திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

    பொ-ரை : ‘பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக. தூ – பரிசுத்தம். துற்றல் – உண்டல். துற்றுவர் – பெயர். ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க. இடறுவர் – முற்று. கோமின் – தொகுத்துச் சொல்லுமின். ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

    ஈடு :  ஏழாம் பாட்டு. 1‘ஐஸ்வர்யத்துக்கு நீர் சொல்லுகிற குற்றம் உண்டே ஆகிலும், சோறு முதலானவைகட்கு, தரித்திருப்பதற்குக் காரணமுமாய் இனியவையுமாய் இருக்கிற தன்மை உண்டே?’ என்ன, ‘அவையும் நிலை நில்லா,’ என்கிறார்.

    ஆம் இன் சுவை – ஆன இனிய சுவை ; நன்றான நல்ல சுவை. அவை ஆறோடு – ‘அறுசுவை’ என்று பிரசித்தமானவற்றோடே கூட. அடிசில் உண்டு –2முன்பு இரந்து உண்டுதிரிந்தவன், நாழி அரிசி பெற்று வாழப்புக்கவாறே ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து, ‘முதலியார்’ என்னவும் பண்ணி, ‘அடிசில் உண்ணாநின்றார்’ என்னவும் பண்ணும். ஆர்ந்த பின் – கண்டது அடைய இட்டு வயிற்றினை நிரப்பி, உதிரம் குடித்து வாய்விட்ட அட்டை போலே பெயரவும் திரியவும் மாட்டாதே கிடந்து புரளாநிற்குமே? அவ்வளவிலே இவனிடத்தில் அன்புடையார்களாய் இருப்பார் பெண்டுகள் சிலர் வந்து, ‘உடம்பு பதர் போலே இருந்தது ; இதுகொண்டு எங்ஙனம் காக்கப்படுமவர்களான எங்களை நோக்கப் பார்க்கிறது?’ என்பர்கள் ; அதனைக் கேளா ‘நாம் உண்டிலேமோ!’ என்று இவன் தானும் மயங்கும். 1முன்பு இவர்கள் விரும்பிக் கூறினால் மறுக்குமே? ஒரு திரளையைத் திரட்டி ‘இது என் பிடி’ என்பர்கள்; பின்பு உண்ணாது ஒழியமாட்டானே? அப்பேச்சின் இனிமையிலே துவக்குண்டு பின்னரும் உண்ணாநிற்கும். எமக்கு ஒரு துற்று ஈமின் என்று – இவர்களை இக்கட்டளையிலே வேறே ஒருவன் கைக்கொள்ளுமே ; அவனையும் முன்புத்தையவனைப் போலே இரந்து உண்பிப்பார்களே இவர்கள்; அங்கே, தன் வயிறு வாழாமல் சென்று, 2‘நீங்கள் எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தரவேண்டும்,’ என்னும். பண்டு நல்லது கண்டால் தன் வாயில் இடாதே இவர்களுக்குக் கொடுத்துப் போந்தவன், தன் செல்லாமையாலே இப்பொழுது  ‘எனக்கு’ என்கிறான் அன்றோ? இடறுவர் – அப்போதையவனுக்குப் பிரியமாக அவர்கள் இவன் முகம் பாரார்களே? பின்னையும் தட்டித் திரிவர்கள்.ஆதலின் – ஆன பின்பு, ‘வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு’ என்றபடி. ஆதி அம் சோதி குணங்கள் கோமின் – எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள். 1‘சொரூபத்தைப் பற்றியதாயும் விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார், ‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார். 2‘நான் பரமாத்துமாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்றும், 3‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்,’ என்றும், 4‘ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’ என்றவாறு.

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணைநாளும் இன்புடைத்தா மேலும் – கணைநாணில்
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே!
ஓவாத ஊணாக உண்.’

  என்பது பெரிய திருவந்தாதி, 78.

அன்ன பாநாதிகளும் நிலை இல்லை -என்கிறார்

அடியவர் ஆகும் கோள் சொல்வது –
அடிமை என்றுமே தானே -இருந்தும் உணராமல் இருந்தது இல்லை போலே தானே –
அன்ன பாநாதிகள் -தாரக போக்யமாய் இருக்குமே என்றவனுக்கு
நன்றான இனிய சுவை ஆறோடு -கூட
அடிசில் உண்டு -கௌரவ வார்த்தை
முன்பு இரந்து உண்டு திரிந்தவன்
வாழப் புக்கவாறே
வெள்ளாட்டி சம்பாதித்து
முதலியாரே என்னவும் பண்ணி –
அடிசில் உண்ணா நின்றார் என்னவும் பண்ணி –
ஆர்ந்த பின்பு உதிரம் குடித்த அட்டை போலே
நகர கூட முடியாமல் இருக்க
அன்புடையார் போலே பெண்கள் மேலும் உண்ண சோழ
தாம் உண்டிலோ ம்  என்று பிரமிக்கும்
ஒரு திரளை எடுத்து இது என் பிடி -என்ன
மேலும் உண்பானாம்
ஸ்திரீ கலை வேறு ஒருவன் கைக்கொள்ள –
அவனை இரந்து
எனக்கு ஒரு பிடி தர வேணும் இரப்பானாம்
பார்வை கூட கொடுக்காமல் இருக்க இடருவர்
பின்னையும் திரிவான் அவர்கள் பின்னால்
வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் சூடி
ஸ்வரூப விக்ரஹ குணங்கள் கொண்ட சர்வேஸ்வரனை
ஏத்தி அனுபவியங்கள்
அஹம் அந்நாதாக
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading