ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –ஏழாம் பாசுரம் –

சேதனர் எல்லாருக்கும் செய்ய அடுப்பது -அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகையாய் இருக்க –
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து -சம்சார பந்தம் வர்த்திக்கும் படி பண்ணா நிற்பார்கள் –
இது என்ன படு கொலை -இவ் வனர்த்தம் என்னால் பொறுக்கப் போகிறது இல்லை -என்றார் கீழ்-அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் -நாம் முந்துற முன்னம் இவ் வனர்த்தத்தைத் தப்பி
இவ் வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்
–நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே – இந்த லாபமே அமையாதோ-என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –

அவன் சர்வ பதார்த்தங்களையும் திரு வயிற்றிலே வைத்து நோக்குகிற போது- நம்மோடு ஓக்க அவன் திரு வயிற்றிலே புக்குப் புறப்பட்டவர்களிலே சிலரை ஆஸ்ரயித்து – பலத்துக்கு அவர்கள் கை பார்த்து இருக்கையாகிற இப் புன்மை இன்றிக்கே ஒழியப் பெற்ற இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-அல்லாத திவ்ய பிரபந்தங்களை- அந்தாதி ஆக்கிக் கொண்டு போந்த இவர் இத்தை அந்தாதி ஆக்க மாட்டாதே உகப்புக்கு இதுக்கு மேற்பட்ட இல்லாமையால் இவ் வனுபவத்தோடே தலைக் கட்டுகிறார்-இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் உகப்பின் மிகுதியால் மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் என்றவாறு

நளிர் மதிச் சடையானும் என்று தொடங்கி-யாவையும் யுலகமும் யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது —தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ–

(ஸகல சேதநர்களும் ஸ்வரூப ப்ராப்த சேஷியான எம்பெருமானை அடி பணிந்து அவனுக்கே வழுவிலா வடிமைகள் செய்ய ப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே தேவதாந்தரங்களை ஆச்ரயித்து ஸம்ஸாரத்தையே பூண் கட்டிக் கொள்ளுகிறார்களே! அந்தோ! இஃது என்ன அனர்த்தம்! என்று கீழ்ப் பாட்டில் கவலைப் பட்டார்.-ஒரு ஸம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்வராமற் போகவே,‘இப்பாழும் ஸம்ஸாரிகள் எக் கேடாவது கெடட்டும்–நாமும் அவர்களைப் போலே அனர்த்தப்பட்டுப் போகாமல் எம்பெருமானுக்கே அடிமைப் பட்டிருக்கப் பெற்றோமே! என்று தம்முடைய மன வுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில்.–ஸம்ஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப் போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப் பிழைப்பவர்களே யொழிய பிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்க வேண்டி ‘இந்தத் தெய்வங்களெல்லாம் பிரளய காலத்தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக் கிடந்தனை காண்மின்‘ என்கிறார்.–எல்லாத் தெய்வங்களையும் உய்யக் கொண்ட பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுக்கன்றி-மற்று யார்க்கும் நாம் அடிமைப் பட்டவர்களல்லோம் என்பது நிகமனம்.

(திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்—திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்—ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம–அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம–திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம–உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம–தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-)

நளிர் மதி சடையனும் நான் முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே
?–7-

நளிர்மதி சடையனும்–குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்
நான்முகன் கடவுளும்-பிரமதேவனும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா-தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக
யாவரும்-எல்லாப் பிராணிகளும்
யாவகை உலகமும்-எல்லா வுலகமும்
அகப்பட-உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்
மலர் சுடர் பிறவும்-சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும்
சிறிது-சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில்
மயங்க-கலசும்படியாக
ஒரு பொருள் புறப்பாடு இன்றி-ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி
முழுவதும்-எல்லாப் பொருள்களையும்
அகப்பட சுரந்து-உள்ளேயிட்டு மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த-அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட
எம்-எமக்கு ஸ்வாமியாய்
பெரு மா மாயனை அல்லது-மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து
மற்று ஒரு மா தெய்வம்–வேறொரு க்ஷுத்ர தேவதையை
யாம் உடையமோ–நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்)

நளிர் மதி சடையனும் -குளிர்ந்த சந்திரனை தலையிலே தரித்துள்ள ருத்ரனும்
நான் முகக் கடவுளும்-நான்கு முகங்களுடைய பிரமனும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா-தளிர் போன்ற அழகிய தேஜஸ்ஸை யுடைய தேவர்கள் அதிபதி இந்திரன் இவர்கள் முதலான
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட-எல்லா விதமான லோகங்களும் எல்லா சேதனர்களும் உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமியும் ஜலமும் அக்னியும் காற்றும் தேஜஸ்ஸினால் வியாபிக்கப்பட்டுள்ள ஆகாசமும்
மலர் சுடர் பிறவும் -மலர்ந்த கிரணங்களை யுடைய சந்த்ர ஸூரியர்களும் மற்றும் உள்ள வஸ்துக்களும்
சிறிதுடன் மயங்க-ஒரே காலத்தில் வயிற்றில் ஏக தேசத்தில் சேரும்படி
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்-ஒரு வஸ்துவும் வெளிப் படாதபடி எல்லா வற்றையும்
அகப் படக் கரந்து -உள்ளே இருக்கும் வண்ணம் உண்டு வயிற்றிலே மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த -ஓர் ஆலின் இலை மேல் நித்திரை செய்யுமவனாய்
எம் பெரு -என்னுடைய ஸ்வாமியாய் -பெரியவனாய் –
மா மாயனை அல்லது-அளவிட்டு அறிய முடியாதவனாய் ஆச்சர்ய சக்தி யுடைய ஸ்ரீ மந் நாராயணனை ஒழிய
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?– வேறான பெரிய தேவதையை நாம் ஆஸ்ரயணீயராக உடையோமோ

நளிர் மதி சடையனும்
சாதக வேஷம் தோற்ற ஜடையை தரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்–துர்மானத்தாலே -ஸூக பிரதாநன்-என்று தோற்றும்படி தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே குளிர்ந்த சந்திரனை ஜடையில் தரித்த ருத்ரனும்

(இதில்“ தாழை மடலைக் கீறி“ இத்யாதி த்ருஷ்டாந்த வாக்யத்திற்குப் பொருள் யாதெனில்-உலகில் மூட்டை சுமந்து வருந்திக் கூலி ஜீவனம் பண்ணுகிறவர்கள் தாங்கள் கஷ்டப்படுகிறவர்களென்பது
பிறர்க்குத் தெரியாமைக்காகவும் தாழம்பூ முதலிய பூக்களை யெடுத்துச் சூட்டிக் கொண்டு திரிவர்களாம்,-அப்படியே சிவ பிரானும் தான ஸம்ஹாரக் கடவுளென்பதையும் ஸாதனாநுஷ்டாநம் பண்ணி ச்ரமப்படுகிறவன் என்பதையும் பிறரறிந்து அருவருக்காமைக்காவும் ‘இவன் உல்லாஸமாக இருக்கக் கூடிய ரஸிகன்‘ என்று பலரும் நினைத்துக் கொள்வதற்காகவும் அழகிய சந்திர கலையைச் சிரமீது அணிந்தான் போலும் என்று ஒரு விநோதமாக அருளிச் செய்தபடி.)

நான் முக கடவுளும்
அவன் தனக்கும் கூட ஜனகனுமாய் ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக நாலு முகத்தை யுடையனாய் இருக்கிற
சதுர்முகனாகிற தெய்வமும்

இவர்கள் இருவரும் இரண்டு காரியத்துக்கும் கடவராய் அதிகாரிகளாய் இறே இருப்பது -குசவனையும் -தண்டமாகிற புறமடக்கியும் போலே –

தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
போக ப்ரவணன் ஆகையால் அப்சரஸ்ஸுக்களை மெய்க் காட்டிக் கொண்டு வடிவைப் பேணி
தேவர்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமாக

(இந்திரன், அரம்பை ஊர்வசி முதலிய அப்ஸரஸ் ஸ்திரீகள் தன்னை நன்கு காதலிக்கும்படி
அலங்காரங்கள் செய்து கொண்டு அதனால் மேனி நிறம் விறு பெற்றிருப்பனாதலால்-தளிரொளி என்று விசேஷிக்கப்பட்டான்.)

யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
எவ் வகைப்பட்ட லோகங்களையும் – அவ் வவ லோகங்களில் உண்டான எல்லாச் சேதனரையும் தப்பாமே-

(ஆக முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி-முதலா யாவகையலகமும் யாவருமகபட என்றார்.)

நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
அவர்கள் எல்லாருக்கும் காரணமாய் இருக்கிற பூத பஞ்சகமும் —சுடர் இரு விசும்பும் -என்றது
உண்டாம் இடத்திலே மற்றை நாலுக்கும் முன்னே உண்டாமது ஆகையால் அழியும் இடத்தில்
அவை அழிந்தாலும் தான் சிறிது காலம் நின்று அழியுமது ஆகையால் வந்த புகரைப் பற்ற

மலர் சுடர் பிறவும்
சந்த்ர ஸூர்யர்களும் -மற்றும் உள்ள மனுஷ்யாதிகளும் இவை யடைய

(எம்பெருமானது திருவயிற்றிலுள்ளே அடங்கிக் கிடந்து ஸத்தை பெற்ற பதார்த்தங்களைத் தாம் வாய் கொண்டு சொல்லுவதும்-நமக்குப் பெரும் பாக்கியமென்றோ என்றெண்ணி-நில நீர் தீ கால் சுடரிருவிசும்பும் மலர்சுடர் என்று மீண்டு விவரித்துச் சொல்லத் தொடங்கினர் போலும்.)

சிறிதுடன் மயங்க
சிறியதாய்க் கொண்டு உடனே மயங்க -சில பேருக்கு இடைச் சொல்லி உண்பார் பலர் உண்டால் சோறு மட்டமாம் போலே – ரஷ்யமாய்க் கொண்டு நாநா வாய்ப் புகுகிற பதார்த்தங்கள் அளவுபடும்படியாக வாயிற்று தன் திரு வயிற்றில் வைக்கிற போது பாரிப்பின் பெருமை –இவை அடங்க அல்பமாகக் கொண்டு ஓன்று ஒன்றை விடாதே தன் பக்கலிலே கலச

அன்றிக்கே –
சிறிது உடல் மயங்க -என்று பாடமாய்–ஓர் ஆலந்தளிரின் உள்ளடங்கின வடிவில் கலச-
உடன் உடல் என்கிற இடத்தில் -னகர-லகரங்களுக்கு ஒரு விரோதம் இல்லை

(சிறிதுடன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம். (கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்) சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,-உடன் – ஏக காலத்திலே,-மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.–உடன் மயங்க என்றவிடத்து உடல் மயங்க என்று பதம் பிரித்து,-சிறிதாகிய உடலிலே –-பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொருவகை.-மற்றுங் கண்டு கொள்க.)

ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும் அகப் படக்
ஒரு பதார்த்தமும் பிரி கதிர் படாத படி எல்லாவற்றையும்

கரந்து
பிரளயம் வந்தால் முன்புற்றைக் காட்டிலும் திரு வயிற்றை இளைத்துக் காட்டலாம் படி ஒரு விக்ருதி இன்றிக்கே இருக்கை

ஓர் ஆல் இலை சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது
இப்படி இவற்றை திரு வயிற்றிலே வைத்து தான் முகிழ் விரியாதே பவனாய் இருபத்தொரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்த நம்முடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை ஒழிய

பாலன் தந்துருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் -ஆல் அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு
–ஸ்ரீ முதல் திருவந்தாதி -69-

பாலன் தந்துருவாய் ஏழுலகுண்டு –
யசோதா ஸ்தநந்தய மத்யந்தம் விமுக்தம் (மிகவும் அழகியதான யசோதையின் கைக் குழந்தை )-என்னும்படி முக்தமான வடிவை யுடையவனாய் சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து

ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் —
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றில் அடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்ந்த
ஈசன் தன்னை
—-ஸ்ரீ பெரிய திருமொழி -2-10-1-என்கிறபடியே முகிழ் விரியாத ஆலந்தளிரிலே-
தரிக்கைக்கு ஒரு யசோதாதிகள் இன்றிக்கே இருக்க நீ கண் வளர்ந்து அருளினவற்றை மெய் என்று ஆப்தரான ரிஷிகள் எழுதா நின்றார்கள்

கதம் ந்வயம் சிஸூ சேதே லோகே நாசமுபாகதே
சாகாயாம் வட வ்ருஷஸ்ய பல்லவே து ஸூசிஸ் மித
–பாரதம் -ஆற –188-94–(உலகம் எல்லாம் நாசம் அடைந்த பிறகும் ஆல மரக் கிளையில் உள்ள இளம் தளரில் இனிய புன் முறுவலுடன் கூடிய இக் குழந்தை எப்படிப் படுத்துக் கொண்டு இருக்கிறது)என்று ஆயிற்று அவர்கள் எழுதுகிற பாசுரம்

ஆல் அன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
அவ்வால் தான் அன்று மண்ணைக் கரைத்து பொகட்ட ஜகத்திலே உள்ளதோ–நிராலம்பநமான ஆகாசத்தில் உள்ளதோ –அன்றிக்கே கார்ய ஆகாரம் குலைந்து கரந்து கிடக்கிற மண்ணிலே உள்ளதோ

சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு–
பருவம் நிரப்புவதற்கு முன்னே ஏழு பிராயத்தில் ஒருபடிப்பட மலையைத் தரித்துக் கொண்டு நின்ற நீ சொல்லு – -இதுவும் ஓர் ஆச்சர்யம் இறே –இதுவும் சொல்ல வேணும் -அதுவும் சொல்ல வேணும் -இம் மூன்றும் விஸ்மயமாய் இருப்பன சில அகடிதங்களாய் இருந்தன

அவன் பின்னை இவர்களுக்குச் சொன்ன உத்தரம் ஏது-என்று ஸ்ரீ பட்டரைக் கேட்க
அவன் தானும் -ஆழ்வார் வந்தால் கேட்கக் கடவோம்-என்று நினைத்து இருந்தான் காணும் -என்ன
பின்னையும் நீ சர்வ ஆதார பூதனாம் அத்தனை போக்கி உன்னை ஒழிய புறம்பே ஒன்றுக்கு ஓன்று
ஆதாரமாக வல்லது ஓன்று உண்டோ – அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார்
-என்று– ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று இங்கு நம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது –-பெரு மா மாயன் -என்று அவனை ஒழியப் புறம்பே கால் காணித் தெய்வம் உடையோமோ நாம்-முந்துற ரக்ஷகன் ஆகிறேன் -என்று பச்சை இடுவித்துக் கொண்டு -சில நாள் கழிந்தவாறே வடிவைக் காட்டி – நான் உன்னைப் போலே சாதகன் காண் -என்று சொல்ல – அவனை விட்டால் போலே எடுத்துக் கழிக்கைக்குத் தான் ஒரு தேவதை உண்டோ நமக்கு –

மார்க்கண்டேயனை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லிப் பச்சை இடுவித்துக் கொண்டு அநந்தரம் ஜடையைக் காட்டி – நானும் உன்னைப் போலே சாதகன் -ஒரு தலையைப் பற்றிக் காண் இருப்பது -என்னை ஆஸ்ரயியுங்கோள்-என்று பிறர் சொல்லும் வார்த்தையை மெய் என்று விஸ்வசித்து இருக்கும் படி -பிரமித்தாய் ஆகாதே -பொறு – உனக்கு ஆஸ்ரயணீய ஸ்த்தலம் காண் -என்று கொடு போய்
சர்வேஸ்வரனைக் காட்டிக் கொடுத்தான்
இறே –

கண்டும் தெளிந்து கற்றார் கண்ணற்க்கு ஆளின்றி யாவரோ
வண்டு உன் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி யீசனுடன் கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்குத் தன்னோடும் கொண்டு உடன் சென்று உணர்ந்துமே
–திருவாய் -7-5-7- என்றபடி –

ப்ரஹ்மாணம் நீல கண்டஞ்ச யாஸ் ஸாந்யா தேவதாஸ் ஸ்ம்ருதா
பிரதி புத்தாந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்
–சாந்தி பர்வம் -350-36–(பிரமனையும் ருத்ரனையும் மற்றும் தேவதையாகச் சொல்லப்படும் யாவரையும் ஞானிகள் சேவிக்க மாட்டார்கள் ஏன் எனில் அவர்கள் அளிக்கும் பலன் அளவு பட்டது –)என்றபடி ப்ரஹ்மாவையும் ருத்ரனையும் அல்லாத தேவதைகளையும் அறிவுடையராய் இருப்பார் ஆஸ்ரயியார்கள் –

அதுக்கு அடி என் என்னில் – பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தில் இவனுக்கு அபேக்ஷை உண்டானால் அவர்கள் அது கொடுக்க மாட்டார்களே — அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வம் இல்லாமையால் – இனி இவ்வருகே சிலவற்றை இறே கொடுப்பது -அவை அல்பம் இறே –
அவை அவன் இவனுக்குக் கொடுக்கவுமாம் இவன் அவனுக்குக் கொடுக்கவுமாய் இறே இருப்பது
–

ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிஷித்தாஸ் து பூஜநே
ஞாத்வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யா தேவமேவ ஹி-
-(ஸ்கந்தன் ருத்ரன் இந்திரன் முதலான தேவதைகள் பூஜை செய்யும் விஷயத்தில் ஞானிகளால் விலக்கப் பட்டு இருக்கிறார்கள்-இப்படி அறிந்து இம் மாதிரியாகவே பக்திக் கலப்பைச் செய்யாமல் இருக்கக் கடவன் –)-என்று அன்றோ சாஸ்த்ர விதி

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு
–ஸ்ரீ நான்முகன் -68-என்னக் கடவது இறே

பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் அற்று இருக்க பர்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணாது ஒழிகை இறே
இவள் அவனுக்காகை யாகிறது –

பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் – இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே – இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே-ஆகவே ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்–

(ஆக எல்லாப் பதார்த்தங்களையும் ஒன்று தப்பாமல் திரு வயிற்றினுள்ளே அடங்கிக்கொண்டு“பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின், மேலன்று நீவளர்த்த மெய்யென்பர்“ என்றபடி சிறு குழந்தை வடிவமாகி முகிழ் விரியாத சிற்றாலந்தளிரிலே கண்வளர்ந்த அற்புத சக்தி வாய்ந்த ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை தவிர்த்து வேறொரு தெய்வத்தை நாம் தெய்வமாகக் கொள்வோம்.)

“நெற்றி மேற்கண்ணானும் நிறைமொழிலாய் நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமர்ரோடும்,
வெற்றிப்போர்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,
கொற்றப்போராழியான் குணம் பரவாச்சிறுடிதாண்டர் கொடியவாறே
“ என்றும்,
“அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டு மிழந்த எச்சில் தேவர், அல்லாதார் தாமுளரே“ என்றும்
(பெரிய திருமொழியில்) திருமங்கை யாழ்வார்ருளிச்செய்த பாசுரங்கள் இங்கே அநுஸந்திக் கத்தக்கவை.

(மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்பதத்து நீர்?—
அங்கண்ஞாலமுண்ட போது வெள்ளிவெற்பு அகன்றதோ?
ஆதலாலரங்கனன்றி வேறு தெய்வமில்லையே“
என்ற பிள்ளைப் பெருமாளையங்கார் விடுதிப் பாசுரமும் குறிக் கொள்ளத்தக்கது.

(திரு அடி இனிக்கும் போக்கியம் என்று பார்க்க தானே சாத்தி கொண்டான் முதலில்—இப் பொழுது தானே வாயில் வைத்து கொண்டு பார்த்தான்-–களத்து மேட்டில் அளந்த படி கொண்டே அளக்க வேண்டுமே வீட்டில்–திரு அடி கொண்டு அளந்தானே முன்பு அதை கொண்டே–இப் பொழுதும்பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம் வந்து காணீரே )

(இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.)

(திருவிருத்தத்திலும் திருவாய்மொழியிலும் ஆழ்வார் தம்முடைய திருநாமத்தை அருளிச்செய்துளர்,
இப் பிரபந்தத்தில் அப்படி அருளிச் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு சிலர் சொல்லுவதாவது – இத் திருவாசிரியம் இன்னும் பல பாசுரங்களை யுடைய பிரபந்தமாயிருந்த்தென்றும், காலக் கிரமத்தில் சில பாசுரங்கள் லோபித்து விட்டன வென்றும் சொல்லுகிறார்கள்.-நம்மாழ்வாருளிச்செய்த நான்கு பிரபந்தங்களும் இதற்கு அடுதத்தான பெரிய திருவந்தாதியிலும் ஆழ்வாருடைய திருநாமம் அருளிச் செய்யப்பட்டிருக்க வில்லை யாகையால் இது சேராது-அந்தாதித் தொடையாக அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் முடிவு பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் ஒன்றாக அமையும்படி அருளிச் செய்யப்பட்டிருப்பது போல் இப் பிரபந்தத்தில் அமையாமையால் இதைக் கொண்டு இதில் சில பாசுரங்க் லோபித்து விட்டவென்று சொல்லுவர் சிலர், அதுவும் சேராது-ஈற்றுத் தமிழர் சொல்லி வைத்திருக்கையால் இப் பிரபந்தம் மண்டலித்தலாகாது என்று சொல்லாமத்தனை யொழிய பாசுரங்கள் லோபித்தன என்றால் பொருந்த மாட்டாது.–ஆகவே இப்பிரபந்தம் பூர்ணமென்றே கொள்ளத்தக்கது.)

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading