பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும்
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்
உள்உள் ஆர்அறி வார்அ வன்தன்
கள்ள மாய மனக்க ருத்தே?
பொ – ரை : ‘ஆலந்தளிராகிய படுக்கையில் சயனித்திருக்கிற வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய வயிற்றையுடைய பெருமான்; ஒருவர்க்கும் தோன்றாத ஆச்சரியமான, உள்ளே உள்ளே செல்லுகின்ற, அவனுடைய மனத்தின் எண்ணத்தை அறிய வல்லவர் எவர்தாம்? ஒருவர் இலர்,’ என்றவாறு.
வி – கு : ‘கொள்ளும்’ என்னும் எச்சத்தை ‘வயிறு’ என்னும் பெயருடன் முடிக்க. ‘வள்ளல், வல்’ இவ்விரண்டும், வயிற்றுக்கு அடைமொழி. கள்ளம் – ஒருவருக்கு அறிய முடியாத தன்மை. மாயம் – ஆச்சரியம். ‘அறிவார் ஆர்?’ என்ற வினா, இன்மை குறித்து நின்றது.
ஈடு : ஏழாம் பாட்டு, 1‘அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.
பள்ளி ஆல் இலை – அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிராகிய படுக்கையிலே ஏழ் உலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் – ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து அப்படுக்கையில் அறிதுயில் செய்கிறின்றவன்.2உள்ளே புக்க உலகங்கட்கு இடம் கொடுத்தலோடு அமையது. இன்னம் வேறு தனியாக உலகங்கள் இருப்பினும், அவற்றிற்கும் இடம் கொடுக்க வல்ல வயிறு ஆதலின், ‘வள்ளல் வயிறு’ என்றும், உள்ளே புக்க பொருள்கட்கு அச்சமென்பது சிறிதும் இல்லாத வண்ணம் காப்பாற்ற வல்ல மிடுக்கினையுடைத்தாய் இருத்தலின், ‘வல் வயிறு’என்றும், இப்படிக் காப்பாற்ற வேண்டிய கடமையினையுடையவனாதலின், காப்பாற்றுகிறான் என்பார்,‘பெருமான்’ என்றும் அருளிச் செய்கிறார்.அவன் தன் கள்ளம் மாயம் மனம் கருத்தை ஆர் அறிவார் – ஒருவரும் அறியாதவாறு இன்னம் உள்ளே உள்ளே இருப்பதாய், அறிந்த தன்மை ஆச்சரியமாக இருக்கிற அவனுடைய மனத்தின் வியாபாரத்தை யாவர் அறிவார்? ‘ஏன்? நீர் அறிந்து சொன்னீரே?’ எனின், கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி, ‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’ என்பார், ‘யார் அறிவார்?’ என்கிறார்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply