திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

புக்குஅடி மையினால் தன்னைக் கண்ட
மார்க்கண் டேயன் அவனை
நக்க பிரானும் அன்றுஉய்யக் கொண்டது
நாரா யணன் அருளே;
கொக்குஅ லர்தடம் தாழை வேலித்
திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பி ரான்நிற்க, மற்றைத்
தெய்வம் விளம்புதிரே!

   பொ-ரை : ‘அடிமையாய்ப் புகுந்து சிவபிரானாகிய தன்னைக் கண்ட மார்க்கண்டேயனைச் சிவபிரானும் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றியது நாராயணனுடைய திருவருளாலேயாம்; கொக்கைப் போன்று வெண்மை நிறத்தோடு மலர்கின்ற பெரிய தாழைகளை வேலியாகவுடைய திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்திலே மேன்மையையுடைய ஆதிப்பிரான் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்க, வேறு தெய்வங்களைப் பற்றிப் பேசுகின்றீர்களே! உங்கள் அறிவின்மை இருந்தவாறு என்னே!’ என்கிறார்.

    வி-கு : ‘அடிமையினால் புக்குத் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன்’ என்க. ‘தன்னை’ என்றது, சிவபெருமானை. நக்கன் – வஸ்திரமில்லாதவன்; சிவபிரான். ‘திகம்பரன்’ என்றபடி. அருளே – ‘அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமை விரிக்கவும். கொக்கு – ஒரு பறவை, மாமரமும் ஆம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘இங்ஙனே இருக்கச்செய்தேயும், மற்றைத்தேவனாகிய சிவபிரானை வணங்கி அன்றோ மார்க்கண்டேயன் தான் விரும்பிய பயனைப் பெற்றது?’ என்ன, ‘ஆகில், இருந்தபடி கேட்கலாதோ?’ என்கிறார்.

    புக்கு அடிமையினால் – அடிமையினால் புக்கு; என்றது, ‘சர்வேசுவரனுக்கு அடிமை என்று புக்கான் அல்லன்; ‘உருத்திரனுக்கு அடிமை’ என்று புக்கான்,’ என்றபடி. 2தன்னைக் கண்ட – காணப் பெறாமையாலே தான் இழந்தான் அல்லன். ஆக, ‘போற்றி வணங்கிய தன்மையில் குறையினாலே இழந்தான் அல்லன்; காணப் பெறாமையாலே இழந்தான் அல்லன்,’ என்றபடி. மார்க்கண்டேயன் அவனை – மார்க்கண்டேயனானவனை. 3நக்கபிரான் – நக்கன் – நக்நன். ‘பிரான்’ என்கிறார், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனாய் இருக்கையாலே. அன்றிக்கே, 4ஞானத்தினைக்

கொடுக்கக் கூடியவன் ஆதலாலே ‘பிரான்’ என்கிறார் என்னுதல். 1மேல், ‘நாராயணன்’ என்கையாலே, ‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று ஞானோபதேசத்தைச் செய்து அவன் திருவடிகளிலே காட்டிக்கொடுத்தான் என்கை.

    அன்று உய்யக்கொண்டது – ஆபத்துக்காலத்திலே பாதுகாத்தது. நாராயணன் அருளே – நாராயணனுடைய திருவருளாலேயாம். என்றது, 2‘நீ நெடுநாள் பச்சையிட்டு என்னை வணங்கினாய்; அவ்வணக்கம் பயன் அற்றுப் போயிற்றதாக ஒண்ணாது,’ என்று அவனை அழைத்து, ‘நானும் உன்னைப்போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக்காண் இப்பதம் பெற்றது; ஆதலால், இனி உன்னுடைய விருப்பத்தை நம்மால் செய்து முடிக்க இயலாது; இனி ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலே அன்றோ?’ என்று அவனைக் கொண்டுபோய்ச் சர்வேசுவரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி. ‘அருள்’ என்ற பெயர்ச்சொல் எல்லா வேற்றுமையோடும் சேரத் தக்கதாகையாலே, ‘அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமையாக விரித்துக்கொள்க. அன்றிக்கே, ‘சிவபிரான் இவனைக் காப்பாற்றிக்கொண்டது சர்வேசுவரன் திருவருளைப் பண்ணிக் கொடுத்து’ என்று இரண்டாம் வேற்றுமையாக விரித்துப் பொருள் கோடலுமாம். ‘இவன் புருஷகாரமாய் நின்று திருவருள் புரியச் செய்தான்,’ என்றபடி.

    கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூரதனுள் – கொக்குப் போன்று வெளுத்த நிறத்தையுடைய மலர்களை உடைத்தாயிருப்பதாய்ப் பெருத்திருந்துள்ளதாழைகளை வேலியாக உடைத்தாயிருக்கின்ற திருநகரியாயிற்று; இதனால், நிலத்தியல்பு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. மிக்க ஆதிப்பிரான் நிற்க -அறப்பெரிய உலகத்திற்கெல்லாம் காரணமாயுள்ளவன் நிற்க; ‘மிக்க’ என்றதனால், சொல்லும் போது கனக்கச் சொல்லி, கிட்டினவாறே குறைந்திராதொழிகையைத் தெரிவிக்கிறார். ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், நெடுநாள் தன்னை வணங்கும்படி செய்துகொண்டு பின்பு காரிய காலத்தில் வந்தவாறே வேறே ஒருவன் வாசல் ஏறக் கொண்டுபோக வேண்டாதிருக்கையைத் தெரிவித்தபடி. மற்றைத் தெய்வம் விளம்புதிரே – 1‘சரீரங்களிலே ஒன்றை ஈசுவரனாகச் சொல்லுகின்றீர்கோளே!’ என்றது, ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும் பொருளாகுந்தன்மை இன்றிக்கேயிருக்க, சரீரியாகச் சொல்லிக் கேட்டினை அடைகின்றீர்கோளே கெடுவிகாள்!’ என்கிறார் என்றபடி. ‘விளம்புதிரே’ என்ற ஏகாரத்தால், ‘எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’ என்று இருக்கிறார்காணும் இவர்.

மார்கண்டேயன்
நாராயணன் அருளால்
இவன் நிற்க –
அடிமையினால் புக்கு
ருத்ரனுக்கு அடிமை -புக்கு கண்டான் -இரண்டு சப்தம்-
நக்க பிரான் -நக்நன் ஆடை இன்றி
பிரான் -உபகாரன் ஸ்வ கோஷ்டிக்கு உபகாரன்
ஞானம் கொடுத்த ஈச்வரனே பர தெய்வம் காட்டிய உபகாரகன்
அவனுக்கு சேஷம் -உன்னோடு என்னோடு வாசி இன்றி
உய்யக் கொண்டது ஆபத் தசையிலே
நெடு நாள் ஆஸ்ரயித்தாய்
நானும் உன்னைப் போலே ஆஸ்ரயித்து இந்த பதவி பெற்றேன்
அருளே –
சர்வேஸ்வரனை காட்டிக் கொடுத்து அருளாலே
ருத்ரன் மார்கண்டேயனை ரஷித்தது சர்வேஸ்வரனை காட்டிக் கொடுத்தது
கொக்கு அலர்
மிக்கு -சொல்லும் பொழுதும் கார்ய காரணத்தாலும் -மிக்கு
தானே அருளும்
இவன் நிற்க
பிரகாரங்களில் ஒன்றை ஈஸ்வரன் என்று நினையாமல்
பிரகரியாக கொண்டு விவகரிக்கைக்கும் யோக்யதை இல்லை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading