உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 -வீடுமின் முற்றவும் -1-2–
பதவுரை
ஓர்ப்பு இலர் ஆண்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப்பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹித் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகறிவளவாகா நின்றது.
வெறி விலக்கு-ஒர்ப்பிலராய் -இனி இவளுக்கு ஆகக் கடவது-நிலைமைகளை ஆராயத்தவர்களாய்
வேங்கடமாட்டவும் -திவ்ய தேசமே இவள் தாபம் தீர்க்கும் தடாகம் என்றவாறு
வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்-திருவேங்கடமலை யாத்திரை கூட்டிச் செல்ல பிரார்த்தித்து அத்தை நிறைவேற்றாமல் உள்ளீர்களே
திருவேங்கடத்தில் இவளை நடையாடச் செய்ய எண்ணு கின்றிலரே-
இவர் ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளில் இழியாமல் -வேறு வழிகளில் இழிவதே –
பகவத் பிரசாதமும் திவ்ய தேச வாஸமுமே இவர் ஆற்றாமைக்கு பரிஹாரம்
இவை செய்யாமல் இவர் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது -என்றவாறு-
வெறிவிலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக்கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக
வேட்கைநோய் கொண்டு மேனி மெலிந்து வடிவுவேறுபட, அதுநோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது
என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல்,
இறைச்சிதூவல், கருஞ்சோறு, செஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன்மேலொன்றாகச் செய்யத் தொடங்க,
நோயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி
நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட
முன்னிலைப்படர்க்கையாகக் கூறியதாயிது.
இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும்
அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய
காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும்,
வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும்வழியிலே முயலாது
இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே
இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும்.
எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே
இந்நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே!
ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.
“ஓர்ப்பு இலராய்” என்பதற்கு- ‘இவளுக்கு இனி ஆகக் கடவனவாய நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப-
‘இவளுக்கு இனி ஆகக் கடவனான நிலைமைகளை ஆராயாதவர்களாய்’ என்று முரைப்ப. எம்பெருமானுகந்தருளின திவ்யதேசத்தை
இவள் தாபந் தீர்ப்பதற்கு உரியதொரு பொய்கையாக நினைத்தனளாதலால் ‘வேங்கடம் ஆட்டவும்’ என்றது.
அன்றி ‘வேங்கடமாட்டவும் சூழ்கின்றலர்’ என்பதற்கு- திருவேங்கடமலைக்கு இவளை யழைத்துக்கொண்டு வருகிறேனென்று
பிரார்த்தனை பண்ணிக்கொண்டு அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றேனென்று பிரார்தத்னை பண்ணிக்கொண்டு
அதற்கு உரிய ஆவேசத்தை ஆடுவிக்க ஆலோசிக்கின்றாரில்லை என்றாவது, திருவேங்கடத்திலே இவளை
நடையாடச் செய்தற்கு எண்ணுகின்றிலர் என்றாவது உரையிடலாம். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை
திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்விக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே.
அது செய்யக் காணோமே; வீண் செயல்களே செய்து நோயை வளர்த்திக் காலங்கழிக்கின்றனரே! என்று இறங்கிக் கூறியவாறு.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரை ஆற்று விக்கவேணுமென்று ஞானிகள் தங்கள் பரிவால் வேறுசிலவிதமான
பரிஹாரங்களைச் செய்யப்புக, இவரது தன்மையையயறிந்த அன்பவர்கள் இவராற்றாமையைத் தணிக்கும் வழிகளயில் இழியாமல்
வேறு வழிகளில் இழிந்து என்னபயனென்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம்.
பகவத்ப்ரஸாதமும் திவ்யதேச ஸரஸமுமே இவராற்றாமைக்குப் பரிஹாரம்;
அவை செய்யாமையான் இவர்க்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது என்கை.
————————————————————
எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82- -உருகுமால் நெஞ்சு -9–6–
பதவுரை
எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதயமலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறந்க்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னுடுமம்)) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்-
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.
உரு வெளிப்பட்டால் -நாயகி நாயகன் கண் அழகுக்கு இரங்கி உரைக்கும் பாசுரம்
ஏக காலத்திலே இரண்டு சூரியன்கள் போலே -அபூத உவமை – தாப ஹேதுவாய் -சர்வ லோக ரக்ஷகராய் விரும்பி
தன் பேறாக காத்து அருளும் தன்மைக்கு இப்படி உதவாமை ஒவ்வுமோ –
மந்தேஹாருணம் த்வீபத்தில் உள்ள அசுரர்கள் தவம் செய்து பிரமன் இடம் வரம் பெற்று ஸூர்யனை வளைத்து
போர் செய்ய சந்த்யா காலத்தில் மந்த்ர பூர்வகமாக விடும் தீர்த்தங்கள் வஜ்ராயுதம் போலே ஆகி அவர்களை தள்ளியது போலே –
விளக்கில் விட்டில் போலே -அர்க்ய நீரால் எழுந்த செந்தீயில் விழுந்து மாண்டனர் -என்பர் –
இதையே மீண்டு -சூர்யன் அவர்கள் தீய சக்திகளில் இருந்தும் மீண்டு என்றும் -இப்படி அசுரர்கள் மீண்டும் மீண்டும் மாய்ந்து போவதையும் குறிக்கும்
பூர்ண அனுபவம் பெறாமல் மானஸ அனுபவ மாத்திரமே வருந்தும் அளவு பரிதாப ஹேதுவானதே
திருமேனி மைப்படி மலை போலே சோதி மயமாய் இருந்து அனுபவம் கொடுக்காமல் இருப்பதே –
எம்போலியர்க்கும்-விரிவ சொல்லீ-அநு கூலரான எம் போல்வாருக்கும் தாபம் செய்வனவாய் பரவுகின்றன –
இதுவோ வையமுற்றும் விளரியதே- உலகம் முற்றும் விருப்பத்தோடு ரஷிக்கும் விதம் இதுவோ –
-ஆழ்வார் ஆற்றாமை அவன் ரக்ஷகத்வத்திலும் அதி சங்கை பண்ணும் படி பண்ணிற்றே
உருவெளிப்பாடுகண்ட நாயகி நாயகனது கண்ணழகுக்கு இரங்கியுரைக்கும் பாசுரம் இது.
உருவெளிப்பாடாவது- பிரிந்து சென்ற நாயகனிடத்தில் இடைவிடாது கருத்தை ஊன்றவைத்த மனத்தின் நினைப்பு மிகுதியால்
அவனது வடிவம் வெளிப்பாடாய்க் கண்ணுக்கெதிரே காணப்படுதல். அங்ஙனம் காணப்பட, அவ்வடிவத்தின் கண்ணழகிலேயீடுபட்ட நாயகி,
அவ்வடிவம் கைக்கு எட்டாது மறைந்த பின்பு, அக்கண்ணழகு தன் காதல்நோயை மிக வளர்த்தித் தன்னை மிக வருத்துகின்றமையைத்
தோழியரை நோக்கிச் சொன்னது இது. வெவ்விய இரண்டு ஸூர்ய மண்டலங்கள் உதயகிரியில் ஏக காலத்தில்
தோன்றி விளங்குகின்ற தன்மை போன்ற தன்மையையுடையனவான எம்பெருமானது திருக்கண்களானவை எமக்குத் தாபஹேதுவாயிரா நின்றன.
அந்த ஸூர்ய வடிவங்களிலே ஜ்வலித்துக்கொண்டு தோன்றுகிற சிவந்த நெருப்பிலே வேறு கதியற்று விழுந்து சாகின்ற மந்தேஹரென்னும்
அசுரர்களுக்கு அவை எப்படி தாபகரங்களாயிருகின்றனவோ அப்படியே அநுகூலரான எம்போன்றவர்களுக்கும் தாபஞ் செய்வனவாய்ப் பரவுகின்றன;
எம்பெருமான் உலக முழுவதையும் விரும்பிக் காத்தருள்கிறானென்று புகழ்பெற்றிருக்குந் தன்மைக்கு இதுவோ ஏற்றது! என்றாளாயிற்று.
தைத்திரீய ஆரண்யகம் என்னும் வேத பாகத்தில் இரண்டாவது ப்ரச்நத்தில் இரண்டாவது அநுவாகத்தில் ஓதப்பட்டுள்ள ஒரு வரலாறு
இப்பாட்டின் மூன்றாமடியில் கொள்ளப்பட்டுள்ளது; மந்தேஹாருண மென்னும் த்வீபத்தில் வாழும் மந்தேஹ ரென்னும் அசுரர்கள்
உக்ரமான தவத்தைச் செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கடைந்து எப்பொழுதும் ஸூர்யனை வளைந்து எதிர்த்துத்தடுத்துப்
போர் செய்கின்றனரென்றும், அந்தணர் முதலியோர் ஸர்த்யா காலங்களில் மந்த்ரபூர்வகமாகக் கையிலெடுத்துவிடும் அரக்கிய தீர்த்தங்கள்
வஜ்யராயுதம் போலாகி அவர்கள் மேல் விழுந்து அவர்களை அப்பால் தள்ளி ஸூர்யனுடைய ஸஞ்சலத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றன வென்றும்,
அந்தணர் முதலியோர் செலுத்தும் அர்க்கியத்தின் ஆற்றலால் ஸூர்யமண்டலத்தினிடையே ஒரு செந்தீ எழுந்து ஜ்வலிக்க (விளக்கில் விட்டில்போல்)
அத்தீயில் அசுரர்கள் விழுந்து மாண்டு போகின்றனரென்றும் ஓதப்பட்டுள்ளது.
இரண்டு ஸூர்யமண்டலம் ஏககாலத்திலே ஓருதயகிரியில் உதித்தெழுந்து விளங்கினாற் போன்ற எம்பெருமான் கண்கள்,
வல்லியலாரான அவ்வசுரர்களுக்குப்போல, மெல்லியலாரான எமக்கும் தாபஞ் செய்கின்றவே;
வலியாரையழித்து மெலியாரைக் காத்தருள்கின்ற னென்பது இவ்வண்ணமேயோ? என்று பராங்குச நாயகி வருந்திக் கூறுகின்றாள்.
‘ஏக காலத்தில் இரண்டு ஸூர்யமண்டலம் உதித்தாற்போல்” என்றது இல்பொருளுவமை (அபூதோபமை) அரக்கராகிய
மந்தேஹரை அசுரரென்றது- கொடுமையில் ஒற்றுமையால். அசுரர¬- உருபுமயக்கம்; அசுரர்க்கு எனப்பொருள்படுதலால்.
‘உதயம்மலை’ = மகாவொற்றுதலைபற்றிய விரித்தல் விகாரம்.
மந்தேஹர்கள் எரிகொள் செந்தீயில் வீழ்ந்து அழிதல் எப்பொழுதும் நிகழ்தலால் அத்தன்மையை ‘மீண்டு’ என்பதனாற் குறித்ததென்னலாம்;
மீண்டும் மீண்டும் என்றவாறு. அன்றியே,மீண்டு = (ஸூர்யனை வருத்துதலாகிய தம்தொழிலில் நின்றும்) நீங்கி என்னவுமாம்
‘விர்வ’ என்பது வினைமுற்று. ‘விளரியது’ என்பதை ‘விளரி’ என்பதன் மேற்பிறந்த ஒன்றனபாற் குறிப்பு முற்றென்று கொண்டால் அகரம் சாரியையாம்;
‘விளர்’ என்பதற்மேற் பிறந்ததென்றுகொண்டால் இகர அகரம் இரண்டும் சாரியையாம்;
விளரியென்றசொல் – மிக்க விருப்பமென்னும் பொருளதாதலை (சூடாமணி நிகண்டு- ளகரவெதுகை-15).
விளரியே யிளமை யாழிலோர் நரம்பு யாழ் நீள்வேட்கை” என்றதனாலும்,
விளர் என்பத செழிப்பென்னும் பொருளாதலை “விளரென்பிகிளமைதானே வெளுப்போடு கொழுப்புமாகும்” என்றதனாலும் உணர்க.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமான் முதலில் அகக்கண்ணுக்கு இலக்கான பொழுது தம்பக்கல் வைத்த
கடாக்ஷந்தானே பின்பு பூர்ணாநுபவம் பெறாமையால் வருந்துமளவில் தமக்குப் பரிதாப ஹேதுவாகத் தோன்றும் விதத்தை
ஆழ்வார் அன்பரோடு கூறுதலாம். எம்பெருமானது மைம்மலை போல விளங்குந் திருமேனியிற் சோதிவடிவமாய்க்
காணப்படுகிற கண்களின் நோக்கம் அநுபவத்தைக் கொடாமையால் பிரதிகூலர்க்குத் துயர் விளைத்தல்போல
அடியவரான எமக்கும் வருத்தம் விளைவிக்கின்றன! இப்படிப்பட்ட எம்பெருமான் லோகத்துக்கு ரக்ஷகனாகுந் தன்மை எங்ஙனே? என்கிறார்.
தம்மை விரைவிற் சேர்த்துக் கொள்ளாமையா லுண்டான ஆற்றாமை அவனுடைய ரக்ஷகத்வத்திலும் சங்கை செய்யும்படியாயிற்று என்க.
—————————————————————–
விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 -உண்ணிலாய ஐவரால் -7–1-
பதவுரை
விளரி–விளரியென்னும் இசையையுடைய
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் அவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ்வாற்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காயமேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.
அன்றில் -கிரௌஞ்சம் -காம உத்தீபகமாய் -விரக வேதனையை வளர்ச்சி செய்யுமே
காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் -என்றும் -பெண்ணை மேல் பின்னும்
அவ்வன்றில் பெடை வாய்ச் சிறு குரல் -என்றும் திருமங்கை ஆழ்வார் –
சமஸ்க்ருதம் -சப்த ஸ்வரங்கள் -ஷட்ஜம் -ரிஷபம் -காந்தாரம் -மத்தியமம் -பஞ்சமம் -தைவதம் -நிஷாதம் -போலெ
தமிழில் குரல் -துத்தம் -கைக்கிழை-உழை-இளி-விளரி -தாரம் -என்னும் ஏழு இசை
விளரி -தைவதம் -என்பர் -கிரௌஞ்சம் -க்வணதி -மத்யமம் -என்பதால் -விளரி -மத்யமம் ஸ்வரம் என்றும் சொல்வர்
விளரி என்னும் ஒரு பண்ணும் உண்டு
மென் பெடை-பிரிவு பொறாத ஸுகுமார்யத்தை யுடைய பெடை –
முளரிக் குரம்பை-முட்களை அரிந்து செய்யப்பட கூடு -தாமரை இலை பூக்களையும் கொண்டு வந்து செய்த கூடு என்றுமாம்
இது இது -கடபுலனாகும் பலவற்றை சொன்னபடி –
விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை-முளரிக் குரம்பையிதுயிதுவாக-என்றதை பின் பற்றியே
திரு மங்கை ஆழ்வாரும் -முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே -பெரிய திரு மொழி -11-1-6-
ஆவியும் நைவும் -ஆவியின் நைவும் –
பாகவதர்கள் எம்பெருமான் திரு நாமங்களை சொல்லி புலம்ப ஆழ்வார் நெஞ்சம் தளர்ந்து நைந்த தன்மையைக் கண்டு –
இவருக்கு தேஹ விநியோகம் ஆனபின்போ எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது -என்று வெறுத்து கூறுகிறார்கள் –
பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறம் பாசுரம் இது.
காமவிரஹத்தா ண்டாகும் வேதனைகளுள் சிந்தனை பசலை மேனிமெலிவு அழுங்கல் மொழி பல பிதற்றல் முதலிய பலவும் இவளுக்கு நிகழ்ந்தாய் விட்டன;
இதுவரையிலும் இவளுடைய தலைவன் இவளை வந்துகூடி உய்யச் செய்யக் காண்கின்லோன்;
இனி மரணமொன்றே நிகழாது நிற்பது; அதுவும் நிகழ்ந்த பின்புதான் இவளை வந்து கூடி உய்யச் செய்வதாகவிருக்கிறானோ?
என்று தோழி இரங்குகின்றாள். இதனால்,இனி இவளுக்கு ஜீவித்திருத்தல் அரிதாம் என்றவாறு.
வடநூலார் க்ரௌஞ்ச மென்று கூறுவதே அன்றிற்பறவையாகாது; இது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்கும்;
கணநேரம் ஒன்றை ஒன்றுவிட்டுப் பிர்ந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திவிட்டு அ
தன்பின்பும் தன் துணையைக் கூடாவிட்டால் உடனே இறந்து படும். (பகல் முழுவதும் புணர்ந்திருந்து இரவிற்பிரிந்து
வருந்துவதாகிய சக்கரவாகப் பறவையும் அன்றிலெனப்படுவது உண்டு.) அன்றிலும் அதன் குரலும் காமாத்தீபகமாய்ப் பிரிந்தார்க்கு
விரஹவேதனையை வளரச் செய்யுமென்க. இப்பறவையைப் பனைமரத்தில் வாழ்வதாகவே பலரும் பலவிடத்துங் கூறுவர்;
“காவார்மடற் பெண்ணையன்றி லரிகுரலும்” “பெண்ணைமேற் பின்னுமவ்வன்றிற் பெடை வாய்ச் சிறுகுரல்” என்பன திருமங்கையாழ்வார் பாசுரஙகள்.
ஸம்ஸ்க்ருதத்தில், ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்தியமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஸப்தஸ்வரங்கள்
தமிழில் முறையே குரல் துத்தம் கைக்கிளை உழை இளி யிளரிதாரம் என்னும் ஏழிசையெனப்படுதலால் விளரியென்றது.
தைவத மென்னும் ஸ்வரமென்னலாம்; அன்றி, வடமொழிநிகண்டில் “க்ரௌஞ்ச: க்வணதி மத்யமம்” என்றதால்
அன்றில் மத்யம்மென்னும் ஸ்வரத்தை யொலிக்கிறதென்று தெரிதலால் விளரி யென்பதற்கு மத்யம ஸ்வரமென்று
பொருள் கொள்ளுதலும் ஒன்று. விளரியென ஓர் பண்ணுமுண்டு.
மென்பெடை = பிரிவுபொறாத ஸௌகுமார்யத்தையுடைய பேடை. ‘முளிரிக்குரம்பை’ என்பதற்கு- தாமரையிலைகளையும் பூக்களையும்
கொண்டுவந்து செய்த கூடு என்று உரைப்பாருமுளர். ‘இதுவலிது- நட்புலனாகும் பலவற்றைச் சுடடியது.
* மாறன்பணிதத் தமிழ் மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த வீறுடைய திருமங்கையாழ்வார், இங்கு,
“அன்றில் மென்பெடைமேகின்ற முன்றில் பெண்ணை முளரிக் குரம்பையிது” என்றதையடியொற்றி (பெரியதிருமொழி 11-1-6)
“முள்நிற் பெண்ணைமேல் முளிரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடருமென்னையே” என அருளிச் செய்திருத்தல் காண்க.
மேகின்ற- மேவுகின்ற. குரம்பை- குடம்பை. மூன்றில்- இல்முன் என்பது முன்பின்னாகமாறித் தொக்க மரூஉமுடிபு;
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியலில் (60)
“முன்னென்கிளவி முள்ளர்த்தோன்றும், இல்லென்கிளறி மிசை றகர மொற்றல், கொல்லின் மருங்கின் மரீஇய மரபே” என்றது காண்க:
இதனை இலக்கணப் போலியில் அடக்குவர் இக்காலத்தார். தையல்- அழகு; அதனையுடையவளுக்கு ஆகுபெயர்.
‘பிதற்றும்’ என்பதற்கு முதனிலைத் தொழிற்பெயராக, பிதற்றுதலும், என்றுரைக்கவுமாம்.
‘ஆவியும் நையும்,’ ‘ஆவியின் நையும்’ என்பட பாடபேதங்கள்.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பாகவதநுபவம் பெறாமையால் ஆழ்வார் தளர்தலைக்கண்ட அன்பர்
‘பாதகமான லௌதிக பதார்த்தங்கள் அருகிலிருத்தலால் இவர் ஆறியிருப்பது அரிதாயிந்தது’ என்று கூறுதலாம்.
இவர்தம் இருக்கிற விடத்திலே அருகிலுள்ளார் சிலர் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக்கப் பெறுதலைக்கண்டு தமக்கு
அத்தன்மை கிடைத்திடாமையாலே ஆற்றாமைமிக்கு எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறி புலம்பி,
நெஞ்சந்தளர்ந்து நைகிற தன்மையைக் கண்டு ‘இங்ஙனம் மெலிகிற இவர்க்கு தேஹவியோகம் ஆனபின்போ
எம்பெருமான் வந்து இவரைச் சேர்த்துக் கொள்வது!’ என்ற வெறுக்கக் கூறினரென்க
———————————————————————–
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – – – 84-மையார் கருங்கண்ணி -9–4-
பதவுரை
மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே–அவனையே முன்னிலை படுத்தி பேசி -நாயகனையே இடையூறாக நினைத்து பேசி
குரவைக் கூத்தாடும் மகளிர் கூட்டத்திலும் -தர்ம புத்திரர் ராஜ சோயா யாகம் செய்யும் மஹா புருஷர்கள் குழாங்களிலும் இருப்பவன் ஆகையால்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-என்கிறார் –
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –
காந்தள் முகிழ் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன வேள்வியில் கண்டார் உளர் -பெரியாழ்வார் பாசுரங்கள் –
மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – –முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்க் காண்டுமே -திருமங்கை ஆழ்வார்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு-பரதந்த்ரராய் இருக்கும் -பிரபன்ன கோஷ்ட்டி
ஐய நல்லார்கள் குழு-யாகம் பல செய்யும் கைங்கர்ய கோஷ்ட்டி
புறம்பே திரள்களில் ஆகிலும் காண ஆசைப்பட்ட நாயகி பாசுரம் -குழாங்கள் குழிய குழு-என்கையாலே சமூகம் பலவாய்ச் சேர்ந்த சமுதாயம் –
நாயகி நாயகனைக் காண விரைந்து பேசும் பாசுரம் இது. நாயகனுடைய விரஹத்தை ஆற்றாத நாயகி, அவனை என் காதலின்படி
தனியே ஏகாந்தத்திற் கண்டு கூடிக் குலவி இன்புற கிடையாதாயினும் ஆண்களும் பெண்களும் பலர் கூடிய கூட்டத்தினிடையில்
எங்கேனுங் காணக்கிடக்குமாயினும் அது கொண்டு ஆறியிருப்பேனென்று கருதிச் சொல்லுகிறாளென்க.
“மையவண்ணா மணியே முத்தமே என்றன் மாணிக்கமே!” என்று முன்னிலையாகக் கூறியிருப்பது எங்ஙனே எனின்;
நாயகனையே இடையறாது நினைத்துக் கொண்டிருந்து நினைப்பு மிகுதியால் அவனை எதிரில் நிற்கிறாய் போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறியினபடி,
திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர் மங்கையர் கூடியாடுங் குரலைக் கூத்துப் போன்ற மகளிர் குழாத்திலும்,
தருமபுத்திரர் செய்த ராஜஸூப யாகம் போன்ற மஹாபுருஷர்களின் குழாத்திலும் எழுந்தருளி யிருப்பதற்குத் தகுதியுடைமைபற்றி
“கையனல்லார்கள் குழாங்கள் நான்” என்றது. எம்பெருமான் பெண்களின் திரளிலும் மஹாபுருஷர்களின் கோஷ்டிகளிலும்
ஸேவிக்கத் தகுந்தவனென்பதை ‘பல்லாயிரம் பெருந்தேவிமாரோடு பௌவமேற்துவரை,
எல்லாருஞ் சூழச் சிங்காசனத்தே யிருந்தாளைக் கண்டாருளர்” “காந்தள் முகிழ்விரல்ருளர்” என்ற பெரியாழ்வார் பாசுரங்களாலு முணர்க.
தையல் நல்லார்கள்- ஸ்திரீகளுட் சிறந்தவர் என்றும், ஐயநல்லார்கள்- ஆர்ய ச்ரேஷ்டர் என்றுங் கொள்க.
தையல் நல்லார்கள் நல்- தையலார்கள் என மாறுதலுமாம். ‘குழிய’ என்றது குழுவிய என்றவாறு.
(தழுவிய என்பது தழிய என்றும், கெழுவிய என்பது கெழிய என்றும் வருதல்போல. (சீவக சிந்தாமணி-சுரமஞ்சரியாரிலம்பகம் 32.)
“தமிழ் கழியசாலவர்” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்) ‘தனது மாடே, தழிய காவலரை நோக்கி” ” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்)
“கெழிய ராகுவுங் கேதுவும்” என்ற இடங்களில் ‘தழிய’ ‘கெழிய’ என்ற பிரயோகங்கள் காண்க.)
‘கைய’ என்பதும் ‘மைய’ என்பதும் குறிப்புப் பெயரெச்சங்கள். மணியே முத்தமே மாணிக்கமே யென உபமானத்தை
உபமேயமாகவே சொன்னது உபசாரவழக்கு.
“முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச், சென்று விண்ணகர்க் காண்டுமே” எனத் திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
இம்மூன்று உவமைகள் ஒருங்கே கூறப்படுதல் காண்க.
நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானை ஸேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை மீண்டும் எங்கேனும் காண ஆசைப்பட்டு
அவளை நோக்கித் தன்னிலேயுரைத்த வார்த்தை இதற்கு உள்ளுறை பொருள்.
‘தையனல்லர்கள் குழாங்கள் குழிய குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- பரதந்திரராயிருக்குந் தன்மையையே ப்ரதானமாகவுடைய
ப்ரபந்தர்களின் கோஷ்டி எனவும் ‘ஐயநல்லார்கள் குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம்- யாகம் முதலிய தொழில்களை
நடத்து மியல்புடைய கைங்கர்ய ப்ரவ்ருத்தி ‘சீலர்களின் கோஷ்டி எனவும் கொள்வர்.
இப்பாட்டின் அழகிய மணவாள சீயருரையில்- நாயகியானவள் நாயகனுடைய ஸர்வேச்வரனைப் புறம்பே திரளிடையாகிலுங்காண
ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரம்’ என்றதும் ‘துழாங்கள் குழிய குழு’ என்கையாலே ‘அந்த’ ஸமூஹந்தான் பலவாய்ச்சேர்ந்த ஸமுதாயத்தைச் சொல்லுகிறது’ என்றதும்,‘இந்தக்கிளவி, “மள்ளர் குழீஇய விழவினாலும், மகளிர் தழீஇய துணங்கையானும், யாண்டுங்கணேன் மாண்டக்கோனை”
என்ற அகந்தமிழிலுஞ் சொல்லப்பட்டது’ என்றதும் இங்கு அறியத்தக்கன.
(மேலெடுத்துக் காட்டிய மேற்கோள் குறுந்தொகை. இது நச்சினார்க் கிளியராலும் “உயிரினுஞ் சிறந்ததன்று” என்ற தொல்விழவினாலும்,
மகளிர் தழீஇய துணக்கையாலும் யாண்டுங்காணேன் மாண்டக்கோனை, யானுமோராடுகள மகளே யென்கைக்
கோடீரிலங்குவளை ஞெகிழ்ந்த, பீடுகெழுகுரிசிலுமாடுகள மகனே’ என்பது
நொதுமலர்வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது; ஆதிமந்தி
————————————————————————
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85- எம்மா வீடு -2-9-
பதவுரை
உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணி பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால் அம் மாணிக்கம்
அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல்போன்று
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியையுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.
வியாக்யானம் –
காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்–திருக்குறள் -ஆற்றாமை மிக்கு தலைவி
தலைவனை உனக்கே என் உயிர் தஞ்சம் -நீயே சடக்கென வந்து அருள வேணும் -என்கிறாள்
அடியேன் அடி யாவி -திருத் தாயார் வார்த்தை என்பற்கு என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்
அடியேனுடையாவி -பாட பேதம் –
ஒருவரால் எறிய பட்டு குரங்கு மேல் விழுந்த மாணிக்கம் அதன் கையில் அகப்பட்டு அழிந்து திரும்ப மாட்டாது போலே
இருளை அளிக்க அதன் மேல் விழுந்த சூ ரியான் மீலாது இரவே யாக நீண்டு போனதே -சூர்ய மண்டலம் -மாணிக்கம் -இருள் -குரங்கு –
மாணிக்கம் -செந்நிறமான -கரு மாணிக்கம் அபூத உவமை – இங்கு குரங்கு -இருள் என்பதால் கருங்குரங்கு என்ற வாறு
அன்றியே மாணிக்கம் கொண்டு குரங்க எறிந்தால் போலே என்றுமாம் -குரங்க-என்றது வளைதலாய்-உதித்த ஆதித்யன்
உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னன படி –
ஆற்றாமை மிக்கு ஆத்மாவை சமர்ப்பிப்பதும் -மோஹ அந்தகாரம் விவேகம் -மாறி மாறி வர -சமர்ப்பித்தது அவனது அன்றோ
சர்வ ரக்ஷகன் நீயே அன்றோ -வந்து காத்து அருள் என்கிறார் –
மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது.
“காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே
காமநோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப்பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள
வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்;
ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள்.
இப்பாட்டைத் தாய்வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள்கொள்ள வேணும்.
ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம்.
ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல,
இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது.
ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை.
மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க.
இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.
இனி, மிகச் சிறந்த மாணிக்கத்தை அதன் சீர்மையை யறியாத குரங்கு எடுத்து எங்கேனும் மங்கிப் போம்படி எறிந்து
மாய்த்துப் போக்கிவிட்டாற்போல, ஸூர்யனை இருளிலேயெறிந்து போக்கின மாலைப்பொழுது என்றும் உரைக்கலாம்;
இவ்வுரையில், மாலைக்குக் குரங்கும்,ஸூர்யனுக்கு மாணிக்கமும், அதன் வீழ்தற்கு அது எறியப்படுதலும், இருளுக்கு எறியப்படுமிடமும் உவமையாம்.
அழகியமணவாள சீயருரை காண்மின்;-“அன்றியே, மாணிகக்த்தைக் கொண்டு குரங்க எறிந்தாற்போலே யென்றுமாம்.
குரங்கதலாவது வளைதலாய், உதித்த ஆதித்யன் உயர் எழுந்து விழுந்து அஸ்தமித்த கடுமையைச் சொன்னபடி” என்று இவ்வுரைக்கு,
குரங்க’ என்னும் செயவெனெச்சம் தொக்க தென்க.
ஆணிப்பொன்- மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்குமேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்த பொன் என்றும் உரைப்பர்.
மற்று ஒப்பாரையில்லா- தனக்குத்தானே உவமையாவதன்றி ஒருபடியாலும் வேறு நிகரில்லாத என்றபடி, “தனக்குவமையில்லாதான்” என்ற திருக்குறளும் அறிக.
இதனால், தன்னையொழிந்தார் யாவரினும் தான் மேற்பட்டவனென்பது விளங்கும். “ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.
இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமானை யநுபவிப்பதற்கு உரிய காலம் வந்திருக்க, அவ்வநுபவம் கிடையாமையாலாகிய
ஆற்றாமையின் மிகுதியால் வருந்திய ஆழ்வார், அவ்வருத்தம் தீரும்பொருட்டு ஸ்வாமயான எம்பெருமானை பக்கலிலே ஸொத்தாகிய
தன் உயிரை அடைக்கலமாக ஸமர்ப்பித்தலாம். மிக்க விளக்கமுடைய விவேகம் மோஹாந்தகாரத்திலே விழுந்து அகப்படும்படியான
இந்நிலையில் உன்னைச் சரணமடைந்த இவ்வுயிருக்கு நீயேயன்றோ ரக்ஷகனென்று உரைத்தனரென்க.
—————————————————————
அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86- வள வேழ்வுலகு -1-5–
பதவுரை
அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக்கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந்நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம் புலன்–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவேன்?
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயும் இருந்து -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரமும் கொண்டு -ஆஸ்ரித ஸூலபனாயும்-
பிரம்மா ருத்ராதிகள் துயரங்களையும் தீர்த்து அருளிய சர்வ ஸ்மாத் பரனாயும் இருந்து வைத்து –
அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே
திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் -என்று
தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் -அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்
புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை -பட்டர் திருகி கோஷ்ட்டியூரில் இருக்கும் பொழுது நஞ்சீயர் -பொருள் உரைக்க
ஆழ்வார் திரு உள்ளத்துக்கு உகந்த அர்த்தம் என்று புகழ்ந்தார் -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்
ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் –
என் சொல்லிப் புலம்புவனே-அவனது குண சேஷ்டிதங்களில் ஒன்றும் குறை இல்லாமல்
எனது குறையே–வல் வினையேன் -என்றே சொல்லக் கடவேன் –
நாயகனைப் பிரிந்த நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. ஆபத்துக்கு உதவுந் தன்மையும் அடியார்களுடைய விரோதிகளை
நிக்ரஹித்தற்கு ஏற்ற கருவிகளையுடையவனாருக்குந் தன்மையும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையும் எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ளன;
இத்தன்மைகள் தன் பக்கலில் உதவாமையைக் குறித்துப் பராங்குசநாயகி இறங்குகிறானென்க.
“அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும் முடைக்கதை தூண் முன்னரனுக்கு நீக்கியை” என்றதனால் ஆபத்துக்கு உதவுந் தன்மையும்,
“ஆழிசங்க படைக்கலமேந்தியை” என்றதனால் ஆச்ரித விரோதிகளை நிக்ரஹிப்பதற்கு ஏற்ற கருதியுடைமையும்
“வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானே.- என்றதனால் அடியார்க்கெளிமையும் தெரிவிக்கப்பட்டனவாம்.
(என் சொல்லிப் புலம்புவனே.) சிவனுக்குத் துயரந் தீர்க்க ஆயுதமேந்தியுள்ளவனை நோக்கி என் துயரந்தீர்க்கக் கையில்
கருவி கொள்ள வேணுமென்று சொல்வேனோ?
ஆய்ச்சியர்க்குக் கட்டவு மடிக்கவும் எளியனானவனை நோக்கி எனக்கெளியனாக வேணுமென்று சொல்வேறோ?
யாது சொல்லிக் கூப்பிடுவே னென்கிறான். அந்தோ இத்தன்மைகள் பாவியேன் பக்கலில் உதவக் காணவில்லையே! என இரங்கியவாறு.
ஒருகாலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு
இடமாயிருக்கின்றதெனக் கருதி, அவனது சிரமொன்றைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக்கொள்ள
‘இதற்கு என்ன செய்வது? என்று கவலைப்பட, தேவர்களும், முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்”
என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும் என்று சொல்ல, சிவபிரான் பலகாலம்
பல தலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
ஒருநாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ஏற்றபோது அப்பெருமான்
அக்ஷயமென்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டகன்றது என்பது, அயன் சென்னிகலத்து ஊண் அரனுக்கு நீக்கிய கதை.
தாமரைப்பூப் பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலத் திருநாபித் தாமரை மலர் எம்பெருமானது பசிய திருமேனியின்
மீது எழுந்து தோன்றினமை “அடைக்கலத்தோங்கு கமலம்” என்றதனால் விளங்கும்.
இனி, அடைக்கலமென்பதை அரனுக்கு விசேஷணமாக்கி, அடைக்கலமாகப் புகுந்த சிவனுக்கு, என்றும்,
நீக்கி என்பதற்கு விசேஷணமாக்கி ரக்ஷகமாக இருந்து நீக்கினவனென்றும் பொருள் கொள்ளலாம்.
அன்றி, ‘அடைக்கலத்தோங்கு அயன்’ என் அந்வயித்து (தன் பக்கலிலே) அடைக்கலமாக வளர்கிற பிரமன் என்று உரைப்பாருமுளர்.
அடைக்கலமென்பது ரக்ஷிப்பதற்கு உரிய பொருளையும் ரக்ஷகனையுங் குறிக்கும்
‘கமலத்து அலர்’ என்பதற்கு தாமரைப்பூ எனப்பொருள் கொண்டால், தோன்றின’ என்று வருவித்துக் கொள்ளவேணும். முடை- கெட்டநாற்றம்.
படைக்கலம் – போர்க்கருவி: எம்பெருமானுக்குச் சங்குச் சக்கரங்கள் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அமையும்.
படைகலம் ஏந்தி = படையும் கலமுமாக (ஆயுத ஆபரணங்களாக)த் தரித்தவன் என்றலும் பொருந்தும். திருவாழியாழ்வன் ஆயுத மாகலாம்;
திருச்சங்காழ்வான் எங்ஙனே ஆயுதமாகும் வகையென்னில்;
ஸ்ரீபஞ்சஜக்யம் தனது பெரு முழக்கத்தால் பகைவரை அஞ்சுவித்து அழித்தலால் ஆயுதவர்க்கத்தின் பாற்படும்.
அன்று ஆராய்ச்சி வன்தாம்புகளால் புடைக்க அலந்தானை= வெண்ணெய் திருடின குற்றத்திற்காக யசோதைப் பிராட்டி உரலோடு
பிணைத்துத் தாம்பினால் கட்டியடிக்க வருந்திருந்தவனை என்றபடி; வருந்தி நின்றது அடிப்பதனாலுண்டான துன்பம் பொறுக்கமாட்டாமையாலன்று;
திருவாய்ப்பாடி யெங்கும் துருதுருக்கையாய்த் திரிந்து பெண்களையும் தயிர் பால் நெய் வெண்ணெண் முதலியவற்றையும்
கொள்ளைப் பெறாதபடி இங்ஙனே கட்டிப்போட்டு வைத்திருக்கிறாளே யென வருந்தியவாறு பெரிய திருவிழாக்களில்
கள்ளப் பயல்களை அரசாங்கச்சேவகர்கள் சிறைபடுத்தி வைத்தாலி, ‘வேண்டினபடி திரிந்து களவு முதலிய செய்யப்பெறாமை
நம்மையிப்படி சிறைப்படுதுதிவைப்பதே!’ என்று அப்பயல்கள் வருந்துவது போல.
பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை;
நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில்
இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க,
பட்டம் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம்
ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம்.
ஆய்சச்சி அடிக்க அடிக்க முகமலர்ந்தானாம் கண்ணபிரான். (இதனை விவரிப்போம்.)
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று
வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திடுவான்; அவற்றை அவன் ஒன்றோடொன்று முடிபோட்டு
ஒரு கயிறுவடிவமாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்டுவள்; அப்படி கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான
அக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும்
தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஆச்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து
மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான்
அக்குணங்களை விளங்கச் செய்து கொள்ள வேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று
சுற்றுக்கு போரும்படி உம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்”
என்னும்படி அவன்; ‘இங்ஙனே நம்முடையய ஸௌசீல்ய ஸௌல்ப்ய குணங்கள் விளங்கப் பெற்றோமே;
அவதார ப்ரயோஜநம் நன்கு நிறைவேறப்பெற்றதன்றோ’ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்க.
எம்பெருமான் பக்கல் ஈடுபட்டு ஆற்றாமை கொண்ட ஆழ்வார் அவனது திருக்கல்யாண குணங்களையும்,
திருநாங்களையுஞ் சொல்லி முறையிடுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள்.
(என்சொல்லிப் புலம்புவனே?) அவனது குணசேஷ்டிதங்களில் குறையொன்றுங் காணாமையால்
எனது குறையையே நான் சொல்லக்கடலே னென்பதாம்.
————————————————————
புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87- பண்டை நாளாலே -9-2
பதவுரை
திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி
இ திருவினை–திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)
ஆற்றாமை மிக்கு துயரம் தணியும் பொருட்டு பெரிய திருவடியின் சிறப்பை பாராட்டி நிற்க -அன்றிலின் குரலும்
கடல் ஓசையும் சேர்ந்து நலிய -விரஹ வேதனை வளர்ந்து –
பெண்ணை மேல் பின்னும் அவ் வன்றில் பெடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்-பெரிய திருமடல் –
பூம் கழி பாய்ந்து-அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்-நதி பதியாகிய கடல் அழகிய கழியின் உள்ளே புகப் பாய்ந்து
அலை மறிந்து பெரு முழக்கம் செய்வது மனைவியை கைகளால் ஆரத் தழுவி ஆரவாரம் செய்வது போலே இருக்க விரஹ தாபம் விஞ்சும்
புள்ளது நலம் -எம்பெருமானை ஆஸ்ரிதர்கள் இருக்கும் இடம் எழுந்து அருள பண்ணுவதே நலம் -உனக்கு அடிமை செய்து
தழும்பு கொண்டால் போலே இவளும் சம்ச்லேஷ அடையாளங்களை தரிக்க ஆசைப்பட்டு பாடின இது குற்றமாக –
பாதகங்கள் நலிய இவள் நோவு பட்டாள் என்று நாட்டார் பழி சொல்லும் படி நீர் விட்டு வைப்பதே
வையம்-சிலம்பும்படி செய்வதே-இவள் தளர்ச்சிக்காக -தாயார் தோழியர் உற்றோர் உறவினர் ஊரார்-அனைவரும் முறையிடுதல்
திருமால் இத்திருவினையே -ஒருத்திக்கு அப்படி இவளுக்கு இப்படியா -இவள் நிழல் போலே என்றாலும் இவளையும் நீ பார்க்க வேண்டாவோ
உன் மஹிஷி நோவு பட பார்த்தல் உனக்கு குறை அன்றோ
திருமால் ! நான் முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ! ஊழிப் பிரான் ! என்னை யாளுடை கரு மா மேனியன் ! என்பன் என் காதல் கலக்கவே –திருவாய் -8-3-9-போலே –
இங்கும் திருமால் -அண்மை விளி
ஆங்கவை-பிரிந்து இருப்பிற்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்தில் மணியோசை என்ன -சந்திரோதயம் என்ன -தென்றல் என்ன
இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல்
ஸ்வா பதேசம் –
அன்றில் குரல் துன்பத்துக்கு ஸ்மாரகம் -ஆழி முழக்கம் சேர்க்கை இன்பத்துக்கு ஸ்மாரகம்
திருவடி இருப்பதால் நம்மிடம் கூட்டி வருவான் -இழக்க வேண்டியது இல்லை என்று பாராட்டி பேசினதே குற்றமாக –
அடிமைச் செல்வம் மிக்க ஆழ்வாரை இத்திரு -என்கிறது -அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றுமே –
எம்பெருமான் உடன் நித்ய அனுபவம் செய்யத் தக்கவராய் இருந்தும் இப்பாடு படுவதே –
அன்றிற் குரலுக்கும் கடலோசைக்கும் ஆற்றாத தலைவியின் நிலைமை கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது.
அதாவது- நாயகியின் தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ச்சியடைந்து, பாவநாப்ரகருஷத்தாலே நாயகனை எதிரிற் கொண்டு
முன்னிலைப்படுத்தித் தன்னிலே யுரைத்த பாசுரம். அன்றி, தோழி தலமைகனை எதிர்ப்பட்டுத் தலைமகளின் ஆற்றாமையை
அவனுக்குக் கூறியுணர்த்துவது என்னவுமாம். உன்னிடத்தில் அன்பு கொண்டு தலைவி, உன்னைப் பிரிந்த நிலையில்
அத்துயரம் ஒருவாறு தணியும் பொருட்டு உனக்கு வாஹனமாய் உது நித்யஸம்பந்தம் பெற்றுள்ள பெரிய திருவடியின் சிறப்பைப் பாராட்டிக் கூறி நிற்க,’
அதனைக் கண்டு. அதனால், இவள் பிரிவாற்றாத மெல்லிய ளென்று உணர்ந்து அன்றிற் குரலும் கடலொளியும் அவ்வாற்றாமையின் மேலும்
தாமும் ஹிம்ஸை பண்ணக் கடவனோ வென்கிறாள். ஆணும் பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி
ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னிலர் நெகிழ்ந்தவளவிலே
துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொளியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல்
விரஹ வேதனையை வளரச் செய்வதால் “புலம்புங் கன குரற் போழ்வாயவன்றிலும்” எனப்பட்டது.
“பெண்ணை மேல், பின்னும்மவ்வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளாமென் செய்கேன்’ என்று
திருமங்கையாழ்வாரும் பெரிய திருமடலில் அருளிச் செய்தார்.
பூங்கழிபாய்ந்து அலம்புங் கனகுரல் சூழ்திரையாழியும் = நதிபதியாகிய கடல் அழகிய கழியினுள்ளே புகப்பாய்ந்து அலைமறிந்து
பெருமுக்கஞ் செய்வதை நோக்குமிடத்து, அது, தன் மனைவியைக் கைகளால் தழுவிக் களிப்பினால் ஆரவாரஞ் செய்வது
போன்றிருத்தலால் விரஹ வேதனை மிகுகிறபடி. அஃறிணைப் பொருள்களிலும் சேதநமாகிய சிறுபறவையோடு அசேதநமாகிய
பெருங்கடலோடு வாசியறப் பிரிவுக்கு வேதனைப் படுவதையும் கலவிக்கு மகிழ்ச்சி கொள்வதையும் கண்ணெதிரிற் காணுதல் கலக்கத்துக்குக் காரணமாம்.
(புள்ளதுகலம்.) பக்தர்களை ரக்ஷிக்கும் பொருட்டு எம்பெருமானை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து உதவுதல் கருடனுடைய நலமென்க.
வையம் சிலம்புதலாவது- இவளுடைய தளர்ச்சிக்காகத் தாயர் தோழியர் உற்றார் உறவினர் ஊரார் அனைவரு முறையிடல்.
திருமால்! என விளித்தது, ஒருத்திக்கு நல்லவனாயிருக்கின்ற நீ இவள் இங்ஙனம் வருந்தப் பார்த்திருத்தில் பக்ஷபாதமன்றோ? என்றவாறு.
‘இத்திருவினை’ என்ற இவளையுந் திருமகளாகவே சொன்னது. இவள் அவளுக்கு நிழல் போலிருப்பவள் என்றாகிலும்
இவளைப் பார்க்க வேண்டாவோ?’ என வெறுத்துரைத்தவாறு. திரு- ஸ்த்ரீகளுட் சிறந்தவள்.
கனகுரல் – பண்புத்தொகை; நிலைமொழி வடமொழியாதலின் இயல்பாயிற்று.
‘கனைகுரல்’ என்ற பாடத்தில் ‘கனைக்கின்ற குரல்’ எனப்பொருள் காண்க; வினைத்தொகை.
போழ் வாய அன்றிலும் = தன் குரலால் விரஹிகளை இரு துண்டமாகப் பிளந்திடுகிற வாயையுடைய அன்றில் என்றும் உரைப்ப,
‘போழ்’ என்பது தன் வினை பிறவினை இரண்டுக்கும் பொது. பூங்கழி- பூக்களையுடைய கழி என்னவுமாம். வலம்- வெற்றியுமாம்.
“(ஆங்கவை) பிரிந்திருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணியோசையென்ன, சந்திரோதய மென்ன, தென்ற லென்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்றாதல்” என்ற நம்பிள்ளை வீடு காண்க.
(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே!) கருடன் உனக்கு அடிமை செய்த தழும்பு சுமந்தாற்போலே
ஸம்ச்லேஷ அடையாளங்களைத் தரிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அக்கருடனைப் பாடினவிது குற்றமாக அன்றில்
கடலோசை முதலானவை இவளை நலிய அத்தாலே இவள் நோவுபடா நின்றாளென்று நாட்டார் பழிசொல்லும்படி நீர் விட்டு வைப்பதே!,
உம்முடைய மஹிஷி நோவுபடப் பார்த்திருத்தல் உமக்குக் குறையன்றோ என்றபடி, திருமால்- அண்மை விளி;
“திருமால் நான்முகன்” (8-3-9) என்ற திருவாய் மொழிப் பாசுரத்திற்போல.
எம்பெருமானைச் சேராமையாலாகுந் துன்பத்தையும் சேர்வதனாலாகும் இன்பத்தையும் உலக நடத்தைகள் நினைபூட்டுதலால்
வருந்தாநின்ற ஆழ்வாரது தன்மையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானை நோக்கி “இப்படி உலகம் முறையிடும்படி இவரை
இவை கலியக்கடவனவோ?’ என்று வெறுத்துரைத்தல்
இதற்கு உள்ளுறை பொருள். அன்றிற்குரல் பிரிவுத் துன்பத்துக்கு ஸ்மாரகம்; ஆழிமுழக்கம் சேர்க்கையின்பத்துக்கு ஸ்மாரகம்.
(நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக) எம்பெருமான் நம்மிடத்து விரைந்து வந்து சேர்வதற்குறுப்பான வேக கதியைவுடைய
வாஹனம் அவனுக்குச் சொந்தமாயிருக்கையில் நாம் இழக்கவேண்டுவதில்லையே யென்று மகிழ்ச்சி பாராட்டுதலே குற்றமாக என்கை.
அடிமைச்செல்வமுடைமை பற்றி ஆழ்வாரைத் திரு என்றது; எம்பெருமானோடு நித்யாநுபவஞ் செய்யத்தக்கவை ரென்க.
———————————————————————
திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-புகழும் நல் ஒருவன் -3-4-
பதவுரை
மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)
இடைவிடாமல் நாம உச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு தீவினை எங்கிருந்து வந்தது என்று தலைவி வெறுத்து பேசும் பாசுரம்
திருமாலுரு வொக்கும் மேரு-அவளது பொன்னிறமான திருமேனி கலப்பதால் தானும் பொன்னிறம் பொலியப் பெற்று
எம்பெருமான் பெரிய திரு மேனி பொன்னிறமான மேருவை ஒக்கும்
அன்ன கண்டும்-நேரில் கண்டால் போலே -அன்பு மிகுதியால் பரவசம் அடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான
வ்யாமோஹம் பெற்ற நமக்கு பிரிவுக்கு அடியான பாவம் எங்கனே உண்டாயிற்றோ –
செய்யதோர் நாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி இது என்னும் -போல அன்றோ வாய் பிதற்றுகிறாள் –
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடி
பாபம் கழிந்தால் தானே பக்தியே பிறக்கும் -பக்தியின் மேல் எல்லையில் இருந்தும் –
பேறு பெறாமைக்கு காரணமான பாபங்கள் வர வழி என்னவோ -என்று வருந்தி உரைக்கிறார் –
போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில்
மாத்திரமேயல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம்
பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.
திருமாலுரு வொக்கும் வேமரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,
பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.
அம்மேருருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் = அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்காநின்ற
சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்.
(அன்ன கண்டும் இத்யாதி.) அப்பெருமானுடைய திவ்யரூபத்தையும்,திவ்யாயுதத்தையும் நேரில் காணப் பெறாமல் அவற்றிற்குப்
போலியாகவுள்ளவறறையே கண்டிக்கச் செய்தேயும் அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையுமே நேரிற் கண்டாற்போல
அன்பு மிகுதியாற் பவசமடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்றிருக்கிற எமக்கு,
பிரிவுக்கு அடியான பாவம் எங்ஙனே உண்டாயிற்றோ தெரியவில்லையே! என்கிறாள்.
மால் தலைக்கொண்ட – ஆசையின் மேலெல்லையிலே நிற்கிற என்னவுமாம். நாயகனைப் பிரிந்த நாயகி நாயகன்
போலிகளை அவனாகவே பாவித்து வாய்பிதற்றுவதை!
(திருவாய்மொழி 4-4-4) “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா வென்று கூவும்”
(திருவாய்மொழி 4-4-2). “செய்யதோர் நாயிற்றைக் காட்டிக் கிரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பவற்றிலும் காண்க.
ஜந்மாந்தஸஹஸ்ரேஷு தபோஜஞாநஸமாதிபி:- நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே.”
பாபங்கழியப் பெற்றவர்களுக்கே பகவத பக்தி பிறக்குமென்றும், பகவத் பக்தியுடையாரைப்பாவம் அணுகாதென்றும் சாஸ்திரமிருக்க,
அந்தப் பக்தியின் மெலெல்லையிலே நிற்கிற நமக்குப் பேறு பெறாமைக்குக் காரணமான பாவம் வருவதற்கு வழியுண்டோ? என்று
ஆழ்வார் வருந்தியுரைத்தாராயிற்று. எம்பெருமான் பக்கலில் மாத்திரமேயன்றி எம்பெருமான் வடிவத்தை
யொத்திருக்கும் பொருளிலும் ஈடுபடுதலே பக்தியின் மேலெல்லையாம்.
மூன்றாமடியில், சிஹ்நம் என்றும் வடசொல் சின்ன மெனத்திரிந்தது
—————————————————————-
தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89- அங்கும் இங்கும் -8-3–
பதவுரை
தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?
பேற்றுக்கு விரைந்து பேசுகிற படி
தீய கருமங்களை ஒழித்து கைங்கர்யம் செய்பவர்க்கு இன்ப மயமாய் இருந்து -பக்தியை வளர்ச்சி செய்பவன்
நல் வினை-என்றது முக்திக்கு வியாஜ்ய காரணமான பிரபத்தியை
புன்மை எள்காது-ஆவினை மேய்க்கும் வல்லாயனை -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய்-எங்கள் ஆயர் தேவே–
எள்காது-பெறாப் பேறு பெற்றால் போன்று அன்றோ உகப்பான் –
நாயகனுடைய ஸம்ச்லேஷத்துக்கு விரைகின்ற நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. கொடிய துன்பத்தை விளைக்கின்ற
தீக்கருமங்களை எளிதில் ஒழிப்பவனும், தன் பக்கல் அடிமை செய்வார்க்கு நிகரற்ற இன்பமூர்த்தியாயிருப்பவனும்,
தாமரையைத் தனது சிறப்புக்கும் ஸௌகுமார்யத்துக்கும் அழகுக்கும் தக்க இடமாகக் கருதி அதில் வீற்றிருப்பவளாய்ப்
புருஷகாரபூதையான பிராட்டிக்கு நாயகனும், திருவுள்ளத்தில் சிறிதும் வெறுப்பின்றியே உகப்புடனே பசுக்களை மேய்க்கப்பிறந்து,
வேஷம் கொண்டவன் போலன்றிச் சாதி குணந்த தொழிகளில் உறைந்து நிலைநின்ற இடையனும் இரண்டடிகளாலே
ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட மேம்பாடுடையனுமான எமது தலைவனை எப்பொழுது சேரப்பெறுவேன் என்கிறாள்.
அடியார்கட்குப் பகை தீர்ப்பவனும் அடிமைக்கு இனியனும் புருஷகாரமான திருமகளுக்குக் கணவனும் அனபர்க்கு எளியனும்
எல்லாவுலகையும் கீழ்ப்படுத்தியவனுமான எம்பெருமானை எப்பொழுது சேர்ந்து அநுபவிக்கப் பெறுவேனென்று ஆழ்வார் பேற்றுக்கு விரைந்து பேசுகிறபடி.
‘தீவினைக்கு அரு நஞ்சு’ என்றது- கொடிய துன்பத்தை விளைக்கிற தீய கருமங்களை எம்பெருமான் எளிதில் ஒழிப்பவன் என்றவாறு.
‘நல்வினைக்கு இன்ன முதம்’ என்றது- தன் விஷயத்தில் கைங்கரியம் செய்பவர்கட்கு இன்பமயமாயிருப்பவன் எம்பெருமான் என்றவாறு;
அவர்கள் பக்தியை அழியாது வளரச் செய்பவன் என்க. முக்திக்க வ்யாஜகாரணமான ப்ரபத்தியை இங்க நல்வினை என்றது.
புன்மை யெள்காது ஆவினை மேய்க்கும் = மகிவும் நீச ஜாதியாகிய பசுக்கையோ நாம் மேய்ப்பது’ என்று ஜுகுப்ஸை கொள்ளாமல்
“ திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே!” (திருவாய்மொழி 10-3-10). என்கிறபடியே
‘பசுமேய்க்கும் பாக்யம் பெற்றோமே!’ என உவந்து மேய்ப்பவனென்றவாறு.
‘தாவின வேற்றை’ என்றவிடத்து ‘ஏறு’ என்றது விளக்கவந்த உபசார வழக்கு; ஏறு காளை சிங்கம் இச்சொற்கள்
ஆண்பாற்கு வருகையில் சிறப்புப் பொருளுணர்த்துவனவாம்; இது வடமொழி மரியாதை.
———————————————————————
தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90- குரவை ஆய்ச்சியர் -6–4-
பதவுரை
அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலைநின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு–நோக்குபோதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)
ஆற்றாமையால் காலம் மிக தோன்றுகிறதே -சுருங்கலதே-சுருங்குகிறது இல்லை -இப்படியே என் காலம் கழிந்து விடுகிறதே
நோற்ற விம்மாயமும்-பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் -உன் திருவடிகளில் அடிமையால் அல்லது
செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும்
அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்
ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்
மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே
இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான
சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
திருவடிச் சூடும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அசுரர் குழாம்-தொலைப் பெய்த நேமி எந்தாய் -என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களைப் பாற்றுதல் உமக்கு ஒரு கார்யமோ –
நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத்
தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு
முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது
என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே
‘சுருங்குதலையுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம்.
பூர்வஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால்
‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும்,
அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லையென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை.
ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று
அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும்
பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.
‘மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமை’ என்பதற்கு- இவ்வுடம்பு நிலையில்லாத தாயிருக்குந் தன்மையென்றும்,
ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடியிருக்கையில் உண்டான அடிமைக்குணம் ரஜோகுண தமோகுண ஸம்பந்தத்தால் நிலைப்படாது
சலிக்கக்கூடியதன்மை என்றும் உரைப்பர்.
‘திருவடி’ என்றதற்கு ‘திருவடித் தாமரை மலர்’ எனப் பொருளுரைத்தது ‘சூடும்’ என்றதற்கேற்ப.
“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்ற திருவாய் மொழி காண்க.
ஆயிரம் ஜந்மஙக்ளிற் செய்த நோன்பின் பயனாகவே ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜன்மம் கிடைப்பதாக ப்ராப்திப்ரதிபந்தகங்களைப்
பாற்றுதல் உனக்கொரு பெருங்கார்யமோ? என்பதற்காக ‘அசுரர்குழாந் தொலைப்பெய்தநேமி யெந்தாய்!’ என விளிக்கப்பட்டது.
தலைப்பெய்து + யான், தலைப்பெய்தியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல். தலைப்பெய்தலென்பது ஒரு முழுச்சொல்.
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply