ஒருநாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான், திருப்பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக் கொண்டுவந்து எம்பெருமானார்க்குக் காட்ட, மிக உவந்தாராய், அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு, ‘நாயன்தே! இவன் திருஅரைக்குத் தகுதியாம்படி வாட்டினபடி திருக்கண் சார்த்தியருளவேணும்,’ என்று இவற்றைக் காட்டியருள, கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி, ‘இவனுக்காக, ரஜகன் நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்!’ என்று திருவுள்ளமாயருளினார்.
‘நம்மைப் போலே வாய்புகுசோறாகப் பறிகொடாதே, பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர்.
நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக்கழுத்திலே புக்கபடியைக் கண்டு, ‘சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரிய திருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னாமோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா! தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப்போகச் செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச்செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய் முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ
என்று வாசலிலவர்களைக் கேட்க, அவர்கள், ‘கண்டிலோம்’ என்ன, அதுவே ஹேதுவாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?
இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார்காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு, மேகத்தைக் கண்டவாறே மோஹித்து விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து, அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு, ‘இவர் தன்மை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவாருண்டோ!’ என்றான்.
ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற்போலேகாணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது.
‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்; ‘இவன் புகுராவிடில் நாம் உளோமாகோம்’ என்கிறார் பெருமாள்; இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க, ‘இருவரும் சரணமாகப் பற்றினவர்களை விடோம் என்று மாறுபடுகிறார்கள் காணும்’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை.
‘இராவணன் மாயா சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப்பெண்களைப் போன்று சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாயிருந்தது; இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடியவன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க, ‘அவதாரத்தில் மெய்ப்பட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானமின்றியிலே ஜீவிக்கைக்கு ஏது அவருடைய சத்தையாகையாலே உளளாயிருந்தாள்; இவ்வர்த்தம் மெய்யாகில் சத்தையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.
பிள்ளையுறங்காவில்லிதாசருடைய குடிமகன் ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்து நலிந்தவாறே ‘உனக்கு வேண்டுவது என்?’ என்று கேட்க, எனக்குப் பாலும் பழமுமாக உண்ணவேணும்; சாந்தும் புழுகும் பூசவேணும்; நல்ல புடைவை உடுக்க வேணும்; தண்டு ஏறவேணும்; அணுக்கன் இடவேணும்,’ என்ன, அவர்களும், ‘அப்படியே
செய்கிறோம்’ என்றும் பிள்ளையின் திருமாளிகையிலே வந்து, சாந்து, புழுகு, ஆபரணம் முதலானவைகளை வாங்கிக் கொண்டு போய் அவற்றை அலங்கரித்துச் சாந்தியும் செய்துவிட்டு வந்த அந்த இரவு, பண்டையிலும் இரு மடங்கு அதிகமாக அவனை வலிக்க, ‘இது என்?’ என்று கேட்க, ‘பிள்ளை சார்த்திக்கொள்ளுகின்றவற்றையெல்லாம் கொண்டு வந்தீர்கோள்; அவர்க்குச் சார்த்துகிற அணுக்கனை இட்டீர்கோள்; நான் அதன்கீழ்ப் போவேனோ? என்னை வெயிலிலே கொண்டு போனீர்கோள்; என் உடம்பிலே நெருப்பை வழியட்டினாற்போலே அவர் சார்த்துகிறவற்றைப் பூசினீர்கோள்; அரிகண்டம் இட்டாற்போலே அவர் சார்த்துகிற ஆபரணத்தைப் பூட்டினீர்கோள்; நீங்கள் செய்த செயலுக்கு இவனைக்கொண்டல்லது போகேன்,’ என்று வலித்ததாம்.
ஆய்ச்சி மகனுடைய அந்திம காலத்தில் பட்டர் ‘அறிய’ என்று எழுந்தருளியிருந்தாராய், தம்மை அறியாமலே கலங்கிக் கிடக்கிறபடியைக் கண்டு, பெருமாளிடத்தில் இவருடைய பத்தி இருந்தமையைத் தாம் அறிந்திருக்கையாலே, மெள்ளச் செவியில் ஊதினாற்போலே, ‘அழகிய மணவாளப் பெருமாளே சரணம்!’ என்றாராம்; பின்னர், அதிலே உணர்த்தியுண்டாய் நெடும்போதெல்லாம், ‘அழகிய மணவாளப்பெருமாளே சரணம்!’ என்று கூறிக் கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினாராம்.
வண்டரும் சொண்டரும் என்கிறவர்களுக்கு அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளையுறங்காவில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே நினைப்பது. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித் ‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும் மெய் என்று திருவடி தொழுது, அது அமணன் பாழி என்று அறிந்தவாறே மோஹித்து விழ, பிள்ளையுறங்காவில்லிதாசர் தம் ஸ்ரீ பாததூளியை அவர்களுக்கு இட, உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.
திருக்கொட்டாரத்தின் அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத்திருவாய்மொழி அருளிச்செய்கிறாராய் இப்பாசுரத்தளவிலே வந்தவாறே,தேர்ப்பாகனார்க்கு என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை இட்டு நீக்கிக்கொள்ளாமல், ‘மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்? நோய்க்கு நிதானம் ஒன்றும் பரிஹாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் கேட்டேன்; ‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே, ‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப் பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே தேற்றிப் பின்னை அவரைக் கொடுவந்து காட்டுவதாகக் காணும்,’ என்று அருளிச்செய்தார்.
‘ஆழ்வான் பணித்த வரதராஜஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார், ‘இப்பாசுரங்கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான்! உன் முகத்தைக்காட்டிக்காணாய்,’ என்று பார்த்தருளினார்.
நஞ்சீயர் இவ்விடத்தில் அருளிச்செய்வதொரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே அன்று அப்படியே இத்தை விரும்பினவன், இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்,’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள் என்பது.
ஆழ்வான், தான் ஓரிடத்திலே வழியிலே போகாநிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, ‘இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்.
‘ஒரு குருவி பிணைத்த பிணை, ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறதில்லை; ஒரு சர்வ சத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை அவனைக் காற்கட்டாதே, இவ்வெலியெலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக்கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.
மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது; என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன, ‘நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின அபராதத்தாலேகாண்’
என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்ற விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றைப் பேச, ‘எனது தலையை அறுப்பதைக்காட்டிலும் பெரிது இந்த வார்த்தை!’ என்கிறபடியே, ‘என் தலையையறுத்து என் கையிலே தந்தாயாகில், ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன் யான்; என் முன்பே பகவானை நிந்தை செய்தாய். நீ ராஜ்யப்பிரஷ்டனாவாய்!’ என்று சபித்துவிட்டான்; இதனை இப்படியே பட்டர் அருளிச்செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றதனைச் சபியாமல், ‘ராஜ்யத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’ என்று சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகையேயன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவேயன்றோ?’ என்று அருளிச் செய்தார்.
ஒருவன் பகவானைத் தியானம் செய்து கொண்டிருக்கச் செய்தே, ‘இவன் சமாதியில் நின்ற நிலை அறியவேணும்’ என்று பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்; ‘சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்,’ என்னுமிடம் அறியானேயன்றோ. கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே? வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை ஆஸ்ரயித்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக்காண் நான் ஆஸ்ரயிக்கிறது; இப்படி வழியிலே போவார்க்கெல்லாம் பச்சையிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்; இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானேயன்றோ?’
பகவானிடத்தில் சரணாகதி செய்து ஞானாதிகராயிருப்பார் ஒருவர் இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய், அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித்திருந்தாராய், தேவியானவள், ‘நீர் சர்வாதிகராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக்கொண்டிருந்தானே!’ என்ன, தேவனும், ‘பகவத் பக்தன் போலேகாண்’ என்ன ‘தேவியும்,
‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன, இருவரும், இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும் வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாயிருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே!’ என்ன, ‘அழகிது! அவையெல்லாம் செய்யக் கடவன். மோக்ஷம் தரலாமோ?’ என்ன, ‘அது நம்மாலே செய்யலாமதன்று; பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெறவேண்டும்,’ என்ன, ‘ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது? நம்மால் செய்யப் போகாது,’ என்ன, ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி அனுக்கிரஹித்து நடக்குமித்தினை,’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற்கண்ணைக் காட்ட, இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார் என்ற சரிதம் இங்கு அநுசந்திக்கத்தகும்.
யயாதி சரித்திரத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச் செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும், ‘வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாக வெளிப்போந்த பிரபந்தங்களில் இது எந்த அர்த்தத்தை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க, ‘புன் சிறு தெய்வங்கள் தந்தாமை ஆஸ்ரயித்துப் பெற்றாலும் பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால் அது பொறுக்க மாட்டார்கள்,’ என்றும், சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்,’ என்றும் சொல்லி, ‘ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் வணங்கத் தக்கவர் அல்லர்; இவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன் என்னும் அர்த்தத்தைச் சொல்லுகிறது,’ என்று அருளிச்செய்தார்.
‘யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே, ‘கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடு வந்து கொடுத்துச் செய்யாதன இல்லை! பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம் அங்ஙனே ஆகிறதோ!’என்று அஞ்சியிருந்தோம்’ என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்சவேண்டா; அவர்கள், ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக்கொண்டு விரும்புகையாலே அவர்களுக்குத் தேகம் எல்லையாய்விட்டடது; நாம் சொரூப ஞானத்தாலே, நித்தியனான ஆத்துமாவுக்கு வகுத்த பேறு பெற வேணும் என்று பற்றுகையாலே, பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச்செய்தார்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply