திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஓடிஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்துபல்படி கால்வழி ஏறிக்கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குரு கூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.

    பொ – ரை : ‘வேறு ஒரு தெய்வத்தைப் பாடியும் ஆடியும் வணங்கியும் பலப்பல வகைகளாலே சாஸ்திரங்கள் கூறிய வழிகளிலே சென்று திரிந்து திரிந்து, பல பிறப்பும் பிறந்து, அதன் பலன்களைக் கண்டீர்கள்; ஆன பின்பு, தேவர்கள் ஒருங்கு கூடித் துதிக்கும்படியாகத் திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்திலே நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற ஆடு புட்கொடியையுடைய ஆதிமூர்த்திக்கு அடிமை புகுங்கோள்,’ என்கிறார்.

வி-கு : ‘மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து வழி ஏறி ஓடி ஓடிப் பிறந்து கண்டீர்’ என்க. ‘வானவர் கூடி ஏத்தத் திருக்குருகூரதனுள் நின்ற ஆதிமூர்த்தி’ என்க. ஆடு புள் – வெற்றி பொருந்திய கருடப்பறவை. ஆதிமூர்த்தி – உலகிற்குக் காரணனான மூர்த்தி. மூர்த்தி – திருமேனியையுடையவன். புகுவது – வியங்கோள் வினைமுற்று. ‘கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுகளே’ (திருக்கோவையார், 87.) என்புழிப்போன்று கொள்க.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘அது செய்கிறோம்; ‘மற்றைத் தேவர்கட்கும் உயர்வுகள் சில உண்டு,’ என்று நெடுநாள் அவர்கட்குப் பச்சை இட்டுப் போந்தோம்; அப்பச்சையின் பயன் அற்றுப்போகாமல் இன்னம் சிலநாள் அவை பலிக்கும்படி கண்டு பின்பு பகவானை அடைகிறோம்,’ என்ன, ‘அவையும் எல்லாம் செய்து கண்டீர்கோள் அன்றோ?’ இனி அமையும்காணுங்கோள்,’ என்கிறார்.

    ஓடிஓடி – 2சுவர்க்கம் முதலான உலகங்களில் விருப்பம் உள்ளவர்கள், போவதையும் வருவதையும் அடைகிறார்கள்,’ என்கிறபடியே, போவது, பிறவிகளோடே வருவதாய்த் திரிந்தது இத்தனை அன்றோ? பல பிறப்பும் பிறந்து – 3ஆத்துமா என்றும் உள்ளவன்; அசித்தும் அப்படியே; அசித்தினுடைய சேர்க்கையும் என்றும் உள்ளதாய், கர்மப் பிரவாஹத்தாலே பரம்பரையாய் வருகிற பிறவிகளும் உருவப்போருகிறது; நீங்கள் முன்னும் பின்னும் அறியாமலே அன்றோ ‘இது ஒரு பிறவியே உண்டாயிற்று,’ என்று இருக்கிறது? மற்றும் ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து – வேறு ஒரு தெய்வத்தை அடைந்து பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்ச் சொல்லி, அவ்வளவில் முடிவு பெறாமல் வேறுபட்டவராய், 4‘என்னை நமஸ்காரம் செய்’ என்கிறபடியே, பகவத் விஷயத்தில் உட்புகுமளவும் உட்புகுந்து. என்றது, ‘இப்படி அநாதியாகத் தொடர்ந்து போதருகிற பிறவிகளிலே ஒரு பிறவி ஒழியாமல் மற்றைத் தேவர்களை அடைக்கலமாக அடைந்து போந்தீர்கள்; அது செய்கிறவிடத்தில் 1முக்கரணங்களாலும் செய்தீர்கள்; ஆதலால், பற்றுகிற தன்மையில் குறையால் பலியாது இருந்தது அன்று; அதில் குறை இல்லை,’ என்றபடி. பல்படிகால் – ஒருவகையாகப் பற்றி விட்டீர்களோ? 2பல வகைகளால் பற்றினீர்கள். வழி ஏறிக் கண்டீர் – அவ்வத்தேவர்களைப் பற்றும்படி சொன்ன சாஸ்திரமரியாதை தப்பாமல் பற்றி அதன் பலமும் கண்டீர்கோள் அன்றோ? ‘நன்று; ‘பல் படி கால் வழி ஏறிக் கண்டீர்’ என்கைக்கு, ‘இவர்கள் ஒரு பிறவியிலும் பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திலர்கள்’ என்று இவர் அறிந்தபடி எங்ஙனே?’ என்னில், இப்போது தாம் இந்தப் பொருளை உபதேசிக்கவேண்டும்படி இவர்கள் இருக்கக் காண்கையாலே, ‘இதற்கு முன்னர் இவர்கள் பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திலர்கள்,’ என்று அறியத் தட்டு இல்லையே அன்றோ?

    3‘சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தை விரும்பக்கடவன்; அக்கினியிடமிருந்து செல்வத்தை விரும்பக்கடவன்; சிவனிடமிருந்து ஞானத்தை விரும்பக்கடவன்’ என்கிறபடியே, பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திருப்பார்களேயானால் முத்தர்கள் ஆவார்களோ? மற்றைத் தேவர்களைப் பற்றிய காரணத்தினாலேயே இவ்வளவும் வர இறந்தும் பிறந்தும் போந்தார்கள்; 4‘பிரமனையும் சிவனையும் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்களையும்

மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் சேவிக்கமாட்டார்கள்; ‘என்னை?’ எனின், ‘அந்தத் தேவர்களிடமிருந்து கிடைக்கும் பலம் மிகச் சிறியது,’ என்கிறபடியே ‘மோக்ஷபலம் சித்திக்க வேணும்’ என்று இருக்கிறவர்கள், புன்சிறு தெய்வங்களைப் பின் செல்லார்களே அன்றோ? அதற்குக் காரணம், அவர்களால் கொடுக்கப்படுமவை அழியக்கூடிய பலன்களாகையாலே. ‘முருகன் சிவன் இந்திரன் முதலான தேவர்கள் ஆராதிக்கும் விஷயத்தில் விலக்கப்பட்டிருக்கிறார்கள்,’ என்றதே அன்றோ சாஸ்திரமும்?

    1ஒருவன் பகவானைத் தியானம் செய்துகொண்டிருக்கச்செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறியவேண்டும்’ என்று பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்; ‘சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே, கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே?’ வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக்காண் நான் பற்றுகிறது; இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சையிட்டுத் திரியுமவன் அல்லேன்காண்; இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய், அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகாநிற்க, இவர் அநாதரித்திருந்தாராய், தேவியானவள், ‘நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக்கொண்டிருந்தானே!’ என்ன, தேவனும், ‘அவன் பகவத்பத்தன் போலேகாண்,’ என்ன, தேவியும், ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன, இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும் வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாய் இருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன, ‘அழகிது! அவையெல்லாம் செய்யக்கடவன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன ‘அது நம்மாலே செய்யலாமதன்று; பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன, ‘ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது? நம்மால் செய்யப் போகாது,’ என்ன, ‘ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற்கண்ணைக்காட்ட, இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.

    கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் – 2உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக் கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று அங்கே வணங்காநிற்பர்கள்; அவர்கள் செய்கின்றவற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்தலையறுப்பாரும் தலையறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப் போகட வேண்டும்படியான விரோதம் செல்லாநிற்கச் செய்தேயும், ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தாநிற்பர்கள், ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச்செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?

    ஆடு புட்கொடி மூர்த்தி – ‘வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார். ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை. அன்றிக்கே, ‘சர்வேசுவரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடாநின்ற புள்’ என்றுமாம். 2‘கருடக் கொடியன், கருடவாஹநன்’ என்று சொல்லப்படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான். ஆதி மூர்த்திக்கு -‘காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே, உலக காரண வஸ்துவேயன்றோ உபாசிக்கத் தக்கதாவது? ஆக, 4‘மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய் எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேசுவரனுக்கு’ என்றபடி.

அடிமை புகுவதுவே – அடிமை புகுவதுவே செய்யத் தக்க காரியம். 1‘உங்களுக்குச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை; 2அவன் உடைமையை அவனுக்காக இசைய அமையும்’ என்பார், ‘புகுவதுவே’  என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். ‘அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க, நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராமல், ‘அவனது என்று இசைய அமையும்,’ என்றபடி. 3‘‘அடிமை புகுவது’ என்ற இடம், விதியாய், ‘கண்டீர்’ என்கிற இடம், அதுவும் செய்து பார்த்தீர்கோள் அன்றோ? இனி, அவன் திருவடிகளில் அடிமை புகப் பாருங்கோள்,’ என்கிறார்.

    4யயாதி  சரிதத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச்செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும், ‘வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப்போந்த பிரபந்தங்களில் இது எந்தப் பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க, ‘புன்சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும், பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால், அதனை அவர்கள் பொறுக்கமாட்டார்கள்’ என்றும், ‘சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி, ‘ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன் என்னும் பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச்செய்தார்.

முனி புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய் வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’ என்கிறபடியே, தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?

    2‘யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே, ‘கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடுவந்து கொடுத்துச் செய்யாதன இல்லை; பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம் அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சியிருந்தோம்,’ என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்ச வேண்டா; அவர்கள் ‘இவன் என் தோழன்,  மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு விரும்புகையாலே அவர்களுக்குத் தேகம் எல்லையாய்விட்டது; நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள ஆத்துமாவுக்கு வகுத்த பேறு பெற வேண்டும் என்று பற்றுகையாலே பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச்செய்தார்.  

அது செய்கிறோம்
இதர தேவதைகளுக்கு உத்கர்ஷம் உண்டு சொன்னார்கள்
அவர்களை ஆராதித்து
இட்ட பச்சை வீணாகுமே
பலிக்கும் படி கண்டு பின்பு பகவானை பற்றுகிறோம் என்றார்களாம்
அது எல்லாம் செய்து -பலன் கிடைக்காது விரதம் தான் என்கிறார்
ஓடி ஓடி ஜன்மங்கள் தோறும் பல வழிகளில் சென்று
ஆதி மூர்த்தி கருடத்வஜன் அடிமை புகுந்து
போவது -ஜன்மங்கள் உடன் வருவது –

ஓடி ஓடி’ என்ற அடுக்குத்தொடரின் பொருளை மேற்கோளோடு
அருளிச்செய்கிறார், ‘சுவர்க்கம்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை, 9 : 21.
‘பிறவிகளோடே வருவதாய்’ என்றது, ‘பிறவிகளை எடுப்பதற்காகப்
பூலோகத்திற்கு வருவது’ என்றபடி.

இச்சைக்கு தேர மேரி மாறி ஸ்வர்க்கம் நரகம் சம்சாரம் கதாகதம் செய்து –
இதர தெய்வம் ஆஸ்ரயித்த பலன்
ஆத்மா நித்யம் கர்மா பிரவாஹம் முன்னும் பின்பும் அறியாமல் பல ஜன்மங்கள்
பல பிறப்பில் உழன்று -சம்சார சுழலில் சிக்கி
மற்று ஓர் -ஓன்று விடாமல் முக்கரணங்களால் தேவதைகளை ஆஸ்ரயித்து
பலன் கிடையாதது உங்கள் குறை இல்லை பிரீதி ப்ரேதராய் சொல்லி
விக்ரதராய் மாம் நமஸ்குரு பகவத் விஷயத்தில் சொன்னது போலே செய்தும்
வழி ஏறிக் கண்டீர் -பலன் கிடையாதது காணலாமே

இவர் அறிந்த படி -இப்பொழுது இவர் உபதேசிக்கிற நிலைமை இப்பொழுது இருப்பதால்

‘முக்கரணங்களாலும்’ என்றது, ‘பாடி ஆடிப் பணிந்து’ என்ற பதங்களைத்
திருவுள்ளம் பற்றி. ‘பணிந்து’ என்றது, மனத்தின் தொழில்.

2. ‘பல வகைகள்’ என்றது, தர்ப்பண ஜப ஹோம பிராஹ்மண போஜனாதிகளைக்
குறித்தபடி.

3. ‘ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் தனம் இச்சேத் உதாஸநாத்
ஈஸ்வராத் ஞானம் அந்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத்’

  என்பது பிரம்மாண்ட புராணம்.

4. ‘பிரஹ்மாணம் ஸிதிகண்டம் ச யாச்ச அந்யா: தேவதா: ஸ்மிருதா:
பிரதிபுத்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்’

  என்பது, பாரதம், மோக்ஷ தர்மம், 169 : 35. இங்கே,

  ‘அங்காக்கைக் கேமங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்குவாய்
அங்காக்கைக் கேபசித் தானிற்க வேமுத்தி யாக்கித்துய
ரங்காக்கைக் கேசிலர் வேறே தொழுவர் அருந்திரவி
யங்காக்கைக் கேதனத் தாள்தரு மோ திரு அன்றியிலே?

  ‘சித்திக்கு வித்தது வோஇது வோஎன்று தேடிப்பொய்ந்நூல்
கத்திக் குவித்தபல் புத்தகத் தீர்!கட்டு ரைக்கவம்மின்;
அத்திக்கு வித்தனை யும்உண்ட வேங்கடத் தச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே.’

  என்ற திவ்விய கவியின் திருவாக்குகள் நினைவு கூர்தல் தகும்.

ஜனார்த்தனனை பற்றி இருந்தால் முக்தி பெற்று இருப்பார்களே
மயில் கழுத்து நிறத்தன்  இந்த்ரன் –
அநித்திய பலன்களை கொடுப்பார்கள் இதர தேவதைகள்
அல்ப புத்தி உடையவர்கள் அல்பம் ஆசைப் பட்டி அல்ப சக்தி உள்ள தேவதைகளை ஆஸ்ரயித்து
அம்பரீஷன் -சரித்ரம் சொல்லிக் காட்டி –
இந்த்ரன் வேஷம் கொண்டு ஐ ராவதம் கருடன் -பகவானே வந்தாலும் வேண்டாம்
என்றான் அம்பரிஷன்
புழுவும் தானுமாய வந்து நிற்பவன் யார் என்றான் அம்பரீஷன்
நீ யாரை ஆச்ரயித்து இத்தை பெற்றாயோ அவனை  ஆஸ்ரயிப்பேன் என்றான்
கும்பிட்டு போக சொன்னான் –
திரு  மழிசை ஆழ்வார் -ருத்ரன் பார்வதி போகா நிற்க -வஸ்த்ரம் தைத்து கொண்டு இருக்க –
அநாதரித்து காலை நீட்டி இருக்க –
பகவத் பக்தன் போலே காண்
தீஷை பலம் பார்க்க அருகில் வர
மோஷம் நம்மாலே செய்யலாவது அன்று
இன்று சாவாரை நாளை சாகும் படி -அதுவும் கர்ம அனுகூலம் தானே
இவ்வூசி போகும் வழி நூலை போக செய்யலாமோ –

நெற்றிக் கண் காட்ட திருவடியில் இவரும் கண் காட்ட –
கூடி வானவர் ஏத்த நின்ற
அவர்களும் அங்கே சென்று ஏத்துவார்கள் -உங்கள் இடம் கும்பிடு பெற்று
நீங்களும் அங்கே போகலாமே -அவர்கள் செய்தவை கண்டாகிலும்
தலை அறுப்புண்டாரும் அறுப்பாரும் ஒரு மிடறாக சென்று ஆஸ்ரயிக்க
பரஸ்பரம் விரோதம் இருந்தாலும் கூடி வானவர் ஏத்த நின்ற
ஆடு புட் கொடி
வெற்றி புள்
ஆடுகின்ற புள்
சர்வேஸ்வரன் ஸ்பர்சத்தால் ஆடும் –
திருவடி திருத் தோளில் -இருப்பதே போதுமே
ஆதி மூர்த்தி காரண வஸ்து உபாச்ய வஸ்து இவனே
மோஷ ப்ரதன் சர்வ நியந்தா
அவன் உடைமை ஆத்மாவை சமர்ப்பித்தல் போதுமே
அவன் இதை என்னுடைமை சோழ
துவம் மே -அஹம் மே சொல்லாமல் இசைவே அமையும்
அடிமை செய்வது விதியாய் -கர்த்தவ்யம்
கண்டீர் –
இதர தேவைதைகள் செய்வதை காணலாம்

பட்டர் -ஆராதனை எவ்வளவு செய்தாலும் கழுதை பிடித்து தள்ளுவான்
தன்னையே ஒக்க அருள் செய்வான் பராத்பரன்
யயாதி -இந்த்ரன் இடம் சென்று -அஸ்வமேத யாகம் செய்து ஆசனம் பங்கு
லோகத்தில் தார்மிக அரசன் யார் கேட்டு
தானே
சொன்னால் அஹங்காரம் என்று ஸ்வர்க்கம் இடம் இல்லையே
பொய் சொன்னாலும் பாபம் தானே –
ஆதி பிரானுக்கு அடிமை புகுவதுவே உங்கள் கர்த்தவ்யம் –

 கிம்கரௌ -விஸ்வமித்ரர் இடம் பெருமாள் அருளி நின்றானே
யாதவர்கள் முடிந்து போன சரித்ரம் -உண்டே
அடித்து கொண்டு முடிய
கண்ணனையே பற்றிய கண்ணன் பந்துக்கள்
பாண்டவர்களும் ஸ்வர்க்கம் தான் போக
சங்க நிதி பத்ம நிதி போல்வன கொடுத்தும்
சமாசராயண பலம் இங்கனே ஆகும் சங்கை
நம்பிள்ளை –
இவன் தோழன் மைத்துனன் தேக சம்பந்தம் கொண்டு பற்ற பேறு தேகத்துடன் போக
நாம் ஸ்வரூப ஆத்மா பற்றி இருப்பதால் -நித்ய ஆத்மபலன் பெற்று
பேறும் நித்யம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading