திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்றனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்இவை யும்ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல் லார்க்குஇல்லை சன்மமே.

பொ-ரை : ‘தகுதியான பெரும்புகழையுடைய வானவர் ஈசனான கண்ணன் விஷயமாக, தகுதியான பெரிய புகழையுடைய வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த தகுதியான பெரிய புகழையுடைய ஆயிரம் பாசுரங்களுள் தகுதியான பெரிய புகழையுடைய ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கட்குப் பிறவி இல்லை,’ என்றபடி.

வி-கு : ‘ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்’ எனக் கூட்டுக.

ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தைக் கற்றவர்கட்கு, பிறரைக் கவி பாடத் தகுதியான பிறவி இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன் கண்ணன்தனக்கு – தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலே பரத்துவத்தையுடையவன் தனக்கு. ‘மனிதத் தன்மையில் பரத்துவம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின், ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ? ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் – ‘அவன் உபய விபூதிகளையுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று 2சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப் போரும்படியிருக்கிற ஆழ்வார் அருளிச்செய்த.

ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம் 3‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம். ஏற்கும் பெரும்புகழ் ஓர் இவை பத்தும்-ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும்புகழையுடைத்து. என்றது, ‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்துக்குச் சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,சொரூபத்திற்குத் தகுதியாக அடையத்தக்க பரம்பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும் சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று. சன்மம் இல்லை – 1நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது? பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        ‘சொன்னாவில் வாழ்புலவீர்! சோறுகூ றைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும்’ எனும்குருகூர்
மன்அருளால் மாறும்சன் மம்.

தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே:
நாவிற் சிறந்தஅம் மாறற்குத் தக்கநன் னாவலவன்
பூவிற் சிறந்தஆழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே.’

என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.

தகுதியான மிக்க புகழ்
நித்ய சூரி நிர்வாஹகன்
மேன்மையுடன் அவதரித்த கண்ணன்
பூத மகேஸ்வரன் –
ஆழ்வாருக்கும் -தகுதி யான –
எத்தனை சொன்னாலும் தகும் திருவாய்மொழி
இப்பத்து -எல்லா பெருமையும்
ஏற்கும் ஆத்ம ஸ்வரூப பிராப்தம்
எம்பெருமான் -ஆழ்வார் -திருவாய்மொழி -இப்பத்தும் ஏற்கும் புகழ்
சன்மம் இல்லையே
நித்திரை பிறரை கவி பாடாதீர் நிர்வகிக்க வேண்டாமே
பிறவாமை கொடுக்கும் இதை சொல்லி
தண்ணிய சன்மம் கிட்டாதே

நாவில் சொல் வாழ் புலவீர்
சாப்பாட்டுக்கும் வச்த்ரதுக்கும் மானிடரை வாழ்த்துவதால் என்னாவது
மாதவனை ஏத்தும்
குருகூர் மன் அருளால் சன்மம் போகும்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading