கீழ்த் திரு மொழியில்
மின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய -என்றும்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் -என்றும்
கனைத்த தீயும் கல்லுமலா வில்லுடை வேடருமாய் -என்றும்
சிங்க வேழ் குன்றத்தின் நில வெம்மையை அனுசந்தித்துப் பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
ஆழ்வீர்-தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
சொல்லிக் கொண்டு சிங்க வேள் குன்றத்தில் ஏன் துவளுகிறீர்-
தெழிகுரலருவித் திரு வேங்கடம் –
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –
தெண்ணிறைச் சுனை நீர்த் திருவேங்கடம் –
மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே-என்றும்
நெஞ்சு குளிரப் பேசும்படியான-திருவேங்கட மா மலையிலே நாம் அனைவருக்கும் எளிதாக சேவை சாதிக்கிறோம் –
அங்கே வந்து தொழுது ஆனந்தம் அடைவீர் என்று அருளிச் செய்ய -அங்கே பொய் அனுபவிக்கத் தொடங்குகிறார்
இத் திரு மொழியும் மேல் உள்ள மூன்று திரு மொழிகளும் ஆக நாற்பது பாசுரங்கள் திருவேங்கட மலை விஷயமானவை
தமிழ் பாஷை நடையாடும் இடத்துக்கு எல்லையாய் இருக்கும் இறே இத்திருமலை –
———————————————————
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-
விபவ அவதாரத்தில் விரோதி நிரசன வல்லனாய் இருந்தது போலே அர்ச்சையிலும் நம் விரோதிகளை நிரசிக்க வல்ல சமர்த்தன்
கோவலன் கோபாலன் –
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட
சாதாரணமான சங்குகள் -சங்க நிதி பத்ம நிதி என்னவுமாம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
திருப் பாற் கடல் நாதனே -கண்ண பிரான் -அவனே -திருவேங்கடமுடையான் என்கிறார்
புராணர்-பழையவர்
பரம போக்யமான திருமலை -அங்கே சென்று சேர் நெஞ்சே என்கிறார்-
—————————————————————–
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-
பூதனையை முடித்த தொட்டில் பருவம் -உட்காரவும் நிற்கவும் மாட்டாத சயனம் -பாற் கடல் -திருவரங்கம் –
அதற்கு மேல் நிற்கக் கற்ற நிலை -திருவேங்கடம் திரு மலையிலே காணத் தக்கது –
அவன் பெருகும் இடம் -இது முன் நின்ற நிலையில் அபிவிருத்தி
தரையிலே காலூன்றி நிற்கும் நிலை
தொட்டில் பிள்ளை பேய் உயிர் யுண்ட பின்பு நிற்கக் கற்றது திருமலை யிலே-என்று கருத்து-
அது எப்படிப் பட்டது -நாள் தோறும் தெள்ளியார் வந்து வணங்கும் படி
தெள்ளியார் –வேறு பலன்களை விரும்பாத ஸ்வரூப தெளிவை யுடைய பரமை காந்திகள் –
எவ்விதமாக த்யானிப்பர்
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலு நீர்மை –
கிருத யுகம் -வெளுத்த நிற
த்வாபர யுகம் -ஸ்யாமமான நிறம்
அப்படி அவர்கள் வந்து வணங்குவதற்கு இடமான திருமலையை அடை நெஞ்சே -என்கிறார் –
———————————————————————–
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-
சயனித்து அருளும்படியையும் நின்று அருளும்படியையும் கீழ்ப் பாட்டில் அனுசந்தித்தார்
நடந்து அருளும்படியை இப்பாட்டில் அனுசந்திக்கிறார் –
நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புத்ரர்கள் -நாரதர் சாபத்தால் –
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை -பொய்ம்மாய மருதான வசுரரை -பெரியாழ்வார் –
மருத மரங்கள் இற்று விழும்படி நடை கற்றவனும்
அப்போது தன் மேல் சிறிதும் தோஷம் தட்டாமல் தான் குறை ஒன்றும் இன்றிக்கே விளங்கியவனும்
திரு வாழியைக் கையிலே யுடையவனும்
எப்போதும் நித்ய ஸூரிகள் வந்து தொழப் பெற்ற திருவடித் தாமரைகளை யுடையவனும்
இந்த்ரன் பசிக்கோபம் கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆ நிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப் பொழுதிலே
போக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான
பெருமானுடைய திருவேங்கட மலையை நெஞ்சமே -அடைந்திடு -என்றார் ஆயிற்று –
————————————————————
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-
கை செய்திட்டு -கையும் அணியும் வகுத்து
பாண்டவர்களுக்காக பாரத யுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும் –
இப்படி ஆஸ்ரிதர்களுக்காக கார்யம் செய்யப் பெற்றதனால் திரு மேனி மிக விளங்கப் பெற்றவனும் –
இடைச்சிகளோடே ராச க்ரீடை என்கிற குரவைக் கூத்தை ஆடினவனும்
தன்னை துதிப்பவர்களின் நெஞ்சை விட்டு பிரியாதே இருப்பவனும் –
திரு விட வெந்தை திவ்ய தேசத்தில் இனிதாக எழுந்து அருளி இருப்பவனும்
ஆகிய எம்பெருமானுடைய -பல பல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூம் சோலைகளாலும் சூழப் பட்ட
திரு வேங்கட திரு மலையைச் சென்று சேர் மனமே –
ராசக்ரீடை -குரவைக் கூத்து
அங்கநா மங்கநா மந்தரே மாதவ -மாதவம் மாதவஞ் சாந்தரே ணாங்கநா-பல உரு எடுத்து கை கோத்து ஆடும் கூத்து –
——————————————————————–
வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-
வேண்டினார்க்கு வேண்டியபடி தானம் செய்கிற அசூர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய
யாக பூமியில் வாமன பிரமச்சாரியாய் சென்று கை நீட்டி மூவடி மண் தா என்று இரந்தவனும்
ஸூ க்ரீவனுக்கு நம்பிக்கை யுண்டாக்குவதற்காக சப்த சால வ்ருஷங்களை துளை படுத்தின மகா பலம் யுடையவனும் –
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக திவ்ய ஆயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக் கைகளை யுடையவனும்
திருக் கச்சி மா நகரில் அஷ்ட புஜகரம் என்கிற திவ்ய தேசத்தில் அஷ்ட புஜனாக சேவை சாதிப்பவனும்
இமய மலையிலே திருப் பிரிதி என்னும் திருப்பதியிலே எழுந்து அருளி இருப்பவனும்
திருமால் இரும் சோலையிலே வந்து நிற்பவனும் –
முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய துன்பத்தை தொலைத்தவனுமான
பெருமானுடைய திருவேங்கட திருமலையைச் சென்று சேர் மனமே
———————————————————————————
எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-
உலகங்கள் எல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாத படி அவற்றைத் தன் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
ஓர் ஆலந்தளிரிலே பள்ளி கொண்டவனும்
சந்த்ரனுக்கு நேர்ந்த ஷய ரோகத்தை போக்கி அருளினவனும்
அழகியான் தானே அரி வுருவன் தானே -என்கிறபடியே அழகிய கோரப் பற்கள் கூடிய மஹா பலசாலியான
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் திரு வவதரித்து
தன் வலியோடு ஒத்த வலியுடைய ஹிரண்யன் யுடைய மார்விலே திரு நகங்களை ஊன்றி
அவன் உடலைப் பிளந்தவனுமான பெருமான் யுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே
நம் சித்தாந்தத்தில் திக்குகள் தனியே இல்லை
திக்குகளை திரு வயிற்றிலே பெய்ததாகச் சொன்னது அவ்விடங்களில் யுள்ள பொருள்களை சொன்னபடி –
———————————————————————————
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-
சகல லோகங்களும் தான் இட்ட வழக்காய் யுள்ளவன் என்றபடி
சஹஸ்ர நாமங்களால் துதிக்கப் படுபவன்
கருமங்களுக்கு வசப்படாதவன்
தன் பெருமை எல்லாம் தோற்ற எழுந்து அருளி இருக்கும் திருவேங்கடம்
அஃது எப்படிப் பட்டது என்னில்
ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது
மேகங்கள் வந்து படியும்படியான ஓங்கின உயர்த்தியை யுடைய சோலைகளாலே சூழப் பட்டது
அந்த திருமலையை சென்று சேர் நெஞ்சே –
—————————————————————————
அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-
நீள் இதணம் -உயர்ந்த பரண்கள்
பஞ்ச பூத ஸ்வரூபி யானவன் -நித்ய ஸூரிகள் தலைவன் -அலர்மேல் மங்கை துணைவன் –
எழுந்தி அருளி இருக்கும் திருமலையை சென்று சேர்
குறத்திகள் மலைகளிலே வாசம் செய்பவர்கள்
பட்டி மேய ஒண்ணாத படி உயர்ந்த பரண்களில் இருந்து நிலம் காப்பார்கள் -ஸ்வபாவ உக்தி யாக அருளிச் செய்கிறார் –
————————————————————————–
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-
பேசுமின் திரு எட்டு எழுத்து -என்று பரோபதேசம் செய்து அருளுகிறார்
திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்தை அனுசந்தித்து
ஒரு கால் அனுசந்தித்து ஓயாமல் அநவரதம் பேசிக் கொண்டு இருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து
அவர்களுக்கு சம்சார சம்பந்தத்தைப் போக்கி திரு நாட்டிலே சம்சார சாம்ராஜ்யம் அளிக்கும் பெருமாள் எழுந்து அருளி இருக்கும்
இடத்தை முமுஷூக்களே நீங்கள் எல்லோரும் சென்று சேருங்கோள்-
திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே -திரு விருத்தம் -59
திரு நாமம் எட்டு எழுத்தும் பேசுமின் –
சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் பேசுமின் –
பேசும் இன் என்று பிரித்து -எல்லாருக்கும் பேச உரியதாய் இனியதான -என்று பிரித்து தம் மனசுக்கு சொல்வதாக கொள்வர்
வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-
ஒரு அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவார்க்கு –
அப்படியே இடர் வந்த போது எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு போரக் கடவதான இனிய
திரு நாமமான எட்டு எழுத்தையும் சொல்லி நின்று –
முமுஷூக்கள் அனைவரும் சொல்லும் அதிகாரம் யுண்டே
அம் நாராயணாய என்று -சிலரை சொல்லச் சொல்வது ஸ்திரீ சூத்ரர்கள் கூட சொல்ல அதிகாரம் யுண்டே
நமோ நாராயணாய மந்திர சேஷமும் வேத வாக்யமே
சர்வ தரமான் -கீதோ உபநிஷத்தும் வேத வாக்கியம்
நானும் சொன்னேன் நமரும் யுரைமின் நமோ நாரணமே -திருமங்கை ஆழ்வார்
பெரியாழ்வாரும் -4/11 திருப்பல்லாண்டில் நமோ நாரணா என்று அருளிச் செய்கிறார்-
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
ஆறாயிரப்படி -எம்பெருமான் திரு வடிகளை பெற நினைப்பார் திரு மந்த்ரத்தை சொல்லுங்கோள் -சாஷாத் மூல மந்த்ரமே
திரு அஷ்டாஷரம்-சகல பலப்ரதம் என்னும் இடம் குலம் தரும் என்கிற பாட்டிலே வ்யக்தம் -தேசிகன்
ஏக தேச கீர்த்தனமும் பூர்ண கீர்த்தன பர்யாயம்-என்று இறே விளங்கும் –
திரு அஷ்டாஷரம் பற்ற நெஞ்சு கனிந்து இருக்கை ஒன்றே காரணம் –
ஏகாஷரம்-பிரணவ பரம்
த்விபதாம் -நமோ நாராயணாய -மந்திர சேஷம் –
ஷட்பதம் -த்வய பரம்
இவை மூன்றும் தேவர்கள் கந்தர்வர்கள் மனுஷ்யர்கள் பசுக்கள் -பசு ப்ராயர்கள் -அறிவிலிகள் அனைவருக்கும்
உஜ்ஜீவிக்கைக்கு உரியர் -வேத புருஷன்-
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மால் இரும் சோலையே
நின் திரு எட்டு எழுத்தையும் கற்று -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் -என்றும் அருளிச் செயல்களில் யுண்டே-
பிரணவார்த்ததுக்கு எல்லோரும் அதிகாரிகள் -இடறினவன் அம்மே என்னுமா போலே இது சொல்லுகைக்கு
எல்லாரும் யோக்யர் -பிராயச்சித்த அபேஷை
ஆக இது தான் சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று – இல்லை -பரந்தபடி
இது -என்றது திரு அஷ்டாஷரமே
இதன் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் –
ரஹஸ்ய த்ரய சாரம் -சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு யுண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பிதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை யுண்டாக்குதல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தின் யுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம் –
பகவன் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் -அவை தான் வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –
அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் -இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு திரு மந்த்ரம் பிரதானம் –
இத்தை வேதங்களும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –
நாரணா -நாராயணா -நாராயணாய -நமோ நாராயணாய -பலவாறு இருந்தாலும் திரு அஷ்டாஷரத்திலே தான் நோக்கு
இத்தையே பெரியவாச்சான் பிள்ளையும் நிகமனப்படியில் அருளிச் செய்கிறார்
நாயனாரும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்
இங்கே மர்ம ஸ்பர்சி என்றது திரு மந்த்ரத்தையே-
திரு மந்த்ரத்துக்கு -சப்த சக்தியால் கார்யகரத்வமும் -அர்த்த சக்தியினால் கார்யகரத்வமும் யுண்டு
சப்த சக்தியால் கார்யம் கொள்வது தான் த்ரை வர்ண மாத்திர அதிகாரம்
அர்த்த சக்தியால் -சர்வாதிகாரம் –
ஓம் -அகாரம் -உகாரம் -மகராம் -ஆழ்வார் உடையவர் மா முனிகள் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -என்னவுமாம் –
—————————————————————–
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-
யௌவன பருவத்துக்குத் தகுதியாக சிறந்த நிறத்தை யுடைய கயல்கள் ஆனவை ஒன்றோடு ஓன்று களித்து
விளையாடப் பெற்ற சுனைகளை யுடைய திரு வேங்கட திரு மலையிலே நித்ய வாசம் பண்ணி அருள்கின்ற
பெருமானைக் குறித்து திருமங்கை மன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச் செய்த
இச் சொல் மாலையைத் தரித்து சொல்ல வல்லவர்கள்
இவ்விபூதியில் உள்ளளவும் ராஜாதி ராஜர்களாக விளங்கி பின்னை நித்ய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவார்கள்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-
சங்கை இன்றி
இத் திரு மொழிக்கு இவ்வளவு வைபவம் யுண்டோ என்ற சந்தேஹம் இன்றி பூர்ண விசுவாசத்துடன் ஓத வல்லவர்கள் –
சங்கை இன்றி வானுலகு ஆள்வார்கள் என்றுமாம் —
தத்த்யம் வட சொல்லே தஞ்சம் அதாகவே -உண்மையாகவே ஏற்றும் பொருள் கொள்ளலாம் –
வித்யா -என்ற வடசொல் விஞ்சை போலே தத்த்யம் தஞ்சம் ஆகுமே –
———————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply