பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:
“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”
(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).
இப்பாடலில், உலகத்திற்குக் காரணப்பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக,
சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண் சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும்,
ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும்
பெருந்தேவனார்.
இவ்வுருவகமானது வேதப் பகுதியாகிய “முண்டக உபநிடதத்தில்” உள்ளதை அடியொற்றியே வருகிறது.
அவ்வுபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதியில், “அனைத்துக்கும் மேலான பரம புருஷனிடமிருந்தே
நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்புவனபோல் எல்லாம் பிறந்து இறுதியில் அவனிடத்தேயே ஒடுங்குகின்றன” என்னும் செய்தி விளக்கப்படுகிறது.
அவனே அனைத்துக்கும் உட்பொருளாக உள்ளுறைந்து ஆள்வதையும்,
அவன் பிரபஞ்சமனைத்தையும் சரீரமாகக் கொண்டமையையும் விளக்கும் வண்ணம் பின்வருமாறு வேதம் உரைக்கிறது:
“அக்3னிர் மூர்தா4 சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யௌ திச’: ச்’ரோத்ரே வாக்3விவ்ருதாச்’ச வேதா3: வாயு: ப்ராணோ ஹ்ருத3யம்
விச்’வம் அஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹி ஏஷ ஸர்வபூ4த-அந்தராத்மா”[முண்டக உபநிடதம், 2.1.4]
இம்மந்திரத்தில் நெருப்பைப் பரமனது முகமாகவும், திங்களையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும்,
வேதத்தை அவன் வாய்மொழியாகவும், ஞாலத்தைச் சூழ்ந்து வீசும் வாயுவை அவன் மூச்சுக்காற்றாகவும்,
பிரபஞ்சத்தை அவன் இதயமாகவும் கூறி, அவன் பாதங்களிடத்தே பூமி பிறந்ததாகவும் உருவகப்படுத்தி இம்மந்திரம் கூறுகிறது.
தொன்றுதொட்டு வடமொழியிலும் தமிழிலும் திருமாலைக் குறித்து வழங்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற உருவகம் இது.
ஆதி சங்கரர் தம் உபநிடத உரையில் இவ்விடத்திற்கு, “இதில் சொல்லப்படுபவர் விஷ்ணுவாகிய அனந்தன்.
சரீரத்தை உடையவர்களில் முதன்மையானவர். மூவுலகையும் தம் உடலாகக் கொண்டிருப்பவர்.
அனைத்து உயிர்களுக்கும் உயிராக — அந்தராத்மாவாகத் திகழ்பவர்”
[“ஏஷ தே3வோ விஷ்ணுர் அனந்த: ப்ரத2ம ச’ரீரீ த்ரைலோக்ய தே3ஹோபாதி4: ஸர்வேஷாம் பூ4தானாம் அந்தராத்மா”] என்று பாஷ்யமிட்டுள்ளார்.
ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்திலும் ஸ்ரீ சங்கரர் இம்மந்திரம் குறித்த விசாரம் செய்துள்ளார் (சாரீரக மீமாம்ச பாஷ்யம், 1.2.25).
“வேதத்தின் முடிவாக, உபநிடதங்களின் கருப்பொருளாக நிற்பது பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாகவும் கர்த்தாவாகவும் விளங்குவதாகிய,
உண்மைப்பொருளாகிய, பரம்பொருளே” என்று சங்கரர் பாஷ்யத்தின் முதலத்தியாயத்தில் நிலைநாட்டியுள்ளார்.
“ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பேசுவது போல் தோன்றும் சுருதி வாக்கியங்களைப் புஷ்பங்களென்று எடுத்துக் கொண்டால்,
ப்ரஹ்ம சூத்திர கர்த்தாவாகிய வியாசர் செய்திருப்பது அவற்றை நூலால் கோர்த்து சீர்ப்படுத்தி,
முரண்பாடு சிறிதும் இல்லாத மாலையாகத் தொடுத்துத் தந்திருப்பது” என்பது சங்கரர் கூறும் விளக்கம்
(‘சூத்திரம்’ என்ற வடமொழிச் சொல் ‘நாண்’ எனும் பொருளை உடையது). இப்படி ப்ரஹ்ம சூத்திரம் விசாரத்திற்குப் பல சுருதி வாக்கியங்களை
எடுத்துக் கொண்டிருப்பதாகவும், ஆங்காங்கு ஸ்ம்ருதிகளாகிய இதிகாச-புராண-ரிஷி வாக்கியங்களிலிருந்தும் உதாகரித்துச் செல்வதாக
பாஷ்யகாரர்கள் பலர் விளக்கி வந்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் மேலெடுக்கப்பட்ட முண்டகோபநிடத மந்திரம்.
பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும், சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே
இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது என்பது உரை எழுதிய சங்கரர், ராமானுஜர் முதலானோர் கொள்கை.
“சர்வாந்தர்யாமி” என்பதற்கு “அனைத்தையும் உள்ளுறைந்து ஆள்பவன்” என்று பொருள்.
“உபாதான-நிமித்த காரணங்கள்” பற்றி எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
“பானைக்கு மண் உபாதான காரணம்; குயவன் நிமித்த காரணம்” என்ற உதாரணம் போதும்.
மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை
உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை.
தோகையை விரித்து ஆடுவதாலோ, தோகையை உள்வாங்கிக் கொள்வதனாலோ “மயில் மாறுதல் அடைந்துள்ளது” என்றோ,
“மயில் அழிந்து விட்டது” என்றோ எவ்வாறு நாம் கூறுவதில்லையோ, அவ்வாறே பரம்பொருளின் அங்கமாக பிரபஞ்சம்
நாம-ரூபங்களுடன் விரிந்து கிடக்கும் நிலையில் “பரம்பொருள் மாற்றம் அடைந்துவிட்டது” என்றோ,
பிரளயத்தின்போது நாம-ரூபங்கள் அழிந்த நிலையில் “பரம்பொருள் அழிந்துவிட்டது” என்றோ கூறுவதில்லை.
“தன்னுளே திரைத்தெழுந் தரங்கவெண் டடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவுந் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின்க ணின்றதே.”
[திருச்சந்த விருத்தம், 10]
இத்தகைய காரிய-காரண தொடர்ச்சியிலும் பரம்பொருள் விகாரமடையாமல் என்றென்றும் நிலைத்து நிற்கும் தத்துவமாக
விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக பொன்னையும் ஆபரணத்தையும் கூறுவர். பொன் ஆபரணத்திற்குக் காரணப்பொருள்.
ஆபரணம் பொன்னைக் காரணப்பொருளாக உடையதால் அது ’காரியங்கள்’ எனும் குழுவில் அடங்கிவிடுகிறது.
ஆபரணமான பிறகும் பொன் பொன்னாகவே இருக்கிறது, ஈயமாகவோ பித்தளையாகவோ மாற்றம் அடைவதில்லை.
அவ்வாறே பிரபஞ்சமாக விரிந்து நின்றாலும், அதற்குக் காரணப்பொருளும் அந்தராத்மாவ்வுமாகிய பரம்பொருள் விகாரமடைவதில்லை.
இத் தத்துவத்தைக் கம்பர் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் நமக்கு அறிவிக்கிறார்.
அவ்விடத்தில் நரசிங்கப்பிரானைக் குறித்து நான்முகனார் இவ்வண்ணம் கூறுகிறார்:
“நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்.” [கம்பராமாயணம்: இரணியன் வதைப்படலம், 160]
இது பின்வரும் திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை நினைவூட்டுகிறது. இதுவும் நரசிங்கப்பிரானைக் குறித்தே பாடியிருப்பது:
“தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே — உகத்தில்
ஒரு நான்று நீயுயர்த்தி உள்வாங்கி நீயே
அருநான்கு மானா யறி”[நான்முகன் திருவந்தாதி, 5]
இப்பாடலில் “அரு நான்கும் ஆனாய்” என்றவிடத்திற்கான ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் மணிப்பிரவாள வியாக்கியானத்தில்,
“தேவ திர்யங் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே அந்தராத்மதயா ப்ரகாசித்து நின்ற”
(அதாவது, தேவர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் உள்ளுறையும் ஆன்மாவாக நின்ற) என்று காணப்படுகிறது.
முன்பே சங்கப்புலவர்களும் மாயோனை,
“அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” [பரிபாடல், 3]
“ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,” [பரிபாடல், 13]=என்று ஜகத்காரணப் பொருளாகப் பாடியுள்ளனர்.
நிற்க. பிரபஞ்சத்துக்கு உயிராய் உள்ள இறைவனின் நிலையை “சரீர-சரீரி பாவம் (शरीर-शरीरि भावम्)” என்று மற்றொரு விதமாக
வேதாந்திகள் கூறுவர். அதாவது, பிரபஞ்சத்தைச் சரீரமாக உடையவனாதலால் இறைவன் “சரீரி” ஆகிறான்.
நாம் மேற்கண்ட முண்டக உபநிடத பாஷ்யத்தில் சங்கரர் “சரீரத்தை உடையவர்களுள் முதன்மையானவர்” என்று விளக்குகிறார்.
ஆகையால் சூரியனையும் சந்திரனையும் பரம்பொருளுக்குக் கண்களாகவும், தரணியைப் பாதமாகவும், திக்குகளைச் செவியாகவும்,
அண்டவெளியை உடலாகவும் சுருதி வாக்கியம் உருவகப்படுத்துதுவதன் நோக்கம்
“பரம்பொருள் உலகனைத்துக்கும் உட்பொருளாக, அந்தராத்மாவாக, உயிருக்கு உயிராக இருப்பதை உணர்த்தவேயன்றி,
விகாரமடையும் குணத்தை உடையது என்பதைக் கற்பிப்பதற்கல்ல” என்று சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் பின்வரும் இதிகாச-புராண வாக்கியங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
அவற்றில் நமக்குச் சில ஆர்வமூட்டும் செய்திகள் கிடைக்கின்றன:
“யஸ்ய-அக்3னிர்-ஆஸ்யம் த்3யௌர்-மூர்தா4 க2ம் நாபி4ச்’-சரணௌ க்ஷிதி: |
ஸூர்யச்’-சக்ஷு: தி3ச’: ச்’ரோத்ரம் தஸ்மை லோகாத்மனே நம: ||”
[“யாருக்குத் தீ முகமாகவும், சுவர்க்கம் தலையாகவும், ஆகாயம் வயிறாகவும், காலாக பூமியும், கதிரவன் கண்ணாகவும்,
திசை செவியாகவும் விளங்குமோ, உலகத்தைத் தாங்கும் உயிரான அவனுக்கு வணக்கங்கள்.” — மகாபாரதம், 12.47.44]
(ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்தில் 1.2.25). அதாவது, “ஸ்ம்ருதிகளில் உள்ள வாக்கியங்கள் மூல சுருதிகளை ஆதாரமாகக் கொண்டவையாக
இருந்தால், அவை அச் சுருதி வாக்கியங்களைத் தெளிய உரைப்பதாகக் கொள்ளலாம்” என்பது.
இவ்வாறு அமைந்துள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களை “வேத உபப்பிரம்மணம்” என்று கூறுவர்.
ஆகையால், மேற்கண்ட மகாபாரதச் சுலோகம் முண்டகோபநிடத மந்திரத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும்.
இதனை அடிப்படையாக வைத்துத்தான் சங்கப் புலவரும் நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என்பதும் தெரிகிறது.
சங்கரர் எடுக்கும் மற்றொரு மேற்கோள் இன்றைய பிரம்மாண்ட புராண அத்தியாயம் ஒன்றில் உள்ளது:
“த்3யாம் மூர்தா4னம் யஸ்ய விப்ரா வத3ந்தி க2ம் வை நாபி4ம் சந்த்3ர-ஸூர்யௌ ச நேத்ரே |
திச’: ச்’ரோத்ரே வித்3தி4 பாதௌ3 க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூ4தப்ரணேதா ||”
[வேதமறிந்த ஞானிகள் யாருடைய உச்சந்தலையை சுவர்க்கமாகவும், ஆகாயத்தை உதரமாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும்,
திசைகளைச் செவிகளாகவும் பாதங்களை பூமியாகவும் அறிவரோ, அந்த அறிவுக்கெடாத பரமாத்மா
அனைத்து உயிர்களுக்கும் தலைவன் ஆவான். — பிரம்மாண்ட புராணம், 1.5.107]
பிரம்மாண்ட புராணத்தில் இவ்வரிகளைக் கொண்ட பிரகரணமும் சிருஷ்டியை விளக்குவதாகும்.
சங்கரரால் கீதை விளக்கவுரையில் மங்கள சுலோகமாக எடுக்கப்பட்ட “நாராயண: பரோ அவ்யக்தாத்” எனத் தொடங்கும் வரிகளும்
இதே அத்தியாயத்தில் மேலெடுக்கப்பட்ட வரிகளுக்கு மிக அண்மையில் காணப்படுகின்றன.
இது தவிர, மற்றொரு இடத்திலும் (சூத்திர பாஷ்யம், 2.1.1) இப்புராணத்தில் காணப்படும் வேறொரு வரியைச் சங்கரர்
மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து இப்புராணத்தில் உள்ள பகுதிகள் பிரமாணமாகக் கையாளப்பட்டமை தெரிகிறது.
திருமாலை இப்படிப் பாடும் மரபு வேதாந்தத்தை ஒட்டி வருகின்றது என்பதற்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து மேலும்
பல அரிய மேற்கோள்களையும் காணலாம். உதாரணமாக ஆதிகவி வால்மீகி முனிவரின் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
சீதையை மீட்டு வரும் தருணத்தில் நான்முகக் கடவுள் முகமாக தேவர்கள் அனைவரும் இராமனை பக்தியுடன் பாடும் பகுதி வருகிறது.
இப்பகுதியும் பரம்பொருளின் பரத்வ நிலையைப் பாடும் பல ஆழ்ந்த வேத வாக்கியங்களை அடியொற்றியவண்ணம் அமைந்துள்ளது. அதில் நான்முகனார்,
“அச்’விநௌ சாபி தே கரணௌ சந்த்3ர ஸூர்யௌ ச சக்ஷுஷீ”
“ஜக3த் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தை2ர்யம் தே வஸுதா4 தலம்” [— இராமாயணம், யுத்த காண்டம், 6.105.7, 6.105.23]
என்று பெருமாளின் கண்களைச் சூரிய-சந்திரர்களாகவும், திடமான நிலையை பூமியாகவும், அவன் செவிகளை அச்வினி தேவதைகளாகவும்
பாடியபிறகு உலகனைத்தும் அவனுக்கு சரீரமாகவும் பாடியுள்ளார் பிரம்மா.
இம்மரபை ஒட்டியே அமரகோசத்திலும் விஷ்ணு பெயர்களில் ஒன்றாக “விச்’வம்பர” என்ற பதமும் படிக்கப்படுகிறது.
இதற்கு “பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவன்” என்று பொருள்.
நாம் எடுத்துக்கொண்டிருக்கும் நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தை முழுமையாகக் கொண்ட வடமொழிச் சுலோகம்
ஒன்று இன்று அனைவராலும் ஓதப்படுகிறது.
“தோடகாசாரியார்” என்ற ஆதி சங்கரர் வழி வந்த வேதாந்தியரின் “ச்’ருதி ஸார ஸமுத்3த4ரணம்” என்ற நூலில் மங்கள சுலோகமாக வருகிறது–
“பூ4: பாதௌ3 யஸ்ய க2ம் சோத3ரமஸுரநில: சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாசா’: சி’ரோ த்3யௌர்முக2மபி த3ஹனோ யஸ்ய வாஸ்தவ்யமப்3தி4: |
அந்த:ஸ்த2ம் யஸ்ய விச்’வம் ஸுர-நர-க2க3-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம்
ரம்ரம்யதே தம் த்ரிபு4வனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||”
[“பூமியைப் பாதங்களாகவும், ஆகாயத்தை வயிறாகவும், வாயுமண்டலத்தை மூச்சாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும்,
திக்குகளைச் செவிகளாகவும், வானுலகை உச்சந்தலையாகவும், அக்னியை வாயாகவும், ஆழ்கடலைக் குடலாகவும், எவன் கொண்டுள்ளானோ,
எவனுள்ளே தேவரும், மானுடரும், புள்ளும், அரவும், கந்தருவரும், அசுரர்களும் இயங்கி விளையாடுகிறார்களோ,
மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட விஷ்ணுவாகிய அந்த சர்வேஸ்வரனை வணங்குகிறேன்.” — ச்ருதிஸாரஸமுத்தரணம், 179]
இச் சுலோகம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தில் தியான சுலோகங்களில் ஒன்றாக இன்று வாசிக்கப்படுகிறது.
நற்றிணையின் பாயிரத்தில் “மாநிலஞ் சேவடியாய்” என்பது மேற்கண்ட தியான சுலோகத்தில் “பூ4: பாதௌ3” என்றும்,
“விசும்பு மெய்யாக” என்பது “க2ம் சோத3ரம்” என்றும், “பசுங்கதிர் மதியொடு சுடர்க்கண் ணாக” என்றது
“சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ர” என்றும் வருவதைக் காணலாம்.
“இயன்றவெல்லாம் பயின்று அகத்து அடக்கிய” என்ற சரீர-சரீரி அடிப்படையிலான தொடர்பும் விரிவாக
“யஸ்ய விச்’வம் ஸுர-நர-க2க3-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம் ரம்ரம்யதே” என்றும் வருவதைக் காணலாம்.
இது “ஸர்வம் க2லு இத3ம் ப்3ரஹ்மா” என்ற சாந்தோக்ய உபநிடதத்தில் (மூன்றாம் அத்தியாயம், பதிநான்காவது பகுதியில் உள்ள)
“சாண்டில்ய விதயை” வாக்கியத்தையும் ஒட்டி வருகிறது. அதே அர்த்தத்தைப் புருஷ ஸூக்தமும்
“புருஷ ஏவேத3ம் ஸர்வம்” என்ற மந்திரத்தில் உணர்த்துகிறது. தைத்திரீய நாராயணீய உபநிஷதும்,
“யச் ச கிஞ்சிஜ் ஜக3த் ஸர்வம் த்3ருச்’யதே ச்’ரூயதேபி வா
அந்தர் ப3ஹிச்’ ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:”
[பிரபஞ்சத்தில் காணப்படுவது கேட்கப்படுவது எல்லாவற்றையும் உள்ளிருந்தும் வெளியிலும் சூழ்ந்து நாராயணன் நிலைத்து நிற்கிறான்.]என்று இயம்பிற்று.
இங்ஙனம் பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனுக்குச் சரீரமாகக் கூறுவதால் அனைத்துயிர்களும் அவனுக்கு உடைமையாகின்றன.
இத்தகையதொரு சித்தாந்தத்தில் பரஸ்பர சகோதரத்துவக் கண்ணோட்டத்திற்கே இடமுண்டு. இவ்வர்த்தத்தை நாம் பகவத் கீதை மூலமாக அறியலாம்:
“மற்றோ ரிடத்து மறமற்று மித்திரனா
யுற்றான் கருணை யுறுமமதை — செற்றா
னகங்கார மற்றா னமர்பொறையன றுக்கஞ்
சுகங்காணி லொப்பான் றுணிந்து.” [பகவத் கீதை வெண்பா, 12.13]=இப்படிக் கீதாச்சாரியனாகிய கண்ணன் சொல்லுமிடத்தே,
“இவரை நினைவில் வைத்துக் கொண்டுத் தன் இச் சுலோகத்தைச் செய்துள்ளானோ” என்று வியக்கும் வண்ணம்
வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ பிரகல்லாதாழ்வான். தன்னுடைய விஷ்ணுபக்தியைப் பொறாத தன் தன்தை பலவாறு துன்பப்படுத்தியும்
பிரகல்லாதன் இத்தகைய துவேஷமற்ற தூய சிந்தையுடன் திடமாக இருந்தார். அனைத்து உயிர்களையும் தனக்குச் சினேகிதராக,
மிக விரும்பத்தக்கவர்களாகவே பாவித்தார். “தூய விஷ்ணுபக்திக்கு இது இன்றியமையாத அங்கம்” என்ற கொள்கையை ஸ்திரமாகப் பற்றியிருந்தார்.
உலகனைத்தும் திருமாலுடைய தோற்றமன்றி வேறில்லை. அவனே அனைத்துடனும் ஒன்றி நிற்பவன்.
ஆகையால் ஞானிகள் உலகனைத்தையும் தம்மைக் காட்டிலும் வேறாக நினைக்காமல், அனைத்தையும் தாமாகப் பாவிப்பர்.
ஆகையால், நம்முடைய குலத்தில் வேரூன்றியிருக்கும் குரோத குணத்தை விலக்குவோம்.
இதன் மூலம் நாம் நித்தியமான, சுத்தமான, ஆனந்தமான ஆன்ம ஸித்தியை அடையலாம்.”
“அனைத்துயிர்களையும் சமமாக பாவிப்பீர்கள் அசுரர்களே! இத்தகைய சமத்துவ பாவமே அச்சுதனை ஆராதிக்கும் முறையாகும்” [விஷ்ணு புராணம், 1.17.82-90]
என்னும் பிரகல்லாதன் கூற்றைக் காணலாம். இக்காரணத்தால் கம்பர்,
“தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்” [கம்பராமாயணம்: இரணியன் வதைப் படலம், 82] என்று பிரகல்லாதனை அடைமொழியிட்டுப் பாடியுள்ளார்.
“வைஷ்ணவ ஜனதோ” எனத் தொடங்கும் குஜராத்தி மொழிப் பாடலின் கருத்தும் இத்துடன் உடன்படுவதை உணரலாம்
Leave a Reply