திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

தெய்வங்காள் என்செய்கேன்? ஓர்இரவு ஏழ்ஊழியாய்
மெய்வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்துஎன் கண்ணனும் வாரானால்
தைவந்த தண்தென்றல் வெம்சுடரில் தான்அடுமே.

பொ-ரை :- தெய்வங்களே! என்ன செய்வேன்? ஓர் இரவானது ஏழு ஊழிக்காலமாக நீண்டு மெய்யாகவே என்முன்னே வந்து நின்று என்னுடைய உயிரை வருத்துகின்றது; கையிலே வந்திருக்கின்ற சக்கரத்தையுடைய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; தடவுகின்ற குளிர்ந்த தென்றலானது கொடிய நெருப்பைக்காட்டிலும் கொடிதாக வருந்தாநின்றது.

வி-கு :- இரவு மெலிவிக்கும் என்க. கைவருதல் – கையிலே வந்திருத்தல். அன்றிக்கே, அடக்கமான என்னலுமாம். தைவந்த-தை மாதத்தில் வந்த. அன்றிக்கே, தடவுதலுமாம். சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப்பொருவுமாம்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1ஓர் இரவே பல யுகமாய் மிகவும் நலியாநின்றது, எம்பெருமானும் வருகின்றிலன், அதற்கு மேலே தென்றலும் நலியாநின்றது என்கிறாள்.

தெய்வங்காள் என் செய்கேன் – 2மற்றும் உறங்காதிருப்பவர்கள் உளராகில் அன்றோ அவர்களைப் பார்த்துச்சொல்லலாவது. ஓர் இரவு ஏழ் ஊழியாய் – மேலே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியாநின்றது. 1சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற்போன்று, இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளாநின்றது என்றபடி. மெய் வந்து நின்று-2ஈச்வரன் கட்டின மர்யாதை குலைக்க ஒண்ணாமை வந்தது மாத்திரம் அன்றிக்கே, தனக்கே சீற்றமுடையாரைப் போலே மெய்யே முன்னே வந்து நின்று. 3இராவணன் இடம் பார்த்து வந்தாற்போன்று, விரகநிலை என்று அறிந்து நலியாநின்றது என்பாள் ‘வந்து நின்று’ என்கிறாள். எனது ஆவி மெலிவிக்கும் – 4மோர்க்குழம்பு கொடுத்துத் தேற்றி விடுநகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி நலியாநின்றது. என்றது, போன உயிரை மீளக்கொடுத்து நலியா நின்றது என்றபடி.

கைவந்த சக்கரத்து-5இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந – இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந – 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

2ஸ்ரீவீடுமரைத் தொடருகிறபோது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி. ஸ்ரீவீடுமர் நெடும்போது பொருதபடியால் அருச்சுனன் இளைத்தான், அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான், தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான். 3“ஏஹி ஏஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் ஆணை மறுத்தாலும் சேதம் இல்லையே! இச்சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப்பெற்றால்,ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன், என் கையில் ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர். லோகநாத-வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ. 1அன்றிக்கே, கைவந்த சக்கரத்து என்பதற்கு, அற விதேயமான சாதனத்தையுடையவன் என்னலுமாம். 2“ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

என் கண்ணன்-3அடியார்கட்காகத் தன் சூளுறவையும் அழிய மாறுமவன் அலனோ. அடியார்களுள் ஒருவர்க்குச் செய்தது எல்லார்க்குமாக இருக்குமே. 4‘அடியார்கட்காகத் தன் சூளுறவை அழியமாறும்’ என்னுமிது தஞ்சமாக அன்றோ இவனைப் பற்றுகிறார் பற்றுவது. தனக்கு என்னவும் நியதமாயிருப்பன சில உளவாகில் இவனைப் பற்றுவார்க்குப் பலம் இல்லை. தை வந்த தண் தென்றல் – குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் என்னுதல். தடவிக் கொண்டு வருகின்ற குளிர்ந்த தென்றல் என்னுதல்; என்றது, கணவன் கைகளால் தன்னைத் தீண்டுவதனை நினைப்பூட்டுவதாய் இரா நின்றதாயிற்றுக் குளிர்ந்த தென்றல் என்றபடி. “தான் சென்று மண்மகளைத் 1தைவந்தான்” என்ற இடத்துத் தைவருதல் என்பது, தடவுதல் என்ற பொருளதாதல் காண்க. வெம் சுடரில் தான் அடுமே – வெவ்விய சுடரைக்காட்டிலும் அடும் என்னுதல். சுடரைப் போன்று நலியாநின்றது என்னுதல். 2உலகத்திலே உள்ள நெருப்பைக்காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ, நரக அக்நியைக்காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading