பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-3-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

இப்படி நிரவதிக சவ்ந்தர்யாதி கல்யாண குண விசிஷ்டனான திருவேங்கடமுடையானைக் கண்டு லப்தாத்ம சஞ்ஜீவனராய்
அவனுடைய குணங்களால் தாஸ்யம் உபாகதராய் இருந்த ஆழ்வார் -திருவேங்கட முடையானை புஜிக்க வேணும் -என்று
தம்முடைய திரு உள்ளத்திலே கோலி-அதுக்குத் துணையாகத் தம்முடைய திரு உள்ளத்தையும் திரு உள்ளம் போலே பகவத் ஏக போகராய்
இருப்பாரையும் குறித்து -திருவேங்கடமுடையானை புஜிக்க வாருங்கோள் -அவனை புஜிக்கை யாவது அவன் திருவடிகளிலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித -சர்வ சேஷ வ்ருத்தியையும் பண்ணுகை -என்கிறார் –

——————————–

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

திரு நாட்டில் சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வது அன்றோ எல்லார்க்கும் பரம ப்ராப்யம் என்னில்
திரு நாட்டில் உள்ள நித்ய சித்த புருஷர்களும் திருவேங்கடமுடையான் குணங்களிலே அகப்பட்டு அவன் திருவடிகளிலே யன்றோ வந்து அடிமை செய்கிறது
ஆதலால் தன்னுடைய நிரவதிக கல்யாண குணங்களாலே தன அடியார்க்கு என்னை ஆட் படுத்தி அருளின திருவேங்கடமுடையானுக்கு
அடிமை செய்யுமதுவே நமக்குப் பரம ப்ராப்யம் -அவனுக்கு அடிமை செய்ய வேண்டும் நாம் வாருங்கள் -என்கிறார் –

——————————————————-

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

ஏவம் ரூபமான ஸ்வரூப அனுரூப ஸம்ருத்தியைத் தந்து அருளுமோ -என்னில்-நித்ய நிரவத்ய நிரதிசய உஜ்ஜ்வல்ய சவ்ந்தர்யாத்ய
அஸந்கயேய கல்யாண குண கண மஹோததியாய் இருந்த தன்னை -அஸந்கயேயரான நித்ய சித்த புருஷர்கள் எல்லாருக்கும்
புஜிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் ஒரு பரம உதாரண அல்லனோ அவன் -ஆதலால் உங்களுக்கும் தன்னை புஜிக்கத் தந்து அருளும் -என்கிறார்

—————————————————-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

ஸ்வரூபத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் மற்றும் சர்வ பிரகாரத்தினாலும் -இனியில்லை-என்னும்படி தண்ணியனாய் இருந்த என் பக்கலிலே
சங்கத்தைப் பண்ணி எனக்குத் தன்னை போக்யமாகத் தந்து அருளின மஹா குணத்தையுடைய அவனுக்கு –
அயர்வறும் அமரர்களுக்குத் தன்னைக் கொடுக்கும் -என்னும் இது ஓர் ஏற்றமோ-என்கிறார் –

————————————————

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

எனக்கும் கூடத் தன்னைத் தந்து அருளினான் என்னும் இது தான் ஓர் ஏற்றமோ -தன் படியைப் பார்த்தால் –
அவனுடைய உதாராதி குணங்களைச் சொல்லும் இடத்தில் அந்த வேதங்களே சொல்ல வேண்டாவோ -நமக்கு நிலமோ –
ஆதலால் இப்படி பரம உதாரனான திருவேங்கடமுடையான் தன் திருவடிகளில் அடிமை செய்கையாகிற சம்பத்தை உங்களுக்குத் தந்து அருளும் என்கிறார் –

———————————————————–

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

இந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உபாயம் ஏது-என்னில் -சர்வாதிகாரமாய் அத்யந்த ஸூகரமாய் -இருந்த வேங்கடத்துறைவார்க்கு
நம-என்கிற இச் சொல்லைச் சொல்லவே அந்தக் கைங்கர்ய பிரதிபந்தகமான பாபங்களும் கரிஷ்யமாணமான பாபங்களும் எல்லாம்
நிஸ் சேஷமாக தக்தமாய்ப் போம் –
பின்னைத் தம்தாம் உகந்தபடி எல்லாம், செய்யப் பெறலாம் -என்கிறார் –

——————————————————–

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

இஸ் ஸம்ருத்தி பெறுகைக்குத் திருவேங்கடமுடையானை இப்படி வருந்த வேணுமோ -பரம ப்ராப்ய பூத பகவத் கைங்கர்ய அபேக்ஷராய் இருந்த
நம் பக்கல் குண நிரூபண பூர்வகமாக நமக்கு அந்த ப்ராப்யத்தைத் தவிருகை யாகிற இப் பழுது ஒன்றும் வராதபடி
நிர்ஹேதுகமாகத் திருமலை தானே அயர்வறும் அமரர்களுக்குகே கொடுத்தால் போலே
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே தான் செய்யும் சேஷ வ்ருத்தி எல்லாம் நமக்குத் தரும் -என்கிறார் –

——————————————-

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

ஸ்வரூப குண சேஷ்டிதாதிகள் எல்லாவற்றாலும் ஸ்வஸ்ய பரஸ்ய ச நிரதிசய போக்ய பூதனான எம்பெருமானுக்கு கூட பரம ப்ராப்யமான திருமலை
தான் வேறு ஒன்றைத் தர வேணுமோ –தானே பரம ப்ராப்யம் அன்றோ –
ஆதலால் திருமலை தன்னையே அனுபவிக்க நம்முடைய கிலேசம் எல்லாம் போம் -என்கிறார் –

———————————————————

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

திருவேங்கடமுடையான் அன்றோ ப்ராப்யம் -திருமலையே ப்ராப்யம் என்று சொல்லுவான் என் என்னில்-
திருவேங்கடமுடையானுடைய ப்ராப்யத்வமும் திருமலையோடுள்ள சம்பந்தத்தால் வந்ததாலால் திருமலையே ப்ராப்யம் -என்கிறார் –

———————————————

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

ஆதலால் ஈண்டெனச் சென்று திருமலையை அனுபவியுங்கள் -என்கிறார் –

——————————

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

சர்வாத்மாக்களுக்கும் புஜிக்கலாம் படி திருவடிகளைப் பரப்பி இந்த லோகத்தை அளந்து அருளின திருவேங்கடமுடையானைச் சொன்ன
இத்திருவாய் மொழியை வல்லார் -லோகம் எல்லாம் புகழும்படி
எல்லாவற்றிலும் மேற்பட்ட திருமலை யாகிற மஹா சம்பத்தைப் பெற்று வாழ்வர் -என்கிறார் –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply