திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கண்டுகேட்டு உற்றுமோந்து உண்டுஉழலும் ஐங்கருவி
கண்டஇன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்டசதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன்உன் திருவடியே.

    பொ-ரை : ‘கண்டும் கேட்டும் உற்றும் மோந்தும் உண்டும் திரிகின்ற ஐந்து இந்திரியங்களாலே அனுபவிக்கிற ஐஸ்வரிய இன்பமும், இந்த இந்திரியங்களாலே தெரிந்து அனுபவிக்க அரியதான அளவில்லாத ஆத்தும அனுபவ இன்பமும், ஒள்ளிய தொடியினையுடையளாய திருமகளும் நீயும் ஒருபடிப்பட்டு நிற்கும்படியாகச் செய்து வைத்த நல் விரகை நேரே கண்டு, மேலே கூறிய இரண்டு இன்பங்களையும் ஒழிந்தேன்; உன் திருவடிகளை அடைந்தேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘நிலா நிற்பக் கண்ட சதிரைக் கண்டு, கண்ட இன்பமும், சிற்றின்பமும் ஒழிந்தேன்,’ என்க.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1மேற்பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் சொல்லப்பட்ட பேற்றினைப் பிரீதியின் மிகுதியாலே ‘விட்டது இது; பற்றினது இது’ என்று விளக்கமாக அருளிச்செய்கிறார் இத்திருப்பாசுரத்தில்.

    2கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி – காட்சிக்குக் கருவியாக இருக்கும் கண், கேட்கைக்குக் கருவியாக இருக்கும் செவி, பரிசித்து அறிதற்குக் கருவியாக இருக்கும் சரீர இந்திரியம், நாற்றத்தை அறிதற்குக் கருவியாக இருக்கும் மூக்கு, சுவையை அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் நாக்கு; கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு இப்படி இவையே செயலாய்ப் போருகைக்குக் கருவிகளாக இருப்பனவேயாமன்றோ கண் முதலான இந்திரியங்கள்? ஐங்கருவி கண்ட இன்பம் –

உழக்காலே அளக்குமாறு போன்று அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான இந்திரியங்களாலே அனுபவிக்கப்பட்ட இவ்வுலக இன்பம். 2ஆத்துமாவிற்கு ஞானம் நித்திய தர்மமாய், அதுதான் விபுவாயிருக்கக் கூடியது; இப்படி இருக்கச்செய்தேயும், கர்மம் காரணமாகக்குறைவுபட்டதாய், மனம் அடியாகப் புறப்பட்டு, புற இந்திரியங்கள் வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது? ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது. தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் – இவ்வுலக அனுபவத்தைப் பற்றத் தான் தெரிவரியதாய், அவ்வுலகில் பகவத் அனுபவத்தைப் பற்றத் தான் முதன்மை இல்லாததாய், அணுவான ஆத்துமாவைப் பற்ற வருகிற இன்பமாகையாலே சொரூபத்தாலே அளவிற்குட்பட்டதாய் இருக்கிற ஆத்தும அனுபவசுகம். அந்தமில் பேரின்பத்திற்கு எதிர்த்தட்டானதாகையாலே ‘சிற்றின்பம்’ என்கிறது. ஒழிந்தேன் – இவற்றை விட்டேன்.

    ‘விட்டது இதுவாகில், பற்றியது எதனை?’ என்னில், அருளிச்செய்கிறார் மேல் : ஒண்தொடியாள் திருமகளும் நீயும் – தொடி என்பது, முன்கை வளை. அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை. 3எப்பொழுதும் சர்வேசுவரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி இருப்பது இல்லையே அன்றோ? 4‘சங்கு தங்கு முன்கை நங்கை’ என்னக் கடவதன்றோ? ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது; இப்படியிருக்கிற பிராட்டியும், 5அவள் தானுங்கூட ‘இறையும் அகலகில்லேன்’ என்றிருக்கிற

நீயும். நீயுமே நிலாநிற்ப – 1இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும். 2‘புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே; இவர்களைத் தவிர வேறு பொருள் இல்லை,’ என்னாநிற்க, வாசல்தோறும் ஈசுவரர்களேயன்றோ இங்கு? ஆதலின், ‘நீயுமே நிலாநிற்ப’ என்கிறது.

    நிலாநிற்பக் கண்ட சதிர், உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த நேர்பாடு. கண்டு – 3‘நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா விஷ்ணுவானவர் நித்திய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே, நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது, ‘பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே ஓர் உலகமாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி. உன் திருவடியே அடைந்தேன் – 4அந்த நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும் என்று உன் திருவடிகளைக்

கிட்டினேன். இது நான் உற்றது; கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.

    ‘நன்று; ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்தியவிபூதியில் அடியார்களுடன் இருக்கும் இருப்பைச் சொல்லியது ஆமோ?’ என்னில், ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ!’ என்று இவர் சொல்லுகையாலும், ‘‘நித்தியர்களோடும் முத்தர்களோடுங்கூட’ என்று வேறு பிரமாணங்கள் உண்டாகையாலும் சொல்லத் தட்டு இல்லை’ என்க. மேலும், ‘நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி’ என்று கூறிவைத்துக் ‘கொடு உலகம் காட்டேல்’ என்றதைப் போன்று, ‘அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில், அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ? அங்ஙனமாயின், பிராட்டியும் தானும் நித்தியசூரிகளுமாய் இருக்கிற அவ்வுலகம் இவ்வுலகம் ஆனாலோ?’ என்னில், 1தனக்கே உரிய விக்கிரஹத்தோடே, 2‘நீர் சீதா பிராட்டியாரோடுகூட’ என்கிறபடியே, தானும் பிராட்டியுமாய் இருந்து, 3‘இதனைச் செய்க’ என்று சொல்லுகிறபடியே, இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே, இவரை அடிமை கொள்ளுவது ஒரு தேச விசேடமாகவே இருக்கவேண்டும் அன்றோ?

வேட்கை விடுத்து
திருவடி கூட்டினை
விட்டதும்
பற்றியதும் விபரிக்கிறார்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு பஞ்ச இந்த்ரியங்கள் வியாபாரங்கள்
உழலும் ஐந்து கருவிகள் கண்ட இன்பம்
அளவில்லா சிற்று இன்பம்
கைவல்யம்

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.’

  என்பது திருக்குறள்.

  ‘உண்டுகேட் டுற்றுமோந் தும்பார்க்கு மைவர்க்கே
தொண்டுபட லாமோஉன் தொண்டனேன்?’

  என்பது நூற்றெட்டுத் திருப்பதியந். 25.

காட்சிக்கு கருவியாய் கண் -ஐங்கருவி கண்ட இன்பம்
அளவு பட்ட இந்திரியங்களால் அனுபவிக்கப்பட்ட இஹ லோக சுகம்
ஆத்மாவுக்கு ஞானம் சுருங்கி கர்ம நிபந்தனம் –
மனசால் வெளிப்பட்டு இந்த்ரியங்கள் மூலம் அனுபவிக்க அளவு பட்டு தானே இருக்கும்
அளவில்லா சிற்று இன்பம் கைவல்யம் -அவ்வருகில் பகவத் அனுபவம் பார்த்தால் சிற்று இன்பம்
பகவத் அனுபவம் விபு
ஆத்மா அணு ஸ்வரூபம் தானே அளவு பட்டதாய் இருக்கும்

அந்தமில்  பேரின்பத்துக்கு எதிர் தட்டு
பெரிய பிராட்டியாரும் நீயுமாக சேர்ந்து
ஒண் டொடி -வளை கை கழலா இருப்பது
நித்யம் பிரியாமல்

சங்கு தங்கு முன்கை நங்கை’திருச்சந்த விருத். 57.

சங்கு முன்கையில் தங்கி இருக்கப் பெற்ற நங்கை
இறுவருடைய அபிமானத்தில் அங்கு
இங்கு வாசல் தோறும் எஜமானர் –
ஸ்ரீ ய பதி -நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் சாமர்த்தியம்
உனது திருவடிகளை கிட்டி நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய்
பரம பதம் வார்த்தை இன்றி நீயுமே நிலா நிற்ப
அடியார்கள் குழாம் கலை உடன் கூடுவது என்று கொலோ
இது கொடு உலகம் சொல்லி அது உயர்ந்த உலகம்
அது தான் இது வானாலோ என்னில் –
அசாதாராண விக்ரஹத்தோடு -அடிமை கொள்வது ஒரு தேச விசேஷத்திலே நித்ய கைங்கர்யம் பெற

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading