திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

தளர்வுஇன்றி யேஎன்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம்ஒன்றாய்
அளவுடை ஐம்புலன் கள்அறி யாவகை
யால்அரு வாகிநிற்கும்
வளர்ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்
ஐந்தை இருசுடரைக்
கிளர்ஒளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
யான்என்றும் கேடுஇலனே.

    பொ-ரை : ‘தளர்ச்சியில்லாமல் எக்காலத்திலும் எல்லா இடத்திலும் பரந்திருக்கின்ற தனித்த காரணமான ஒப்பற்ற ஞானத்தினையுடையவனாகி, அளவிற்குட்பட்ட ஐம்புலன்களும் அறியாதபடி அருவாகி நிற்கின்ற. வளர்கின்ற ஒளியையுடைய தலைவனை, திருமேனியையுடையவனை, ஐம்பெரும்பூதங்களையும் சூரியசந்திரர்களையும் சரீரமாக உடையவனை, கிளர்கின்ற ஒளியையுடைய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனை, கிருஷ்ணனைத் திருவடிகளைப் பிடித்ததனால் யான் எக்காலத்திலும் கேடு இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஒன்றாய் அருவாகி நிற்கும் ஈசன்’ என்க. பற்றி – பற்றியதனால்; ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘உலகமே உருவமாய்ச் சத்தையையும் நோக்குமவனாய், தன்னிடத்து விருப்பம் செலுத்தினாரைத் தனக்கே உரியதான சிறப்பையுடைய விக்கிரகத்தோடே வந்து அவதரித்துக் காக்குமவனைப் பற்றி எனக்கு ஒரு கேடு இல்லை,’ என்கிறார்.

    2தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய் – என்றும் உண்டாய் எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து நின்றால் ஒரு தளர்த்தி இல்லாமலே, படைக்குமிடத்தில்

இரண்டாவதாக வேறு ஒரு காரணம் இல்லாததாய் உள்ள நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய். அன்றிக்கே, ‘ஒரு பொருளிலும் குறைவு வாராதபடி எங்கும் ஒக்க ஒரே உருவமாய் எல்லாக் காலத்திலும் பரந்து நிறைந்து, இவற்றைப் படைக்குமிடத்தில் மூன்று விதக்காரணமும் தானேயாய், வேறுபட்ட சிறப்பையுடைய ஞான உருவனாய்’ என்னுதல். அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் – உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார். அருவாகி நிற்கும் – அவற்றால் அறிய ஒண்ணாதபடி உருவம் இல்லாதபடி நிற்பான்.

    வளர் ஒளி ஈசனை – ‘இப்படி அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களோடே கூடி அவற்றுக்கு உள் உயிராய்ப் புக்கு நின்றால், அவற்றிற்கு உண்டாகும் குற்றங்கள் அவனைத் தீண்டாவோ?’ என்னில், 1‘ஆத்துமா கர்மபலத்தை நன்றாக நுகர்கின்றது; இறைவன் கர்மபலத்தை நுகராமல் வேறாக மிகுதியாகப் பிரகாசிக்கின்றான்,’ என்கிறபடியே, அவற்றிற்கு உண்டான குற்றங்களால் தீண்டப்படாதவனாய், எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றமையால் வந்த புகரையுடையனாய் இருப்பான். மூர்த்தியை – இப்படி உலகமே உருவாய் இருக்கவும் இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய விக்கிரகத்தோடு கூடினவனாய் நித்தியவிபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. பூதங்கள் ஐந்தை இரு சுடரை – காரணமான மண் முதலான ஐம்பெரும்பூதங்களையும், காரியக் கூட்டத்தில் தலையான சந்திர சூரியர்களையுமுடையவனாய் லீலா விபூதிக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. இதனால், அவனுக்கே உரியதான விக்கிரகத்தைப் போன்று

உலகமே உருவமாக நிற்கிற அதுவும் இவர்க்கு அனுபவிக்கத் தக்கதாய் இராநின்றது என்பது போதரும்.

    கிளர் ஒளி மாயனைக் கண்ணனை – இவ்வுலகத்துள்ளே இவ்வுலக சம்பந்தம் இல்லாத தனது திருமேனியை, இதர சாதிகளின் தன்மையை உடையதாம்படி ஆக்கிக்கொண்டு வந்து கிருஷ்ணனாய் அவதரித்தவனை. கண்ணனைத் தாள் பற்றி – 1‘என் ஒருவனையே பற்றுக்கோடாகப் பற்று,’ என்றவன் திருவடிகளைப் பற்றி. யான் என்றும் கேடு இலன் – ‘இவன் விருப்பம் இல்லாதவனாய் இருந்த அன்றும் சம்பந்தத்தாலே சத்தையை நோக்கி, இவன் விரும்புகிற அன்று கண்ணுக்குத் தோற்றி நின்று காக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் கேடு இல்லை,’ என்கிறார்.

    ‘மூர்த்தியை, தனி முதல் ஞானம் ஒன்றாய், பூதங்கள் ஐந்தை, இரு சுடரை, என்றும் எங்கும் பரந்து, தளர்வு இன்றியே, அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை, கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலன்’ என்று கூட்டுக.

ஜகத் சரீரியாய்
எங்கும் பரந்த
மாயனை -கண்ணனை தாள் பற்றி கேடு இலன்
மூர்த்தி
பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹன்
தளர்வின்றி வியாபித்து
சிருஷ்டிக்கும் இடத்தில் -தனி முதல் -மூவகை காரணமும் அவன்
பரி பூர்ண வ்யாப்தி என்றுமாம்
என்றும் ஒக்க ஏக ரூபமாய் மூன்றுவித காரணனும்
உழக்கு கொண்டு அளக்க முடியாத படி புலன்களால் அறிய ஒண்ணாத படி
அப்பால் பட்டு இருந்தும்
ஈசன் -அந்தராத்மா
தோஷம் இன்றி
வளர் ஒளி ஈசன் நியமிக்கும் காரணத்தால் வந்த புகர் உடையவன்
மூர்த்தி -சரீரியாய் இருந்துய்ம் அப்ராக்ருத திவ்ய விக்ரக விசிஷ்டன்
பூதங்கள் இரு சுடர் அனைத்துக்கும் அந்தர்யாமி
இதுவும் அனுபாவ்யம் ஆழ்வாருக்கு
காரணம் -கார்யம் எல்லாம் அவனே
லீலா விபூதி நிர்வாஹகன்
கிளர் ஒளி மாயன் கண்ணன் இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
தாழ் பற்றி –
மாம் ஏகம் -அருளி -சரணம் வ்ரஜ
யான் என்றும் கேடு இலேன்
ஆபிமுக்கியம் செய்தாலே தோன்றி
முறையிலே பற்றி -பிராட்டி மூலம்
குறை ஒன்றும் இல்லையே

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading