ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் –நாலாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

முதல் பாட்டில் ஆபத்தே செப்பேடாக -ஆஸ்ரிதன் பிரதிஜ்ஞா சமகாலத்திலேயே வந்து உதவும்
ஸ்வபாவனானவனை சொல்லிக் கூப்பிடா நின்றாள்- என்கிறாள்-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -புன்மையாக கருதினதே செப்பெடாக
ஸ்ரீ ஆழ்வார் கைக் கொண்டாரே

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

—————————

நடுவே வாடும் இத்தனையேயோ வேண்டுவது?’ என்ன
விரோதி கிடைக்கச் செய்தே என்ன
‘வாணனுடைய -பாஹு வனத்திலும் -தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.

வாணுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசை யுள் நைகின் றாள்;விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்!உம்மைக்
காண, நீர் இரக்கம் இலீரே–2-4-2-

————————————–

இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று,
‘உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை
எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்.

இரக்க மனத்தொடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்;
இரக்கம் எழீர்;இதற்கு என் செய்கேன்,
அரக்கன் இலங்கை செற்றீருக்கே?–2-4-3-

——————————-

அரக்கன் இலங்கை செற்றீர்’ என்கிற இது-நியத ஸ்வ பாவம் –
எப்பொழுதும் உள்ளது ஒரு செயல் அன்று காண், காதாசித்கம்–
எப்பொழுதாயினும் ஒரு கால விசேஷத்திலே நிகழ்வதுகாண்’ என்றாள் திருத்தாய்;
அது பொறுக்க மாட்டாமே, அது தன்னையே சொல்லுகிறாள்.

இலங்கை செற்றவனே! என்னும்; பின்னும்
வலங்கொள் புள் உயர்த்தாய்: என்னும்; உள்ளம்
மலங்க வெவ் வுயிர்க்கும்; கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்று இவளே–2-4-4-

————————————–

இவள் இப்படித் துக்கப்படுகின்ற -கிலேசிக்கிற- இடத்திலும் வரக் காணாமையாலே,
நிர்த்தயர் -‘அருள் அற்றவர்’ என்கிறாள்.

இவள் இராப் பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்; வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர்; எனத்
தவள வண்ணர் தகவுகளே–2-4-5-

—————————-

இவள் அவசாதத்தை – துன்பத்தினைக் கண்ட திருத்தாய் நிர்த்தயர் ‘அருள் அற்றவர்’ என்றாள்;
இவள் அது பொறாமல்‘தகவுடையவனே’ என்று அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள்.

தகவு உடையவனே! என்னும் ;பின்னும்
மிக விரும்பும்; பிரான்!என்னும்;எனது
அக உயிர்க்கு அமுதே!என்னும்;உள்ளம்
உக உருகி நின்று உள் உளே–2-4-6-

—————————

தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள்,
வாய் விட்டுக் கூப்பிடும் படி இவளை வஞ்சித்தான்’ என்கிறாள்.

உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து, என
வள்ளலே! கண்ணனே! என்னும்;பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய்! என்னும்; என
கள்வி தான் பட்ட வஞ்சனையே?—-2-4-7-

—————————-

உம்மை அனுபவித்துச் ஸூகித்திருக்க வைத்தீர் அல்லீர்;
கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;
உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.

வஞ்சனே! என்னும்; கைதொழும்; தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும்;விறற்
கஞ்சனை வஞ்சனை செய்தீர்! உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே!–2-4-8-

———————————–

இவள் ‘பட்டன’ என்கைக்கு என்பட்டாள்?’ என்ன,
‘படுவன எல்லாம் பட்டாள் ஆகில் இனி, என் படுவாள் என்கிறாள்.

பட்ட போது எழு போது அறி யாள்;விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும்; சுடர்
வட்டவாய் நுதி நேமி யீர்! நுமது
இட்டம் என் கொல் இவ் ஏழைக்கே?–2-4-9-

——————

இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்;
இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்.
‘இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே’ என்றதனை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்

ஏழை பேதை இராப் பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள்;கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–2-4-10-

—————————

நிகமத்தில்-‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே
ஸ்ரீ நித்தியசூரிகள் திரளிலே போய்ப் புக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளிலே,
‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply