ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை -75/76/77/78/79/80–

சூர்ணிகை –75

வீட்டு இன்பப் பாக்களில்
த்ரவ்ய  பாஷா ந்ரூபண சமம்
இன்ப மாரியில் ஆராய்ச்சி —

ஆழ்வாருடைய ஜாதி நிரூபணம் பண்ணலாகாது என்றல் –

பிரமாணத்தின் யுடையவும் ப்ரமேயத்தின் யுடையவும் வைபவம் அருளிய அநந்தரம்-
பிரமாதாவான ஆழ்வாருடைய வைபவம் அருளிச் செய்யப் படுகிறது –
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று தாமே அருளிச் செய்தபடி –
கனிவார் வீட்டின்பமே –கனிந்த நெஞ்சை யுடையாருடைய க்ருஹம் தோறும்
தமருகந்த த்ரவ்யத்தை திரு மேனியாகக் கொண்டு இன்பம் விளைக்கின்றான் அர்ச்சா மூர்த்தி
அந்தமிழ் இன்பப் பா –திவ்ய பிரபந்தங்களில்
வீட்டின்பம் –பிரமேயம் -அர்ச்சாவதார திருமேனி
இன்பப்பா -பிரமாணம் –அருளிச் செயல்கள் -திருவாய்மொழி
இன்ப மாரி  -பிரமாதா-நம் ஆழ்வார்
மூன்றையும் இன்பம் -தமிழ் சொல்லாலே அருளிய அழகு -எல்லாம் திவ்யமாயும் இன்பமாயும் இருக்குமே –
அப்படிப்பட்ட பாபம் ஆழ்வார் பக்கல் ஜாதியைப் பற்றின இகழ்ச்சி –

———————————————————————————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை –76-

பேச்சுப் பார்க்கில்
கள்ளப் பொய் நூல்களும்
க்ராஹ்யங்கள்-
பிறவி பார்க்கில்
அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும்
கழிப்பனவாம்–

பாஷையையும் ஜாதியையும் கணிசிக்கலாகாது என்றதையே திடப் படுத்தி அருளிச் செய்கிறார்

விஷய வை லஷண்யத்தைப் பாராமல் பாஷா மாத்ரத்தையும் பார்க்கும் அளவில்
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஒது கின்ற கள்ள நூல் —
பொய்ந்நூலை   மெய்ந்நூல என்று என்று ஓதி மாண்டு –
பாஹ்யங்கள் ஆகச் சொல்லப் பட்ட சமஸ்க்ருத நூல்களும் க்ராஹ்யங்கள் ஆக வேண்டி வரும் –
மத்ஸ்ய கந்தை -வியாச பகவான் -அருளிச் செய்த அஞ்சாம் ஒத்து -பாரத பஞ்சமோ வேதா -என்னப் படும் மகா பாரதமும்
கற்றினம் மேய்க்க்கலும மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான் –
ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த ஷட்கத் ரயம்-கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யங்கள் ஆக வேண்டி வரும்

—————————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை –77-

கிருஷ்ண
கிருஷ்ண த்வைபாய
உத்பத்திகள் போல் அன்றே
கிருஷ்ண த்ருஷ்ணா
தத்வ ஜன்மம் —

ருஷிம்ம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம் -பட்டர்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -திருவிருத்தம் –
பகவத் விஷய ஆசையே வடிவு கொண்டு திரு வவதரித்து அருளிய ஆழ்வார் –
இவர் திருவவதாரம்
ஸ்ரீ கிருஷ்ணனுடையவும் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனானவன்
கிருஷ்ண த்வைபாயானர் என்கிற வ்யாசருடையவும்-கன்னிகை -வலைச்சி மகனாய்ப் பிறந்தவர் அன்றோ –
அவதாரங்கள் போல் அன்றிக்கே
பரம விலஷணம் என்றபடி –

——————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை –78-

பெற்றும் பேர் இழந்தும்
கன்னிகை  யானவளும்
எல்லாம் பெற்றாளாயும்
தத்துக் கொண்டாள் என்பர் நின்றார் என்னுமவளும்
நெடும் காலமும் நங்கைமீர் என்னும் அவளுக்கு நேரன்றே —

பெற்றும்–
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் —
என்றபடியே கண்ணனைப் பிள்ளையாகப் பெற்றிருந்தும்
பேர் இழந்தும் -ஆனவளும் –
திருவிலேன் என்றும் பெற்றிலேன் -என்கிறபடியே
பேர் இழந்தவளாகக் கதறி அழுத தேவகியும்-

பெற்றும் கன்னிகை  யானவளும் –
த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயண மச்யுதம் பராசராத் சத்யவதி புத்ரம் லேபே பரந்தபம் –என்கிறபடியே
வியாசனைப் பிள்ளையாகப் பெற்று வைத்தும் அவனால் உண்டாகும் ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி
புன கன்யா பவிஷ்யதி –என்ற பராசர வசனத்தாலே
மீண்டும் கன்னிகைப் பருவம் அடைந்தவளான மத்ஸ்ய கந்தையும்-

தத்துக் கொண்டாள் என்பர் நின்றார் என்னுமவளும்
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -என்றும்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்றும்
சொல்லுகிறபடியே
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள்அடியாக தானும் பிறரும்
சங்கிக்க வேண்டும்படியான மாத்ருத்வத்தை யுடைய யசோதையும் –

ஆக கிருஷ்ண மாதாக்களும் வியாச மாதாவான இம் மூவரும்-

நெடும் காலமும் நங்கைமீர் என்னும் அவளுக்கு நேரன்றே —
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -என்றும்
நங்கைமீர் நீருமோர் பெண் பெற்று நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை-என்றும்
பெருமை சொல்லிக் கொண்ட ஆழ்வார் திருத் தாயாருக்கு ஒப்பாக மாட்டார்களே –
தேவகிக்கு -பேர் இழந்த குற்றம்
யசோதைக்கு -உள்ளபடி மாதாவாக பெறாமை யாகிற குற்றம்
வியாச மாதாவுக்கு -உடனே கன்னிகையாகப் பெற்றமை யாகிற குற்றம்
ஆழ்வார் திருத் தாயாருக்கு கொத்தை ஒன்றும் இல்லையே –என்றவாறு-

——————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை –79-

மீன
நவ நீதங்கள்
கந்திக்கும் இடமும்
வெறி கொள் துழாய் கமழும் இடமும்
தன்னில் ஒக்குமோ –

வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டினேன் பெற்ற -என்றும்
அன்றி மற்று ஒரு உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கித் தென் திசை திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே -என்றும்
பகவத் சம்பந்தம் ப்ரகாசகமான திருத் துழாய் பரிமளம் கமலப் பெற்ற ஆழ்வார் திருவவதார ஸ்தலத்திற்கு
மீன் வெறி நாறுகிற வியாசர் பிறப்பிடமும்
வெண்ணெய் முடை நாறுகிற ஸ்ரீ கண்ணபிரான் திருவவதார ஸ்தலமும்
ஈடாக மாட்டாது என்றபடி –

——————————————————————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை -80

ஆற்றில் துறையில்
ஊரில் உள்ள
வைஷம்யம்
வாசா மகோசரம்-

ஆற்றில் உள்ள வைஷம்யம் –
வியாசர் பிறப்பிடம் -ஆறு – -அசிஷ்ட பரிக்ரஹம் உடைய கங்கை –
கண்ணன் பிறப்பிடம் –ஆறு ஜன்ம சத்ருவான கம்சனுடைய மாளிகையின் கீழே பெருகிச் செல்லும்
தமோ மயமான யமுனை –
ஆழ்வார் திருவவதார ஸ்தல நதி -பவள நன் படர்க் கீழ்ச் சங்குறை  பொருநல்-என்றபடி
விலஷணபதார்த்தங்களுக்கு ஜன்ப பூமியாகி மிகச் சிறந்ததான தாமிரபரணி –

துறையில் உள்ள வைஷம்யம் –
வியாசர் பிறந்த துறையோ -ஓடத் துறை
கண்ணன் திருவவதரித்த துறையோ காளிய விஷ தூஷிதமான துறை –
ஆழ்வார் திருவவதார துறையோ பொருநல் சங்கணித் துறை –

ஊரில் உள்ள வைஷம்யம் –
வியாசர் பிறந்த வலைச் சேரி
கண்ணன் திருவவதரித்த ஊரோ அறிவு ஒன்றும் இல்லாத இடைச் சேரி
ஆழ்வார் திருவவதரித்த ஊரோ -நல்லார் நவில் குருகூர் என்று கொண்டாடப் பட்ட திரு நகரி —

ஆக -ஆழ்வார் திருவவதார ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உள்ள வைஷம்யம் – மூன்றும் பேச்சுக்கு நிலம் இல்லை-என்றபடி –

———————————————————————————————————————————————————————————————————————————–

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading