சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வைய முற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 -வார் கடா அருவி -8–4-
பதவுரை
சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன்தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெருவபிற்றாளனை–பெரிய திருவயிற்றையுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு சிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.
ஸுலப்ய பரத்வ பசும் கூட்டம் அன்றோ அவன் –
சுருந்குறி-கள்ளக் கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப் பட்ட உறி-
இருங்குறளாகி-மிகக் குறுகிய வடிவம் -பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறிய வடிவம் – மஹிமை யுடைய வடிவம் – கரிய குறள் வடிவம்
பெரும்கிறி யானை–வடிவு அழகு பேச்சின் இனிமையாலே மாயையை மயக்கி -சுக்கிராதிகள் விலக்கினாலும்-உடன் படாதே மூவடி நிலம் பெற்ற சமர்த்தன்
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை -உடம்பாகிய சிக்கத்திலே கட்டுப் பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுஷுவாகிய ஆத்மாவை யாவரும் அறியாத படி விரும்பிக் கைக்கு கொண்டு அனுபவிப்பவன் –
மா வலி மாட்டு -மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு –
தோழிக்குத் தலைவி தன் கற்பு உணர்ச்சி அறத்தோடு நிற்றல் இது பாரங்குச நாயகியாகிய தலைமகள் களவொழுக்கத்தால்
ஸர்வேச்வரனாகிய தலைமகனைக் கூடி நிற்க, அந்நிலையை யறியாத பெற்றோர் அவளைப் பிறர்க்கு விவாஹஞ் செய்விக்க முயற்சி கொள்ள,
அதனை யறிந்த நாயகி தனது களவைத் தோழிமூலமாக செவிலிக்கும் அவள் மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந்
தெரிவித்துத் தன்னை அத்திருமாலுக்கே விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பி அத்தலைமகள்
தன் கருத்தை தோழிக்கு வெளிப்படுத்தியது இது’. இங்ஙனம் களவை வெளிப்படுத்தல் ‘அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.
‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்பதனால் ஸௌலப்ப குணமும்
‘வையம் முற்றும் ஒருங்குறவுண்ட பெருவயிற்றாளன்’ என்றதனால் பர்வகுணமும்,
மாவலி மாட்டிருங்குறளாகி யிசையவோர் மூவடி வேண்டிச்சென்று பெருஙகிறியான்’ என்றதனால் பரத்வ ஸௌலப்யங்களிரண்டுங்
கூடின கூட்டாவும் குறிப்பிடப்பட்டன.
கருங்குறி = கள்ளக்கயிற்றை உருவி விரல் நுழைக்கவொண்ணாதபடி நெருக்கப்பட்ட உறி.
இருங்குறள் = மிகக் குறுகிய வடிவம். பெரிய வடிவத்தையுட்கொண்ட சிறு வடிவமுமாம்; மஹிமையுடைய வடிவமுமாம்; கரிய குறள் வடிவமுமாம்.
வடிவழகாலும் பேச்சின் இனிமையாலும் மாவலியை மயக்கி, சுக்கிரன் போல்வார் தடைசெய்தாலும் உடன்படாதே மூவடி நிலம் கொடுக்க
அவன் இசைந்தது வாமநனுடைய ஸாமர்த்தியத்தினாலாதலால், ‘இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற பெருங்கிறியான்’ எனப்பட்டது.
‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்றதனால் இவ்வுடம்பாகிய சிக்கத்திலே கட்டுப்பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுக்ஷுவாகிய ஆத்மாவை எவரும் அறியாதபடி விரும்பிக் கைக்கொண்டு அநுபவிப்பவன் எம்பெருமான் என்பது தோன்றுமென்ப.
—————————————————————–
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92- ஆழி எழ -7–4-
பதவுரை
பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீராணையுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–பெரிய நெருப்பை வைத்து அளித்தருளவேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள்தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சக்திகளிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும்பொருட்டேயன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே -என்று இல்லாமல்
பிரயோஜனாந்தர பரர்கள் உன்னை சரண் அடைந்து அவர்கள் கார்யம் செய்ய இரப்பதே
அனன்யா பிரயோஜனரான எங்களுக்கு ஒரு பிரயாசமும் படாமல் சேவை சாதிப்பதை உபேக்ஷித்து அவர்களுக்காக உடம்பு நோவக் கார்யம் செய்வதே-
நின்னை விண்ணோர்-காணலுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே-நாள் நிலந்தோய்ந்து தொழுவர் -என்று
தான் நாயகன் மூர்த்தியின் பல கூறுகளையும் ஆசைப் பட்டமையை தெரிவிக்கிறார் –
நிலம் தோய்ந்து தாள் தொழுவர் -பூமியில் கால் பட அறுவறுப்பவர்கள் தங்கள் காரியத்துக்காக சாஷ்டாங்க
நமஸ்காராதிகளை ஷீராப்தி நாதனுக்கு செய்வார்கள்
உன்னை நோவு படுத்தி கார்யம் கொண்டு போவார்கள் -அன்றி -இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே என்றும்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -என்றும் வாயில் தானும் சொல்லுவார்களோ அப்பாவிகள் –
அமிர்தம் கிளர்வதையே கீழ் நோக்கிப் பார்க்கும் அப்பாவிகள் -மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான்-தோளும் தோள் மாலையுமான அழகை பார்த்திலரே
காணலுமாங்கொல் என்றே -என்று அல்ல என்றபடி –
வேந்தற்குற்றுழிப் பிரிவில் நாயகனைக் குறித்து நாயகி யிரங்கல். வேந்தற் குற்றுழிப் பிரிவாவது- ஒரு வேந்தனுக்கு ஒருவேந்தன்
தோற்றுவந்து சரணமடைந்தால் அவனுக்கு உதவி செய்வதற்காகப் பிரிந்து போதல். பாரங்குச நாயகியாகிய தலைவி
ஸர்வேச்வரனாகிய தலைவன் தன்னைப் பிரிந்து போனதற்குக் காரணம், ராக்ஷஸர்கட்குத் தோற்றுவந்து சரணமடைந்து
வேண்டிய தேவர்களின் பிரார்ததனையாம் என்று கருதி அவர்களை பழிக்கிறான்.
“தோள் கண்டோர் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைக் கண்டாரு மஃதே”
(கம்பராமாயணம், உலாவியற்படலம்) என்றபடி உனது அழகிய திருவடிவத்தில் ஓர் அம்சத்தைக் கண்குளிரக்கண்டு அநுபவிப்பதில்
அதிக ஆநந்தமாயிருக்க, தேவர்கள் அதனை ஆசைப்பட்டு வேண்டாமல் உன்காலில் விழுந்து எப்பொழுதும் தங்கள் பகையை
அழித்துத் தரவேண்டுமென்று வேண்டுவதே! என்று அவர்களைப் பழித்து இரங்கினான். அநந்ய ப்ரயோஜநரான எமக்கு
ஒரு பிரயாஸமும் படவேண்டாமல் ஸேவை சாதிப்பது மாத்திரமே அருள் செய்யப் போதுமாயிருக்க, எம்மை உபேக்ஷித்து,
பிரயோஜநாந்தா பார்க்காக உடம்பு நோவக் காரியஞ்செய்வதே! என்று எம்பெருமானது தன்மைக்கு நொந்துர¬த்படியுமாம்.
‘நின்னை விண்ணோர் காணலுமாங் கொலென்றே தாள் நிலந்தோய்ந்து தொழுவர்?” என்றதனால்.
தான் நாயகனது மூர்த்தியின் பல கூறுகளையுங்காண ஆசைப்பட்டிருக்கின்றமை வெளியிடப்பட்டதாம்.
பேண்நலமில்லாவரக்கர் = தன்னுயிரைப்போலவே பிறவுயிரையுங் கருதி எல்லாப் பிராணிகளும் உய்ந்து வாழ வேண்டுமென்ற
எண்ணமில்லாத ராக்ஷஸர். (பிறரை ஹிம்ஸிப்பதே தொழிலாயிருப்பவர்) என்னவுமாம். பதி என்றது இலங்காபுரிக்கு இடமான தவீபத்தை,
பெரும்பதி என்றும், நீணகர் என்றும் கூறியவற்றால், வரபலத்தால் எவராலும் அழித்திட வொண்ணாமை தோன்றும்.
நீளெரி வைத்தருளாய் = இராவணனுக்கு அஞ்சி அகலச் செல்லுந் தன்மையனான அக்நியை அவ்வச்சம் தணிந்து அங்கே
அழியாது வளரச் செய்தருளாய் என்று பிரார்த்திக்கிறார்களாம் தேவர்கள்’ இலங்கையை நீறுபடுத்த வேணுமென்கை.
இலங்கையிலுள்ள ராக்ஷஸர்களை வேரோடு அறுத்தொழிக்க வேணுமென்று பிரார்த்தித்தவாறு.
தாள் நிலந் தோய்ந்து தொழுவர் = பூலோகத்தில் வந்து திருப்பாற்கடலைச் சார்ந்து பரமனைப் பணிந்து வேண்டுவர்.
பூமியில் மநுஷ்ய நாற்றம் நாறுகிறதென்று மூக்கைப் புதைத்துக் கொண்டு மேலே நெடுந்தூரத்தில் நின்றுகொண்டு
ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுப் போகுமயில்வினரான தேவர்கள் தங்களுலகத்தில் இருப்பு குலைந்ததனால் தெய்வத்தன்மை
குலைந்து பூமியிலே கால் தோயவந்து நின்று தொழுவர் என்கிறது. ‘நிலந்தோய்ந்து தாள் தொழுவர்’ என மாற்றி,
தரையிலே ஸாஷ்டாங்கமாகப் பணிந்து உன் திருடிகளைச் சேவிப்பவர் என்னவுமாம்.
இப்படி அவர்கள் வைகல் மாலையும் தொழுவது நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காலுமாங்கொலென்றே? =
உன்னுடைய திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொண்டு ஒழிந்து போகப் பார்க்கிறார்களே யன்றி
“இலங்கை பாழளாகபவ் படைபெருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” “சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி”
என்று வாயினால் தானும் சொல்வார்களோ அப்பாவிகள். அமுத மெடுத்துக் கொடுக்கக் கடல் கடைந்தருளின காலத்து
‘அமுதம் கிளர்வது எப்போதோ’ என்று கீழ்ப்புறமே நோக்கிக் கொண்டிருப்பவர்களேயன்றி
‘மந்தரம் காட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்” (நாச்சியார் திருமொழி 9-1) என்னப்பட்ட
அப்பெருமானுடைய தோளுந் தோள்மாலயுமான அழகை ஒரு நொடிப்பொழுதாகிலுங் கண்ணெடுத்துப் பார்த்திலரே பாவிகள்;
அன்னவர்க்கேயோ நீ காரியஞ் செய்தருள்வது? ‘நின் பல் மூர்த்தியின் ஒரு கூறும்” என மாறியுரைக்கலாம்.
முந்நீர – குறிப்புப் பெயரெச்சம். ‘என்றே’ என்றவிடத்து ஏகாரம் வினாப்பொருள் தாய் எதிர்மறை குறிக்கும். ‘என்று அல்லர்’ என்றபடி.
————————————————————————-
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 -ஒரு நாயகமாய் -4–1-
பதவுரை
காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய
வையகம் பாவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் அழ்ந்து ஈடுபட்டு)
கண்போது செய்து–பக்தி பாரவசயத்தாலே கண்களை மூடிக்கொண்டு
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர்கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.
உலகில் அநேகர் -வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார் -நாலடியார் —
ஆழ்வார்கள் தான் பொழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுவார்கள்
இங்கனம் வாள்களாகி நாள்கள் செல்லுகின்றனவே -பொழுதே பல பகலும் போகின்றனவே
-ஊமனார் கண்ட கனவிலும் பழுதா ஒழிகின்றனவே நாள்கள் -என்று
கவலைப் படுவார் யாரும் இலை -ஒரு க்ஷணம் பொழுதாகிலும் பகவத் விஷயத்தில் செலுத்துவார் இல்லையே
பிறர் இழவுக்கு பரிகிறார் –
காலை –சத்வ குண பிரதானம் –
நன் ஞானத் துறை படிந்தாடிக் -சிறந்த ஆத்ம ஞானத்துக்கு இறங்கு துறையான ஆச்சார்யரை வணங்கி -அவர் உபதேசங்களில் ஆழ்ந்து
பெருமானை இலக்காகக் கொண்ட ஞானமே நல் ஞானம் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கண் போது செய்து-விஷயாந்தரங்களிலே அறிவு செல்லாத படி உள்ளடக்கி
எம்பெருமான் பக்கலிலே-ஞானம் என்னும் உட் கண் மலர்ந்து –
போது செய்து என்று மொட்டிகைக்கும் பேர் -அலருகைக்கும் பேர் -புறம்புள்ள விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல்-
பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல் –
மாலை நல் நாவில் கொள்ளார் -தம் பக்கல் வ்யாமோஹம் கொண்டவனை நாவால் ஸ்துதியாதார் –
நல் நா -எம்பெருமானை ஸ்துதிப்பதற்கு என்றே அமைந்த நா -நாராயணா என்னா நா என்ன நாவே –
நினையார் வன்மைப்படியே-அவன் மைப்படி நினையார் -அவனது கரிய திருமேனியை தியானிப்பதும் செய்யார் -லௌகிகரைப் பழித்த படி
பெயரினையே புந்த்தியால் சிந்தியாது ஓதி யுரு என்னும் அந்தியால் ஆம் பலம் எங்கனம் என்பதால்
மாலை நல் நாவில் கொள்ளார் என்று மாத்திரம் சொல்லாமல் மேலே நினையார் வன்மைப்படியே – என்கிறார்
முந்தின வாக்யத்தால் இருளின் கொடுமையையும் -மேலே அது அவன் திருமேனிக்கு ஸ்மகரமாய் வருத்துகிற படியை
தோழிமார் சிந்தியாமையும் -அந்த நோய் தணிக்கும் உபாயத்தையும் செய்யாமையும் பழித்தவாறு –
உலகத்தில் அனேகர் “வைகலும் வகைல் வரக்கண்டு மஃதுணரார்” (நாலடியார்- அறன்வலியுறுத்தல் 9) என்றபடி
காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டு காலங்கழிந்துகொண்டே செல்லுகிறபடியை ப்ரத்யக்ஷமாகவே
பார்த்துக்கொண்டிருக்கச் செய்தேயும் தங்களுடைய இளமைப் பிராயம் விரைவாகக் கழிந்து போவதில் கருத்தூன்றுதலின்றி
எம்பெருமான் பக்கல் ஈடுபாடு கொள்ளாமல் வீணேயிழந்து பழுதே பலபகலும் போக்குகிறார்களேயென்று ஆழ்வார் வெறுத்து அருளிச் செய்கிறார்.
உலகர்கள் தினப்படி ஸூர்யன் உதிக்கும்போது வேண்டியபடி பொருள்களைத் திரட்டலராமென்று களிக்கிறார்கள்;
பிள்ளை ஸூர்யன் அஸ்தமிக்கும்போது வேண்டிபடி விஷய போகங்களைச் செய்யலாமென்று குதூஹலிக்கிறார்கள்;
இப்படி ஸூர்யனுடைய உயத்தேடு அஸ்தமனத்தோடு வரசிய ஸம்ஸாரிகள் களிப்பதே கருமமாயிருக்கிறார்களே யன்றி,
‘இங்ஙனம் வாள்களாகி நாள்கள் செல்லுகினற்னவே, பழுதே பலபலகும் போகின்றனவே!
ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிகின்றனவே நாள்கள்’ என்று கவலைப்படுவாருமில்லையே!
ஒரு கணப்பொழுதையும் பகவதநுஸந்தாகத்திற் செலுத்துவாரில்லையே! என்று ஸம்ஸாரிகளுக்காக ஆழ்வார் தாம் கவலைப்படுகிறார்.
இவ்வாழ்வார் உலகத்தாரைச் சீர்திருத்தி உஜ்ஜிவிக்கச் செய்யும் பொருட்டுத் திருவவதரித்தவராதலாலும் மிக்க ஜீவகாருண்ய
முடையவராதலாலும் பிறரிழவுக்குப் பரிவு கொள்ளக்கடவராவர். முதலிரண்டடிகளால் பகலும் இரவுமாக மாறி மாறி வந்து
ஆயுள்நாளைக் கழியச் செய்தலை எடுத்துக்காட்டியபடி, இது செல்வ நிலையாமைக்கும் ஒரு திருஷ்டாந்தமாம்.
பின்னடிகளிரண்டும் நாட்டாரைப் பழிப்பன; காலை- ஸத்வகுண ப்ரதாநமான விடியற்காலத்தில் நல்ஞானத் துறைபடிந்து-
சிறந்த ஆத்மஜ்ஞாநத்துக்கு இறங்கு துறையாகிய ஆசார்யனை வணங்கி, ஆடி- அவ்வாசார்யோபவதேசத்திலே ஆழ்ந்து
கண்போதுசெய்து- விஷயாந்தரங்களில் அறிவு செல்லாதபடி அதனை உள்ளடக்கி, மாலை நல்நாவில் கொள்ளார்-
தங்கள் பக்கதல் அன்புடைய ஸர்வேச்வரனை நல்ல நாவினால் துதியார்;
அவன் மைப்படி நினையார்- அவனுடைய கரிய திருமேனியை தியானிப்பதுஞ் செய்யார் என்று லௌகிகரைப்பழித்தபடி.
கல்ஞானம்- எம்பெருமானை இலக்காகக்கொண்ட ஞானமே நல்ல ஞானம்; மற்றை விஷயமான ஞானமெல்லாம்
அஜ்ஞானமும் விபரீதஜ்ஞானமுமா மென்க.
“ஒண் தாமரையான் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” (முதல் திருவந்தாதி) என்ற பொய்கையார் பாசுரமறிக.
ஸ்நாநத்துக்கு உரிய காலம் வைகறையாதலால் ‘துறைபடிந்தாடி’ என்பதற்கு ஏற்ப ‘காலை’ எனப்பட்டது.
“கண்போதுசெய்து” என்பதற்கு- இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் ‘எம்பெருமான் பக்கலிலே ஞானெமன்னும் உட்கண் மலர்ந்து’
என்ற பொருளும் கொள்ளத்தகும். இங்கே நம்பின்னை யீடு காண்க:- “போதுசெய்து என்று மொட்டிக்கைக்கும பேர்,
அலருகைக்கும் பேர்; புறம்புற்ற விஷயங்களின் கண்செம்பிளித்து என்னுதல்; பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல்.” என்று.
“பெயரினையே புந்தியாற் சிந்தியாது ஓதியுறு வெண்ணு மந்தியாலாம் பயனங்கென்” (முதல் திருவந்தாதி) என்றபடி
மனப்பூர்வமாக தியானித்தலின்றிச் சொல்மாத்திரத்தால் ஓதி யுருவிடுதல் சிறப்பன்றாதலால் “மாலை நன்னாவிற் கொள்ளார்” என்ற
மாத்திரத்தோடு நில்லாமல் “நினையாரவன் மைப்படியே” என்றும் அருளிச் செய்தது.
போது- மலரும் பரவத்து அரும்பு; போரும்பு. நல்நா- எம்பெருமானைத் துதிப்பதற்கென்ற அமைந்த நா:
“நாராயணா வென்னாநா என்னநாவே” (சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை) என்றார் பிறரும்.
இப்பாட்டுக்குக் கிளவித்துறை கூறவேணுமென்னும் நிர்ப்பந்தமில்லை; அங்ஙனே கிரபபந்தங் கொள்ளில், இருள்கண்டு அஞ்சுகிற தலைவி,
தோழியையும் தாயும் வெறுத்தல் இது என்று கொள்ளலாம். நாயகி எம்பெருமானாகிய நாயகனைப் பிரிந்து அப்பிரிவை ஆற்றாது
நிற்கிற நிலையில் ஸூர்யன் அஸ்தமித்துக் காமோத்தீபமான இராப்பொழுது வந்து எங்கும் இருள் பரவி அவ்விருள்
எம்பெருமானது கரிய திருமேனியை ஞாபகப்படுத்தி வருத்த, அதற்கு ஆற்றாத அந்த நாயகி
“உலகேழு முண்டான சொன்மொழிமாலை அந்தண்ணந்துழய் கொண்டு சூடுமின்” (திருவிருத்தம் 20) என்று சொல்லும்படி
தன் நோய்க்குப் பகவந்நாமோச்சாரணமாகிய மந்த்ர பரிஹாரத்தையே உடையவளாதலால், நோய்நிலையும் அதன் பரிஹாரத்தையும்
ஆராய்ந்து நடத்தாத தோழியர் செவிலியர் என்பவரைக் குறித்து வெறுத்துக் கூறியது இது என்று கொள்க. முந்தின வாக்கியத்தால்,
இருளின் கொடுமையை வெளியிட்டாள்; பிந்தினவாக்கியத்தால், அவ்விருள் அவனது திருமேனிக்கு ஸ்மாரகமாய்த் தன்னை
வருத்துகிறபடியைத் தேதி முதலியோர் சிந்தியாமையையும், சிந்தித்து அந்நோய் தணிக்கும் உபாயத்தைச் செய்யாமையையும் பழித்தவாறு.
வெய்யோன் – உஷ்ணகிரணமுடையவன்; பகைவர்க்குக் கொடிய பராக்ரமசாலி. குறும்பர் – குறுநில மன்னர்.
அன்னகண்டும் = அழியாது பாதுகாக்கிற நீதிமானான செங்கோலரசன் அழிந்ததையும், சமயம் நோக்கி எளியாரை வருத்தும்
அநீதியையுடைய கொடுங்கோலரசர் பரவினதையும் ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் என்றபடி.
ஓட்டு- ஓடுதல்; முதனிலைதிரிந்த தொழிற் பெயர்.
———————————————————————
தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-இருத்தும் வியந்து -8-7–
பதவுரை
மை படி மேனியும்–நீலநிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித்தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள்தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண் வணங்கும்படியான
தகைமையினார்–தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்துமீண்டு)
ஊர்வந்து சேர்ந்த (கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் கருட்டுப் பசுவும் கூடக்
கனைக்கும்மென்று (உலம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?
விலக்ஷணமான அதிகாரிகள் உன்னை உள்ளபடி அறிந்து பேச -நான் அவர்கள் வழி தொடர்ந்து செல்வேன் –
கண் தெரிந்த பசுக்கள் ஊர் புகுந்து சேர -அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக கனைத்தலும் செய்ய -கண் இல்லாத குருட்டுப் பசுவும் கனைப்பது போலே
வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரங்களைக் கேட்டு நானும் சொன்னேன்-சொல்லுவதற்கு அடியான
சம்பந்தம் -பக்தி பாரவஸ்யம் உள்ள நான் ஞானம் சக்தியால் பேசினேன் அல்லேன்-
இந்த பாசுரம் ஒட்டியே ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-இத்யுக்தி கைதவச தேன விடம்பயாமிதா நம்ப
ஸத்ய வஸஸ புருஷான் புராணான்-யத்வா நமே புஜபலம் தவ பாத பத்ம லாபே-ஸ்லோகம் அருளிச் செய்தார் –
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்-என்று அவளுக்கு ஏற்ற வடிவு அழகு உடையாய் நீ என்றும் –
வைதிகரே-மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்-அவளைக் கண்டு ஆறி இருந்த நீ வைதிகரால் கொண்டாடப் படுபவன் என்றும் –
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்-
அப்படி யானும் சொன்னேன் -என்று அவ் வடிவின் சிறப்பையும் உன் திண்மையும் உணராது நாட்டார் போலே
முன்பு உன்னை பழித்தேன்-குருட்டுப் பசு கனைப்பது போலே என்றும்
அடியேன் -அந்த பிழையை ஷமிப்பதற்கு ஏற்ற நிலை யுடையேன் நான் என்றும்
மற்று யாது என்பனே –அவள் வடிவு அழகைக் கண்டும் கலக்கம் அடையாது திண்மையாய் இருக்கும் இத்தை
பாராட்டிக் கூறும் விதத்தால் அன்றி எங்கனம் வர்ணிப்பேன் -என்றவாறு –
கீழ்ப்பாட்டில் ‘மாலை நன்னாவிற்கொள்ளார் நினையாரவன் மைப்படியே’ என்று உலகத்தாரைப் பழித்த ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான் ‘நீர்தாம் நம்மை உள்ளபடியறிந்து சொல்ல வல்லீரோ?’ என்று திருவுள்ளம் பற்றினதாக ஆழ்வார் கருதி,
‘பிரானே! உலக்ஷணரான வைதிகர்களே உன்னை உள்ளபடியறிந்து செல்லவல்லார்; நான் அவர்கள் போன வழியே
போவதற்கு மாத்திரமே உரியன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ்செய்கிறார்.
கண்டார் கண்குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரைமலர் போலேயிருக்கிற திருக்கண்களையுமுடையான
உன்னுடைய திருவடித் தாமரை மலர்களை, கேட்டார் வாய்க்கேட்கைன்றியே மெய்யாகக் கண்டு தலைமேற்கொண்டு
அநுபவிக்குந் தன்மையுடையவர்கள் யாரென்னில், வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மஹான்களேயாவர்,
அறிவாளியான நானும் அவர்களைப் போலே ஏதோ சில சொல்லுகிறேனே. இஃது என்னென்னில்,
நன்றாகக் கண்தெரிந்த பசுக்கள் ஊர்புகுந்து சேர்ந்தவாறே நிலை கண்டு மகிழ்ந்து அந்த மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக்
கனைத்தல் செய்ய கண்ணில்லாத குருட்டுப் பசுவும் அதுகேட்டுத் தான் இன்னதென்றறியாமலே ஒக்கக் கனைக்குமென்று
உலகம் சொல்லுகிற விதமாகவே வேதகவைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டுவைத்து நானுஞ்சொன்னேனத்தனை;
செல்லுதற்கு அடியான் ஸம்பந்தமுடையவனும் பக்தி பரவசப்பட்டவனுமான நான் அப்படியல்லாமல் என் ஞானத்தாலே கண்டு
என் சக்தியாலே சொன்னேனென்னவல்லேனோ? என்றாராயிற்று. இப்பாசுரத்தை ஒருபுடை திருவுள்ளம்பற்றி
ஸ்ரீகுணரத்நகோசத்தில் பட்டம் அருளிச்செய்த ‘இத்யுக்திகைதவசதேக விடம்பயாமி தாநம்ப! ஸத்யவசஸ: புருஷாந்புரணார்-
யத்வா நமே புஜபலம்தவ பாரதபத்மவாபே’ என்ற ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தாகும்.
இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில்பொருள் சொல்ல வேண்டில், ‘தலைவியைக் கண்ட பாங்கன் மீண்டு தலைவனையடுத்து
வியந்து கூறல் இது’ என்று கொள்க. அதாவது- இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்த தலைமகன் தான் அத்தலைமகளை
மீண்டுஞ் சேரவிரும்பி அவளது அழகு முதலியவற்றைத் தன் உயிர்த் தோழனிடம் பாராட்டிக்கூற, அது கேட்டு
‘ஒரு மங்கை காரணமாக நீ இங்ஙனம் மெலிதல் தகாது’ என்று அவனை இடித்துரைத்த தோழன் அவனால் மீண்டும்
அவ்வடியின் சிறப்பை மிக எடுத்துக் கூறிக் கழற்றெதிர் மறுக்கப்படட்பின் அவனைச் சமாதானப்படுத்தி,
அவன் சொன்ன குறிப்பின்படியே தான் சென்று பூஞ்சோலையில் அவளைக் கண்டு அவளது ரூபலாவண்ய ஸௌந்தர்யாதிகளை நேரில் நோக்கி வியந்து ‘இத்தன்மையுடையவளைக் கண்டு பின் காமவேதனையால் மிக வந்தாது சிறிதும், ஆகியிருத்தல் எத்துணைப் பெரியோர்க்கும் ஆகாதே;
இப்படிப்பட்டவர்களைக் கண்டு பிரிந்தும் ஒருவாறு ஆறியிருக்கிறவனை நான் முன்பு ஆராய்ச்சி யின்றி இடித்துரைத்தேனே! என்று
நொந்து இகழ்ந்ததற்கு இரங்கி,விரைந்து மீண்டு வந்து தலைவனை நோக்கிக் கூறியது இது.
“மைப்படி மேனியும் செந்தாமரைக்கண்ணும்” என்ற அடைமொழிகளால், அவ்வழகியைச் சேர்தற்கு ஏற்ற வடிவழகுடையாய் நீ யென்றும்,
‘வைதிகரே மெய்ப்படியாலுன் திருவடிசூடும் தகைமையினார். என்றதனால், அவ்வழகியாளைக் கண்டும் ஒருவாரு ஆறியிருந்த நீ
ஞானனுட்டானமுடைய வைதிகர்களாலுந் தலைமேற்கொண்டு நன்கு மதித்துக் கொண்டாடத் தக்கவனென்றும்,
‘எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்குமென்னும் அப்படி யானுஞ்சொன்னேன்’ என்றனதனால், அவ்வடிவத்தின் சிறப்பையும்
உனது மனத்திண்மையையும் நோக்காது உலகத்திற் சாதாரணமான ஒரு தீயொழுக்கத்திலிழிவாரை அவர் நண்பர் கட்டுரைத்து
மறுக்கிற வழக்கின்படியே நான் உன்னைமுன்பு இடித்துரைத்தது கண் தெரிகிற பசுக்கள் கனைத்தவாறே குருட்டுப் பசுவும் கனைத்தன்போல
அறியா மரபாற் செய்த தென்றும், ‘அடியேன்’ என்றதனால், அப்பிழையை நீ க்ஷமிப்பதற்கேற்ற நிலையுடையேன் யானென்றும்,
‘மற்று யாதென்பனே?’ என்றதனால், அவ்வடிவழகைக் கண்டும் முழுக்கலக்கமடையாது. சிறிது துணிவுற்றிருந்த உனது
திண்மையை இங்ஙனம் பாராட்டிக் கூறும் விதத்தாலன்றி அவ்வடிவத்தின் சிறப்பை யான்
எங்ஙனம் வருணித்துக் கூறவல்லேனென்றுங் கூறினானாயிற்று..
————————————————————————-
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 -திருமாலிருஞ்சோலை -10-8-
பதவுரை
உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆம்புண்டும்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான
மாதாவினை–தாய் போன்றவனும்
பிதுவை–தந்தை போன்றவனுமான
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.
சகலவித பந்து -ஆப்த பந்து -ஆப்த பந்து -ஸ்ரீ யபதி-சரண் அடைந்து -பிரபத்தி அனுஷ்டானம் -உறுதி நிலையை வெளியிட்டு அருளுகிறார் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு-இயற்கை இல்லையே -கர்மா பயனாகவே என்பதால் புக்கு
அங்கு ஆப்புண்டும்-அங்கு அஹங்கார மமகாரங்கள் -அபிமானங்களை விடாமல் இருந்து –
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே-ஆத்மாவுக்கு சம்சார சம்பந்தமும் அநாதி -எம்பெருமான் சம்பந்தமும் அநாதி -என்பது நூல் கொள்கை
இருந்தாலும் ஆழ்வார்கள் அசித் சம்பந்தம் விட நாராயண சம்பந்தமே பழையது என்பர் -முன்னமே-என்கிறார்
திருவாய்மொழியிலும்-சோர்ந்தே புகல் கொடாச் சுடரை யரக்கியை மூக்கரித்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்பார்
ஏதன் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள் –
ஒன்றன்பின் ஒன்றாக அநாதியாய் வருகிற சரீர ஸம்பந்தங்கள் காரணமாக- கழித்திடாமல் என்னை அங்கீகரித்தருள வேணுமென்று
அடியேன் ஸகலவித பந்துவும் ஆபத்பந்துவுமான எம்பெருமானைச் சரணமடைந்திருப்பேனென்று
தமது ப்ரபந்திமார்க்கா நுஷ்டாக வுறுதிநிலையை ஆழ்வார் இப்பாட்டால் வெளியிடுகிறார்.
ஆத்மாவானது அநாதிகாலமாகவே ஊழ்வினைக்கு ஏற்ப யாதாயினும் ஒரு டம்பினுட்புகுந்து அதில் விளைவிலங்காற் கட்டுப்பட்டிருக்கும்
அவ்வுடம்பின் தொடர்ச்சி நீங்கியும் ஸூக்ஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாதங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்;
இப்படி ஆத்மாவுக்கு சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்;
இப்படி ஆத்மாவுக்குச் சரீர ஸம்பந்தம் அநாதியாயிருத்தலால் ப்ராசீக கர்மவாஸநா வசத்தான் ஏதேனுமொரு பொருளினிடத்துப் பற்றச் செய்து
எம்பெருமானை விட்டு விலகும்படியான கோட்பாட்டை முற்றும் வேரோடு அற நன்றாக விடுவித்துத் தன்னையே பற்றியிருக்குமாறு
செய்விக்கவல்லவனாய், ப்ரியங்களை நடத்துவதில் தாய்போன்றவனாய், ஹிதங்களை நடத்துவதில் தந்தை போன்றவனாய்த்
திருமகள் கணவனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்திருப்பேனென்கிறார். அநாதியாய் வருகிற ஸம்ஸாரத்திலே
பற்றில்லையாம்படி சரணமடைந்தாருடைய வினைகளைப் போக்குவிக்கவல்ல எம்பிரானை யான் வணங்குவேனென்றாராயிற்று.
ஆத்மாவுக்கு தேஹஸம்பந்தமானது கரும வசத்தினாலாகிய செயற்கையேயன்றி இயற்கையன்று என்பது தோன்ற
‘யாதானு மோராக்கையில் புக்கு” எனப்பட்டது. அங்கு ஆப்புண்ணுத லாவது- ஒவ்வொரு பிறப்பிலும் அஹங்கார மமகாரங்களாகிய
அபிமானங்களை விடாமலிருப்பதாம். (மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே) ஆத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தமும் அநாதி,
எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமும் அகாதி என்பது ஓர் கொள்கை, இருந்தாலும் ஆத்மாவுக்கு அசிம்ஸம்பந்தத்தைவிட
நாராயண ஸம்பந்தமே மிகப் பழையதென்னுமிடம் ஆழ்வாருளிச் செய்த ஆழ்வார்தாமே திருவாய்மொழியில்
‘சோர்ந்தே புகல்கொடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ என்றருளிச் செய்கிறார்;
அசித் ஸம்பந்தத்தின் அநாதித்வத்தைத் தெரிவிக்கிற அப்பாசுரத்தில் ‘முதல் முன்னமே’ என்றதையும் குறிக்கொள்க.
‘எதந்நிமித்தம் முன்னமே முதலமுன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியும் ஸ்மரிப்பது.
‘யாக்கை’ ‘யாப்பு’ என்றுஞ் சொற்கள் ‘ஆக்கை’ ‘ஆப்பு’ என மருவி வந்துள்ளன. யாக்கையென்பதற்கு-
(உயிரைக்) கட்டுப்படுத்துவதென்று காரணப்பொருள். முதுமை+ ஆவி,மூதாவி, ஆவியென்பது தாளியாகு பெயராய் உடம்பையுணர்த்திற்று.
உயிர் ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொரு ஸ்தூல சரீரத்திற் சாரும் பொழுதும் ஸ்வர்க்க நகரங்களுக்குச் செல்லும் பொழுதும்
ஸூக்ஷ்ம சரீரம் முக்தி நிலையிலே உயிரை விட்டகலும். ஆத்மாவின் ஸ்தானத்தில் அரிசியையும்,
ஸ்தூல சரீரத்தின் ஸ்தானத்தில் உமியையும் ஸூக்ஷ்ம சரீரத்தின் ஸ்தானத்தில் தவிட்டையும் கொள்க.
அரிசியை விட்டு உமி நீங்குவது இரண்டு உலக்கைளினால் குத்துப்பட்டாதலால். அதுபோல ஜ்ஞாநாநுஷ்டநகங்களால் ஸ்தூல சரீரம் நீங்கும்;
தவிடு நீங்குவது தண்ணீரில் கழுவப்பட்டாதலால், அதுபோல விரஜாநதீஸ்நாநத்தால் ஸூக்ஷமவொட்டு நீங்குமென்று விவேதித்துக்ª காள்க.
இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் சொல்ல வேண்டில், தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் இது.
திருமாலாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற (பராங்குச நாயகியாகிய) தலைமகள்
‘இனி என்னுயிர் தரித்து நில்லாதாதலால் யான் விரைவில் இறந்து படுவேன்; அங்ஙனம் இறந்தொழிந்தேனாயினும்
மறுபிறப்பில் இத் தலைவனையே கூடத் தோற்றத்து எழுவகைப் பிறப்பேன் என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள்
உள்ளனவாதலால் அவற்றில் யான் மானிடமகளாகவே மீண்டும் பிறக்கிறேனென்பது என்ன நிச்சயம்?
ஆதலின் இப்பிறப்பிலேயே இத்தலைவனைப் பிரியாது கூடுமாறு என்னுயிர் இவ்வுடம்பை விட்டு நீங்கு முன்னமே யான் விரைந்து முயல்வேனாவேன்;
அதாவது நான் நாணத்தை விட்டு உடனே என் கருத்தைத் தோழிக்கு வெளிப்படையாகச் சொல்லி அவள் மூலமாக நற்றாய்க்கும்
அவள் மூலமாக தந்தைக்கும் அதனை வெளிப்படுதுதி அவர்கள் எவ்வாறாயினும் இவனையே எனக்கு விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்து கொள்ளுவேன்:
அன்றியும் தோழிமூலமாகத் தலைமகனுக்கு எனது வருத்த மிகுதியைக் கூறி அவன் விரைவில் என்னை வரைந்து கொள்ளுமாறுஞ் செய்வேன் என்று
பலவாறு ஆராய்ந்து தோழிக்குத் தன் அறத்தொடு நிற்கத் துணிந்தது இது எனக்கொள்க.
உயிரானது பழமையான பலவகைப் பிறப்புகளுள் யாதாயினும் ஒரு சரீரத்தில் பிரவேகித்து அவ்வுடம்பில் கட்டுப்பட்டு நின்றும்
அங்கு நின்ற தொடர்ச்சி நீங்கியும் நிலைமாறி அலையுந்தன்மையுடையது; ஆதலால் எனது உயிர் இவ்வுடலை விட்டு நீங்குதற்கு
முன்பகாவே எந்த விதத்தினாலாவது தலைமகன் னஎனைப் பிரிதலாகயி தவறா வொழுக்கத்தை நன்கு விடுவித்தற்கு
(நாயகனை என்னோடு கூட்டுதற்கு) ஏற்ற தாயையும் தந்தையையும் திருமாலாகிய எனது அத் தலைவனையும் வணங்கி
வேண்டிக் கொள்வேன் என்று பதப்பொருள் காண்க.
நீங்கும் விரதத்தை நல்வீடு செய்தலாவது- பிரிவு இல்லாமல் வெளிப்படையாகக் கூடியிருக்கும்படி மணஞ்செய்வித்தல்
களவு வழியான புணர்ச்சியில் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடர்தலைப்பாடு, பங்கியிற் கூட்டம், பகற்குறி, இரவுக்குறி,
ஒருவழித்தணத்தல்,வரைபொருட் பிரிதல் என்ற ஒவ்வொரு வகையிலும் தவறாமற் பிரிவு நேர்தலால் அதனை ‘விரதம்’ என்னும்
வடசொல் விரதமென்று கிடக்கிறது தவறாமல் ஏற்றுக்கொண்டு ஒழுகும் ஒழுக்கம் விரதமெனப்படும்.
“யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்’ என்றதில் ‘யாதானும் பற்றி’ என்பது ‘வீடு செய்யும்’ என்பதில் அந்வயிக்கும்;
ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு என்னை நாயகனோடு மணம்புரிக்கவல்ல மாதாவினைப்பிதுவை என்றவாறு.
ஒருவனைத் தம் மகளுக்கு மணஞ்செய்விப்பதற்கு அவனது கல்வி, செல்வம், குலம், ஒழுக்கம், அன்பு, வேண்டுகோள்,
ஆபரணங்கொடுத்தல் முதலாகப் பல காரணங்களுக்குள்ளனவாதலால் அவற்றுள் பொருத்தமான ஏதேனுமொரு காரணத்தைக் கொண்டு
விவாஹஞ் செய்து வைக்க வேண்டுமென விரும்பியவாறு.
இனி ‘யாதாலும் பற்றி’ என்பதை ‘நீங்கும்’ என்பதிலும் அந்வயிக்கலாம். தலைவன் தலைவியை விட்டு நீங்குவதற்குப் பல காரணங்களுண்டு;
பிறர் அறிந்துவிடுவார்களே யென்கிற பயம், ஊரவர் பழி தூற்றல், விவாஹத்துக்கு வேண்டிய பொருளீட்டி வருதல் முதலிய
விசேஷ காணங்கள் பலவற்றுள் ஏதேனுமொரு காரணம்பற்றி நீங்குகிற என்றவாறு.
————————————————————————–
வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 -ஒன்றும் தேவும் -4-10-
பதவுரை
வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் பரவச் செய்து வைத்துள்ளாய்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத்தக்க உன்போல்வார் எவரையு மில்லாதவனே!
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வரைச்செய்வேன்
உபாயாந்தரங்களைக் காட்டி வைத்து -ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின் அன்று என்ப ஆறு சமயத்தார்
பல சமயங்களையும் தேவதைகளையும் நாட்டி வைத்து -அனைத்தும் உன் சரீரமே -உன்னால் அல்லாது வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாதே
இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவ சமயம் ஒன்றே பரவச் செய்வேன் -பிரபத்தி மார்க்கம் ஒன்றையே பரவச் செய்வேன்
ஸ்ரீ மன் நாராயண ரூபியான உன் வடிவத்திலேயே பக்தி செலுத்தும் படி பண்ணுவேன்
குலமகட்க்கு தெய்வம் கொழுநன் -என்றவாறு –
ஆழ்வார் எம்பெருமானை நோக்கி ‘ஒப்பற்ற பெருமானே! ஸர்வேச்வரனான நீ ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர்
கரும கதியால் உன்பக்கல் வாராதொழியும்படி பலபல தெய்வங்களையும் பலபல மதக்கோட்பாடுகளையும் பலபல
உபாஸ்னைவிதங்களையும் ஏற்படுத்தி அமைத்து வைத்தாய்; உன்னை நேதராக அடைந்து உஜ்ஜீவிப்பதற்கு இடையூறான
அவ்வெளி வழிகளிலே யான் இறங்கி விலகாதபடி அவற்றிற்கெல்லாம் மூலமான உது ஸ்யரூபத்தை யறிந்த உன்னிடத்திலே
அன்பை மிகுதியாகச் செய்வதோடு பிறகும் அங்ஙனஞ்ª சய்யத் தூண்டுவேன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ் செய்கிறார்.
ஆழ்வார் எம்பெருமானது திருவுள்ளத்தின்படி உலகத்தைச் சீர்திருத்தி நல்வழிப்படுத்த அவதரித்தவராதலால் இங்ஙனம் தமது செய்கையைக் கூறுதல் தகும்.
வணங்குந் துறைகள் பலபல வாக்கி= கர்மயோகமென்றும் ஜ்ஞாநயோகமென்றும் பக்தியோகமென்றும் இப்படி பலவகைப்பட்ட
உபாயங்களைக் காட்டிவைத்து என்றபடி. மதிவிகற்பில் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி
‘ஓன்றே பொருளெனின் வேறென்ப்வேறெனின் அன்றென்ப ஆறுசமயபத்தார்” ( திருவள்ளுவமாலை 9. )என்றாற்போல,
ஆம் என்பதை அல்ல என்பதும் அல்ல என்பதை ஆம் என்பதுமான சமயச் சண்டைகள் மதிவிகற்பால் பிணங்குதலாம்.
இப்படி பிணங்குகின்ற மதங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தவன் எம்பெருமானேயிறே.
அவையவைதோறு வணங்கும் பலவாக்கி = ஒவ்வொரு மதத்திலும் அம்மனென்றும் பிடாரி என்றும் சாத்தனென்றும் கூற்றனென்றும்
பலவகைப்பட்ட தெய்வங்களை ஆராதனைக்கு உரியனவாக நாட்டி என்றபடி, நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்-
அனைத்துக்கும் எம் பெருமானே அந்தராத்மாவாய் அவையெல்லாம் எம்பெருமானுடைய சரீரங்களாயுண்ளள்ளனவாதலால் இங்ஙனஞ் சொல்லப்பட்டது.
இணங்கு நின்னோரையில்லாய் = இங்ஙனே ஜகத்துக்களை நிர்வஹிக்க உன்னாவல்லது வேறொருவரால் முடியுமோ?
சக்தியில் ஒப்பற்றவனன்றோ நீ என்றவாறு.
(நின்கண்வேட்கை யெழுப்பனே) வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;
மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;
அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.
இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் கொள்ள வேண்டில், தலைவி வெறிவிலக்குவிக்க நினைத்தல் இதற்கு துறையாம்.
எம்பெருமானாகிற நாயகனைக் களவொழுக்கத்தாற் கூடி அவனது விரஹத்தில் வருந்தி மெலிகிற (பாசாங்குச ) நாயகி,
தன் மெலிவைக்கண்டு கவலைப்பட்ட செவிலித்தாய் கட்டுவிச்சிக்குக் கூறி அவளைக் கொண்டு அவள் மரபின்படி கட்டுவைப்பித்து
நோக்குகையில் முருகக்கடவுள் தோன்றக்கண்டு அதற்கு பரிஹாரமாக ஸ்ரீமந்நாராயணமூர்த்தியின் நிமித்தமாக கொண்ட
தன்« நாய் சிறு தெய்வம் பாராட்டலாகிய இவ் வெறியாடடினால் தீருமாயின் தனது கற்புக்குக் குறைவாதலையும் தீராதமாயின்
ஊரலர் மிகுதலையுங் கருதி, கான நாணந்துறந்தாயினும் ரஹஸ்யத்தை வெளியிட்டு வெறிவிலக்குவிக்கத் துணிந்து
பாவநப்ரகர்ஷத்தாலே தலைவனை முன்னிலையாகக் கொண்டு தன்னிலே தான் உரைத்தது இது
“குலமகட்குத் தெய்வம் கொகுகனே” (நீதி நெறிவிளக்கம் 26.)என்றபடி கற்புச்சிறந்த இத்தலைவி தன் தலைவனையே சிறந்த
தெய்வமாகவுடையவளாதலால் மற்றைய தெய்வங்களை யெல்லாம் அத் தெய்வத்தின் வடிவங்களாகவே கருதி கூறுகின்றாள்.
வணங்குந் துறைகள் பலபல= கட்டுவைத்தல்,வெறியாடுதல், ஆடுபலி கொடுத்தல், கள்ளும் இறைச்சியும் தூவுதல் முதலியன.
அயலார்க்கு இக்களவொழுக்கம் தெரியவொண்ணாதபடி கட்டுவிச்சியின் நெற்குறியில் முருகக் கடவுளைக் காட்டியவனும்,
வேலன் வழிபாட்டுக்கு வழிமுறையால் உரியனாகுகிறவனும் முதற்பெருந் தெய்வமாகிய நீயேயாயினும் அத்தெய்வத்தினால்
என் நோய் சிதைக்கப்படுதல் முழுமுதற் கடவுளாகிய ஒப்பற்ற உன்னை நேரில் தலைவனாகக் கொண்ட
எனது கற்பிற்குக் குறைவாதலின் யான் அதனை உடன்படேன் என்றவாறு.
————————————————————————–
எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-பரிவதில் ஈசனை -1-6-
பதவுரை
எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள் கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம்தேவர்கள் கூட்டம்–தொழுவதும்
வணங்குவதையும்–சூழ்வதும்
(பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன்பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்
கண்கள் தஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)
எம்பெருமானை கண் களிப்பைக் கண்டு முடிக்க வேணும் என்று அன்புற்ற நித்ய ஸூரிகள்-இமைக்க மாட்டார்களே
உலகப் பொருள்களை இகழ்ந்து எம்பெருமானையே சேவித்து காலம் கழியும்படியான ஆசை கொண்டார்க்கு அவனை உபேக்ஷிக்க காரணம் இல்லையே
பூர்ண அனுபவம் செய்யும் ஆழ்வாராதிகளுக்கு ஞானம் குவியாதே
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே –
காதல் உற்றார்க்கு எள்கல் அல்லால் –கண் துஞ்சல் உண்டோ -என்று அன்வயம்
ஸ்வ தந்தரரான பெருமாள் உறங்கினார் என்று கேட்க்கும் அத்தனை போக்கி இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் என்று கேட்டு அறிவார் உண்டோ
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -அன்றோ
தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும்
அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –
பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி
அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார்.
ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள்
எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண் களிப்பக் கண்டு
முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோவென்கிறார்.
இப்பாட்டுக்கு மற்றொருபடியாகவும் பொருளுரைப்பா; எழுவதும்- பிறப்பதும், மீண்டேபடுவதும்- பிறந்தவளவிலே இறப்பதும்,
பட்டு- பிறந்து, எனை ஊகளள் போய்க்கழிவதும்- பலகாலம் கழித்து இறப்பதுமான உலகத்துப் பொருள்களை,
கண்டு கண்டு- பாரத்துப் பார்த்து என்கல் அல்லால்- அவற்றை இகழ்வதல்லாமல்… எம்பெருமானைச் சேவித்துக் காலங்கழியும்படியானதோர்
ஆசையில் நின்றார்க்கு அவனை உபேக்ஷிக்கக் காரணமில்லை- என்று. எம்பெருமானைப் பூர்ணாநுபவஞ் செய்யக் கருதி
ஆழ்ந்தவர்கட்கு ஞானம் குவியாது என்பதும் தோன்றும்.
வான்களாகி நாள்கள் செல்லும்படியைக் கண்டு ‘ஐயோ! காலமெல்லாம் வீணாய்க் கழிந்து போகிறதே,
பகவத்ஸாக்ஷாத்காரம் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்று மனம் நொந்து கொண்டிருக்கலாமேயொழிய.
‘எம்பெருமானைக் கண்ணாரக் கண்டாயிற்று, நமது காதல் தீர்ந்துவிட்டது’ என்று க்ருதக்ருத்யராகப் பெறும் நாள் உண்டாவதரிது என்றதாயிற்று.
கண் ஆர் – கண்படைத்த பயன்பெற.
‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண் ணென்னகண்ணே’ (சிலப்பதிகாரம் – ஆய்ச்சியர் குரவை என்றார் பிறரும் )
‘காதலுற்றார்க்கு என் கலவல்லால் கண் துஞ்சுதலுண்டோ’ என்று அந்வயிப்பது. பகவத் விஷயத்தில் ஆசைவைத்திட்டால்
உள்ளதனையும் உருகிக் கிடக்கவேணுமத்தனையன்றி நிர்வ்ருதியாய்க் கண்ணுறங்கப் பெறுவதில்லை காணும்.
இங்கே நம்பிள்ளை யீடுகாண்மின்;- ‘ஸ்வதந்தாரான பெருமாள் உறங்கினாரென்று கேட்குமித்தனை போக்கி அவரை அநுவர்த்தித்துப் போன
இளையபெருமாளுக்குக் கண்ணுறங்கிற்றோ? பகவத் விஷயத்திலே கைஸவத்தாரில் இதுக்கு முன் கண்ணுறங்கினாருண்டென்று கேட்டறியவாருண்டோ?”
கிளவித்துறை வகையில் இப்பாசுரத்தை, நாயகனைப் பிரிந்து துயில் கொள்ளாத நாயகி இரங்கியுரைக்கும் பாசுரமாகக் கொள்க.
திருமாலாகிய நாயகனைக் கண்டு கூடிப்பிரிந்து அந்த விரஹாரத்தில் “கங்குலும் பகலுங் கண்துயிலறியாள்” என்றபடி
அல்லும் பகலும் சிறிதும் தூக்கங்கொள்ளாது வருந்துகிற (பராங்குச) நாயகி தன்னைத்தேற்ற முயல்கிற தோழிக்குக் கூறியது இது என்ற கொள்ளலாம்.
தோழி தேற்றுகிற விதம் யாதெனில்,‘நாயகனைப் பிரிந்த நிலைமையில் இப்படி அலற்றுவாருண்டோ?
பலவகைப்பட்ட உலகப் பொருள்களைக் கண்டுகொண்டு பொழுதுபோக்கி ஒருவாறு ஆறித் துயில்கொள்ளும் நாயகிகள் உலகத்திலில்லையோ?
அவர்களைப் போலே துயிர் கொண்டிருக்கலாமே’ என உலகியல் கூறி ஆற்றலுற்றானி தோழி; அன்னவளை நோக்கி
இத் தேவாதிதேவயான புருஷோத்தமன் பக்கல் அன்புவைத்தவர்களும் துயில் கொள்ளக்கூடுமோ வென்று கூறி மறுத்தவாறு
இன்பநுகர்ச்சிக்கு உரியகாலம் வீணேகழிதலைச் சிந்தித்து சிந்தித்து மனந்தளர்வதல்லாமல் கண்துயில்கொள்ள அவகாசமுண்டோ வென்றவாறு.
‘இமையோர்கள் குழாம் தொழுவதுஞ் சூழ்வதுஞ்செய்’ என்ற விசேஷணத்தினால்- தன்னால் காதலிக்கப்பட்ட நாயகனுடைய
சிறப்பு விளக்கப்பட்டதாம். ‘தொல்லைமால்’ என்றதனால் தனக்கும் அந்த நாயகனுக்கும் நேர்ந்த பழக்கம் நெடுநாளையது என்று குறிப்பிடப்பட்டதாம்.
‘தொல்லைமால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும்
பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.
————————————————————————–
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 -கெடுமிடராய-10-2-
பதவுரை
துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபடநிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழிசொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.
பரத்வத்தை எல்லை கண்டாலும் காணலாம் -ஸுலப்யத்தை எல்லை காண முடியாதே –
சர்வேஸ்வரனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய்-அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிறவன் -ஆச்ரித ஸ்பர்சம் உள்ள
த்ரவ்யமே தனக்கு தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டும் படி
அது தானும் தலைக் கட்டப் பெறாதே வயது கையதாக அகப்பட்டுக் கொண்டு -கட்டுண்டு -அடியுண்டு
பிரதிகிரியை அற்று உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்
நித்ய ஸூரிகளுக்கே முடியாதே
சனகாதி யோகிகளும் -ப்ரஹ்மாதி தேவதைகளும் -சரண் அடையும் படி நிற்கும் முழு முதல் கடவுள் இவன் ஒருவனே அன்றோ
நல்ல வென் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்-என்று
கை வாங்கி இருக்காமல் ஸுலப்யன் என்று அறிந்து
அவன் நம்மை உடைமையாக்கிக் கொள்ளாது ஓழியான்-அஞ்ச வேண்டாம் என்றபடி –
ஸர்வேச்வரனுடைய பரத்வத்திலும் ஸௌலப்யத்திலுமண்டான போக்யதை எவர்க்கும் அளவிட்டு நினைப்பதற்கு முடியாதென் றருளிச் செய்கிறார்.
‘வெண்ணெயூணென்னு மீளச் சொல்லே’ என்றதனால் ஸௌலப்யகுணமும், மற்றவற்றால் பரந்த குணமும் குறிக்கப்பட்டனவென்க.
‘பரத்வத்தை ஒருவாறு எல்லைகண்டாலும் காணலாகும். ஸௌலப்யம் யார்க்கும் எல்லைகாண்பதரிது’ என்பது தோன்ற
‘நெஞ்சால் நினைப்பதரிதால் வெண்ணெயூணென்ன மீளச்சொல்லே’ எனறு நவீத சௌர்ய வ்ருத்தாந்தம் ப்ரதாத விசேஷ்ய மாகத் தலைக்கட்டப்பட்டுள்ளதென்க.
‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்- நெஞ்சால் நினைப்பரிதால்’ என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு காண்மின்:-
“ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளக்குங் கூட ஆச்ரயணீயனாய் அவரப்த ஸமஸ்தகாமனாயிருக்கிறவன்,
ஆச்ரிதஸ்பர்சமுள்ள த்ரவ்யமே எனக்கு தாரகமாய் அதுதான் நேர்கொடுநேர் கிட்டப்பெறாதே இப்படி களவு கண்டாகிலும்
பூஜிக்க வேண்டி அதுதான் தலைக்கட்டப் பெறாதே வாயாது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு ப்ரதிக்ரியை யற்று
உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்றநிலை சிலர்க்கு நிலமோ?” என்று.
‘இமையோர்தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பபரிதால்’ என்றதனால், எப்போதும் அவனுடன் ஒக்க இருப்பவரும்
வரம்பிலா ஞானமுடையவரும் நிரந்தர பகவத்நுபவ சீலருமான நித்ய ஸூரிகளுக்கே இக்குணம் வரையறுத்து
நினைக்க முடியாமை கூறின முகத்தால்,மற்றையோர்க்கு எட்டாத தன்மையைக் கைமுக ந்யாய ஸித்தமாக்கினபடி.
“துஞ்சா முனிவருமல்லாதாரும் எஞ்சாப்பிறவி யிடர்கடிவான் தொடரநின்ற தன் சார்விலாத தனிப்பெருமூர்த்திதன்” என்று
இங்ஙனே அந்வயக்ரமாக்கி யுரைக்கவுமாம் துஞ்சா முனிவரும்- ஆத்மவிஷயத்திலும் ஈச்வா விஷயத்திலும் உணர்ச்சி நீங்காத
ஸநகாதி யோகிகளும் அல்லாதவரும்- அவர்கள் போலன்றி ப்ரஹ்ம பாவகையோடு கர்மபாவநையையுமுடைய ப்ரஹ்மா
முதலிய தேவர்களும். எஞ்சாப் பிறவி இடர்க கடிவன் – தம்தம் மாளாத பிறப்புத் துன்பத்தை ஒழிக்கும் பொருட்டு,
தொடர- வழிபடும்படிநின்ற- தலைவனாய் நின்றவனும், தன்சார்வு இலாத- எல்லார்க்கும் தான் சார்பாக (சரண்யனாக) இருப்பதுபோலத்
தான் ஒரு சார்பைத் தேடுதலில்லாதவனுமாகிய முழுமுதற்கடவுள் என்று பொருளையும் வுரைத்துக்கொள்ளலாம்.
இப்பாட்டைக் கிளவித்துறை வைகயில் நாயகனுடைய அருமையை நோக்கிக் கவலைப்படுகிற நாயகிக்கு தோழிகூறுதலாக கொள்ளலாம்.
நாயகனது பெருமேன்மையையே பாராட்டிப்***- தோழி நாகணைமிசை நம்பார், செல்வர் பெரியார் எளியளான என்னைக்
கைபற்றிக்கொண்டருள்வானோ? என்று மிகக் கவலைப்பட்ட தலைமகளை நோக்கி தோழி
‘அங்ஙனம் பெருமை படைதத்வனாயுள்ளவனுக்கு அன்பர் திறத்தில் எளியனாந்தன்மையும் ஒன்று இயல்பில் உள்ளதாதலால்
அவன் உன்னை உரிமையாக்கிக் கொள்ளாதொழியான்’ என்று கூறி ஆற்றுவிக்கிறபடி போலும்.
‘வெண்ணெயூணென்னு மீளச்சொல்’ என்றது- தோழி தான் பற்றாசரகச் சொன்னது ஸுவ்லப்ப குணத்திற்கு ஒரு த்ருஷ்டாந்த மெடுத்துக் காட்டியபடி
துஞ்சாப்பெருமூர்த்தி என்றவளவும் தலைவி தன்னுடைய அச்சததிற்கு உறுப்பான அநுஸந்தித்த பரத்வகுணத்தைத் தோழி அநுவாதம் செய்தபடி யென்க.
ஊண்- இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அன்று; ‘உண்ணப்படும் பொருள்’ என்கிற அர்த்தத்தில் செயல்படுபொருள்
விகுதி புணர்ந்து கெட்ட பெயர்ச்சொல் என்க. ஹீதமென்னும் வடசொல் ஈனமெனத் திரிந்தது.
————————————————————————–
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-
பதவுரை
ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – –
99-செஞ்சொல் கவிகாள் -10-7-
ஆழ்வார் திரு உள்ள உறுதியை வெளியிட்டு அருளுகிறார்
எல்லாயவர்க்கும் -பறவை விலங்காதி/ அல்லாதவர்க்கும் -நித்ய ஸூ ரிகளுக்கும்
மற்று எல்லாயவர்க்கும் – நிஹினமான மநுஷ்யர்களுக்கும் என்றுமாம்
ஞானப்பிரானே நம்மை சம்சார பிரளயத்தில் இருந்தும் உத்தாரணம் செய்து அருளுவான் –
முன்பு பிரவாய வெள்ளத்தில் மூழ்கிப்போன பூமியை உத்தரணஞ் செய்து நிலைநிறுத்திய மஹோபகாரகனையே நான்
ஸம்ஸாரப் பெருங்கடலினின்று என்னை வீடேற்றுதற்குத் தஞ்சமாக நினைத்திருப்பேனென்று ஆழ்வார்
தம்முடைய திருவுள்ளவுறுதியை அன்பர்க்கு வெளியிடுகிறார்.
‘இப்போது நான் வெளியிடுகிற என்னுடைய ஸித்தாந்தம் அறம்பொருளின்பங்களையே தங்சமாக நினைத்து
தேஹாத்மாபிமாநங் கொண்டு பகவத் விஷயத்தில் விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் இகழும்படியான
இழிந்த சொல்லாயினும் ஆகுக; என்னுடைய உறுதியை வெளியிட்டே தீரவேனென்கிறார் முந்துற முன்னம்
ஈனச்சொல்லாயினுமாக என்றதனால். குழந்தை கிணற்றில் விழுந்தவாறே உடன் குதித்து அதனை யெடுக்கும் தாய்போலப்
பூமியைப் பிரளங்கொண்டவாறே உடன் குதித்து அதனையெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளயங்கொண்டவாறே முழுகியெடுத்து
மஹேபாகாரனையன்றி மற்றொருவனையும் அடைக்கலம் புகமாட்டேனெற்றாயிற்று.
ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷனை எம்பெருமான்
மஹாவராஹ ரூபியாகத் திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன்
என்பது எனத்துருவாய கதை. இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பரம்மபலபத்தைப் பற்றிய பிரளத்தின்
இறதியில் பிரளயப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியைத் திருமால் மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹ ரூபங்கொண்டருளிக்
கோட்டு நுனியாலே பூமியை எடுத்து வந்தனனென்றும் அதுபற்றி இக்கலபத்துக்கு வராஹகலபமென்றே பெயராயிற்றென்றும் புரானவரலாறு உண்டு.
எல்லாயவர்க்கு என்றதில் விலங்கு பறவை முதலிய பலவகைப் பிறப்புகளையும் அடக்குவர்.
அன்றியே, ‘அல்லாதவர்க்கும்’ என்பதற்கு எம்ªபேருமானை விட்டு பிரிந்து தரியாதபடியாகவுள்ள நித்ய ஸூரிகளுக்கும் என்றம் உரைத்தலுமுண்டு.
கிளவித்துறை வகையில் இப்பாட்டைத் தலைவன் பக்கலில் தனக்குள்ள அன்புறுதியைத்தலைவி தோழிக்குக் கூறுதலாகக் கொள்ளலாம்.
ஸர்வேச்வரனாகிய நாயகனை கலந்து பிரிந்த (பராங்குச) நாயகி, தான் அவன் விஷயத்திற்கொண்டா காதலின்- காண்க.
துறந்து தோழிக்கு எடுத்துக்கூறிய தென்க. இதுவும் தலைவி தோழிக்கு அறிந்தொடு நிறற்றலின்பாற்படும்.
தனது களவொழுக்கத்தைப் புலப்படுத்துதலால் உண்டாகும் பழி தூற்றுக்குத்தான் பயன்படாமை தோன்ற
‘ஈனச் சொல்லாயினுமாக’ என்றாள் என்று கொள்க.
‘எல்லாயவர்’ னஎபதில் ‘எல்லாம்’ – பகுதி; மகரம் கெட்டது; ய்- எழுத்துப் பேறு. அ- சாரியை; வ்- சந்தி; அர்- விகுதி.
ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீவராஹப்பெருமாளுக்கு ஞானப்பிரானென்று திருநாமம் வழங்கும்.
————————————————————————–
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-முனியே நான்முகன் -10-10-
பதவுரை
நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்றுவல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–கொடியவையாய்போக்க முடியாதவையான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–கொடிய சேற்றின் அடர்த்தியையுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்கிராகப் பெறுபவர்கள் என்றவாறு.)
கருமம் ஒழிந்து பிறப்பு அற்று முக்தி பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்
குருகூர் திவ்ய தேச மகிமையால் ஆழ்வார் தாம் பெற்ற பேறு என்கிறார்
திரு மால் திருப்பேர்-வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்-பாகவத பக்தி நிஷ்டை –
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை திருவாய் மொழிகளில் வெளியிட்டு அருளியது போல
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த-என்று உபசம்ஹரித்து –
அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று தொடங்கியது போலே
மஹா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே நூறு பாட்டாய்
ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை-
மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே -மஹா விவேகிகளையும் முழுக வைக்கும்
எம்பெருமானும் வந்து பிறந்தால் மயக்கி இழுக்கும் சம்சாரம் அன்றோ
பிரபந்தம் முழுவதுமே சம்சார நிவ்ருத்தியை விண்ணப்பம் செய்த வாறு
நல்லார் நவில் -விசேஷணம் ஆழ்வாருக்கும் திருக் குருகூருக்கும் -ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்கிற பிரபாவம் அன்றோ
சம்சாரிகள் உண்டியே உடையே என்று உகந்து இருக்க –
ஆழ்வாரோ உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்பதாலே மாறன் –
இப்பிரபந்தம் கற்றார் பெறும் யுரைத்து தலைக்கட்டுகிறது இப்பாசுரம் ஆகவே இது நூற்பயன்.
ஞான மனுட்டானமிவை நன்றாகவேயுடையரான ஆசார்யரைச் சரணமாக வடைந்து அவரது ஸம்பந்தமூலமாக எம்பெருமானை
யநுபவிக்கிற மதுரகவிகள் போல்வாரான நல்லவர்களால் புகழ்ந்து கூறப்பெற்ற இக்குருகூரென்று ப்ரஸித்தமான
திருநகரியில் திருவவதரித்துவரும் பகவதபாகவத விஷயத்தில் பக்தி மிகுந்தவருமான ஆழ்வராலே விண்ணப்பஞ் செய்யப்பட்டதாய்,
எம்பெருமானும் பிறரும் தலைமேற் கொண்டு ஆதரிக்கத் தக்க இனியபாமாலையாகிய இத்திவ்யப்பிரபந்தத்தைக் கற்று வல்லவர்கள்
அரும்மொழியப்பிறப்பற்று முக்திபெறுவரென்று பயனுரைக்கப்பட்டதாயிற்று.
குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால்தான் தமக்கு
இப்படிப்பட்ட பக்திப் பெருகாதல் உண்டாயிற்று என்பதாகத் தொணிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார்
திருவலதரிக்கப்பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்லவேணுமோ?
திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை
மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம்.
முதற் பாசுரத்தில் ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று உபக்ரமித்ததற்கு ஏற்ப இங்கு
மாறன் விண்ணப்பஞ்செய்த’ என்று உப்ஸம்ஹரிக்கப்பட்டமை காண்க.
இந்நூறும் என்ற விடத்து நம்பிள்ளையீடு காண்மின்:-“மஹாபாரதம்போலே பரந்திருந்தல், ப்ரவம்போல சுருங்கியிருந்தல் செய்யாதே
நூறுபாட்டாய் ஜ்ஞாதவ்யாம்சமடைய உண்டாயிருக்கை.” மஹாவிவேகிகளும் ஆழ்ந்தால் கால்வரங்கவொண்ணாதபடி
முழுகுவிக்குந் தன்மையுடையதான ஸம்ஸாரத்தை மாய வன்சேற்றள்ளற் பொய்ந்நிலம்’ என்றது மிகப் பொருந்தும்.
பராத்பனான எம்பெருமானும் இதிலே வந்து பிறந்தால் அவனையும் மயங்கி யிழுக்கும் வன்சேற்றை.
‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறமை அடியேன் செய்யும் விண்ணப்பம்’ என்று
தொடங்கி விண்ணப்பஞ்செய்த இந்நூறும் வல்லார் அழுந்தார் பொய்நிலத்து’ என்று முடித்ததனால் இப்பிரபந்தம் முழுவதும்
விரோதியைப் போக்கித்தரவேணுமென்று ஆழ்வார் தமது வருத்தத்தை (ஸம்ஸாரநிவ்ருத்தி. யபேக்ஷையை ) விண்ணப்பஞ் செய்தவாறாம்.
நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் இட்டருளின வியாக்கியானங்களில் ‘நல்லார் நவில்’ என்றதற்கு –
லோகத்தி ஸத்துக்களடைய ஆழ்வாராழ்வார் என்னுமத்தனை’ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே
‘நல்லார் நவில்’ என்பது குருகூர்க்கு விசேஷணமன்றியே குருகூர் நகரான ஆழ்வார்க்கு விக்ஷேணமாய் கொள்ள்பபட்டதாகத் தெரிகின்றது.
நல்லவர்களாலே புகழப்படட் நம்மாழ்வார் என்கை (திருமால் திருப்பேர்வல்லா ரடிக்கண்ணி சூடிய மாறன்’ என்று நைச்சியந்தோற்றப் பேசிக்
கொள்ளுகிற ஆழ்வார் நம்மைப் பற்றி ‘நல்லார் நவில்’ என்று சிறப்பாக விஷேணமிட்டுக் கொள்வாரென்று சங்கிக்க இடமுண்டெனினும்
ஆழ்வாருடைய ஒப்புயர்வற்ற பிரபாவத்தை (ஸத்துக்களால் அநவரதம் புகழ்ந்து கூறப்படுந்தன்மையை)க் கண்டறியும் ஆசரர்யர்கள்
இங்ஙனே வியாக்கியானித்தல் பொருந்தத் தட்டில்லை ‘ஏற்கும் பெரும்புகழ் வண் குருகூர்ச்சடகோபன்’ என்று
ஆழ்வார் தாமும் மெய்மறந்து அருளிச் செய்யும்படியாகயிறே ப்ரபாவந்தானிருப்பது
மாறன் = உண்டியே உடையே உகந்தோடு மூலகத்தாருடைய இயற்கைக்கு மாறுபட்டு
(உண்ணுஞ் சோறு பருகுவீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லால் கண்ணன்” என்றிருந்ததனால்
ஆழ்வார் மாறனென்று திருநாமம் பெற்றன் என்க
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply