நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!
பொ-ரை :- தாய்மார்களே! இவள், பார்க்கும் இடங்கள் தோறும் கரும்புகளும் செந்நெலும் உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த தாமிரபரணியின் வடகரையிலுள்ள திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திவ்வியதேசத்தைப் பார்ப்பாளேயானால் அந்தத் திசையையே அன்றி வேறு ஒருதிசையையும் பார்த்து அறியாள், கழிகின்ற நாள்தோறும் வாயிலே வைத்துப் பேசுகின்ற வார்த்தைகளும் நீலமணிபோன்ற நிறத்தையுடைய எம்பெருமானது திருப்பெயர்களேயாகும்.
ஈடு :- ஆறாம்பாட்டு. 1வலிமை இல்லாமையாலே முதலிலே பார்க்கமாட்டாள், பார்த்தாளாகில் மற்று ஓரிடமும் பாராள் என்கிறாள்.
நோக்கும் பக்கம் எல்லாம் – 2பார்த்த பார்த்த இடமெல்லாம். “திருப்பொருநல் நோக்கும் பக்கமெல்லாம்” என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர். கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை – கரும்பும், அதனோடே இசலி வளர்கிற செந்நெலும், இரண்டற்கும் நிழல்செய்கின்ற செந்தாமரையும். வாய்க்கும் – நிறைந்திருக்கும் என்னுதல்; இட்டன எல்லாம் நூறு கிளைகளாகப் பணைக்கும் என்னுதல். தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்=சிரமஹரமான திருப்பொருநல் வடகரையிலேயான ஐசுவரியத்தையுடைய தொலைவில்லி மங்கலம். நோக்குமேல் அத்திசை அல்லால் மறுநோக்கு இலள் – முதலிலே நோக்க வலியுடையள் அல்லள்; வருந்திப் பார்த்தாளாகில் அத்திக்கை ஒழிய முகம் எடுத்துப் பார்க்கிறிலள். வைகல் நாள்தொறும்-கழிகிற நாள்தோறும். வாய்க்கொள் வாசகமும்-வாயாலே சொல்லுகிற சொலவும். மணிவண்ணன் நாமமே – வடிவழகுக்கு வாசகமானவற்றையே சொல்லாநின்றாள். 1குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லாநின்றாள். 2இவள் நிலை எது? நம் நிலை எது? உங்களது சொரூப ஞானம்; இவளது உருவஞானம்.
பார்க்க சக்தி இல்லை
பார்த்தால் அந்த திக்கையே பார்த்து
பொருநல் நதி கரை பக்கம் எல்லாம்
திவ்ய தேசம் பக்கம் எல்லாம்
கரும்பு செந்நெல் தாமரை -ஒன்றுடன் ஓன்று பொருந்தி
சமிர்த்தம்
நன்றாக
வாய்க்கும் ஸ்ரமஹரமான பொருநல்
வாடா கரையில் உள்ளதிவ்ய தேசம்
நோக்குமேல் -சக்தி இல்லை
வருந்தி பார்த்தால் அந்த திகை விட -வைகல் நாள் தோறும்
மணிவண்ணன் திரு நாமமே சொல்லிக் கொண்டு
குணம் விபூதி விஷயம் இன்றி வடிவு அழகை மட்டுமே சொல்லிக் கொண்டு
ரூப ஞானம்
நாம் ஸ்வரூப ஞானத்தால் அடிமை பட்டமை உணர்கிறோம்
தேக ரூபா ஞானம் மட்டும் இருந்தால் ஸ்வ தந்த்ரன்
ஆழ்வார் எம்பெருமான் ரூப ஞானத்தால் அடிமை பட்டு
வடிவு அழகில் மட்டுமே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply