அவதாரிகை –
கீழ்த் திரு மொழியிலே பாசுரம் தோறும்
திருவேங்கடம் அடை நெஞ்சமே –திருவேங்கடம் அடை நெஞ்சமே -என்று சொல்லி
திருமலையை ஆஸ்ரயிக்குமாறு தம் திரு உள்ளத்தைத் தூண்டினார் -அதுவும் அப்படியே இசைய –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்றால் போலே இருவரும் கூடி
திரு வேங்கடமுடையானை அனுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தார் –
சர்வ ஸ்வாமி யாய் -சர்வ வித பந்துவான திருமால் -இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிற படியாலே
நம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் இங்கே பெறலாம் என்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார் –
இப்படி வந்த ஆழ்வாரை -எதிர் கொண்டு அழைத்தல் -அணைத்தல் -மதுரமான ஒரு வார்த்தை சொல்லுதல் –
குசல பிரச்னம் பண்ணுதல் -கைங்கர்யத்திலே ஏவுதல் -ஒன்றும் செய்திலன் திருமலை அப்பன் –
அதனால் ஆழ்வார் மிகவும் திரு உள்ளம் நொந்து -சர்வஜ்ஞனாய் -சர்வ சக்தனாய் -நமக்கு வகுத்த நாதனாய் –
பிராட்டியை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாதவனாய்
இருக்கும் இப் பெருமான் இப்போது நம்மை உபேஷிப்பதற்கு காரணம் நம்முடைய கனத்த பாபங்களேயாக வேணும் –
மஹா பாபியான இவனை நாம் கடாஷிக்கலாகது என்று திரு உள்ளம் பற்றி இருக்கிறான் போலும் என்று நிச்சயித்து
அப் பெருமான் திரு உள்ளத்தில் இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார் –
பந்துக்கள் அல்லாதாரைப் பந்துக்களாக நினைத்தும் -போக்கியம் அல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும்
ஜீவ ஹிம்சைகளை அளவற பண்ணியும் – இன்னமும் பல்வகைப் பாபங்களைச் செய்தும் காலம் கழித்தேன் ஆகிலும் இப்போது
உன்னை விட்டுத் தரிக்க மாட்டாத அன்பு பிறந்ததனால் அனுதாபத்துடன் இவ்விடம் வந்து சேர்ந்தேன் –
இனி நீ என்னை என்னுடைய முன்னைத் தீ வினைகளைப் பார்த்து கைவிடல் ஆகாது –
நீயோ சர்வ ரஷகன் -நானோ அநாதன் -அநந்ய கதி –
என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டியும் -அகலகில்லேன் இறையும்-என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்து அருளி அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திரு வடிகளிலே புகுந்து சரணம் புகுகிறார் –
ஒன்பதாம் பாட்டிலே -மாயனே எங்கள் மாதவனே -என்று பிராட்டி சம்பந்தம் பிரஸ்துதமாய் இருக்கையாலே
புருஷகாரம் முன்னாகச் சரணம் சரணம் புகுகிறார் எனபது விளங்கும் இறே-
—————————————————–
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய் தந்தையும் அவரே
யினி யாவரே -திருவாய் -5-1-8- என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -திருவாய் -7-8-1-என்கிறபடியே
உன்னையே சகல வித பந்துக்களாகக் கொள்ள வேண்டு இருக்க
அது செய்யாதே தாயே -என்றும் தந்தையே என்றும் -தாரமே என்றும் -கிளையே என்றும் -மக்களே என்றும்
ஆபாசமான புத்ரமித்ராதிகள் இடத்திலே ஆசை வைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன் –
அவர்களுக்கு என்னை ரஷிக்க சக்தி யுண்டாகில் அன்றோ அவர்களால் நான் வாழ்வேன் –
உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக் கெட்டேன்-
இப்படி ஆபாச பந்துக்களை நம்பின படியால் அன்றோ நமக்கு கஷ்டங்கள் நேர்ந்தன –
நிருபாதிக பந்துவான எம்பெருமானைப் பற்றினோம் ஆகில் ஒரு குறையும் இராதே என்று இன்று நல்ல புத்தி உண்டாயிற்று
பரம போக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டு திருவடிகளிலே விழுகின்றேன்
அடியேனுடைய முன்னைத் தீ வினைகளைக் கணிசியாமல் -சராணாக தன் என்பதையே குறிக் கொண்டு
பரம கிருபையுடன் அடிமை கொண்டு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று
நாயேன் -நாய் போலே நீசன் என்று நைச்ய அனுசந்தானம் பண்ணுகிற படி இவ்விடத்தில்
பெரியவாச்சான் பிள்ளை -அருளிச் செயல் –
நான் செய்து கொண்ட படியைப் பார்த்தால் பிறர்க்கும் ஆகேன் -தேவர்க்கும் ஆகேன் –
புறம்பே போகில் கல்லை விட்டு எறிவார்கள் -உள்ளே புகுரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டி வரும் –
ராஜபுத்ரர்கள் -நாய்களையே மேல் விழுந்து விரும்புமா போலே
ராஜாதி ராஜனான நீயும் என் மேல் விழுந்து விரும்ப வேணும் -எனபது உள்ளுறை –
———————————————————-
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-
ஆபாச பந்துக்களை உற்ற உறவினராக நினைத்து இருந்த குற்றத்தை பொறுத்து அருள வேணும் என்று
சரணம் புகுந்தார் கீழ்ப் பாட்டில்
போக்யம் அல்லாத துர்விஷயங்களை போக்யம் என்று கொண்டு இருந்த குற்றங்களைப் பொறுத்து அருள வேணும் –
என்று சரணம் புகுகிறார் இதில் –
நெஞ்சு நஞ்சாய் இருக்கச் செய்தேயும் வெளி நோக்கை வெகு அழகாகச் செய்து ஆண் பிள்ளைகளை
ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண் வலையிலே அகப்பட்டு
அந்த மாதர்களை ஆதரிப்பதே பரம பிரயோஜனம் என்று கொண்டு
அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமும் செய்து தீர்த்தேன் –
உள்ள நரகங்கள் போராது-இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும் என்னும்படி
எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன் –
போக்யம் அல்லாத விஷயங்களிலே பிரமித்து ஈடுபட்டு அனர்த்தங்களை விளைத்துக் கொண்டோமே -என்று
அனுதாபம் தோன்றியதனால்
பரம போக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மை பெறுவோம் என்று நல் மதி யுண்டாகி
போக்யதைக்கு எல்லை நிலமாக உள்ள திருமலையிலே எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே வந்து சரணம் புகுந்தேன் –
பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று
நாநா வித நரகம்
சேதன வர்க்கங்களுக்கு தொகை இல்லாதா போலே ஏற்கனவே படைக்கப் பட்ட நரகங்களுக்ளும் தொகை இல்லை
அவை எல்லாம் என் ஒருவனுக்கே போராது என்னும்படி பாவங்களை செய்தேன்
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் சிருஷ்டிக்க வேணும் -பெரிய வாச்சான் பிள்ளை –
என் ஆனாய் –
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -திருவாய்மொழி
ஒப்புமை –
1- அபூர்வ வஸ்து -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
2- திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
3-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியை தானே தந்து அருளுவான் –
யானையும் தன்னைக் கட்ட கயிற்றை தானே தரும்
4-நீராட்டிய உடனே அழுக்கைப் போட்டு கொள்வது போலே பொய் நின்ற ஞானத்தில் நம் போல்வார்
திரு உள்ளத்தில் சேர முயன்று கொண்டே இருப்பவன் -வாத்சல்யத்தாலே
5-பெண் யானை கொண்டே யானையை பிடிப்பார் இவனுக்கும் உருஷகாரம் வேண்டுமே
6-பாகன் அனுமதியால் -வேதம் வல்லர்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பதிந்து -இவனுக்கும் –
7-யானையின் பாஷை யானை பாகனுக்கே தெரியும் -திருக் கச்சி நம்பி ஆறு வார்த்தை பேரருளாளன்
8- நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்கு
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் –
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே -திரு மழிசை ஆழ்வாருக்கு விதேயன்
9- யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை யுண்டே
10 -சேஷித்த பிரசாதம் பல கோடி ஜீவர்களுக்கு -யானை யுண்ட சேஷம் பல எறும்புகளுக்கு
11- இறந்த பின்பு உதவும் -தன்னுடைச்சோதி எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராண த்வாரா உதவுவான்
12- யானைக்கு ஒரு கையே -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை –
13-பாகனுக்கு ஜீவனம் சம்பாதித்திக் கொடுக்கும் -அர்ச்சகர் பரிசாரகர்கள் ஜீவனம் தந்து அருளுகிறான்
————————————————
கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-
ஜீவ ஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்து அருள வேணும் -என்று சரணம் புகுகிறார்
குறிக்கோள் ஆவது நம்பிக்கை
தேஹத்தில் காட்டிலும் வேறான ஆத்மா யுண்டு என்றும்
தெய்வம் யுண்டு என்றும்
சாஸ்திரம் யுண்டு என்றும்
புண்ய பாபங்கள் யுண்டு என்றும்
பாப பலன்களை அனுபவிக்க நரகங்கள் யுண்டு என்றும்
இவை ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல் எல்லை இல்லாத ஜீவ ராசிகளை கொலை செய்தேன்
உகந்த பெண்களை திருப்தி செய்ய பொருளீட்ட வழி மறித்து பிராணிகளைக் கொன்றேன் ஆகிலும்
பின்னை கூடி இருந்து குலாவும் பொழுது தேஹி என்று கவளம் இரந்தவர்களுக்கு ஒரு நாள் ஆகிலும் ஐயம் இட்டது இல்லை
இடா விடினும் இப்பொழுது கையில் இல்லை மற்று வேறு போது வந்தால் பார்ப்போம் போன்ற வார்த்தைகளை கூட சொல்ல வில்லை
இந்த பாவியிடம் இரந்தோமே என்று அவர்கள் நெஞ்சு புண்படும்படி திரச்காரமான வார்த்தைகளைச் சொல்லி விரட்டினேன் –
சரணம் புகுந்ததால் குளிர நோக்கி அருள வேண்டும்
இன்று வந்தடைந்தேன் என்னாதே அன்றே வந்தடைதேன் -என்றது
அநுதாபம் பிறந்தாதால்-பிராயச் சித்தம் பண்ணி யாதல் வருகை அன்றிக்கே
கொன்ற கை கழுவாதே -உதிரக் கை கழுவாதே வந்து சரணம் புகுந்தேன் -பெரிய வாச்சான் பிள்ளை –
—————————————————
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-
———————————————–
எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-
———————————————-
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-
செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமிகு யுடல் -என்றபடி புண்கள் நிறைந்து கிடக்கும் இது –
இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன் –
இனி ஒரு சரீரத்தையும் பரிஹரிக்க வல்ல சக்தி இல்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி
உன் திருவடிவாரத்தில் வந்து விழுந்தேன் -அடிமை கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –
——————————————————–
தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-
கிளர் ஒளி எளிமை கெடுவதன் முன்னம் -என்றும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே சதா -என்றும்
இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லி இருப்பதற்கு எதிர்தட்டாக பல தப்புக் கார்யங்களைச் செய்து விட்டேன் —
பிறகு யௌவனம் வந்து முகம் காட்டினவாறே -எந்த வஸ்துவைக் கண்டாலும் –
இது அவளுக்காகும் இது அவளுக்காகும் என்று பல வற்றையும் மாதர்க்காகத் தேடித் திரிந்து அலைந்து சதிர்கேடன் ஆனேன் –
போன காலம் எல்லாம் பழுதே போனாலும் இனியாகிலும் பிராப்த விஷயத்திலே தொண்டு பூண்டு அமுதம் உண்ண பெறலாம் என்று
திருவடிகளிலே வந்து சேர்ந்தேன் -ஆட்கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –
முதல் அடியை இரண்டு வாக்யமாகவும் உரைக்கலாம்
பாலகனாய் தெரியேன் -சில நாள் மிக்க இளம் பருவமாய் யுக்த ஆயுக்தங்கள் அறியாதே கிடந்தேன் –
பல தீமைகள் செய்துமிட்டேன் -சிறிது அறிவு யுண்டான பின்பு தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் –
அரியே -ஹரி என்னும் வடசொல் -பாபங்களை ஹரிப்பவனே -என்றும்
சிங்கம் போலே ஒருவராலும் அடர்க்க ஒண்ணாதவனே -என்றுமாம் –
—————————————————————
நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-
நோற்கையாவது -சங்கல்பிக்கை –
பல பிறவிகளை சங்கல்பிக்கை யாவது -பல பிறவிகள் யுண்டாகும்படி கருமங்களை செய்தலாம் –
இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டே வரச் செய்தே -யாத்ருச்சிக ஸூ க்ருத விசேஷத்தாலே உன்னைக் காண வேண்டும்
என்னும் ஆசை பிறந்தது இப்பிறவியிலே
அதனால் இதற்கு கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாது என்று நெஞ்சிலே பட்டது –
இதுவரையில் நடந்த வற்றையும் இனி நடக்கப் போகிற வற்றையும் நினைத்து சஹிக்க மாட்டாமல்
உன் திருவடிகளை வந்து பணிந்தேன் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்றார் ஆயிற்று —
உன்னைக் காண்பதோர் ஆசையினால் பல் பிறவி நோற்றேன் –இப்பிறப்பே ஏற்றேன் என்று அந்வயித்து
உன்னை சேவிக்க வேணும் என்று பல பிறவிகளில் நோன்பி நோற்றேன் –
இதுவரையிலே உன்னுடைய சேவை கிடைக்கப் பெற்றிலேன் – இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது –
கீழ்க் கழிந்த காலம் எல்லாம் வீணாப் போயிற்றே என்று இடர் உற்றேன் -என்றும் யுரைப்பார்
இதிலும் முன்னம் யுரைத்த பொருளே சிறக்கும் –
———————————————————–
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-
உன்னுடைய சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப் போன எனக்கு
ஓர் இடத்திலும் ஒரு வகையான ஆதாரமும் இல்லை –
ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் நிரூபகமே யாயினும் என் வரையிலே பாபமே நிரூபகமாம் படி
பாபங்களையே செய்து பாபிஷ்டன் ஆனேன் –
உன்னைப் பெறுதற்கு உறுப்பான உபாய விஷயத்தில் எள் அளவும் ஞானம் இல்லை –
நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரஷிக்க வல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாய் இரா நின்றாய் –
உனது குளிர்ந்த திரு உள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும்
பொறுப்பித்து ரஷிக்க வல்ல பெரிய பிராட்டியாரும் -அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
இப்படி இருக்கும் இருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பது யுண்டோ –
பற்றிலார் பற்ற நின்றானே -என்றபடி -ஆதாரம் அற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக் கூடிய நீயே
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –
பாவமே செய்து பாவியேன் ஆனேன்
பாவமே செய்து -என்றாவது -பாவியேன் ஆனேன் -என்றாவது இரண்டத்து ஒன்றைச் சொன்னால் போராதோ
பாவமே செய்து பாவியானேன் என்பான் என் என்னில் –
பாவம் செய்து புண்யாத்மாவாக ஆவதுண்டு -புண்யம் செய்து பாபிஷ்டானாக ஆவதும் யுண்டு –
தசரத சக்ரவர்த்தி அசத்ய வசனம் ஆகிற பாவத்துக்கு அஞ்சி சொன்ன வண்ணம் செய்கை யாகிற புண்ணியத்தைப் பண்ணி வைத்தும்
சாஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான ஸ்ரீ ராம பிரானை இழந்து ஆபாச தர்மத்தில் நிலை நின்றான்
என்கிற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமே யாயிற்று -பரமபத ப்ராப்திக்கு அனர்ஹனாய் விட்டான் இறே
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலனும் உள்ளதனையும் பாவமே செய்து போந்தாலும்
முடிவில் நல்ல பேறு பெற்றான் ஆதலால் அவனுடைய பாப்பம் எல்லாம் புண்யமாகவே போயிற்று –
ஆக இப்படி பாபம் செய்து புண்யசாலி யாவதும் -புண்யம் செய்து பாபிஷ்டன் ஆவதும் -யுண்டாயினும்
நான் பாவமே செய்து பாவியானேன் -அதாவது -தசரதனைப் போலே புண்யம் செய்து பாவியானேன் அல்லேன் –
சிசுபாலனைப் போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனும் அல்லேன்
செய்ததும் பாவம் -ஆனதும் பாபிஷ்டன் -என்கை-
முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் ஏல் அசை சொற்கள்
மாதவன் -பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுகிறார் -மா -பிராட்டிக்கு -தவன் -நாயகன் என்றபடி-
—————————————————
கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -என்றபடி
ஏழு உலகத்தவருக்கும் கண் போன்றவனும் –
உயிர் போன்றவனும் -ஆன-திருவேங்கட முடையானைக் குறித்து
திருமங்கை மன்னன் அருளிச் செய்த -இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்கு
பாவங்கள் எல்லாம் பறந்து போம் என்று இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் ஆயிற்று –
————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply