திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வேயின் மலிபுரை தோளிபின் னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லைஇ லாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன்என் வாய்கொண்டே?

பொ-ரை : ‘பசுமையாலும் திரட்சியாலும் செவ்வையாலும் மூங்கிலைக்காட்டிலும் மேம்பட்டுத் தனக்குத்தானே ஒத்த தோள்களை உடையவளான தப்பின்னைப் பிராட்டிக்குக் கேள்வனான இறைவனுடைய எல்லை இல்லாதனவான பொருந்திய பெரிய புகழைப் பாடிக்கொண்டே சென்று சரீரத்தைக் கழித்து அவனுடைய தாள் இணையில் புகுகின்ற காதலையுடையனான யான், அழியக்கூடிய இம்மனிதர்களை என் வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என்கிறார்.

வி-கு : வேயின் – ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. புரைதல் – ஒத்தல். ‘மணாளன்’ என்பது, ‘மணவாளன்’ என்பதன் திரிபு. ‘வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என மாறுக.

ஈடு : எட்டாம் பாட்டு. 2‘நான் பிறரைக் கவி பாடுவேன் என்னிலும், என் வாயானது அவனை ஒழியப் பாடாது,’ என்கிறார்.

3‘நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனுமாய் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமானவனுமான சர்வேசுரவனைக் கவிபாடி இச்சரீரத்தைக் கழித்து இதன் பின்னர் அடிமைக்கு ஈடாய் இருப்பது ஒரு சரீரத்தைப் பெற்று அவனுக்கு அடிமை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிற யான் என் வாயைக் கொண்டு 1நீர்க்குமிழி போலே இருக்கிற புல்லரைக் கவி பாட வல்லேனோ?’ என்கிறார்.

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் வேயிலும் விஞ்சின அழகையுடைத்தாய் ஒன்றற்கு ஒன்று ஒத்ததான தோள்களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளன் ஆனவனை. மலிதல்-மிகுதல். 2‘பிறரைக் கவி பாடுகைக்குத் தகுதியான இச்சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கும் வேறுபட்ட சிறப்பினையுடைய சரீர சம்பந்தத்தைப் பெற்றுத் திருவடிகளிலே அடிமை செய்வதற்கும் புருஷகாரமான நப்பின்னைப்பிராட்டி’ என்கை. ‘அவள் சேர்ந்திருக்கும் சேர்த்தியிலே கவி பாடி, யான் வேறு சிலரைக் கவி பாடவோ?’ என்கை. என்றது, 3‘இனி, கைகழியப் போக வல்லரோ, பிராட்டி கைப்புடையிலே நின்று கவி பாடுகிறவர்?’ என்றபடி. அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார். ஆய – ஆயப்பட்டு இருக்கை; என்றது, தாழ்வுகட்கு எதிர்த்தட்டாய் இருக்கை. அன்றிக்கே, ‘ஆய’ என்றது, ‘ஆன’ என்றாய், ‘சொரூபத்தோடு பொருந்தியிருக்கிற’ என்னுதல்.

பெரும்புகழ் – சரீர குணத்தோடு ஆத்தும குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றே எல்லை இல்லாமல் இருக்கை. எல்லைஇலாதன – இப்படிப்பட்ட குணங்கள் கணக்கு இன்றி இருத்தல். பாடிப் போய்க் காயம் கழித்து – 1‘சக்கரவர்த்தி மக்களுடைய காவல் நிமித்தம் சுற்றும் பயணம் திரிந்து முத்தின் குடை நிழலிலே இருந்து சரீரத்தால் முதுமைப்பருவத்தை அடைந்தார்,’ என்றது போன்று, பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு. அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன் – இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணியிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக்கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின்கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையையுடைய யான்.

மாய மனிசரை – பிறப்போடே முடிகின்ற அழிவினையுடையவர்களை. என்றது, ‘பாடத் தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மனிதரை’ என்றபடி. என் வாய் கொண்டு என் சொல்ல வல்லேன் – 2‘கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார். வேறே சிலர், ‘வாக்காலே பாடினால் பாடலாம்’ என்பார், ‘என் வாய் கொண்டு’ என்கிறார். 3‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்னக் கடவதன்றோ? அங்கே காதலைப்பண்ணிப் புறம்பே சிலரைக் கவி பாடப் போமோ? ‘ஆசைப்படுவது ஒரு விஷயமாய், பேசுவது ஒரு விஷயமாய் இருக்குமோ? 4எல்லா இந்திரியங்களுக்கும் அடி, மனம் அன்றோ? அதனைத் தொடர்ந்து சொல்லுமத்தனை அன்றோ மற்றைய உறுப்புகள்? 5இப்போது இப்படிச் சொல்லுகைக்குக் காரணம் என்?’

என்னில், ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.

முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே
‘கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.

3. தம்முடைய வாய்கொண்டு பாட முடியாமைக்கு ஏது, ‘மனம் முன்னே
வாக்குப் பின்னே’ என்பது. ‘அங்கே காதலைப் பண்ணி’ என்றது, ‘மனம்
ஈசுவரனிடத்தில் காதலோடு இருக்க’ என்றபடி.

4. ‘மனம் முன்னும் வாக்குப் பின்னுமாகைக்குக் காரணம் யாது?’ என்ன, விடை
அருளிச்செய்கிறார், ‘எல்லா இந்திரியங்களுக்கும்’ என்று தொடங்கி.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading