திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்
கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுஉடன் ஆக்கிலும்,
ஆங்குஅவ னைஇல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும்
மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
பணங்கொள் அரவணை யான்திரு
நாமம் படிமினோ.

பொ-ரை : ‘நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்,’ என்கிறார்.

    வி-கு : ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக. ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க. படித்தல் – கற்றல். அன்றிக்கே, ‘திருநாமம் படிமின் – கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம். ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘இராச்சிய இலக்குமி நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வாழாது ஒழியில் அன்றோ? அவர்களோடு பொருந்தி வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன, ‘பொருந்தி வாழ்ந்தாலும், எம் பெருமானை அடையாவிடில் கிடையாது; அவனை அடைந்து பெற்றாலும், அதன் தன்மையாலும் நிலை நில்லாது; ஆன பின்பு, அவன்தன்னையே பிரயோஜனமாக அடையுங்கோள்,’ என்கிறார்.

    குணம் கொள் – குணங்களைக் கொண்டிருப்பாராய்; குணங்களால் மிக்கு இருப்பாராய். என்றது, ‘நிறைந்த குணப் பிரசித்தியையுடையவர்கள்’ என்றபடி. நிறைபுகழ் – நிறைந்த புகழையுடையராய். இப்படி இருந்தார்களே ஆகிலும், அடையத்தக்கவர் அல்லராகில் உபேக்ஷிப்பர்கள்; ஆதலின், ‘மன்னர்’ என்கிறார். என்றது, ‘முடி சூடிய அரச வமிசத்தில் பிறந்த அரசர்கள்’ என்றபடி. அடையத்தக்கவராகிலும் உலோபிகளாய் இருப்பர்களே ஆகில் கிட்டுவார் இலரே? ஆதலின், ‘கொடைக்கடன் பூண்டு இருந்து’ என்கிறார். என்றது, ‘கொடுக்கையே இயற்கையாக உள்ளவர்கள்’ என்றபடி. தர்மம் செய்தலையே இயற்கையாய் உள்ளவர்களாகிலும், தங்களது

மேன்மையை நினைத்து இருப்பவர்களாயின், அவர்களைக் கிட்டுவோர் இலர் அன்றே? ஆதலின், ‘இணங்கி’ என்கிறார். என்றது, ‘எளியனாய் எல்லாரோடும் பொருந்தியிருப்பவர்களாய்’ என்றபடி. 1உலகு உடன் ஆக்கிலும் – உலகத்தைத் தங்களோடே சேர்த்துக்கொண்டார்களே ஆகிலும். என்றது, 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை எல்லாரையும் அநுசரித்துக்கொண்டு ஆண்டார்,’ என்கிறபடியே, சேர்த்துக்கொண்டு அரசு ஆண்டார்களேயாகிலும்’ என்றபடி. 3ஆங்கு அவனை இல்லார் – அந்த இராச்சியத்தில் அவன் திருவருள் இல்லையாகில், அந்த இராச்சிய இலக்குமிதான் கிடையாது. மணம் கொண்ட போகத்து மன்னியும் – பகவானுடைய திருவருளால் அந்த இராச்சியத்தை அடைந்தாலும். செவ்வையை உடைத்தான செல்வம் ஆதலின், ‘மணம் கொண்ட போகம்’ என்கிறார். மீள்வர்கள் – அந்த ஐஸ்வரியம் கிட்டினாலும் அதனுடைய இயற்கையாலே மீளுவர்கள்.

    மீள்வு இல்லை – 4‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘எத்தால்?’ என்னில், பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள். ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார். ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார். அன்றிக்கே, ‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான

படுக்கையையுடையவன் என்பார், ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.

    1இனி, ‘பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’ என்று இத்திருப்பாசுரத்திற்குப் பொருள் கூறலுமாம்.

பூ மேல் -ராஜ்ய ஸ்ரீ கிடைக்க எம்பெருமான் அருள் வேண்டுமே –
எம்பெருமானே கொடுத்தாலும் ராஜ்ய ஸ்ரீ நிலைக்காது ச்வாபத்தாலே என்கிறார் –
தர்மங்கள் பண்ணி இருந்தாலும் -மீள்வர்கள்
குணம் கொள் -நிறைந்த புகளை உடைய -கொடை தர்மம் கொடுத்தாலும் –
சக்கரவர்த்தி திருமகன் போலே ராஜ்ஜியம் செய்தாலும் -ராமோ ராஜ்ஜியம் போலே
தனது மேன்மையை மட்டுமே நினைந்து இருந்தார்கள் ஆகில்
மணம் கொண்ட போகம் -மீள்வர்கள்
எம்பெருமான் ச்பர்சத்தால் விகசிதமான பணங்கள் கொண்ட
திருவனந்தாழ்வான்
துகைத்து ஏறலாம் படி -பர்யங்க வித்தை
பணம் கொள் அரவணையான் –
தானம் தர்மம் செய்பவன் -பலன் எதிர்பார்க்காமல் -எம்பெருமான் உத்தேச்யம்
செய்யாமல் ஸ்வர்க்காதி போகங்கள் பெற்றால் -ஆங்கு அவனை அல்லால்
மீள்வர்கள் -என்னலுமாம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading