தகும்சீர்த் தன்தனி முதலி லுள்ளே
மிகும்தேவும் எப்பொருளும் படைக்கத்
தகும்கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும்சோதி மேல்அறிவார் எவரோ?
பொ – ரை : ‘படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடையதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றும் எப்பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகிய தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளி உருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஓர் இறைவன் உளன் என்று அறிகின்றவர் யாவர்? ஒருவரும் இலர்’ என்றபடி.
வி-கு : தனி முதல் – தனித்த காரணமான மூலப்பகுதி. தனி என்பது, இரண்டாவது வேறு காரணம் இன்மையைக் குறிக்க வந்தது. மேல் – மேம்பட்ட பொருள். அறிவார் – வினையாலணையும் பெயர். ‘யவர்’ என்பது, முன்பு உள்ள பாடம். ‘எவர்’ என்னும் வினா ஈண்டு இன்மை குறித்து நின்றது.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘தாமரைக்கண்ணன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.
தகும் சீர் – படைத்தலுக்குத் துணையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன். தன் தனி முதலினுள்ளே – காரிய வர்க்கத்துக்கு அடையக் காரணமான மூலப் பிரகிருதி.
இனி, இதற்கு, 1‘நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள் கூறலுமாம். 2‘உலகத் தோற்றத்திற்குப் பரமாணுக்களே காரணம்’ என்பாரும் உளராதலின், அவர் கொள்கையினின்றும் வேறுபடுத்துவதற்குத் ‘தனி’ என்னும் அடைபுணர்த்து ஓதுகிறார். மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.
எப்பொருளும் படைக்கத் தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி – ‘மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான்-ஒருவன்’ என்னுமிடத்தைத் தெரிவிப்பனவாய், காக்குந் தன்மை இல்லையாயினும், ‘காட்சிக்கு இனியவாய்க் குளிர்ந்திருக்கிற திருக்கண்களையுடைவனாய், அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே மிக்க பேரொளியை யுடையவன். ‘தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார். 6‘பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்
நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1‘எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.
‘உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி. 2‘பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply