இவற்றினுடைய சத்தையை சார்த்தமாக உபாதானம் பண்ணி ஸ்ருஷ்டித்து -ஸ்ருஷ்டித்த அநந்தரம்-
இனிமேல் அவை பட்டது படுகின்றன என்று இராதே-சிறியத்தை பெரியது நலிந்து மஹாபலி போல்வார் பருந்து இறைஞ்சினால் போலே அபஹரிக்க- ஸ்ரீ யபதியானவன் தன் மேன்மை பாராதே
தன்னை அழித்து ரஷித்த செயலை அனுசந்தித்து சேதனராய் இருப்பார்க்கு இவனுக்கு மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்க இறே செய்ய அடுப்பது-என்றார் கீழே –
இவர்கள் தாங்கள் சேதனரான பின்பு இதிலே உருப்படாது ஒழிவார்களோ-என்று லௌகீகரைப் பார்த்தார் அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் – விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –நான் என்றும் என்னது என்றும் – பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு இது இருந்தபடி என்
ஏகஸ்மிந் நப்யதிக்ராந்தே முஹுர்ர்த்தே த்யாந வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மாக்ரந்திதம் ப்ருசம்-
-(பகவத் த்யானம் இல்லாமல் ஒரு முஹூர்த்தம் சென்றாலும் திருடர்களால் திருடப்பட்டவன் போல்
உறக்கக் கதறுவதே தகுந்தது)-என்கிறபடியே –பகவத் தியானத்துக்கு விச்சேதம் பிறந்தால் அதுக்குப் பரிஹாரமாகத் திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகை – சீரிய தனம் அபஹ்ருதமானால் எல்லாரும் அறியக் கூப்பிடுமா போலே கீழ்ப் பிறந்த விச்சேதத்துக்குக் கூப்பிடக் கடவது இறே-அப்படித் தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க – அவர்கள் அது தானும் அறியாது இருக்க அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை- தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்–
(“முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க் கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப் பாட்டிலருளிச் செய்த ஆழ்வார் தம்முடைய கொள்கைப் படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு
உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார்.-க்ஷுத்ர பலன்களை விரும்பி க்ஷுத்ர தேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப் பட்டன.-பரிதாபம் பொறுக்க மாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று-வயிற்றிலும் தலையிலும் அடித்துக் கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார்.–இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில், இவர் தாம் கீழ்ப் பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவு தூரம் சென்றதோ,
அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர்–இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்!-இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யா நின்றது.-பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்ற பின்பும் குறையற ஸம் ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற
மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்ய வேண்டியது ப்ராப்தமாயிருக்க,–அவளைத் திரஸ்கரித்து விட்டு உபயோகமற்றவொரு மணைக் கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப் போலே இவ் வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்து விட்டு ஒரு நன்றியும் செய்ய மாட்டாத அசேதந ப்ராயங்களான புதுத் தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே! இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ?
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–
பதவுரை
உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்தும்
இடந்து-ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு-(மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து-பிறகு வெளிப் படுத்தியும்
அளந்து-(பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
புடை-ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்
தான் அறி-தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும்
பல-வலகைப்பட்டு மிருக்கிற
தெய்வம்-தேவதைகளை
பேணுதல்-ஆராதிப்பது
தனது-தன்னுடைய
புல் அறிவாண்மை–நீச புத்தியை-பொருந்த காட்டி
விளங்கக் காட்டிக்கொண்டு–
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,
கொல்வன முதலா-ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான
அல்லன முயலும்–தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற
தேர்ந்து–இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்
அளிக்கும்–(முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற
முதல் பெரு கடவுள் நிற்ப–ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
இனைய செய்கை–இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன
அளி-(அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ
இன்பு துன்பு-ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)
தொல்-அநாதியாய்
மா-மஹத்தாய்
மாயம்-ஆச்சரியமான
பிறவியுள்-ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா-ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே
பல் மா மாயத்து-பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே
நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு-இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)
உலகு-இப்பூ மண்டலத்தை
படைத்து -ஆதி காலத்திலேயே உண்டாக்கி
இடந்து -ஸ்ரீ வராஹ கல்பத்தில் அண்ட பித்தியில் இருந்து குத்தி எடுத்து
உண்டு -பிரளய காலத்தில் அமுது செய்து
உமிழ்ந்து-அவாந்தர ஸ்ருஷ்ட்டி காலத்தில் வெளிப் படுத்தி
அளந்து -திரிவிக்ரம அவதாரத்தில் திருவடிகளால் அளந்து
தேர்ந்து -அதற்கும் மேலே ரக்ஷண உபாயத்தை சிந்தை செய்து
அளிக்கும் -ரக்ஷிக்கும் படியான
முதல் பெரும் கடவுள் -ஆதி காரணனும் பரதேவதையுமான ஸ்ரீமன் நாராயணன்
நிற்ப -ஆஸ்ரயணீயனாக இருக்க -அவனை விட்டு –
புடை பல அவனுடைய விபூதியாக சொல்லப்பட்டனவாய் -பலவகைப் பட்டவனாய்
தானறி தெய்வம் -ஆஸ்ரயிக்கும் தான் அறிந்த சில தேவதைகளை
பேணுதல் -ரக்ஷகனாக ஆதரிக்கை
தனாது புல் அறிவு -தன்னுடைய கீழான புத்தியை
ஆண்மை பொருந்தக் காட்டி-பெரியோர்கள் மனத்தில் படும்படி காண்பித்து
ஈன்றோள் இருக்க-பெற்றவள் இருக்கும் போது-அவளைக் கவனியாமல்
மணை நீர் ஆட்டி -அசேதனமான மணைக்கு நீராட்டுவது போல் இருக்கிறது
செய்கை-அத் தேவதைகளின் செய்கைகள்
கொல்வன முதலா-ஹிம்ஸிக்கை முதலிய
அல்லன முயலும்-செய்யத் தகாத கார்யங்களைச் செய்கையாகிற
இனைய-இப்படிப்பட்ட தன்மையை உடையவை
அளி-அத்தேவதைகள் அளிக்கும் பலமாவது
துன்பு -துன்பத்துடன் கூடிய
இன்பு-ஸூகமாகவே இருக்கும் -ஆகையால் அத் தேவதைகளை ஆஸ்ரயிக்கை
தொல் மா மாயப் பிறவி யுள் -அநாதியாய்-பெரியதாய் -ஆச்சர்ய கரமான சம்சாரத்தில் நின்றும்
நீங்கா-நீங்குகை அன்றிக்கே
பல் மா மாயத்து -பலவாய் பெரியதாய் மோகத்தை உண்டாக்கக் கூடிய சப்தாதி விஷயங்களில்
அழுந்து மா நளிர்ந்தே –நன்றாக அழுந்துகைக்கு இடமாகும்
ஒ! ஒ! உலகினது இயலவே–உலகின் ஸ்வபாவம் என்னே –
ஒ! ஒ!
இருந்தார் இருந்த இடங்களிலே செவிப்படும்படி கூப்பிடுகிறார்
உலகினது இயலவே
ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே
இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே –
இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே –
நீர் இங்கனே ஓ என்று இட்டு நெடு வாசி படக் கூப்பிடுகைக்கு லோகமாகத் தான் செய்தது என் என்னில்
ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி இரா நின்றார்கள்-உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி -பின்னை கர்ப்பத்தில் தரித்து -பிரசவ வேதனையை அனுபவித்து -அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால் அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாற–அவளை விட்டு ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்-
(ஈன்றோளிருக்க மணை நீராட்டி பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான், போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்டீர்பெற்றதாயிருக்க மணையடி யொற்றியதே. மணை நீராட்டி –-மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.-நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி–‘மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை, இதுதான் அது, அது தான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.–மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல்-‘மணை நீராட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம்.-ப்ரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால்-அத் தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது-இடைக் காலத்து வழக்கமாக இன்றைக்கும் நடந்து வருகின்றதாம். அதனைத் திருவுள்ளம் பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச் செய்தார் என்று சிலர் சொல்லுவர்..)
நீர் -ஈன்றோள் -என்று தாயாக நினைக்கிறது தான் ஆரை என்னில்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப
இவை அடங்கலும் போக மோக்ஷ ஸூந்யமாய்த் தமோ பூதமாய்–ஆஸீதிதம் தமோ பூதம் -என்றபடி அசித் கல்பமாய் இழந்து கிடக்கிற போது–இவற்றினுடைய தசையைக் கண்டு -ஐயோ என்று இரங்கி-பஹு ஸ்யாம் என்று ஸ்ருஷ்டித்து–ஸ்ருஷ்டமான அநந்தரம் பிரளயம் கொள்ள நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாக எடுத்த–திரிய பிரளயம் வரும் என்று முற்கோலி-திரு வயிற்றிலே வைத்து உள்ளே கிடந்து தளராதபடி வெளிநாடு காண உமிழ்ந்த–எல்லை நடந்து மீட்டு – இப்படி சர்வ வித ரக்ஷணங்களையும் பண்ணச் செய்தே–பின்னையும் தன்னை விஸ்வசித்து அருகே கிடந்தவனை – மடி தடவினவனைப் போலே அநு தபித்து- ஒன்றும் செய்யாதானாய் மேன்மேல் என ரக்ஷண உபாயங்களை சிந்தித்து ––ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் -ஆரோ வருவார் -என்று
குஹேநே சார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசாந் பஹுந்
ஆசயா யதிவா ராம புநஸ் சப்தா பயேதி தி -அயோத்யா -59-3–பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன் ) என்கிறபடியே அவசர பிரதீஷனாய் நிற்க-இவ்வோ உபகாரங்களை பண்ணிற்றிலனே யாகிலும் ஆஸ்ரயிக்கைக்கு முட்டுப் பொறுக்கும் அத்விதீய பரதேவதை இவன் அல்லது இல்லை என்கை-
(எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்ல வேண்டுமோ?
இறகு ஒடிந்த பக்ஷிகளைப் போலே கூட்டினதும், இந்திரியங்களை யிழந்து கிடந்த இவ் வாத்துமாக்களைக் கரண களேபரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாக்ஷன் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன இந் நிலவுலகத்தை மஹர வாரஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் நசித்துப் போக நேர்ந்த காலத்துத் திரு வயிற்றிலே வைத்து ஸம் ரக்ஷித்தும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும், மாவலி யிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின் கீழ் ஆட்படுத்திக் கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லி முடியுமோ?-இப்படிப்பட்ட உபகரங்கள் இன்னும் எத்தனையோ செய்வதாகத் திருவுள்ளம் பற்றி யிருப்பவனன்றோ திருமால். அவனைத் தவிர வேறொரு முழுமுதற் கடவுள் இவ்வுலகுக்கு உண்டோ? )
யயாதி சாதன அனுஷ்டானம் பண்ணி ஸ்வர்க்கத்திலே இந்திரனோடே அர்த்தாசநத்திலே இருக்கச் செய்தே – கர்ம பூமியில் புண்ய க்ருத்துக்கள் யார் -என்று அவனைக் கேட்க – ஒரு தேவதை முன்பே பொய் சொல்லிற்றாக ஒண்ணாது என்று – நான் வர்த்தித்த காலத்தில் என்னை எல்லார்க்கும் மேலாகச் சொல்லுவார்கள் -என்ன -ஆத்ம பிரசம்ஸை பண்ணினாய் – த்வம்ச என்று பூமியிலே விழும்படி சபித்தான் என்று இவ்விடத்தை ஸ்ரீ பட்டர் வாசித்துப் போந்த காலத்திலே இந்திரன் தன்னை ஆஸ்ரயித்துப் பெற்ற உத்கர்ஷமாய் இருக்க அர்த்தாசநத்திலே இருந்தது பொறுக்க மாட்டாமை –
ஆத்ம பிரசம்ஸை பண்ணினாய் -என்றறொரு வ்யாஜத்தை இட்டுத் தள்ளினானாய் இருந்தது –
இது தான் வேத உப ப்ரும்ஹணார்த்தமாக ப்ரவ்ருத்தமான மஹா பாரதத்தில் எவ் வர்த்தத்தினுடைய விசதமமாக ருஷி எழுதினான் -என்று கேட்க-தான் தன்னோடு ஓக்க உத்கர்ஷத்தைக் கொடுக்க வல்லதுவும் – அத்தைப் பொறுக்க வல்லதுவும் பரதேவதையான பின்பு ஆஸ்ரயிக்கப்படுமதுவும்
பரதேவதை – அல்லாதார் ஆஸ்ரயணீயர் அல்லர் என்னும் இடம் பிரகாசிகைக்காக -என்று அருளிச் செய்தார்
அவனை விட்டால் சுருக்கம் ஒழிய அவனோடே தோள் தீண்டியாய் இருப்பாரை ஆஸ்ரயிக்கப் பெறினுமாம் இறே புடை பல தானறி தெய்வம் பேணுதல் ஒரு புடைகளிலே -அர்த்தவாதித்து
அவனுடைய விபூதியைப் பேசுகிற இடத்திலே அவனுடைய உத் கர்ஷத்துக்காக இவ்வருகே சிலருக்கு சில மினுக்கம் சொல்லுமே -அத்தைக் கொண்டு கிடந்த இடம் அறியாமே ஒதுங்கிக் கிடைத்தவற்றை யாயிற்று ஆதரிப்பது -அது தன்னிலும் ஒரு தேவதையே இவனுடைய சர்வ அபேக்ஷிதங்களையும் கொடுக்க மாட்டாதே -ஒருவனாய் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கிறான் அன்றே –
அது வேண்டில் –
ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் தனம் இச்சேத் ஹுதாசநாத்
ஈஸ்வராத் ஞானம் அந்விச்சேத் இச்சேத் கதிம் இச்சேத் ஜனார்த்தநாத் -ப்ரஹ்மாண்டம் (ஆரோக்யத்தை சூரியனிடம் இருந்தும் -பணத்தை அக்னியிடம் இருந்தும் ஞானத்தை ஈஸ்வரனிடம் இருந்தும் விரும்பக் கடவன் மோக்ஷத்தை ஜனார்த்தனிடம் இருந்து விரும்பக் கடவன்)–என்னக் கடவது இறே
ஆக விபூதி காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் –புத்ர காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் –
பசு காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் என்று இங்கனே ஒன்றுக்கு ஒருவராய் பலராய் இருக்கும் –
தான் அறி தெய்வம் பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-
பேணுதல்
அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று அத் தேவதைகளுக்கு ஈஸ்வரத்வம் சம்பாதித்துக் கொடுக்கையும்
தானது–
இவன் சொன்ன போதாக அவை ஆஸ்ரயணீயங்கள் ஆகிறனவும் அல்ல -இவன் தான் அங்கே சில பெற்றான் ஆகிறானும் அல்லன்-இத்தால் பலித்தது ஆயிற்று – விசேஷஞ்ர்க்கு தன் அறிவில் குறைவை பிரகாசிப்பித்தானாம் அத்தனை –
(புடைப்பலதானறி தெய்வம் பேணுதல் – புடை என்றது ஏதோவொரு பக்கம் என்றபடி,-வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ருத்ரன் என்றும் ஹிரண்ய கர்ப்பன் என்றும்-சில பதங்கள் கிடந்தால் அவற்றின் பிரகரணத்தையும் பொருளையும் தெரிந்து கொள்ளாது-அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்பதாகக் கொள்வார்களே சிலர் அதைச் சொல்லுகிறது. -ஆனது பற்றியே தானறிதெய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புதரகாமவம் என்றபடி-அவரவர்கள் பற்றும் தெய்வங்கள் பலபலவாயிருப்பது பற்றிப் பலதெய்வம் பேணுதல் என்றார்.)
(தனது என்பது ‘தானது‘ என்று நீட்டல் விகாரம் பெற்றுக் கிடக்கிறது.-புல்லறிவாளன்‘ என்று விவேகமற்றவனைச் சொல்லுகிறது-புல்லறிவாண்மையாவது அவிவேகம் கொல்வன முதலா அல்லன –இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி“ என்ற திருவாய்மொழியில்
“நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியுந் தூ வேல்மின்“ என்றும்,
“நீர்கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் ளனிழைத்தென்பயன்“ என்றும்,
“அணங்குக் கருமருந்தென்றங்கோர் ஆடுங் கள்ளும்பராய்“ என்றும்,
“ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே“ என்றும்-)அருளிச்செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.)
தானது–புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி-
தன்னுடைய ஞானத்தில் அல்பதையை விசேஷஞ்ஞர்க்கு தேறும்படி தெரிவிப்பித்து பலம் பெரும் போது பர தேவதையை ஆஸ்ரயித்துப் பெற வேணுமே–ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய--ப்ருஹதாரண்யம் -6-5-6-
(கேட்கத்தக்கதும் நினைக்கத் தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்கத் தக்கது )என்றும்
(வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாய -புருஷ ஸூக்தம்-வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்-அவனை இம் மாதிரி அறிபவன் இப் பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான் மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது)
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி நாந்யப் பந்தா -என்றும் உபாசன வாக்யங்களிலே சொன்னபடியே
காரண வஸ்துவை உபாசிக்கின்றது அன்று இறே
கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை
ஆட்டை அறுத்துத் தா–பிரஜையை அறுத்துத் தா -என்பன சிலவும்-நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டு பரிமாற வேண்டுவன சிலவும் இவையாயிற்று செயல்கள் —-ஆஸ்ரயணங்கள் தாமே நரகமாய் இருந்ததே – இப்படி ஆஸ்ரயித்துப் பெரும் பலத்தைப் பார்த்தால் அதை பெருமதில் பெறாது ஒழிகை நன்றாய் இருக்குமே
இன்பு துன்பு அளி
ஸூக துக்க மிஸ்ரமான பலத்தை யாயிற்று தருவது – நிஷ்க்ருஷ்ட ஸூகமான மோக்ஷம் அவற்றுக்கு இல்லையே
ஆக -செய்ததாயிற்று என் என்னில் –
தன்னோடு ஒத்து இருப்பான் ஒருவனாய் –
பவ உபகரண பூதனாய் –
நித்ய சம்சாரியாய் இருப்பான் ஒருவனை ஆஸ்ரயித்துப் பலம் பெறப் பார்த்த இது தான்
நித்ய சம்சாரி யாக்கைக்கு கிருஷி பண்ணினான் ஆயிற்று–
(நன்றி யறிவுள்ளவர்கள் அப்பெருமாலுக் கன்றோ பணிவிடைகள் செய்ய ப்ராப்தம்,-அவனுக்குச் செய்யாத்தோடு ஒரு நன்றியுஞ் செய்ய மாட்டாத தேவதாந்தரங்களுக்குப் போய்ப் பணிவிடை செய்கிற
இவ்வுலகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்?-அந்த தேவதாந்தரங்கக்கு இவர்கள் செய்கிற ஆராதனம் என்ன வென்றால் ஆட்டைவெட்டிப் பலியிடுவதும் கோழியைக் கொண்டு நைவேத்யஞ் செய்வதும் இவை போல்வன ஜீவ ஹிம்ஸைச் செயல்களேயாகும்.–இதற்குப் பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால், இந்த ஸம்ஸாரத்திலேயே தரைப் பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸுகங்களேயாம். உண்மையில் இவை ஸுகங்களல்ல; துக்கங்களேயாம்.-இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜநம் பண்ணித் திரிகின்றதே! அநியாமாய் அநர்த்தப் பட்டுப் போகின்றதே!
இதனில் மிக்க பரிதாபமுண்டோ! என்றாராயிற்று.)
(இன்புதுன்புஅளி – அளிப்பது அளி, அதாவது கொடுக்கும் வஸ்து, தேவதாந்தரங்கள் தரும்பொருள் யாதெனில், இன்பு துன்பு – இன்பாவது ஸுகம், துன்பாவது துக்கம்,-ஸுகமென்று பரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸுகங்களெல்லாம் இப்படிப்பட்டவையேயாம்.
பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழப்பர்க்கையில் ஸுகமாகத் தோன்றி,
வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து –பழையதாய் காரணமாய் இருக்கிற மா மாயம் உண்டு —
இம் மாயை-தேவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை –7-14- இது ஒருவரால் கடக்க ஒண்ணாது -என்று அவன் அருளிச் செய்த பிரகிருதி – இப் பிரக்ருதி சம்பந்த நிபந்தந ஜென்மங்களில் புக்கு மீள விரகு இன்றிக்கே பலவகைப்பட்ட இருக்கிற மா மாயம் உண்டு -சப்தாதி விஷயங்கள் -அவற்றிலே
நளிர்ந்தே அழுந்துமே
எடுத்தது அனையும் தரை அளவும் அழுந்தா நின்றன
உலகினது இயல்வே
வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே – இது என்ன படு கொலை என்கிறார்-
(தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்-தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.)
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply