எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வுஇன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி
அவர்எம் ஆழி அம்பள்ளி யாரே.
பொ – ரை : உயர்திணையும் அஃறிணையுமான எல்லாப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கு உண்ணாதவாறு தன் வயிற்றில் ஒடுங்கும்படி நின்ற, பரந்து விரிந்த ஞானவெள்ளத்தினையுடைய ஒளி மிகுந்த திருமேனியையுடையவர் யாவர்? அவர்தாம், எமக்காகத் திருப்பாற் கடலில் அறிதுயில் செய்கின்றவர் ஆவர்.
வி-கு : ‘இன்றி ஒடுங்க நின்ற’ என முடிக்க. அவ்வாறு முடித்து ‘நின்ற’ என்பதனை ‘மூர்த்தி’ என்பதனோடு முடிக்க. மூர்த்தி – திரு மேனியையுடையவன். கவர்வு – ஒரு பொருளும் மற்றொரு பொருளும் நெருக்குண்டு அந்நெருக்கால் வருந்தல். பவர் – பரப்பு.
ஈடு : ஆறாம் பாட்டு. 3‘ஆபத்துக் காலத்தில் துணைவன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.
எவரும் யாவையும் எல்லாப் பொருளும் – அறிவுடைப் பொருளும் அறிவில்லாத பொருளும் ஆகிய எல்லாப்பொருள்களும் பிரளய காலத்தில் தன் வயிற்றில் சேர்ந்திருந்தபோது. கவர்வு இன்றி – கவர்கையாவது, பற்றுகை: அதாவது, துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி. தன்னுள் ஒடுங்க நின்ற –1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற. இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம். பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தையுடையனாய். இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர், எம் ஆழி அம் பள்ளியாரே – 4தம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு, எங்களைப் பாதுகாத்தற்காக வந்து பிரளயத்தை அழகிய படுக்கையாவுடையவர் ஆனார். பள்ளி – படுக்கை. 5‘பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை’ என வருதல் காண்க.
‘இப்படி ஆபத்துக்காலத்தில் துணைவனாய் 6அணியன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன்,’ என்கிறார்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply