ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்- சூர்ணிகை -153/154/155/156..

சூரணை -153-

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே
அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப் படாதே அகவலைப்பட்டு
வளர்த்து எடுப்பார் கை இருந்து
தயிர் நெய்யமர் பாலமுதுண்டு
ஒரு மிடறாய்ப் போற்றி
ஒரு வண்ணத்து இருந்த
நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே
நல் வளம் துரப்பன் என்னும் அவற்றுக்கு முகந்து
சொல் எடுத்து சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்
கை கூப்பி வணங்கப் பாடி
ஆலியா அழையா பர அபிமாநத்திலே
ஒதுங்கின நம்பிக்கு அன்பர்
தலை மீது அடிப் பொடி உடையவர் உடையார்
போல்வாரைக் கிளி பூவை குயில் மயில் என்னும்-

அதாவது –
கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று
ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

வளர்த்து எடுப்பார் கை இருந்த –
(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞானமூட்டிய ஆச்சார்யர் ஆதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி )
வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,
எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும்
சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு –
இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கைவசமாய்

தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்-
சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே
உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து-
ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

போற்றி ஒரு வண்ணம் திருந்த –
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் –
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் –
திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும்
கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் –
நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று
என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் –
ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் –
இன்னானதான தசையிலும்-

துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று
அநாராதித்த தசையிலும் -சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்-
வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் –
என்னும் நினைவாலே உகந்து —

சொல்லெடுத்து சோர்ந்தவாறே
சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13-
என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்-
அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —

கற்பியா வைத்த மாற்றம்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே ,
முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –

கை கூப்பி வணங்கப் பாடி-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை
கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று
கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

ஆலியா அழையா —
ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–
(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே
இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )

பர அபிமானத்தில் ஒதுங்கின –
தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –
ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –
(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே
அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்று
ஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று
திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே
அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல
பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான
ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –

கிளி பூவை குயில் மயில் -என்னும் –
குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் –
குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி —
பூவையாவது -நாகண வாய்ப்புள் –
மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

————————————————-

சூரணை -154-

நாரை கொக்கு குருகு-என்று சொல்கிறது யாரை என்னும்
அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் –

ஆசறு தூவி என்னும்
பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே
திரை உகளும் வ்யசன வ்யதை யற்றுத்
தாய் வாயில் உண்ணும்
பிள்ளைக்கு இரை தேடி
வைகலுடன் மேய்ந்து
நுங்கால் பைம்கானம் என்று
ப்ரஹ்ம ரதம் பண்ணி கொடுத்தவை கொண்டு
நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும்
தனிப் பெறும் பித்தர் நம் முதலிகள் போல்வாரை
நாரை கொக்கு குருகு என்னும் —

அதாவது
ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே–
ஆசறு தூவி வெள்ளைக் குருகே –திருவாய்மொழி–6-8-8–என்று
பழிப்பு அற்ற சிறகை உடைத்தாய் -உள்ளும் புறமும் ஒக்க -நிர்மலமாய் இருக்கும் குருகே -என்று சொல்லப் பட்ட –
ய ஸ்மரேத் புண்டரீகாஷம் ஸ பாஹ்யாப்யந்தரஸ் சுசி-என்கிறபடி
(செந்தாமரைக் கண்ணனை தியானம் செய்பவன் உள்ளும் புறமும் தூய்மை உள்ளவன் ஆவான் )
பாஹ்யாப்யந்தர சுத்தி யோடு கூட –

திரை உகளும் வ்யசனவ்யதை யற்று-
வாயும் திரை உகளும் கானல் மட நாராய் –திருவாய்மொழி-2-1-1–என்று
ஆமிஷை காக்ரா சித்தத்தையாலே நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே
தாவிப் போகா நிற்கிற கானலிலே சலியாமல் இருக்குமா போலே –
கிரயோ வர்ஷா தாராபிர் ஹன்யமானா ந விவ்யது
அபிபூயமானா வ்யசனைர் யதா தோஷஜா சேதச – –ஸ்ரீ மத் பாகவதம் –10–20-15–என்கிறபடியே
பகவத் ஏகாக்ர சித்தையாலே சம்சார சமுத்திர தரங்கங்களான
தாப த்ரய ரூப வ்யசனங்கள் அஹமஹமிகாய வந்து மேலிடா நின்றாலும் -அதுக்கு இடையாதே-

தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி –
தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் -பெரிய திருமொழி -9–6–1–என்றும் –
பழனக் கழனி அதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் –பெரிய திருமொழி -5–1–2–என்றும் ,
சொல்லுகிற படி கொக்கு தன் வாயாலே எடுத்து கொடுக்க -ஜீவித்து இருக்கும் தன் பிள்ளைக்கு
வாய்க்கு அடங்கும் இரை தேடி இடுமா போலே –
தங்கள் வாக்காலே உபகரிக்கும் பகவத் விஷயத்தை -உப ஜீவித்து இருக்கும் குழை சரக்கான சிஷ்யர்களுக்கு
பாக அனுகுணமாக சாத்ம்யமான பகவத் விஷயார்தங்களை சாஸ்த்ரங்களிலே ஆராய்ந்து உபகரித்து –

வைகலுடன் மேய்ந்து –
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் –திருவாய்மொழி -6-1-1–என்றும் –
காதல் மென் படையோடு உடன் மேயும் கருநாராய் —திருவாய்மொழி –6-11-2-என்றும் –
சொல்லுகிற படி -சர்வ காலமும் -போக ஸ்தலங்களிலே தாங்களே சென்று –
தங்களைப் பிரியில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்கள் உடனே கூடி
பகவத் குண அனுபவம் பண்ணி –

நும் கால் பைம் கானம் என்று ப்ரஹ்ம ரதம் பண்ணி –
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ–திருவாய்மொழி -9-7-1–என்றும் ,
பைம் கானம் ஈது எல்லாம் உனதே யாகி பழன-மீன் கவர்ந்து உண்ணத் தருவன் —திரு நெடும் தாண்டகம் –27- என்றும்
சொல்லுகிறபடி தங்கள் பக்கல் உபஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே
சிரஸா வகிக்கை ஆகிற ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு –
சரீரமர்த்தம் ப்ராணாஞ்ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிற -க்ரமத்திலே
சாதரமாக சமர்ப்பித்தவற்றை அங்கீகரித்து –

நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் -இத்யாதி –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் –திருவாய்மொழி -8-10-11–என்று
பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான கார்ஹஸ்யத்தையும் –
சம்சார வெக்காயம் அடியான பயத்தாலே –
இன்பமரும் செல்வமும் இவ் வரசும் யான் வேண்டேன் –பெருமாள் திருமொழி -3-9–என்று
உபேஷிக்கும் அவர்களாய் உள்ள –
அம் கை ஆழி அரங்கன் அடி இணை தங்கு சிந்தை தனி பெரும் பித்தரான –ஸ்ரீ குலசேகர பெருமாள் –
ஆச்சர்ய பதஸ்தரான நம் முதலிகள் போல்வாரை –
குண சாம்யத்தால் நாரை என்றும் -கொக்கு என்றும் -குருகு என்றும் சொல்லும் என்கை-

நன்னீல மகன்றில்காள் -திருவாய்மொழி -1-4-4—என்று
மகன்றில்களையும் தூது விட்டமை ஒத்து இருக்கச் செய்தே அதுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்யாது ஒழிந்தது –
அதில் இப்படி பரக்கச் சொல்லத் தக்கது இல்லாமையாலும்
இந்த நியாயத்திலே தத் சமான குணரைச் சொல்லிக் கொள்ளும் இத்தனை அன்றோ என்னும் அதைப் பற்றவும்–
மகன்றிலாவது -அன்றிலிலே ஒரு அவாந்தர பேதம் …

ஆக இப்படி தூது பிரகரணத்திலே சொல்லுகிற பஷ்யவாந்தரங்களுக்கு
ஸ்வாபதேசம் அருளி செய்தார் ஆய்த்து —

——————————-

சூரணை-155-

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

வெளுத்து ஒளித்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )
கண்டு உகந்து பர சம்ருத்தியே பேறான –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர வரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

————————————————————

சூரணை–156-

பேற்றுக்கு அடி இவர்கள் ஆகையாலே ப்ராப்யத்தில் த்வரை தோன்ற பல காலும் தூது விடுவர் –
இனி இப்படி இவர் தூது விடும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவையும் —
தூது விடுகைக்கு பற்றாசையும்
அதுக்கு விஷயத்தையும்
தூது நாலுக்கும் –வகை இட்டு அருளி செய்கிறார் மேல் —

தம் பிழையும் -சிறந்த செல்வமும் –
படைத்த பரப்பும் -தமரோட்டை வாசமும் –
மறப்பித்த ஷமா தீஷா சாரஸ்ய சௌந்தர்யங்களை
உணர்த்தும் வியூக பரத்வ, த்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்-

(தம் பிழையை மறப்பித்த க்ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூது-அஞ்சிறைய மட நாராய் –
சிறந்த செல்வம் மறப்பித்த -தீக்ஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூது -வைகல் பூம் கழிவாய்-
படைத்த பரப்பு -மறப்பித்த -சாரஸ்யத்தை உணர்த்தும் -பரதவ த்வய —
பரத்வத்தையும் அந்தர்யாமித்வத்தையும் சொன்னபடி -மூன்றாம் தூது-பொன்னுலகு ஆளீரோ-
தமரோட்டை வாசத்தை மறப்பித்த ஸுந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை-நாலாவது தூது -எம் கானல் அகம் கழிவாய் -என்றபடி )

அதாவது
தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூதுக்கு விஷயம்-
அஞ்சிறைய மட நாரையில் –1-4—
என் பிழையே நினைந்து அருளி –1-4-7–என்று
தன் மேன்மையால் இத் தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான் –கலக்க கொள்ள
நம் தோஷ தர்சனத்தை பண்ணிப் பிரிந்து நம் அபராதத்தை பார்த்து தன் ஷமையை மறக்கையாலே –
இத் தலையை நினையாது இருந்தான் அத்தனை–
அவன் தன்னுடைய அபராத சஹத்வத்தை அறிவிக்க வரும் – என்று அறுதி இட்டு –
என் பிழைத்தாள் திரு அடியின் தகவினுக்கு –1-4-7–என்று
அபராத சஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
கடலாழி அம்மானை கண்டக்கால் இது சொல்லி —1-4-10-என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி யர்தமாக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவனுக்கு
சிருஷ்டி பிரயோஜனம் –விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதம்—ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே
திரு அடிகளில் அடிமை கொள்ளுகை அன்றோ -என்று
இத்தைச் சொல்ல வேண்டும் என்று வியூகத்தில் தூது விடுகையால்
தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தி விட்ட வியூகம் பிரதம தூதுக்கு விஷயம்

சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம் –
வைகல் பூம் கழி வாயில் -6-1-
சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டூர் உறையும் —6-1-3-என்று
ஆர்த்த ரஷணம் பண்ண வாரா நிற்கச் செய்தே -திரு வண் வண்டூரின் ஐஸ்வர்யத்தைக் கண்டு கால் தாழ்ந்து
தன் ஆர்த்த ரஷண தீஷையை மறைக்கையாலே -நம்மை நினையாது இருந்தான் அத்தனை –
ஆர்த்த ரஷணம் ஒரு தலை யானால் மற்று ஒன்றில் கால் தாழும் அவன் அல்லாமையால் –
அத்தை அறிவிக்க வரும் என்று –
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு –6-1-5–என்று
ஆர்த்த ரஷண தீஷத்வம் பற்றாசாக
மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழ செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே –6-1-10–என்று
பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாச பூமியான இலங்கையில் அரணை துகள் ஆக்கின ஏக வீரனான
சக்கரவர்த்தி திரு மகனுக்கு- ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்
என்று விபவத்தில் தூது விடுகையாலே
சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தி விட்ட விபவம்- இரண்டாம் தூதுக்கு விஷயம் .

படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தும் பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம் –
பொன்னுலகு ஆளீரில்-6-8-
முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு –6-8-1-என்று
ஸ்ருஷ்டமான ஜகத்தின் பரப்பை ரஷிக்கிற பராக்காலே ஆஸ்ரிதரோடு தனக்கு உண்டான ஐக ரச்யத்தை மறந்து –
அது கொண்டு தம்மை நினையாது இருந்தான் அத்தனை .
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்-6-8-6–என்று
ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே அத்தை அறிவிக்க வரும் என்று- ஐக ரசம் பற்றாசாக
வானவர் கோனைக் கண்டு யாதும் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும்-6-8-5-என்று
பரத்வத்திலும்

எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மின் –6-8-5-என்று
அதீந்திரிய தயா பரத்வ சத்ருசவான அந்தர்யாமித்வத்திலும் ,தூது விடுகையாலே –
படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தி விட்ட பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம்-

தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்
எம் கானலில் -9-7-
தமரோடு அங்கு உறைவார்க்கு–9-7-2–என்று –
தம்மை உகந்த பாகவதர்களோட்டை சேர்த்தியில் இனிமையாலே-
பிரிந்தார்க்கு பிராணன் கொண்டு இருக்க ஒண்ணாத படியான தன் சௌந்தர்யத்தை மறந்து –
அது கொண்டு பிரித்திட்டு வைத்துப் போய் நம்மை நினையாது இருந்தார் அத்தனை –
இவ் வடிவழகை பிரிந்தார் தரிப்பாரோ என்று அவ் அழகை அறிவித்து விட்டால் வராது இரார் என்று –
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு -தக்கிலமே -கேளீர்கள் -9-7-3–என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவன்று –9-7-9–என்றும்
சௌந்தர்யம் பற்றாசாக -திரு மூழிக் களத்தாருக்கு -என்று ,அர்ச்சாவதாரத்தில் தூது விடுகையாலே
தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்திவிட்ட அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading