தத்தோடு
விவரிக்கிறார் ‘இளமைப்பருவமே’ என்று தொடங்கி.
“அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்”-என்பது, திருவாய். 3. 3 : 3.
“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமிவர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங்கொலோ அறியேன்?” என்பது, திருவாய். 7. 7 : 3.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply