ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ கலியன் அருள் பாடு —

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

(கலி தொடங்கி இப்பொழுது 5111-
4600 வருஷங்களாக திருவாய் மொழி-இராப்பத்து உத்சவம் திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைத்தது-
நாதமுனிகள் ஏற்பாட்டால் பகல் பத்தும் இராப் பத்தும் இயற் பாவும்-ஆக 21 நாள்கள்
திருவேங்கடத்தில் மேலும் 2 நாள்கள் -இராமானுஜ நூற்றந்தாதி தனியாக ஒரு நாள் -அனந்தாழ்வான் ஏற்பாடு
தண்ணீர் உத்சவம் -திருமலை நம்பி வம்சத்தாருக்காக)

(தர்ம வர்மா திருச்சுற்று
ராஜ மகேந்திரன் திருச்சுற்று
குலசேகரன் திருச்சுற்று
ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதி
திருவிக்ரமன் திருச்சுற்று
உத்தர வீதி -உள் துறையார்கள் -அந்தரங்க கைங்கர்ய பரர்கள் -ஆயிரம்கால் மண்டபம் மேல் நம்பெருமாள் இருக்க தாளம் இசைத்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்வானாம்
சித்ர வீதி –ஆக ஏழு பிரகாரங்கள் -மாட மாளிகைகள் சூழ் திருவீதி இதுவே -முன்பு இதற்கு வெளியில் தான் குடியிருப்பாம்)

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல ஆத்மாக்களோடு தனக்கு யுண்டான சம்பந்தம் ஒத்து இருக்க –
சிலர் தன்னை அனுபவித்து வாழ்ந்தும் –
சிலர் இழந்து கொண்டு அசித் கல்பராய்ப் போரவும் கண்டு -திரு உள்ளம் கலங்கி –
இவர்கள் நம்மைக் கிட்டி அனுபவிக்கும் விரகு ஏதோ -என்று பார்த்து –

சம காலீநர்க்கு ஆஸ்ரயண உபயோகியான விபவங்கள் போல் அன்றிக்கே –
பின்னானார் வணங்கும் சோதி (திரு மூழிக் களத்தானே) -என்கிறபடியே -எல்லாக் காலத்திலும் -எல்லா தேசங்களிலும் -எல்லார்க்கும்
ஆஸ்ரயணம் ஸூலபமாம்படி பண்ணி –
அர்ச்சாவதாரமாய் ஸ்ரீ கோயில் முதலான  திருப்பதிகள்  தோறும் -க்ருஹங்கள் தோறும் நித்ய சந்நிதி பண்ணி –
ஆஸ்ரித பராதீனனாயும் -ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பட்ட நாதாதி பக்த  முக்தராலும்
அநேக ஆத்மாக்கள்  உஜ்ஜீவிக்கும் படி ரஷித்து அருளா நிற்கிற காலத்திலே-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற் கணார் கல்வியே கருதி -என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன்  விபூதி அடைய இவர் தொடைக் கீழே கிடக்கிறதோ -என்று சங்கிக்க வேண்டும்படி –
அதிசய அஹங்கார உக்தராய் – அதுக்கடியான தேஹாத்ம அபிமாநத்தை யுடையராய் –
ஆத்ம விஷய மாதல் -ஈஸ்வர விஷயமாதல் -ஒரு ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத படி
விஷய ப்ரவணராய் இருக்க –

இவரை இது நின்றும் எடுக்க விரகு பார்த்து -இவருக்கு விஷயங்களில் யுண்டான ரசிகத்வமே பற்றாசாக
தன் அழகையும்

(ஸூஸேக்ஷண –அவனது அழகே நம்மைத் திருத்த வைக்கும் உபகரணம்
ஐயப்பாடு அறுக்கும் அழகன்
ஆதரம் பெறுக வைத்த அழகன்
ஒருநாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு படுத்தும் பாடு)
சர்வார்த்த ப்ரகாசகமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும் –
ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்ட இவரும் ஹ்ருஷ்டராய் -இவர் –

(முன்பு ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தைப் பேணி வந்தவர் இப்பொழுது தான் ஆழ்வார் ஆகிறார்-காரார் திருமேனி காலம் அளவும் போய் சீரார் திருவேங்கடமே)

(அரச மரத்தின் அடியில்
ஆலி நாட்டுக்கு அரசனான கலியனுக்கு
தெய்வங்களுக்கு அரசனான வயலாலி மணவாளன்
மந்த்ர அரசான திரு மந்திரம் அருளிச் செய்த பின்பே
ஆழ்வார் ஆனார்-வேடுபரி உத்ஸவம் இன்றும் ஸேவிக்கிறோம்)

வாடினேன் வாடி -என்று தொடங்கி-உகந்து அருளிய நிலங்கள் தானே ஆஸ்ரயணீயம்-என்று நினைத்து –
ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே –
ஸ்ரீ பகவத் அர்ச்சாவதார ஸ்தலங்களுக்கு எல்லாம் பிரதானமாய் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -என்று சொல்லுகிறபடியே
ஸ்ரீ பாகவத கோஷ்டிக்கு எல்லாம்  விரும்பி வர்த்திக்கும் ஸ்தலமான ஸ்ரீ திரு வரங்கத் திருப்பதியிலே
நித்ய வாசம் செய்து அருளக் கண்டு –

நாள் தோறும் -கோல  மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ
நிறை கொண்டது என் நெஞ்சினையே-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திரு உள்ளம் குடி புகுந்து அத் தலைக்கு மங்களா சாசன பரராய் –
திருக் கோபுரம் -திரு மதிள்-திரு மண்டபங்கள் -திரு மடைப் பள்ளி -முதலான கைங்கர்யங்களும்  நடப்பித்துக் கொண்டு

இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் -என்கிறபடியே –
ஒருவராலும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற த்ரமிட சாஸ்திரத்தைக் கரை கண்ட ஜ்ஞானாதிக்யத்தை யுடையராய் –
தமிழ்க் கவிகளுக்கு எல்லாம் தலைவராய் -நாலு கவிப் பெருமாள் -என்று திரு நாமம் பெற்று –

ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளான-
ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திருவாய் மொழி -என்கிற நாலு பிரபந்தங்களிலும்
சப்த ரசம் -அர்த்த ரசம் -பாவ ரசம் -என்கிற ரச விசேஷங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு –

விசேஷமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே –
அந்தமில் பேரின்பம் -பெற்றவர் ஆகையாலே -அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக
அனுசந்தித்துக் கொண்டு போரா நிற்க -நல்லடிக் காலத்திலே –

திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமார்களும் திரு மஞ்சனம் கொண்டு அருளி –
செங்கமலக் கழலில்  -ஸ்ரீ பெரியாழ்வார் -1-5-10-படியே நன்றாக ஒப்பித்து நிற்க –

(செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-)

அப்போது ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற பிரபந்தத்தை இட்டருளி –
ப்ரதமம் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செவி சாற்றி அருளும்படி தேவ கானத்தில் ஏறிட்டு அனுசந்தித்து –
திரு உள்ளம் உகக்கும் படி நன்றாக  ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலும் ஏத்தி நிற்க –

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ஆழ்வார் திறத்திலே திரு உள்ளம் குடி புகுந்து –
ஸ்ரீ ஆழ்வீர்-இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே இரா நின்றீர் -நாம் உமக்குக் செய்ய
வேண்டுவது உண்டாகில் சொல்லும் -என்ன

ஸ்ரீ ஆழ்வாரும் நித்ய சம்சாரியாய்ப் போந்த அடியேனை தேவரீர் இப்படி விஷயீ கரித்த பின்பு ஒரு குறை யுண்டோ –
ஆகிலும் ஒரு விண்ணப்பம் யுண்டு -என்ன –
ஸ்ரீ பெருமாளும் -அத்தைச் சொல்லும் -என்ன –

ஸ்ரீ ஆழ்வாரும் -நாயன்தே நாயன்தே -தேவரீர் லோக அநுக்ரஹர்த்தமாகச் செய்து அருளின அர்ச்சாவதார ஸ்தலங்களில்
பிரதானமான இந்த ஸ்தலத்திலே
மார்கழி மாசம் சுக்ல பஷத்தில் ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)அன்று அத்யயன உத்சவம் கொண்டு அருளும் போது-(முன்பே வேதங்களை மட்டும் ஓதும் அத்யயன உத்சவம் நடந்து வந்துள்ளது)
ஸ்ரீ சடகோபன் சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியையும் வேத பாராயணத்தோடு கேட்டருளி
இதுக்கு வேத சாம்யமும் அநுக்ரஹித்து அருள வேணும் -என்ன –

(இதே போல் பின்பும் பாடிய வாளன் படித்துறை –வாளை வீசி கேட்டுப் பெற்ற வ்ருத்தாந்தம்)

ஸ்ரீ பெரிய பெருமாளும் திரு உள்ளம் உகந்து -அப்படியே வேத சாம்யம் அநுக்ரஹித்தோம்-
அத்யயன உத்சவத்தில் வேத பாராயணத்தோடு ஸ்ரீ திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்-என்று
அருளப்பாடு பிரசாதித்து அருளி

ஸ்ரீ கலியன் நம்மை தேவ கானத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது -ஆன பின்பு நாம் இன்று தரித்த
சிஷ்டமான எண்ணெய் காப்பை அவர் திரு மிடற்றிலே தடவுங்கோள் -என்று அருளப்பாடு பிரசாதிக்க
பின்பு ஸ்ரீ பெருமாள் பரிகரமும் அவர் திரு மிடற்றிலே எண்ணெய் காப்பைச் சாத்த –அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்து அருளின பின்பு –

ஸ்ரீ திரு நகரியிலும் ஸ்ரீ ஆழ்வார் அத்யயன உத்சவத்துக்கு
ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கு –
ஸ்ரீ பெரிய பெருமாள்  திரு முகப் பட்டயம் எழுதி சந்நிதிப் பேரர்களையும் ஸ்ரீ திரு நகரிக்கு அனுப்பி வைக்க –

(இப்பொழுதும் திருக் கார்த்திகை உத்சவத்தில் கைத்தலை சேவையால் ஆஸ்தானம் வரை நம்பெருமாள் எழுந்து அருளுகிறார்)

ஸ்ரீ ஆழ்வாரும் திரு முகப் பட்டயத்தை சிரசா வகித்து அத்யயன உத்சவத்துக்கு உதவும்படி ஸ்ரீ கோயில்  ஏற எழுந்து அருளின பின்பு
ஸ்ரீ திரு மங்கை மன்னனும் ஸ்ரீ ஆழ்வாரை எதிர் கொண்டு -திருவடி தொழுது -சந்நிதியிலே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக

ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வாரைக் குளிரக் கடாஷித்து அருளி -தம் திரு உள்ளத்தில் உகப்பாலே – ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று திரு நாமம் சாற்றி –
திருமாலை -ஸ்ரீ சடகோபன் திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை பிரசாதிக்க –

(ஸ்ரீ சடகோபனுக்கே ஸ்ரீ சடகோபன் சாத்தி அருளுகிறார் நம்மாழ்வார்)

ஸ்ரீ திரு மங்கை மன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக -ப்ராத காலத்திலே வேத பாராயணமும் –
ராத்திரி காலத்திலே ஸ்ரீ திருவாய் மொழியும் அநு சந்தானமாக கால விபாகம் பண்ணி
வேதங்களை அநு சந்தித்துச் சாற்றி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தித்துச் சாற்றும் போது
ஸ்ரீ ஆழ்வார் முன்பு ஸ்ரீ திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்த படியை அநு கரித்து
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து

ஸ்ரீ ஆழ்வார் பிரதி சம்வத்சரம் அத்யயன உத்சவத்துக்கு எழுந்து அருளி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தானம் நடக்கும்படி பண்ணுவித்து
திருமாலை  ஸ்ரீ சடகோபன் முதலான வரிசைகள் எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பிரசாதித்து அருளப்பாடும் பிரசாதித்து
அருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க

பின்பு ஸ்ரீ ஆழ்வாரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ திரு நகரி ஏற எழுந்து அருளி -பிரதி சம்வத்சரம் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி –
அத்யயன உத்சவத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு வர 

(அத்யயன உத்சவம் மாசி மாதம் இப்பொழுதும் திருத்தொலைவில்லி மங்கலத்தில் -நம்மாழ்வார் திரும்பிப் போகும் பொழுது நடந்தது)

(கலியுகம் தொடங்கி 398-வருஷம் திரு அவதாரம்-503 வருஷம் தன்னுடைச் சோதி -திருக் குறுங்குக்குடியில்)

(86-திவ்ய தேச மங்களா சாசனம்-47 -இவர் மட்டுமே மங்களா சாசனம்-திருவரசு உள்ளது)

(அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,-ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,-பரந்த விழியும், படிந்த நெற்றியும்,-நெரித்த புருவமும், சுருண்ட குழலும்,-வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,-தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,-

அகன்ற மார்பும், திரண்ட தோளும்,-நெளித்த முதுகும், குவிந்த இடையும்,-அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,-தூக்கிய கருங்கோவையும்,தொங்கலும் தனி மாலையும்,-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்,-சாத்திய திருதண்டையும்,

சதிரான வீரக்கழலும்,-தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,-குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,-வாடினேன் வாடி வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி, மருவளர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே!!!-(மன்னு முடி தொப்பாரம் -திருமங்கை மன்னனுக்கு அசாதாரண திரு அபிஷேகம்)

உரை களித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல், உருக வைத்த மனம் ஒழித்து உலகளந்த நம்பி மேல், குறையை வைத்து, மடல் எடுத்த குறையலாலி திருமணங்கொல்லை தன்னில்,வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,

மறை உரைத்த மந்திரத்தை, மால் உரைக்க அவன் முனே, மதி ஒடுக்கி, மணம் அடக்கி,வாய் புதைத்து ஒன்றலார்,கரை குளித்த வேல் அணைத்து நின்ற இந்த நிலைமை,என் கண்ணை விட்டு அகன்றிடாது

கலியன் ஆன ஆனையே!!! காதும் சொரிமுத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை தாளினையும், தனிற்றிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப்போல, என் ஆணை ஒப்பார் இல்லையே!!!!

வேல் அணைத்த மார்பும், விலங்கு திருவெட்டெழுத்தை மால் உரைக்க, தாழ்த்த வளர்செவியும் தாளினை தண்டையும் வீரக் கழலும், தார்க் கலியன் நன்முகமும் கண்டு களிக்கும் என் கண்.)

(இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.)

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]

ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான் வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின் எட்டெழுத்தும் பெற்ற இடம்.

(ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.)

இப்படி சில காலம் சென்ற பின்பு –
கலி தோஷத்தால் ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான திவ்ய பிரபந்தங்கள் லுப்தமாய் –
பஹூ காலம்  அத்யயந அத்யாபநங்கள் இன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வாரும் அத்யயன உத்சவத்துக்கு கோயில் ஏற எழுந்து அருளாமல் இருக்க –

இப்படி சில காலம் சென்றவாறே -ஸ்ரீ மன் நாதமுனிகள்( ஸ்ரீ மன் நாதமுனிகள் திருவவதாரம் 823-ஆனி அனுஷம்) -ஸ்ரீ வேத வியாச பகவான் லோகத்திலே திரோஹிதங்களான
வேதங்களை உத்தரித்தால் போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை உத்தரிப்பதாக திரு உள்ளமாய்
ஸ்ரீ திரு நகரி எழுந்து அருள –

ஸ்ரீ மதுரகவி சம்ப்ரதாயஸ்தரான ஸ்ரீ பராங்குச நம்பி சந்நிதியிலே –
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்கிற ஸ்ரீ ஆழ்வார் விஷயமான திவ்ய பிரபந்தத்தை லபித்து-
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திரு வாய் மொழிக்குப் பண்ணின அநுக்ரஹ அதிசயத்தை கேட்டருளி
மிகவும் திரு உள்ளம் உகந்து -யோக தசையிலே ஸ்ரீ ஆழ்வாரை சாஷாத்கரித்து –

தந் முகமாக
ஸ்ரீ ஆழ்வார்கள் பதின்மரும் -ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த (23)திவ்ய பிரபந்தங்களையும் லபித்து(பவிஷ்யத் ஆச்சயர்யரான எம்பெருமானார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் கொடுத்து அருளி) -க்ருதார்த்தராய் –
ஸ்வ சிஷ்ய ப்ர சிஷ்ய  முகத்தாலே அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அத்யயந அத்யாபனங்களைப் பண்ணுவித்து –
முன்பு போலே அத்யயன உத்சவத்தில் ஸ்ரீ ஆழ்வார் கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கும்
வேத பாராயணத்தோடு  ஸ்ரீ திருவாய் மொழி  அநு சந்தானம் நடக்கும் படி பண்ணி –

ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திருவாய் மொழிக்கு வேத சாம்யத்தை அநு க்ரஹிக்கையாலே –
வேதங்களுக்கு உபக்ரம உத்சர்ஜந கால நியமம் உண்டானாப் போலே –

த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் – என்று ஓதப்பட்ட திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழிக்கும்
திருக் கார்த்திகை திவ்ய மஹோத் சவத்திலே  உத்சர்ஜன   காலம் என்றும்
மார்கழி மாதத்திலே அத்யயன உத்சவத்திலே உபக்ரம காலம் என்றும்
திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியை திருக் கார்த்திகை உத்சர்ஜனம் பண்ணி –
உபக்ரம காலமான அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் கேட்டருளும்  அளவும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நெஞ்சினால் நினைந்து வாயினால்   மொழியாமல் இருக்கும் படிக்கும்
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிரதி வருஷம் திரு முகப் பட்டயம் பிரசாதிக்கும் படியும்

அன்று திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெரிய பெருமாள் தாம் சாத்திக் கொண்ட எண்ணெய் காப்பு
சேஷத்தை ஸ்ரீ திரு மங்கை மன்னன் திரு மிடற்றிலே சாத்துவித்து அவர் தம்மைப் பாடின இளைப்பு  எல்லாம்
தீரும்படிப் பண்ணின கட்டளையை பிரதி சம்வத்சரம் திருக் கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே
ஸ்ரீ பெரிய பெருமாள் சாத்திக் களைந்த எண்ணெய்  சேஷத்தை ஸ்ரீ ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான
ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மிடற்றிலே சாத்தி
அந்த சேஷத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்கள் தங்கள் திரு மிடற்றிலே சாத்தும் படிக்கும் –

ருக்காதி பேதேன சதுர் விதமான வேதங்களுக்கு சீஷாதிகளும் இதிஹாச புராணங்களும் அங்க உப அங்கங்களாக இருக்குமா போலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நாலு பிரபந்தங்களும் -நாலு வேத ஸ்தாநே  யாகவும்
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களும் மற்றை ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாளும் அருளிச் செய்த
பிரபந்தங்களும் அங்க உப அங்கங்கள் ஆகவும் –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)-சூரணை-43-)

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது )

(மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது .)

ஸ்ரீ திருவாய் மொழி தானும் த்வ்யார்த்த விவரணம் என்றும்

ஸ்ரீ திருப் பல்லாண்டு  முதல் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருப்பாவை -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -ஸ்ரீ பெருமாள் திருமொழி –
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் -ஸ்ரீ திருமாலை -ஸ்ரீ திருப் பள்ளி எழிச்சி -ஸ்ரீ அமலனாதி பிரான்
ஆக இப் பிரபந்தங்கள் (ஒன்பதும்)ப்ராயேண பிரணாவர்த்த பிரகாசகம் ஆகையாலே முதல் ஆயிரம் -என்றும் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -நமஸ் சப்தார்த்த விவரணம் -என்றும்

ஸ்ரீ திருமொழி -ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அருளிச் செய்த ஸ்ரீ திருவந்தாதி மூன்றும் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ திரு விருத்தம் -ஸ்ரீ திருவாசிரியம் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை -ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பெரிய திருமடல் (ஆகிய பதின்மூன்றும்)-ஸ்ரீ மந்திர சேஷ விவரணம்  என்றும்

இதில் இதில் ஸ்ரீ திருவந்தாதி மூன்று முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக சப்த ரச பிரதானமாய் இருக்கையாலே -ஸ்ரீ இயற்பா -என்றும்

இப்படி இருபத்து மூன்று பிரபந்தங்களும் திருமந்த்ரார்த்த விவரணம் என்றும்

இப் பிரபந்தங்களிலே ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவத்துக்கு விஷயமாய்-  ஸ்ரீ எம்பெருமான்
விரும்பி வர்த்திக்கிற ஸ்தலங்கள்- ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருப் பாற் கடல் தொடக்கமான நூற்று எட்டு -என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி ஒழிந்த பிரபந்தங்கள்- ஸ்ரீ திருப் பல்லாண்டு முதலாக ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் அளவாக
அத்யயன உத்சவத்துக்கு முன்பு பத்து நாளாக பெரிய பெருமாள் கேட்டு அருளும்படிக்கும்

ஸ்ரீ திருவந்தாதி முதலாக ஸ்ரீ பெரிய திருமடல் ஈறாக அத்யயன உத்சவ அனந்தரம் மற்றை நாள் கேட்டு அருளும் படிக்கும் –

ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் -ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ மத் மதுர கவிகள் ஆகப் பன்னிரண்டு திரு நாமங்களும்
அருளிச் செய்த இருபத்து மூன்று பிரபந்தங்களில் பாட்டு நாலாயிரம் -என்றும் –

பிராமணனுக்கு வேத வேதாந்தங்கள் -இதிஹாச புராணங்கள் அதிகரிக்க வேண்டுமா போலே
பிரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ திவ்ய பிரபந்தங்கள் அதிகரிக்க வேணும் என்றும் –

இதில் ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சி எம்பெருமானை திருப் பள்ளி யுணர்த்து வதாகையாலே –
ப்ராத காலத்தில் நித்யம் அனுசந்தேயம் என்றும்

எப்போதும் பிரபந்த அனுசந்தானத்துக்கு முன்பு மங்களா சாசன பரமான ஸ்ரீ திருப் பல்லாண்டு அனுசந்தேயம் என்றும்

ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தானத்துக்கு பூர்வ  உத்தரங்களிலே ஸ்ரீ ஆழ்வார் விஷயமான
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் என்றும்

இப்படி ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திலே அநேக ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை நியமித்த நியமனம் –

(திருநெடும் தாண்டகம் முதலில்
முதல் நாள் திருப் பல்லாண்டு தொடங்கி-பெரியாழ்வார் திருமொழி 2-9-வரை முதல் நாள்
அடுத்த நாள் 2-10/3-1இரண்டுக்கும் அபிநயம் பிடித்து -5-3 வரை
மூன்றாம் நாள் -5-4 சென்னியோங்கு பதிகம்-அபிநயம் -7 பாசுரம் -திருப்பொலிந்த சேவடி சென்னியின் மேல் பொறித்தாய் வியாக்யானம் -பின்பு ஸ்ரீ சடகோபன் அரையர் ஸ்வாமி ஸாதிப்பார் –
திருப்பாவை -நாச்சியார் திருமொழி 120 பாசுரங்கள்
நான்காம் திருநாள் -இரண்டு அரையர் சேவை –நாச்சியார் திருமொழி இறுதி இரண்டு பதிகங்கள் -பெருமாள் திருமொழி -திருச்சந்த வருத்தம் -கம்ச வதம்
ஐந்தாம் நாள் திருமாலை -6 வரை-அரங்கனாருக்கு -செய்யாதே -ஆராதனம் முடிந்து மீதம் பாசுரங்கள்–அமலானாதி பிரான் -ஓம் அர்த்தம்
ஆறாம் நாள் கண்ணி நுண் சிறுத்தாம்பு-பின்பு திருமொழித் திருநாள் –முதல் 220 பாசுரங்கள்
ஏழாம் திருநாள் -மீண்டும் இரண்டு அரையர் சேவை – திருமொழி சேவை -அம்ருத மதனம் –
எட்டாம் நாள் -பண்டை நாள் -திருவரங்கம் பாசுரம் -தெள்ளியீர் -8-2- அபிநயம்-
ஒன்பதாம் நாள் முத்துக்குறி -சேர்ப்பதை அபிநயம்
பத்தாம் நாள் -தசமி நாச்சியார் திருக்கோலம் -இரண்டு அரையர் சேவை -ராவண வதம் அபிநயம்-பகல் பத்து முடியும்

11 நாள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் -திருவாய் மொழி திருநாள்-
விராஜா நதி மூன்றாம் திருச்சுற்று-குலசேகரன் திருச்சுற்று -வேத விண்ணப்பம் நடக்கும்
ஒவ்வொரு நாளும் 100-பாசுரங்கள்- அபிநயமும் உண்டு -ஒவ்வொரு நாளும்-இதுவே கோயில் திருவாய் மொழி
ஏழாம் நாள் கங்குலும் பகலும் -அபிநயம் -நம்மாழ்வாருக்கு -பராங்குச நாயகி திருக் கோலம் சாத்தி –
திருக் கைத்தல சேவை நடக்கும் ஆழ்வாருக்காக – -ஹிரண்ய வதம் அபிநயம் –
எட்டாம் நாள் வேடுபரி உத்சவம் -நெடுமாற்க்கு அடிமை அபிநயம்
ஒன்பதாம் நாள் -திருக்கண்ணபுரம் -காலை மாலை கமல மலரிட்டு அபிநயம்
பத்தாம் நாள் -தாள தாமரை அபிநயம் -திருவடி தொழுதல் உத்சவம் -இறுதி 20 பாசுரம் -நம்மாழ்வாரைத் திரும்பிப் பெறுதல்-
அடுத்த நாள் காலையில் தான் தீர்த்தம் ப்ரஸாதம் ஆகும்

பின்பு இயற்பா 21- நாள்)

—————

ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ பெரிய நம்பி காலங்களிலும் செல்லா நிற்க –
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் காலத்திலும் நடந்து செல்லா நிற்க –
ஒரு அத்யயன உத்சவத்துக்கு ஸ்ரீ ஆழ்வார் சில அனுபபத்திகள் யுண்டாகையாலே-ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளாமையாலே
ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்ரீ கோயிலிலே ஒரு ஸ்ரீ நம் ஆழ்வாரைத் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணி –
அத்யயன உத்சவத்தை நடப்பித்து
ஸ்ரீ திருமங்கை மன்னன் ஒழிந்த மற்றை ஸ்ரீ ஆழ்வார்களையும் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணுவித்து
திவ்ய தேசங்களிலும் -ஸ்ரீ ஆழ்வாரும் ஆண்டாளும் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளும் படிக்கு நியமித்து —

ஆழ்வார்கள்
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை –
திருவேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே –
ஏய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ -என்றும் –
திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –
திருவேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும்  தடங்குன்றமே  -என்றும் –
வெற்பென்று வேங்கடம் பாடும் -என்றும் –
தண்ணருவி வேங்கடம் -என்றும்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் –
வேங்கடத்துச்சி -என்றும்
இப்படி பல இடங்களில் ஸ்ரீ திருமலை ஆழ்வாரோடு-அதில் நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ எம்பெருமானோடு –
ஒரு விசேஷம் இன்றிக்கே தங்களுக்கு பரம ப்ராப்யம் என்று பிரதிபத்தி பண்ணியும் –

ப்ராக்ருத சரீரங்களோடு ஸ்ரீ திருமலையை ஸ்பர்சியோம் என்று திரு உள்ளக் கருத்தை அறிந்து –
ஸ்ரீ திருமலையிலே ஆழ்வார்களைப் திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணுவியாமல்
ஸ்ரீ திருமலை அடிவாரத்திலே -ஸ்ரீ அடிப் புளி ஆழ்வார் அருகே ஸ்ரீ திருமலை ஆழ்வாருக்கும்  ஸ்ரீ திரு வேங்கட முடையானுக்கும்
மங்களா சாசன பரராய்
ஸ்ரீ திரு மலை ஆழ்வாரோடு ஒரு திரு மேனிகளாய் எழுந்து அருளி இருக்கும் படி நியமித்தும் –அவர்களுக்கும் திருப் பிரதிஷ்டை செய்து அருளப் பண்ணுவித்தும்
அவர்களுக்கு நித்ய திரு வாராதனம்  கொண்டு அருளும் படிக்கும்

ஸ்ரீ கோயில் போலே மற்றும் திருப்பதிகள் தோறும் அத்யயன உத்சவத்திலே ஸ்ரீ திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்கள்
எல்லாம் தத் தத் காலங்களில் அனுசந்திக்கும் படிக்கும் –

ஸ்ரீ கோயில் முதலான திருப்பதிகளிலேயும் நித்யம் சாயம் காலத்தில் திருமாலை சாத்தி அருளி -திருவாலத்தி   கொண்டு
அருளுகிறதுக்கு உசிதமான ஸ்ரீ திருப் பல்லாண்டு பூச்சூடு காப்பீடும் -ஸ்ரீ பெரியாழ்வார் தாம் பரம பக்தி தலை எடுத்து அருளிச் செய்ததாய் –
உபக்ரம மங்களா சாசன பிரபந்த சமமாக -சென்னியோங்கு பத்து பாட்டும் –

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தில் ஈடுபட்டு அனுசந்தித்த
அனந்தரத்திலே பேறு பெறுகையால் உண்டான  ஏற்றம் அடைய ஸ்ரீ அமலனாதி பிரான் என்கிற பிரபந்தமும் –

ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் –என்கிறபடியே எம்பெருமானுக்கு நற்சீவனாய்-நமக்கு எல்லாம் பிரதான ஆசார்யரான
ஸ்ரீ நம் ஆழ்வார் விஷயமான -ஸ்ரீ கண்ணி நுண்  சிறுத் தாம்பு -என்கிற பிரபந்தமும் –

அந்தந்த திருப்பதிகள் விஷயமான திரு மொழிகளும் -சாயங்காலத்திலே நித்யம் அனுசந்திக்கும் படிக்கும்

ஸ்ரீ திருப் பதிகள் தோறும் திரு முளைத் திரு நாளிலே ஸ்ரீ பெருமாள் திரு வீதியிலே எழுந்து அருளும் போது
செந்தமிழ் பாடுவாரான ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ இயற்பா முதலாக ஸ்ரீ மூவாயிரமும்
எம்பெருமான் ஸ்ரீ புஷ்ப யாகம் கொள்ளும் போது வேதத்தோடு கூட ஸ்ரீ திருவாய் மொழியும் அனுசந்தேயம் என்றும்

(வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப் புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே”–என்றார் கம்பர்.)

விஸ்வாமித்திரன் -கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார்த்தூல -என்று
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகன் திருப் பள்ளி உணருகையை காண ஆசைப் பட்டு எழுப்பினால் போலே –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருப் பள்ளி யுணர்ந்து தம்மைக் குளிர கடாஷிக்க வேணும் என்று
நினைத்து அவன் ஸ்ரீ திருப் பள்ளி உணருகைக்கு அனுசந்தித்த ஸ்ரீ திருப் பள்ளி எழுச்சியையும்

ஸ்ரீ நந்த வ்ரஜத்தில் கோபிமார்கள் ஸ்ரீ கிருஷ்ணன் அழகிலே துவக்குண்டு -அத்தாலே அனன்யார்ஹைகளாய்-
மார்கழி நீராட -என்கிற வ்யாஜத்தாலே முற்பாடரை எழுப்பி -எல்லாரும் கூட -ஸ்ரீ கிருஷ்ணனை எழுப்பி –
அவன் பக்கலிலே தங்களுடைய சம்ஸ்லேஷத்தை அபேஷித்துப் பெற்ற படியே
அக் காலத்துக்கு பிற்பாடான ஸ்ரீ ஆண்டாள் அநுகார ரூபத்தாலே  அவர்கள் அனுபவத்தை அருளிச் செய்ததான ஸ்ரீ திருப்பாவையும் –
மார்கழி மாசம் தோறும் ஸ்ரீ கோயில்களிலும் கிருஹங்களிலும் சிற்றம் சிறு காலத்திலேயே ஸ்ரீ எம்பெருமான்
திருப் பள்ளி உணரும் போது நித்யம் அனுசந்திக்கும் படிக்கும் –

ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ திரு மங்கை மன்னனுக்காக ஸ்ரீ திருவாய் மொழிக்கு பண்ணின வேதத்வ அனுக்ரஹ மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ பெரிய முதலியாருக்கு வேதார்த்தங்களோடு துல்யமாக பிரசாதித்து அருளின ஸ்ரீ திருவாய் மொழி அர்த்தத்தை
ஸ்ரீ பெரிய முதலியார் சம்ப்ரதாயத்திலே கேட்டு அருளின அர்த்தத்தை  கிரந்தஸ்தமாக்க வேணும் என்று நியமித்த படியே
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளானும்-ஸ்ரீ விஷ்ணு புராண சங்க்யையாலே   ஒரு வியாக்யானம் இட்டு அருளி –

(தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாறும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை யன்றுரைத்த
தின்பமிகு மாறாயிரம்————-41-
32-எழுத்துக்கு கிரந்தம் படி என்று சங்கேதம்-விஷ்ணு புராணம் -6000 ஸ்லோகங்கள்)

திரு முன்பே வைத்து -ஸ்ரீ எம்பெருமானாரும் அத்தைக் கடாஷித்துத் திரு உள்ளம் உகந்து
நம்முடையார் எல்லாரும் இத்தை ஸ்ரீ பாஷ்யத்தோடு கூட அதிகரித்து -செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் -என்கிறபடியே
சம்ஸ்க்ருத திராவிட வேதாந்த த்வயத்தையும் பிரவசனம் பண்ணிக் கொண்டு போருங்கோள்-என்று இப்படி அநேகம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்மங்களை சகல தேசங்களிலும்  பிரவர்த்தனம் செய்து அருளியும்-

வ்யாகுர்வதா தேன விபச்சி தோகை வேதாந்த மவ்யாஹதவாக் விஹாரை ரங்கேச கைங்கர்ய துரந்தரேண
யதீஸ்வரேணே உஷிதம் அப்தா ஷஷ்டி -என்றும் -(60 வருஷம் ஸ்ரீ ரெங்கத்தில்)

ராமானுஜஸ் சப்த சதை யதீநாம் பீடைஸ் சதுஸ் சப்த திஸ் சமேதை -ஏகாந்திபிர் த்வாதசபிஸ் சஹஸ்ரை
ஸ்ரீ ரெங்க ஆஸ்தே எதி சார்வ பௌம-(700 யதிகள் –74 ஸிம்ஹாஸனாதிபதிகள் -12000 ஏகாங்கிகள்)என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்ரீ திரு வரங்கப் பெரு நகரில் அநேகம் முதலிகளோடே கூட வேதாந்தார்த்தங்களை எல்லாம் பிரகாசிக்கும்படி
வியாக்யானம் செய்து அருளிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செல்வமும் நித்ய அபிவ்ருத்தமாம் படி மங்களா சாசனம் செய்து அருளி வாழ்ந்து கொண்டு இருக்க –

பின்பு ஸ்ரீ எம்பெருமானார் அவதார சமாப்த்யந்தரம்-ஸ்ரீ பெருமாளுக்கும் ஸ்ரீ ரெங்க நாயகியாருக்கும் வர குமாரரான
ஸ்ரீ பராசர பட்டரும் -எல்லார்க்கும் ஆசார்ய குமாரரான ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் –
ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ கந்தாடை யாண்டான் -முதலானார்கள்

ராமாநுஜர்ய ஸ்ருதி மௌளி பாஷ்யமர்த்தம் ரஹஸ்யம் த்ரமிட ஸ்ருதேஸ்ச சம்ப்ராப்ய தேனைவ குரூ க்ருதாம்
ஸ்தான் பஜே சதுஸ் சப்ததி பீட சம்ஸ்தான் -என்கிறபடியே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சம்பந்தம் ஆகிற ராஜ குல மஹாத்ம்யம் யுடையராய்
அவர் சந்நிதியிலே உபய வேதாந்த அர்த்தங்களையும் லபித்து-ஆச்சர்ய பத நிர்வாஹகராய் இருந்து கொண்டு
ஸ்ரீ கோயிலிலே  எம்பெருமானாரை நித்ய சேவார்த்தமாகவும்-

ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம் -என்னும் அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன பிரவசனம் பண்ணிக் கொண்டு
வரும் காலம் எல்லாம் லீலா விபூதியிலே எழுந்து அருளி இருக்கிறார் என்கைக்காகவும்
ஸ்ரீ எம்பெருமானார் அர்ச்சா ரூபேண எழுந்து அருளும் படிக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனம் உண்டான படியாலும் –
அர்ச்சா ரூபேண திருப் பிரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணியும் –
மற்றும் திருப் பதிகள் தோறும் ஸ்ரீ எம்பெருமானாரை திருப் ப்ரதிஷ்டை கொண்டு அருளப் பண்ணு வித்தும் –

அர்வாஞ்சோ யத்பத சரசிஜ த்வந்த்வமா -ஸ்ரீ ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அன்வய முபகதா தேசிகா முக்தி மாப்தா -என்கிறபடியே
தம்முடைய திருவடிகளிலே சம்பந்த சம்பந்தம் உடையவர்களுக்கு எல்லாம் தாம் உத்தாரகராயும்
தமக்கு முன்புள்ள முதலிகளுக்கு பவிஷ்யதாசார்யாவதாரம் என்னும்படி உத்தாரகராயும் –

விஷ்ணுஸ் ததீய ஸூப குண நிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி- ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமலயுகம் பாதி இமயம் யதீயம் –
யஸ்மின் ராமானுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத் சிஷ்டம் ஸ்ரீ மத் குரூணாம் குலமித மகிலம்
தஸ்ய நாதஸ்ய சேஷம் -என்கிறபடியே
ஸ்ரீ பகவத் அவதாரத்துக்கு பிரதிநிதியான ஆசார்ய அவதாரமாய் இப்படி சகல ஜன ஜீவாதுவான
ஸ்ரீ எம்பெருமானார் விஷயமான ஸ்ரீ நூற்றந்தாதியை ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பை
அருளிச் செயல் நடுவே சேர்ப்பித்தால் போலே திவ்ய பிரபந்தங்களோடு ஒரு கோவையைச் சேர்ப்பித்து
அத்யயன உத்சவ அனந்தரத்திலே ஸ்ரீ இயற்பா அனுசந்தானத்தில் அனுசந்திக்கும் படிக்கும் –

ஸ்ரீ திருவாய் மொழி அனுசந்தான அனந்தரத்தில் ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு அனுசந்தேயம் ஆனால் போலே
தத் (ஸ்ரீ இயற்பா)அனந்தரம் இதையும் அனுசந்திக்கும் படிக்கும்
பிராமணனுக்கு நித்யம் காயத்ரி ஜபம் கர்த்தவ்யம் ஆனால் போலே பிரபன்னனுக்கு இதுவும் நித்ய அனுசந்தேயம் என்றும்
பேறு ஓன்று மற்றில்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்றும் -தாங்கள் அத்யவசித்து –
தங்களைப் பற்றினாற்கு உபதேசித்தும் இப்படிச் சரமார்த்த விசேஷங்களை எல்லாம் வெளியிட்டுக் கொண்டு –

படித்வா பாஷ்யம் தத் பிரவசனம் அசக்தௌ
சடரிபோர் கிரி ஸ்ரத்தா வாச ப்ரபு பரிசி தஸ்தாந நிவஹே  –
பிரபோ கைங்கர்யம் வா பிரபதந மநோர் அர்த்த மநனம் பிரபன்னானாம் வா மே பவது பரிசர்யா பரிசய
குடீம் க்ருத்வா தஸ்மின் யது கிரி தடே நித்ய வசதீஷ் ஷடர்த்தா  ஸ்ரீ சஸ்ய பிரபதந விதௌ சாதகதமா
இதி ப்ரோக் தேஷ் வேகம் ருசி விஷய மாலம்ப்ய பகவத் பராம் கால ஷேபம்

இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு யுண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பிதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி  சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை யுண்டாக்குதல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தின் யுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம் –

இதரமத நிரசன பூர்வகமாக
உபய வேதாந்தங்களையும் வியாக்யானம் செய்து அருளிக் கொண்டு ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளான
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களையும் பிரவசனம் பண்ணிக் கொண்டு -தத் தத் அதிகார அநு குணமாக ஹிதோபதேசம் செய்து
அருளிக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் தர்சனத்தை வர்த்திப்பித்துக் கொண்டு வந்தார்கள்
என்று ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாய் இருக்கும் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்  –

———–

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம் யஸ்ய கோபி: ப்ரகாஶாபிர் ஆவித்யம் நிஹதம் தம:திருமங்கை ஆழ்வார் தனியன்:

கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே இலங்கெழுகூற்றிருக்கை யிருமடலீந்தான் வாழியே இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியேதிருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:

அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்துரைத்தோன் வாழியே

அந்துகிலும் சீராவும் அணியுமரை வாழியே

மையிலகு வேலணைத்த வண்மை மிகு வாழியே

மாறாமல் அஞ்சலிசெய் மலர்க்கரங்கள் வாழியே

செய்ய கலனுடன் அலங்கல் சேர்மார்பும் வாழியே

திண்புயமும் பணியமர்ந்த திருக்கழுத்தும் வாழியே

மையல் செய்யும் முகமுறுவல் மலர்க்கண்கள் வாழியே

மன்னுமுடித் தொப்பாரம் வலயமுடன் வாழியே-திருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading