திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-5-9–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்திசை யும்தவி ராதுநின் றான்தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்குஇனி மாறுஉண்டோ?

    பொ-ரை : ‘சுவர்க்க லோகத்திலும் அதற்குள்ளே மேலேயிருக்கின்ற பிரமலோகம் முதலான உலகங்களிலும் பூலோகத்திலும் பூமியின் கீழேயிருக்கின்ற பாதாளலோகத்திலும் எட்டுத் திக்குகளிலும் நீங்காது பரந்து நிற்கின்றவனும், வளைந்த சிறந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பெரிய கையிலே உடையவனும், குடக்கூத்தாடியவனும்,

நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைக் கவி சொல்ல வல்ல எனக்கு இனி ஒப்பாவார் உளரோ?’ என்கிறார்.

    வி-கு : கூன் நல் – கூனல். வான் அம் கோன் – வானக்கோன்; அம் – சாரியை.

    ஈடு: ஒன்பதாம் பாட்டு. 1‘அவனுடைய எங்கும் பரந்திருத்தல் அவதாரங்கள் முதலான எல்லா நிலைகளிலும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ?’ என்கிறார். 2நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்; முத்தர்கள் 3‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல் நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்; இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில், ‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும். ஸ்ரீ பராசரபகவானும் ஸ்ரீ வேதவியாசபகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்; ஸ்ரீ சௌனகபகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்; அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.

    வானத்தும் – சுவர்க்கத்திலும், வானத்து உள் உம்பரும் – அதற்குள்ளாய்ப் பெரியதாயிருக்கிற மஹர் லோகம் முதலியவைகளிலும். அன்றிக்கே, ‘வானத்தும் வானத்துள் உம்பரும் என்பதற்குச் சுவர்க்கம் முதலான உபரிதனலோகங்களிலும் அவற்றுக்குள்ளே மேலே இருக்கிற பிரம

லோகம் முதலானவைகளிலும் இருக்கிற பிரமன் முதலான தேவர்கள்’ என்று பொருள் கூறலுமாம். மண்ணுள்ளும் – பூமியிலும், மண்ணின் கீழ்த்தானத்தும் – கீழே உண்டான பாதாளம் முதலியவைகளிலும், எண்திசையும் – எட்டுத்திக்குகளிலும், தவிராது நின்றான்தன்னை – அவ்வத்தேசங்களிலும் அவ்வத்தேசங்களிலே இருக்கிற தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களிலும், 1கடல் கோத்தாற் போலே எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து இருக்கிறவனை. இதனால், அணு அளவான பொருள்களிலும் விபுவாய் இருக்கிற பொருளிலும் வாசி சொல்லுகிறது; ‘எங்ஙனே’ என்னில், அணுவான ஆத்துமா, சரீரம் எங்கும் பரந்திருக்க மாட்டாது; விபுவான ஆகாயத்திற்கு ஏவுகின்ற தன்மையோடு கூடிப் பரந்திருக்கும் தன்மை இல்லை.

    இப்படி எங்கும் பரந்து நிற்கிறவன், பரந்திருக்கப்படுகின்ற பொருள்களோடு ஒக்க வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது மேல் : கூன் நல் சங்கம் தடக்கையவனை – ‘இப்படி அவதரிப்பதுதான் 2இதரசஜாதீயனாயோ? என்னில், ‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே, தன்னுடைய பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது. என்றது, ‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’ என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.

1‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக்கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது.  என்றது, 2‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி. லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும் வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது. குடமாடியை – எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி. குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம் வானம் கோனை – 3ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறபடி. கவி சொல்ல வல்லேற்கு – இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு. இனி மாறு உண்டே – ‘அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ? 4‘நித்திய விபூதி லீலா விபூதிகளாகிற இரு வகைப்பட்ட உலகங்களிலும் எதிர் இல்லை’ என்கிறார்.

‘பாஞ்சஜன்யத்திற்கு பகவத் அநுபவம் உண்டோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘வாயது கையதுவாக’ என்று தொடங்கி. இது,

  ‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்;
கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்;
பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’

  என்ற நாய்ச்சியார் திருமொழிப் பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.
‘வாயது கையது’ என்பது, சிலேடை.

வ்யாப்தி அவதாரங்கள் முதலான வற்றை கவி பாடின எனக்கு யார் நிகர்
நித்யர் பரத்வத்தில்
முக்தர் நித்யர் போலே சம்சாரம் நினையாமல் -அந்தர்யாமி விபவம்
ரிஷிகள் ஒவ்வொரு துறையிலும் மண்டி
வால்மீகி ராமாவதாரம்
வேத வியாசர் கிருஷ்ண அவதாரம்
எங்கும் புக்கு -அறிந்த எனக்கு சமம் உண்டோ

ஸ்வர்க்கத்திலும் உம்பர் மகா லோகங்கள்
எட்டு திக்கிலும் படியாக நின்றான்
தேவாதி சகல பதார்த்தங்களிலும் பூரணமாக வியாபித்து வர்திக்கிரவன்
அணு சரீரத்தால் வ்யாப்தி இல்லை
ஆகாசம் -நியமன சாமர்த்தியம் இல்லை
பிரமாதிகள் –
எங்கும் நின்றான்
அவதரிக்கற வன் சஜாதீயனாக
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து

இளைய பெருமாளை போலே வணங்கி நிற்கும் பாஞ்ச ஜன்யமும்
வாயும் கையுமாக அனுபவிக்கும்
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்

தடக்கையன் விசாலம்
குடமாடி ஊர் காணும்படி இன்னும் சௌலப்யம்
நாட்டுக்காக பரம பதம்
கவி சொல்ல வல்லேன்

எங்கும் நிகர் இல்லை என்கிறார் இதில்

அடியவர்க்கு இன்ப மாரி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply