இடர்இன்றி யேஒரு நாள்ஒரு போழ்தில்எல்
லாஉல கும்கழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிக னும்உடன்
ஏறத்திண் தேர்கடவிச்
சுடர்ஒளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
ஒன்றும் துயர்இலனே.
பொ-ரை : ‘ஒரு நாளிலே ஒரு முகூர்த்தத்திலே, துன்பம் இல்லாமல், எல்லா உலகங்கட்கும் அப்பால் படர்ந்த புகழையுடைய அருச்சுனனும் பிராமணனும் தன்னுடன் ஏறி வரும்படியாகத் திண்ணிய தேரைச் செலுத்தி, ஒளிப்பிழம்பாய் உள்ள தனது பரமபதத்தில் தங்கியிருந்த பிராமணனுடைய பிள்ளைகளைச் சரீரத்தோடும் கொண்டுவந்து கொடுத்த இறைவனை அடைக்கலமாக அடைந்து சிறிதும் துயர் உடையேன் அல்லேன்,’ என்கிறார்.
வி-கு : ‘இன்றி ஏறக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும், ‘கழியக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும் முடிக்க, கொடுத்தவன் – வினையாலணையும் பெயர்.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 1பிராமணனுடைய புத்திரன் நிமித்தமாகச் சென்ற செலவைக் கூறிக்கொண்டு, ‘இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை,’ என்கிறார்.இடர் இன்றியே – ஒரு வருத்தமும் இல்லாமல். ஒரு நாள் – ஒரே நாளில் செய்யும் தீக்ஷையையுடைய யாகத்திலே. ஒரு போழ்தில் – காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்து நடுப்பகலில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடிப்பதற்கு முன்னே. எல்லா உலகும் கழிய – ஆவரணங்கள் ஏழற்கும் அப்பாற்பட. படர் புகழ் பார்த்தனும் – புகழையுடைய அருச்சுனனும். 1‘மூன்று உலகங்களுக்கும் நாதனும் ஜனார்த்தனனுமான ஸ்ரீ கிருஷ்ணன் எவனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சிநேகிதனாயும் இருக்கிறானோ’ என்கிறபடியே, கிருஷ்ணனையே எல்லாவித உறவுமாகப் பற்றினவன் ஆதலின், ‘படர் புகழ்ப் பார்த்தன்’ என்கிறார். வைதிகனும் – கிருஷ்ணன் திருவடிகளிலே எல்லை இல்லாத பத்தியையுடைய பிராமணனும். உடன் ஏற – தன்னோடே கூட ஏற. திண் தேர் கடவி – இவர்களைத் தேரிலே ஏற்றிக்கொண்டு, காரியத்தின் தன்மை குலையாமல், மூலகாரணமான பிரகிருதி முடிவாகத் தேருக்குத் திண்மையைக் கொடுத்து நடத்தி. 2மண் பிண்டமாய் இருக்கும் நிலையிலும் குடம் தொடர்வதைப் போலே.
சுடர் ஒளியாய் நின்ற – எல்லை இல்லாத ஒளி உருவமாய் ஒரே தன்மையாய் நின்ற. ஒளி – அழகு. தன்னுடைச்சோதியில் – தனக்கே உரியதான சிறப்பையுடைய பரமபதம். அன்றிக்கே, ‘தன்னுடைய ஒளி வெள்ளம் இட்டாற்போன்று இருக்கின்ற பரமபதம்’ என்னலுமாம். 3‘சூரியன் சந்திரன் அக்கினி இவர்களைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டமானது தன்னுடைய ஒளியினாலே தேவர்கள் முதலியோர்களாலும் காண்டற்கு அரியதாகி விளங்குகிறது,’ என்கிறபடியே, ஆயிரம் கோடி அக்கினி ஆதித்தியர்களுடைய ஒளியை ஓடவைத்து ஒரு தேசமாக வகுத்தாற் போலே இருக்கையாலே இவர்களுக்குக் கண்கொண்டு பார்க்க வொண்ணாது; ஆகையாலே, மூலப்பகுதியின் அளவிலே இவர்ளை நிறுத்தி, தன் நிலமாகையாலே தானே போய்ப் புக்கான். தண்ணீரிலே மீன் உலாவுமாறு போன்று தேசிகரே புகவேண்டும் நிலம் அன்றோ அது?
வைதிகன் பிள்ளைகளை – பிரமாணனுடைய புத்திரர்களை. 1உடலொடும் கொண்டு கொடுத்தவனை – காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன். அன்றிக்கே, ‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல். ‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள் ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர்காணும்’ என்று அருளிச்செய்தார். பற்றி ஒன்றும் துயர் இலனே – 2கடலில் நீரை மலையின்மேலே ஏற்றுமதுவே வருத்தமுள்ளது; மலையில் உள்ள நீரைக் கடலுக்குக் கொண்டு வருமன்று ஒரு வருத்தம் இல்லையே? அப்படியே, அங்குப் புக்காரை இங்கே மீட்கையாகிறது அவன் திருவுள்ளத்தோடு சேராதது; இங்குள்ளாரை அங்கே கொண்டுபோகையாயிற்று அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்துவது.புத்திரன் நிமித்தமாக விரும்பியதைப் போன்று அன்றி, சொரூபத்திற்குத் தகுதியாக அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தின செயலை ஆசைப்பட்ட எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார். கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று. ‘ஆயின், கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று. அன்றிக்கே, 2‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, 3‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும், 4‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், 5‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும், 6‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் என்னுதல்.
தாளாற் சகம்கொண்ட தார்அரங் கா!பண்டு சாந்திபன்சொல்
கேளாக் கடல்புக்க சேயினை மீட்டதும், கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தரை மீட்டதும், மாறலவே
மீளாப் பதம்புக்க மைந்தரை நீஅன்று மீட்டதுவே?’
என்றார் திவ்விய கவியும்.
அகடிகடதனா சாமர்த்தியம்
வைதிக புத்திரன் மீட்டிய வ்ருத்தாந்தம்
இடர் இடறி எல்லா உலகும் தாண்டி திண் தேர் கடாவி
தன்னுடைச் சோதி
உடலோடு கொண்டு கொடுத்தான் –
பிறப்பகத்தே -பெரியாழ்வார்
வேத வாய் –அந்தணன் கலியன்
தீஷையில் இருந்த பொழுதில் –
அண்ட கடாகம் தாண்டி
பார்த்தன் -புகழ் கிரிஷ்ணனை சர்வ வித பந்துவாக கொண்ட படர் புகழ்
திண்ணிய தேர் பரம பதம் வரை போகும்
பிரகிருதி பர்யந்தம் போகும் வரை –
சூஷ்ம நிலை அடையாமல்
சுடர் ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமாய்
நின்ற =ஏக ரூபமாய் நின்ற அழியாத
தன்னுடைய காந்தி வெள்ளம் இட்டபடியாய் இருக்கை
ஆயிரம் கோடி அக்னி ஆதித்யன் தேஜஸ் ஓட வைத்து -தேசமாக வகுத்தது போலே –
உள்ளே வந்தால் கண் தெரியாதே வெளியில் நிறுத்தி –
தமஸ் அளவில் இவர்களை நிறுத்தி –
தன்னுடை -தன்னிலம் ஆகையால் ஜலத்திலே மத்ஸ்யம் உலாவுவது போலே
தேசிகரே புக முடியும்
உடலோடு கொண்டு -சௌலப்யம் சேவிக்க பிராட்டிமார் ஆசைப்பட்டு
கொண்டு போகும் படியில் ஒன்றும் குறையாமல் கொண்டு வந்து கொடுத்தான் –
நான்கு குழந்தைகளும் ஒரே வயசாம் திரும்பும் பொழுது
கால தத்வம் நடையாடாத தேசம் என்பதால் –
பட்டர் -உடுத்தின பட்டும் -பூசின மஞ்சள் -இட்ட காதணிகள் -பூணல் உடன்
பிறக்க பிறக்க கொண்டு போனார்கள் ஆனால் இவை எல்லாம் உண்டோ –
கேட்க நஞ்சீயர்
ரிஷி புத்ரர் என்பதால் பிறக்கும் பொழுதே பிறந்தார்கள்
அப்படி செய்தவனைப் பற்றி எனக்கு குறை இல்லை
அங்கு உள்ளாரை கொண்டு வந்தவன் இங்கு உள்ள என்னை கொண்டு போவது கஷ்டம் இல்லை
சமுத்திர நீரை சகயம் ஏற்றுவது
அங்கு புக்காரை இங்கு சேர்ப்பது அவன் திரு உள்ளத்துக்கு சேராது
இங்கு உள்ளாரை அங்கு கொண்டு போக அவன் திரு உள்ளம்
நச புன ஆவர்திதே -சங்கல்பத்தால் செய்யலாம் –
புத்ராதி மீட்டுக் கொடுக்க ஆசை இல்லை
கைங்கர்யம் கேட்கிறேனே கொடுப்பான்
கர்ம சம்பந்தம் அற்று போனதால் மீண்டார்கள் புத்ரர்கள்
கர்ம சம்பந்தம் -நாய்சிமார் தங்கள் ஸ்வா தந்த்ர்யம் காட்ட
அங்கன் அன்றிக்கே
நான் திரும்ப மாட்டேன் –
மீண்டு வரும் துக்கம் இல்லை
இந்நின்ற நீர்மை இனி யான் உறாமை
மங்க ஒட்டு
பாடின ஆழ்வார் மடி பிடித்து கூப்பிடும்படி விரக்தி
எம்பெருமான் ஆசையும் -காதல் கடலில் மிக பெரியதாய்
ஏழு கடலும் -அதனில் பெரிய என் அவா -ஆசை வளர்ந்து போக
துக்க்ம் ஒன்றும் இல்லை
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply