திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கண்ணனை மாயன் றன்னைக்
கடல்கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணிநன்கு உறைகின் றானை
ஞாலம்உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.

பொ-ரை : ‘கண்ணபிரானை, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனை, கடலைக் கடைந்து அமுதம் கொண்ட பெருமையையுடையவனை, அழிவில்லாதவனை, எல்லையில்லாத குணங்களையுடையவனை, ஆதிசேஷசயனத்தின்மேலே நன்கு பொருந்தித் தங்கியிருக்குமவனை, உலகத்தையெல்லாம் புசித்து மீண்டும் உமிழ்ந்த திருமாலைச் சொல்லுமுறையறிந்திலேன்; அஃறிணைப்பொருளும் உயர்திணைப்பொருளும் அவனேயாவன்,’ என்றவாறு.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘அவனுடைய விபூதியினுடைய விரிவினைத் தனித்தனியே பேச முடியாது; காரிய காரண உருவமான அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு விபூதி என்று சுருங்கச் சொல்லலாமித்தனை,’ என்கிறார்.

    கண்ணனை மாயன் தன்னை – ‘எத்திறம்!’ என்ன வேண்டும்படியான குணங்களையும் செயல்களையுமுடையவனை. கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை – வேறு பயன்களை விரும்புகிறவர்களுக்கும், உடம்பு நோவக் கடல் கடைந்து அவர்கள் விரும்பிய பொருள்களைக் கொடுக்கும் ஸ்வாமியை. அச்சுதனை – தன்னை அடைந்தவரை ஒருநாளும் நழுவவிடாதே காக்குந்தன்மையனை. அனந்தனை – சொரூப ரூப குண விபூதிகளால் அளவிட்டு அறிய முடியாதவனை. அனந்தன்தன்மேல் நண்ணி நன்கு உறைகின்றானை – திருவனந்தாழ்வான்மேலே கிட்டி நன்கு கண்வளர்ந்தருளுகிறவனை. ‘அடிமை நிலத்தின் எல்லை நிலத்திலே நிற்கையாலே சேக்ஷியானவனையும் விளாக்குலை கொள்ள வல்லவன்’ என்பார், ‘அனந்தன்’ என்கிறார். பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்பவொண்ணாதபடி கண்வளர்கின்றானாதலின், ‘நண்ணி நன்கு உறைகின்றானை’ என்கிறார். அனந்தன் முடிவில்லாதவன்.

    ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை – 2ஆபத்துக்கு உள்ளானவர்கள் உண்டானால், அப்படுக்கையிலும் பொருந்தாதவனை.எண்ணுமாறு அறியமாட்டேன் – 1அவனும் விபூதி விஷயமாகப் பரக்கச் சொல்லிக்கொண்டு போந்து 2‘அருச்சுனா! முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன்; ஏனென்றால், என் விபூதியின் விரிவிற்கு முடிவு இல்லை,’ என்றானன்றே? அப்படியே, இவரும் மேலே சிலவற்றைச் சொல்லி, ‘இவனைச் சொல்லும் வகையினை அறிகின்றிலேன்,’ என்கிறார். ‘ஆனாலும், சுருங்கச் சொன்னாலோ?’ என்னில், யாவையும் எவரும் தானே – அறிவுடைப்பொருள் அறிவில்பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.

விபூதி விஸ்தாரங்கள் தனி தனி பேச முடியாதே
கார்ய காரணங்கள் அனைத்தும் அவனது மொத்தமாக சொல்லலாமே
யாவையும் -அசேதனம்
யாவரும் -சேதனன்
எத்திறம் சொல்லும்படி குண செஷ்டிதம் கண்ணன் மாயன் -தன்னை
கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணல் -பிரயோஜனாந்த பரர்களுக்கும் உடல் நோவ
அபேஷிதம் கொடுத்து -கிருபை
அச்சுதன் -நழுவ விடாமல் ரஷிக்கும்
அநந்தன் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றை அளவு பட்டு அறிய முடியாதே
அநந்தன் -திருவனந் தாழ்வான் -நண்ணி நன்கு உறைகின்றான் –
சேஷத்வம் காஷ்டை எல்லையில் நின்று -செஷியானவானவனையும் பூரணமாக
அனுபவித்து சென்றால் குடையாம் -விளாக் குலை கொண்டு
பிராட்டியாலும் திருமுலைத் தடத்தால் நெருக்கியும் எழுந்து இருக்காமல்
படுக்கையிலும் பொருந்தாதவன் -துக்க தொனி கேட்டு -ஆபன்னர்
விபூதி அத்யாயம் சொல்லி -விஸ்தரதுக்கு முடிவு இல்லை கீதை
அது போல் எண்ணுமாறு அறியமாட்டேன்
மொத்தமாக யாவையும் எவரும் தானே சொல்லி
பிரகாரியாக இருக்கிறான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply