திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஓயும் மூப்புப் பிறப்புஇறப் புப்பிணி
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்து
ஆயன் நாள்மல ராம்அடித் தாமரை
வாயு ளுமமனத் துள்ளும்வைப் பார்கட்கே.

    பொ-ரை: நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்திலிருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை வாயிலும் மனத்திலும் வைப்பார்கட்கு முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும்.

    வி-கு : ‘மூப்பு பிறப்பு இறப்பு ஓயும்,’ என மாறுக. செய்வான் – வினையாலணையும் பெயர். வினையெச்சமாகப் பொருள் கோடலுமாம். ஆயன் – கிருஷ்ணன். ‘வைப்பார்கட்கு ஓயும்’ என முடிக்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையாழ்வார்தாமே தருவர்,’ என்றார் மேல் இரண்டு பாசுரங்களாலே; 1‘இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலையாழ்வாரெல்லாம் வேண்டுமோ? திருமலையாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில். ‘ஒரு பகுதி’ என்

றது, திருவேங்கடமுடையானை; ‘வட மா மலையுச்சியை’ என்பர் திருமங்கை மன்னன்.

    மூப்பு பிறப்பு இறப்பு ஓயும் – பிறப்பு முதுமை இறப்பு முதலானவைகள் ஓயும். ‘இப்போது ஓயும்’ என்கையாலே, இதுகாறும் அநாதி காலம் உச்சி வீடும் விடாதே போந்தது என்னுமிடம் தோன்றுகிறது. ‘பிணி வீயுமாறு செய்கின்றவனான திருவேங்கடத்துஆயன்’ என்னுதல்; ‘பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன்’ என்னுதல். ‘இவர்கள் பிணியும் இங்ஙனே சென்றிடுவதாக என்று இருந்தானாகில், கலங்காப் பெருநகரத்தில் இரானோ? என்பார், ‘பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன்’ என்கிறார். ஈண்டுப் ‘பிணி’ என்கிறது, சரீர சம்பந்தங் காரணமாக வருகின்ற எல்லா நோய்களையும். ஆக, இதனால், துக்கத்தைப் போக்கும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை; அவனே வந்து போக்கானாகில், இந்த 2எலி எலும்பனுக்குப் போக்கிக்கொள்ளப் போகாதேயன்றோ?

    நாள் மலராம் அடித்தாமரை – செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார். ‘அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி. இதனால், ‘விரோதி போகைக்கு இவ்வேப்பங்குடிநீரை ஆயிற்றுக் குடிக்கச் சொல்லுகிறது என்கிறார்,’ என்றபடி. வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு – இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி. வாயுள் வைக்கையாவது, 3‘ஓவாது உரைக்கு முரை’ என்கிறபடியே உரைத்தல். மனத்துள்

வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி உறுப்புகட்கு அடைத்த காரியங்களைக் கொள்ளவே, சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

    பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயனுடைய நாண்மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும்.

பிராப்தியும் திருமலை தரும் என்றவர் மறுபடியும் திருவேம்கடது ஆயன் –
விரோதி பாபங்கள் போக திருமலை ஆழ்வார்  எல்லாம் வேணுமோ
ஏக தேசம் போதுமே
அதனால் திருவேம்கடமுடையான்
வடமாமலை உச்சி -கலியன்

ஓயும் ஜன்ம ஜர மர ணாதிகள்
ஓயாதது ஓயும்
அவனோடு அன்வயம்
வீடுமாறு செய்பவன்
செய்வதற்காக இருக்கிறவன் –
பிணி-சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் அவை எல்லாம்
ஓயும் மூப்பு சொன்ன பின்பு
பிணி இங்குத்தை துக்க நிவ்ருத்தி வியாதிகள்
எலி எலும்பனுக்கு போக்கி கொள்ள முடியாது
அடித் தாமரை வாய் –மனசு சொல்லி -முக் கரணங்களால்
அவன் கால் காண நசிக்கும்
வேப்பம் சாறு குடிக்க சொல்ல வில்லையே -இனிமையான விஷயம்
செவ்விப் பூவை நாண் மலரா அடித் தாமரை
மனோ வாய் காயங்களால் ஓவாது உரைக்கும் உரை
கரணங்களுக்கு அடைந்த கார்யம் ஸ்வரூப விரோதிகள் போகும்
ஆயன் -கண்ணன் வேங்கட கிருஷ்ணன் -சௌலப்யம்
அப்பொழுது அலர்ந்த தாமரை பூ போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading