மூன்றாந்திருவாய்மொழி – ‘கோவை வாயாள்’
முன்னுரை
ஈடு : 1எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார். சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.
2இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்; எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர். திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில் இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து, எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர். 1ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது, ‘ஒரே புதல்வனையுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்! கூட வருவேன் இத்தனை!’ என்ன, ‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து ஒரு வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணிமீண்டாரே அன்றோ?’ 1ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாசுச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன், 2‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின்படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ? பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி, 3கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற்போலே அனுபவத்திற்குத் தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.
மேல் திருவாய்மொழிக்கும் இதற்கும் இயைபு அருளிச்செய்கிறார்,
‘எல்லாத்தேசத்திலும்’ என்று தொடங்கி.
‘சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி’ என்றது,
‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’ ஆழ்வாருடைய
காதற்குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில் ஆழ்வார் பக்கல்
சர்வேசுவரனுக்கு உண்டான காதற்குணம் சொல்லுகிறது’ என்றபடி.
‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கடிமையும் எம்பெருமானுடைய
நெடுமாற்கடிமையும் என இரு வகைப்படும்; அவற்றுள் எம்பெருமானுடைய
‘நெடுமாற்கடிமை’ இத்திருவாய்மொழி,’ என்றார் முன்னும். இரண்டாம் பத்து
ஏழாந்திருவாய்மொழி முன்னுரை.
2. மேலே போந்த எம்பார் நிர்வாஹத்தை விரித்து அருளிச் செய்யத்
திருவுள்ளம் பற்றி, அதனோடு வேறு நிர்வாஹங்கள் இரண்டனையும்
சேர்த்து அருளிச்செய்கிறார், ‘இதுதனக்கு’ என்றது முதல் ‘எல்லாம்
பெற்றாராய் அனுபவிக்கிறார் என்று அருளிச்செய்வர்’ என்றது முடிய.
உலகத்தில் ஒருவர் ஒருவரிடத்தில் ஒன்றை விரும்பினால்,
விரும்பப்பட்டவர்கள் விரும்பினவர்களுக்கு விரும்பிய பொருளுக்குப்
போலியான வேறு ஒரு பொருளைக் கொடுத்து, விரும்பிய பொருளை
மறக்கச் செய்வதும் உண்டு; அன்றி, ‘அதனையே கொடுக்கிறோம்’ என்று
சொல்லி அவர்கள் விருப்பத்தை அடக்குவதும் உண்டு; அன்றி, அதனையே
கையில் கொடுத்து, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதும் உண்டு; ஆக,
இம்மூன்று வகையினையும் முறையே காட்டுகிறார், ‘எம்பார்’ என்று
தொடங்கி. ‘வேறு ஒரு குணத்தை’ என்றது, காதற்குணத்தை.
‘தலையை அசைத்தால் பெற்றது போன்று ஆகுமோ?’ என்னும் வினாவைத்
திருவுள்ளம் பற்றி, பெற்றது போன்று ஆகும் என்பதற்கு இரண்டு
திருஷ்டாந்தங்கள் காட்டுகிறார், ‘ஸ்ரீகௌசல்யை யார்’ என்று தொடங்கி.
இது, பேச்சின் இனிமை விசுவாசத்திற்குக் காரணம் என்பதற்குத்
திருஷ்டாந்தம்.
‘ஒரே புதல்வனையுடைய நான்’ என்று தொடங்குமிவ்விடத்தில்,
‘ஆகி னைய! அரசன்றன் ஆணையால்
ஏகல் என்பது யானு முரைக்கிலென்;
சாக லாஉயிர் தாங்கவல் லேனையும்
போகில் நின்னொடுங் கொண்டனை போகென்றாள்.’
என்ற செய்யுளையும், ‘ஆச்சி! நீர் சொல்லுகிற இது’ என்று
தொடங்குமிடத்தில்
‘என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?
அன்னை யே!அறம் பார்க்கிலை யாமென்றான்.’
‘வரிவில் எம்பி மண்ணர சாயவற்கு
உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவின் நீங்கித் தவம்செயு நாளுடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி யாமன்றே!’
என்ற செய்யுள்களையும் ஒப்பு நோக்கல் தகும்.
கால சக்கரத்தன்’ என்றது, ‘சக்கரம் போன்று சுழன்று வருகின்ற
காலத்துக்கு நிர்வாஹகன்’ என்றபடி. ‘ஒரு போகி ஆக்கி’ என்றது, ‘நடுவில்
தடையில்லாத வெளியாக்கி’ என்றபடி. அல்லது, ‘ஒரே காலத்தில் பலமாக்கி’
என்னலுமாம். பட்டர் நிர்வாகத்துக்கு நிதானம், ‘கால சக்கரத்தானுக்கே’
என்ற நாலாவது திருப்பாசுரம்.
‘மேல் திருவாய்மொழியில் விரும்பியபடியே இத்திருவாய்மொழியில்
அனுபவிக்கிறார்’ என்று அருளிச்செய்யக் காரணம் வருமாறு : ‘தோளிசேர்
பின்னை’ என்றதற்கு, ‘கோவை வாயாள்’ என்ற பாசுரம். ‘கொம்புபோல்’
என்ற பாசுரத்திற்கு, ‘மதிள் இலங்கைக் கோவை வீய’ என்ற பாசுரப்பகுதி.
‘பாலனாய்’ என்ற பாசுரத்திற்கு, ‘கால சக்கரத்தோடு’ என்ற பாசுரம்.
‘பாவியல் வேத நன்’ என்ற பாசுரத்திற்கு, ‘குரை கழல்கள் நீட்டி’ என்ற
பாசுரம். மற்றைப் பாசுரங்களையும் இங்ஙனமே கண்டுகொள்க.
கோவை வாயாள் பொருட்டுஏற்றின்
எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்!
குலநல் யானை மருப்புஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப்
போதால் வணங்கே னேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப்
பூசும் சாந்துஎன் நெஞ்சமே.
பொ-ரை : கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடைய நப்பின்னைப்பிராட்டி காரணமாக இடபங்களின் கழுத்தை முரித்தாய்! மதிலால் சூழப்பட்ட இலங்கை நகர்க்கு அரசனான இராவணன் அழியும்படி வில்லை வளைத்தாய்! சிறந்த நல்ல குவலயாபீடம் என்னும் யானையின் தந்தங்களை முரித்தாய்! பூக்களை விட்டு அகலாத தண்ணீரைத் தூவி அவ்வக்காலத்தில் வணங்குதல் செய்திலேன் ஆயினும், பூவைப் பூவினது நிறத்தையுடைய நினது திருமேனிக்குப் பூசுகின்ற சாந்து என் நெஞ்சமே ஆகும்.
வி-கு : ‘நீர் தூவி வணங்கேனேலும் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம்,’ என்க. ‘நீர் வீயாப் பூவை’ என மாறுக. வீதல் – நீங்குதல்; வீயா -நீங்காத. பூவை என்பதில் ‘ஐ’ இரண்டாம் வேற்றுமை யுருபு. ஆக, நீரை விட்டு அகலாத பூ, ‘நீர்ப்பூ’ என்றபடி. அன்றிக்கே, வீயாப் பூவை – ‘உலராத மலர்களை’ என்னலுமாம். நான்காம் அடியில் ‘பூவை’ என்பதே சொல்; ‘காயாம் பூ’ என்பது பொருள். வீ – மலர். ‘ஆகும் மேனி’ என்க.
ஈடு : முதற்பாட்டில், ‘நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய் இருக்க. நீ அவர்கள் பக்கலிலே இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என் இருப்பே உனக்கு எல்லாமாய்விட்டது,’ என்கிறார் ஆதல்; அன்றிக்கே, ‘அடியார்களுடைய பகைவர்களை அழிக்கிற இடங்களில் அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே இருக்கவும், என் மனத்தினையே இனிய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.
கோவை வாயாள்பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் – 2‘தன்னைப் பேணாதே அவனுக்கு இவ்வெருதுகளின்மேலே விழ வேண்டும்படியாய் இருந்தது உறுப்புகளின் அழகு’ என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார். அன்றிக்கே, இடபங்களை முன்னிட்டு, ‘இவற்றை அடர்த்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்,’ என்று இவளை அலங்கரித்து முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்; ‘இவளை அணையலாமாகில் இவற்றை முரித்தல் ஆகாதோ?’ என்று தன்னைப் பேணாதே அவற்றின்மேல் விழுந்தான் என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார் என்னுதல். அன்றிக்கே, ‘நம்பி மூத்த பிரான் முற்பட வந்து கிட்டின இடத்து, ‘இவன் தலையிலே வெற்றி கிடந்தால் செய்வது என்?’ என்று வெறுப்பாலே கீழ் நோக்கிய முகத்தாளாய் இருந்தாள்; ஸ்ரீ கிருஷ்ணன் வந்து தோன்றினவாறே பிரீதியின் மிகுதியாலே புன்முறுவல் பூத்தாள்; அப்போது அதரத்தில் பழுப்பு இருந்தபடியைத் தெரிவிப்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்’ என்னுதல். ‘அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றுத் தன்னை 1அவளுக்கு ஆக்கினான்’ என்றபடி. ஏற்றின் பிடரியை முரித்தான் ஆதலின், ‘எருத்தம் இறுத்தாய்’ என்கிறார். எருத்தம் – கழுத்து. 2அவற்றின் செருக்கிற்குக் காரணம் கழுத்தே அன்றோ? அதனை முரித்தபடி. 3 ‘வீரராய் இருப்பார் எதிரி கையில் ஆயுதத்தை வெறுங்கையோடு சென்று வாங்குமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, இவன் செய்தது? அவைதாம் தலையான ஆயுதத்தோடே அன்றோ நிற்கின்றன?மாயா மிருகமான மாரீசன் பின்னே பெருமாள் எழுந்தருளுகிற போது இளைய பெருமாள் தெளிந்து நின்று, ‘இது மாயா மிருகம் கண்டீர்; இராக்கதர்களுடைய மாயை,’ என்றாற்போலே, நானும் அவ்வளவிலே நின்று ‘இவை அசுர ஆவேசம் உண்டு’ என்ன அன்றோ அடுப்பது? அது செய்யப்பெற்றிலேன்,’ என்கிறார்.
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் – ‘மதிளை உடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகன் அல்லனோ?’ என்று செருக்கு உற்றிருக்கிற இராவணன் முடிய வில்லை வளைத்தாய்; ‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு,’ என்று சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டவன் ஆதலின், ‘மதிள் இலங்கைக்கோ’ என்கிறார். 2சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று. இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்? ஆக, ‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், 3‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே, மண்பாடுதானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்குமேலே உள்நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி. இராக்கதர்கள் மாயப்போர் அல்லது அறியார்கள்; அதைப்போன்று, இவர் செவ்வைப்
பூசல் அல்லது அறியார்; ஆதலின், ‘சிலை குனித்தாய்’ என்கிறார். 1 ‘நீர் தரும யுத்தத்தில் ஆற்றல் உள்ளவராய் இருத்தல் போன்று, இராக்கதர்கள் மாயப்போர் செய்வதில் ஆற்றல் உள்ளவர்கள் கண்டீர்,’ என்று ஸ்ரீ விபீஷணாழ்வானைப் போன்று அறிவிக்கப் பெற்றிலேன். குலம் நல்யானை மருப்பு ஒசித்தாய் –2ஆகரத்திலே பிறந்து எல்லா இலக்கணங்களையுமுடைய குவலயாபீடத்தினுடைய கொம்பை வருத்தம் என்பது சிறிதும் இன்றி முரித்தவனே! அவ்வளவிலே ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, 3 ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.
பூவை வீயா நீர் தூவி – ‘மலர்களைத் திருவடிகளிலே பணிமாறி நீரைத் தூவி’ என்னுதல்; அன்றிக்கே, ‘மலரை ஒழியாத நீர் – மலரோடே கூடின நீர்; அதனைத் தூவி’ என்னுதல். போதால் வணங்கேனேலும் – அந்த அந்தக் காலத்திலே பூவை வீயா நீர் தூவி வணங்கிற்றிலேன் ஆகிலும். என்றது, ‘எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன் ஆகிலும்’ என்றபடி. பூவை வீயாம் நின் மேனிக்கு -பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு. அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது, ‘மலர்ந்த மலரைப்போன்ற மிருதுத்தன்மையையுடைய திருமேனிக்கு’ என்றபடி. வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே –திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய்விடுவதே! நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையிற்போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு, ‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன, 1வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்; ‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக்காட்டினாள்; ‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக்காட்டினாள்; ‘நிறமே இதில் கொள்ளக்கூடியது’ என்ன, இப்படி அருளிச்செய்தவாறே, ‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று, அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் செய்தாள்; ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக, ‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்; நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனி என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு, 2 ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.
இப்பாசுரத்திற்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார். முதல்
இரண்டடிகளையும் நான்காமடியையும் நோக்கியது, முதல் அவதாரிகை. பின்
இரண்டு அடிகளையும் நோக்கியது, இரண்டாவது அவதாரிகை. அன்றிக்கே,
‘சர்வேசுவரனுக்குத் தம் பக்கல் உண்டான காதற்குணத்தைச் சொல்லுகிற
இவ்விடத்திலே பிராட்டியார்க்கு உதவி செய்தமையையும், ‘போதால்
வணங்கேனேலும்’ என்று தன் தன்மையையும் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவைத் திருவுள்ளம் பற்றி, இரண்டு அவதாரிகைகளையும்
அருளிச்செய்கிறார் என்னலுமாம்.
2. ‘கோவை வாயாள்’ என்று விசேடித்ததற்கு மூன்று வகையான கருத்து
அருளிச்செய்கிறார்: முதலாவது, இயற்கை அழகு; இரண்டாவது,
அலங்காரத்தினால் உண்டான அழகு; மூன்றாவது, புன்முறுவலால் உண்டான
அழகு. இம்மூன்றனையும் முறையே அருளிச்செய்கிறார், ‘தன்னைப்
பேணாதே’ என்று தொடங்கி.
ஸ்ரீராமா. சந். 1 : 39. இங்கு,
‘கறங்கு கால்புகா, கதிரவன் ஒளிபுகா, மறலி
மறம்பு காது,இனி வானவர் புகாரென்கை வம்பே;
திறம்பு காலத்துள் யாவையுஞ் சிதையினுஞ் சிதையா
அறம்பு காதுஇந்த அணிமதிட் கிடக்கைநின் றகத்தின்’
என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply