ராஜ்யத்தை இழந்த ராஜபுத்திரனை ஒருவன் ராஜ்யத்திலே பிரவேசிப்பித்தால்,
‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்’ என்று, அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று,
‘கைங்கரிய சாம்ராஜ்யத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க,
இந்நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.
ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–
———————–
ஸ்ரீ எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் ப்ரஸ்துதமான அளவிலே அளவில்,
ஸ்ரீ எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது;
இருந்த ஸ்ரீ முதலிகளிற்சிலர், ஸ்ரீ ஆசாரியன்’ என்றனர்; சிலர்,
ஸ்ரீ ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்;
ஸ்ரீ எம்பார், ‘அங்ஙன் அன்றுகாண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி
‘இசைவித்து’ என்கிறபடி,-அகவாயிலே இருந்து இசைவித்த ஸ்ரீ சர்வேஸ்வரன் காண் பிரதம குரு’ என்று அருளிச் செய்தார்
அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேரவிட்டது நெஞ்சு அன்றோ?’ என்று, இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே,
நெஞ்சு,‘நீர் அடி அறியாதே, வழிப்போவாரைக் கொண்டாடுகிறது என்?
என்னையும் இசைவித்த ஸ்ரீ சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன,
கேட்ட ஸ்ரீ ஆழ்வார்,-‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ?
நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, ஸ்ரீ சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2-
————————-
‘அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்;
பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே
சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராக ஸ்ரீ திருமலையாண்டான் அருளிச் செய்வர்.
இதனை, ஸ்ரீ எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க,
நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;-ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று
இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்.
‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்;
அவற்றிலே நீர் மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவி யுள் கலந்தே–2-3-3-
—————————–
‘வைத்தாயால்’ என்று அவன் செய்த உபகாரத்தைச் சொல்லி, ‘இங்ஙனே கிடந்து நெஞ்சாறல்பட நில்லாதே,
பிரதியுபாகாரமாக உம்மதாய் இருப்பது ஒரு பொருளைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ?’ என்ன,
‘அப்படியன்றோ செய்வது?’ என்று அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி,அனுசயிக்கிறார் –
தகழிவிரக்கங்கொள்ளுகிறார்
எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4-
—————————
‘ஞான லாபமே அமையுமோ?பிராப்தி – பேறு வேண்டாவோ?’ என்ன,
‘எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயாய்,
என்னைச் சமுசாரிகளில் -வ்யாவ்ருத்தன்- வேறுபட்டவன் ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-
————————
‘இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். கீழ் திருப்பாசுரத்தில்;
‘இனி என்று தான் விசேஷிக்க வேண்டுமோ?
‘பொய்ந்நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப் பாசுரத்தில்,
அன்றிக்கே
ஸ்வரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற ஸ்வரூபம் ஸ்வாபாவிக – இயல்பாகவே அமைந்துள்ளதான- சேஷத்துவமேயாய்,
நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச் செய்கிறார் எனலுமாம்
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6-
—————————–
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்;
இவ்விஷயத்தினுடைய இனிமையையும்-போக்யத்தையும் – அநு சந்தித்தார்;
அநுசந்தித்து, ‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று -அதிசங்கை -ஐயங்கொண்டு,
‘தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்; என்னைக் கைவிடாது ஒழிய வேண்டும்,’ என்கின்றார்
முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!
பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7-
———————-
‘என்னை நீ குறிக்கொள்ளே’ என்றவாறே, அவன் குளிரக் கடா க்ஷித்தான்;
அதனால் சகல வ்யசனங்களும் – எல்லாத் துன்பங்களும் போய் அவனை அனுபவிக்கிறார்
குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித் துண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8-
—————————
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா ‘இவ்வுயிரானது முற்றறிவினனான
இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே,
தம்முடைய-சகல துரிதங்களும் – எல்லாத் துக்கங்களும் போகும்படி
‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று ஹ்ருஷ்டராகிறார் -மகிழ்கிறார்
கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-
———————————–
‘களித்தேனே’ என்றவர், மீண்டும், ‘இவ்வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான ஸ்ரீ நித்திய சூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-
———————–
நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்று இருக்கும் அடியவர்கள்,-
பகவத் ஏக போகராய் இருப்பார் – என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.
குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply