திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-5-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம்குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்தஓர் ஆயிரத்துஇப் பத்தும்
அருவினை நீறு செய்யுமே.

    பொ-ரை : அவனே உபாயமும்  உபேயமும் என்று உறுதி பூண்ட அடியவர்களை அவர்களுடைய தடைகளைப் போக்கி அடிமை கொள்ளும் ஆற்றலையுடைய புகழ் நிறைந்த அச்சுதனை, அமரர் பிரானை, எம்மானை, வளப்பம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த குளிர்ந்த வளப்பத்தையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்

இப்பத்துப் பாசுரங்களும் போக்கற்கரிய தீவினைகளைச் சாம்பலாக்கும்.

    வி-கு : தீர்ந்த அடியவர் – எல்லாவற்றையும் விட்ட அடியவர்; தீர்தல் – விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்’ என்பது தொல்காப்பியம். அச்சுதன் – அடியார்களை நழுவ விடாதவன். நீறு – சாம்பல்; ‘சாம்பரைப் பூசித் தரையிற்புரண்டு நின்தாள் பரவி’ என்பது தேவாரம். நேர்தல் – கூறுதல். ‘வாய்ந்த சடகோபன்’ எனக் கூட்டுக. இப்பாசுரம் இடையின எதுகையால் வந்தது.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய குணங்களை அநுசந்தானம் பண்ணினால், விகாரம் இல்லாதவராய் இருக்கைக்கு அடியான மஹாபாவத்தை இதுதானே அடியோடு போக்கும்,’ என்கிறார்.

    தீர்ந்த அடியவர்தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல – 2‘பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்; அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை. 3‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும், 4‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே, அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது. ஆர்ந்த புகழ் அச்சுதனை – குறைவற்ற கல்யாண குணங்களையுடையவனாய், 5‘தன்னை அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும்

கேட்டு அறியாதவனை. அமரர் பிரானை எம்மானை – சமுசாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகளைக் கொள்ளும் அடிமையைத் தன்பக்கல் ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை. இதனால், அடியார்களை நழுவவிடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே, தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும். வாய்ந்த – பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும் அச்சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற இவ்வளவேயன்றி, பகவானுடைய குணங்களைக் கேட்டால் விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும், உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி அவ்விஷயத்திலே மூழ்கிச்சொன்ன. வாய்கை – கிட்டுகை. வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து – வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து. பகவானுடைய குண அநுசந்தானத்தாலே உரையும் செயலும் வேறுபட்டவராய்க்கொண்டு சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார். அருவினை நீறு செய்யும் – பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்துஉவப்பால்
அன்பால்ஆட் செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரைநிந் தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்திநெஞ்சே செய்.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply