ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் –முதல் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே, கடற்கரைச் சோலையின் கண் இவள் பிரிவால் வருந்தி
இரங்குகின்ற காலத்தில், ஆங்கு இரை தேடுதல் நிமித்தமாகத் தங்கியிருந்த ஒரு நாரை இவள் கண்ணுக்கு இலக்காக,
அதன் உடம்பில் வெளுப்பைக் கண்டு, அதுவும் தன்னைப் போன்று பிரிவாற்றாமையாலே வந்த-வைவர்ண்யத்தோடே-
பசலை நிறத்தோடு இருக்கிறதாகக் கொண்டு, ‘பாவியேன் நான் அகப்பட்ட விஷயத்திலே
நீயும் அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயோ?’ என்கிறாள்-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அந்தப்புரத்தில் இருக்கும் இவளுக்கு கடற்கரையிலே வர்த்திக்கிற பஷி தர்சனம் எப்படிக் கூடும்
என்கிற சங்கையையும் பரிஹரியா நின்று கொண்டு அருளிச் செய்கிறார் –

வாயும் திரை உகளும் கானல் மடநாராய்!
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1-1-

——————

இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லுகின்ற அளவிலே,
அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது வாயலகு நெகிழ்த்தவாறே கூப்பிட்டது;
அதனுடைய துன்பத்தைக் காட்டுகின்ற ஒலியைக் கேட்டு,
‘பாவியேன் என்னைப்போல நீயும் அகப்பட்டாயாகாதே!’ என்கிறாள்-

கோட் பட்ட சிந்தையையாய்க் கூர் வாய அன்றிலே!
சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட் பட்ட எம்மே போல் நீயும் அரவணையான்
தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?–2-1-2-

——————

அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு மஹா தத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து
கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி
ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு,
‘பாவியேன் ஸ்ரீ இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

காமுற்ற கை யறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்றது உற்றாயோ? வாழி! கனை கடலே!–2-1-3-

——————-

காற்று என்று ஒரு வியாபக தத்வமாய், அது தான் அபிமத காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால்,
இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு
வடிவு தெரியாத படியாய், சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது;
அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய்!
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ, ஊழி தோறு ஊழியே?–2-1-4-

—————————–

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது;
‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்

ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே?–2-1-5-

————————-

மேகத்தின் அருகே கலா மாத்ரமான ஒரு கலையோடு கூடியிருக்கின்ற-சந்திரன் தோன்ற –
சந்திரனே!-உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே -என்கிறாள் –

நைவாய எம்மே போல் நாண் மதியே! நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந் நீர்மை தோற்றாயே?–2-1-6-

———————-

‘மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள்.
தோற்றோம் இத்யாதி -இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய,
சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு:
ஸ்ரீ அம்மங்கியம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது,
தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடா நிற்க,
இருள் வந்து முகத்தை மறைக்க,
அத்தைப்பார்த்து, ‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக்கடவையோ?’ என்கிறாள் என்பதாம்

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7-

———————-

அவ்விருளுக்குப் பின்னடைந்து-இறாய்த்து அங்கே இங்கே-சஞ்சரியா திரியா நிற்க,
இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்;
அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு,
‘பாவியேன், சகடாசுரனை -நிரசித்த -அழித்த அச்செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.

இருளின் திணி வண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே?–2-1-8-

—————————-

அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்;
அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று
அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே?–2-1-9-

—————————

இவள் அவசாதம் – துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து,
‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறார்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

———————-

‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே –
நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply