நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணைமிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே.
பொ-ரை :- எல்லா உலகங்கட்கும் நாயகனாய், எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் தன் வயிற்றினுள் வைத்துப் பிரளயம் நீங்கினவுடனே அவற்றை உமிழ்ந்தவனாய், சராசரங்கள் அனைத்துமாய், அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன்பக்கல் தட்டாதவனுமாய் இருக்கின்ற கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட பரிசுத்தமான ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களால் குற்றமின்றிப் பக்தர் ஆவார்கள்.
வி-கு :- வாயகம் – வாயிடம். புகவைத்தல் – செலுத்தல்; உண்டு என்றபடி, தூய – பரிசுத்தமான. துவள் – குற்றம்.
ஈடு :- முடிவில், 1கிருஷ்ணனுடைய செயல்களைப் பேசின இப்பத்தும் கற்றார், தம்மைப் போன்றே கிருஷ்ணபக்தராவர் என்கிறார்.
முழு ஏழ் உலகுக்கும் நாயகன் ஆய் – சேதந அசேதநங்கள் எல்லாவற்றையும் நியமிக்கின்றவனாய். முழு ஏழ் உலகும் தன்வாயகம் புக வைத்து உமிழ்ந்து – பிரளயாபத்தில் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளிருந்து நெருக்குப் படாமல் வெளிநாடு காணப் புறப்பட விட்டு. அவையாய் – எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்கிற சொல்லிலே அடங்கும்படி அவற்றைப் 2பிரகாரதயா சரீரமாகவுடையனாய் அவை அல்லனுமாய் – இப்படி இருக்கச்செய்தே அவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாயிருக்கின்ற. கேசவன் அடியிணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன – கேசி என்னும் அசுரனைக்கொன்ற சர்வேசுவரன் திருவடிகளிலே. 3“மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேசுவரத்வத்தையும், இத்திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர். அன்றிக்கே,
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல், தூய ஆயிரத்து இப்பத்தால் துவள் இன்றிப் பத்தர் ஆவர் – இப்பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர். இப்பத்தினையுடைத்தாகையாலே தூய்மையையுடைத்தான ஆயிரம் என்னுதல்; அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையையுடைத்தான இப்பத்து என்னுதல். துவள் இன்றியே பத்தர் ஆவர் – துவள் – குற்றம். குற்றம் இல்லாமையாவது, வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
குரவைமுத லாம்கண்ணன் கோலச் செயல்கள்
இரவுபகல் என்னாமல் என்றும் – பரவுமனம்
பெற்றேன்என் றேகளித்துப் பேசும் பராங்குசன்தன்
சொற்றேனில் நெஞ்சே! துவள்.
கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிற இத்திருவாய்மொழியில், சர்வேசுவரனாந்
தன்மையைச் சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. என்றது, ‘நாயகன் முழுவேழ்
உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல்குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேசுவரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய
கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக்கட்டுகிறார்
என்றபடி. மேலதற்கே, வேறும் ஒருவகையில் விடை அருளிச்செய்கிறார்
‘எல்லா வுலகங்கட்கும்’ என்று தொடங்கி. என்றது, உலகத்தைப் படைத்தல்
காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறவன்
கண்ணபிரானே என்று சொல்லுகையாலே, இத்திருவாய்மொழியிற் கூறிய
கிருஷ்ணன் செயல்களையே, இப்பாசுரத்திலே அநுபாஷித்துத்
தலைக்கட்டுகிறார் என்றபடி. ‘கிருஷ்ணவிஷயமே சொல்லுகிறது’ என்றது,
இப்பாசுரம் முழுதும், கிருஷ்ணனுடைய செயல்களையே கூறுகிறது என்றபடி.
“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”
என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.
தம்மைப் போலே கிருஷ்ண பக்தர் ஆவார்
முழு உலகுக்கும் நாயகன்
உண்டு ரஷித்து
சர்வ வஸ்துக்களும் தான் என்று அடங்கும்படி உமிழ்ந்து
அவை அந்தர்யாமி -அல்லன் -தோஷம் தட்டாமல் கேசவன்
கேசி ஹந்த சர்வேஸ்வரன்
கீழ் திருவாய்மொழியில் சொன்ன சர்வேஸ்வரனே கிருஷ்ணன்
பூரணமாக கிருஷ்ண விருத்தாந்தம் இப்பத்து
குற்றம் இன்றி கற்றவர்
அவதாரந்தம் போகாத குற்றம் இல்லாதபடி
கிருஷ்ண பக்தர் ஆவார்
சாரம் –
குரவை முதலா கண்ணன்
செயல்கள் இரவும் பகலும்
என்னும் பராங்குசன் சொல் தேனில்
நெஞ்சே துவள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply