திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றுஎ ழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.

    பொ-ரை : நித்தியசூரிகள், சேனை முதலியாரோடும் வந்து சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப்புகையையும் தாங்கிக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாகவுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய பெரிய மலையாகும்.

    வி-கு : ‘மா மலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு’ என மாறுக. நமன்று – வணங்கி.

    ஈடு : ஏழாம் பாட்டு. ‘முதற்பாசுரத்தில் பிரார்த்தித்த கைங்கரியத்தைத் திருமலை தானே தரும்,’ என்கிறார். ‘‘வீடு தரும்’ என்றால், ‘மோக்ஷத்தைத் தரும்’ என்பதன்றோ பொருளாம்? கைங்கரியத்தைத் தரும் என்று பொருள் கூறல் பொருந்துமோ?’ எனின், கைங்கரியம் என்பது, 1பகவானை அடைதலுக்குப் பலமாய் வருவதாதலின் பொருந்தும்.

    சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு – ‘மா மலர் நீர் சுடர் தூபம் இவற்றைச் சுமந்துகொண்டு’ என்னவுமாம். அன்றி, ‘மா மலர் சுமந்து, நீர் சுடர் தீபம் கொண்டு’ என்னவுமாம். ஆக, 2‘ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சார்த்தியருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’ என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார். இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல். 3ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு

அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், ஸ்ரீ புருஷோத்தமமுடையான் செண்பகம் உகந்து அணிவர்; அரச குமாரர்கள் சிலர், செண்பகங்கொண்டு சார்த்துவதற்குத் தேடி, கடைகளிலே சென்று பார்க்க, ஒரு பூ இருக்கக் கண்டு, அப்பூவுக்கு ஒருவர்க்கொருவர் செருக்காலே விலையை மிகமிக ஏற்ற, அவர்களிலே ஒருவன் நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டு வந்து சார்த்தினான்; அன்று இரவில் அவனுடைய கனாவில், ‘நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்க முடிகிறதில்லை,’ என்று அருளிச்செய்ததைக் குறித்தபடி. அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் – நித்தியசூரிகளும் சேநாபதியாழ்வானும் பொருந்தி இப்படி ஆராதனைக்கு வேண்டிய பொருள்களைக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடம். இனி, ‘வானவர் வானவர் கோன்’ என்பதற்கு, ‘தேவர்களும் தேவர்கட்குத் தலைவனான பிரமனும்’ என்று பொருள் கூறலுமாம். 1இவர்கள் வேறு பலன்களை விரும்புகின்றவர்களாயினும், சேர்ந்த நிலத்தின் தன்மையாலே 2அநந்யப் பிரயோஜனர்களாக மாறுகிறார்களாதலின், ‘அமர்ந்து’ என்கிறார். இப்படிச் சமாராதன உபகரணங்களைக் கொண்டு வணங்கி எழுவர்களாயிற்று. ‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.

    நங்கட்கு – கைங்கரிய ருசியையுடைய நமக்கு. சமன் கொள் வீடு தரும் – 3‘பிரஹ்மத்தையறிந்தவன் பிரஹ்மம்போல ஆகிறான்,’ என்றும், 4‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’ என்றும், 5‘இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’ என்றும், 6‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ என்றும் சொல்லுகிறபடியே, அவன், ‘அவனோடுஒத்ததாகையாகிற மோக்ஷத்தைத் தரும்’ என்னுதல்; 1‘இவ்வாத்துமாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே, ‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும் என்னுதல்; இனி, ‘திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது, ‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது? அப்படியே 2‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம். தடங்குன்றம் – திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை. 3‘ஸீபக: – வீறுடைத்தாயிருக்கை. கிரிராஜ உபம: – திருமலையோடு ஒத்திருக்கை. யஸ்மிந்வஸதி – அதற்கு ஏது சொல்லுகிறது. காகுஸ்த்த: – போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு? குபேர இவ நந்தநே – துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன் போது போக்குகைக்காகத் தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’

‘சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்
செய்கிறார். முதற்பொருளும், மூன்றாவது பொருளும் சாம்யாபத்தி ரூபமான
மோக்ஷம் என்பது. இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான
மோக்ஷம் என்பது. சமம் – ஒத்தல்; தகுதி.

கைங்கர்யம் திருமலையே கொடுக்கும் பிரார்த்தனை பலன் –
குன்றமே -சமன் கொள் வீடு தரும்
நித்யர்களும் தொழும் -சுமந்து மா மலர் சிடர் நீர் தூபம் சுமந்து
வானவர் அமர்ந்து
நம சொல்லி எழும்
சுமந்து -பெரியஜீயர் -இந்த நான்கையும் செய்யும் கைங்கர்யம்
தோ மாலை புஷ்பம் –
கொண்டு -மா மலர் சுமந்து நீர் சுடர் தூபம் கொண்டு
கரு முகை மாலை -விசேஷ கடாஷம் செய்ய கடவனே கனத்து தோன்றும்
அனுகூலர் இட்டதால் சர்வேஸ்வரன் கனக்க நினைப்பான்
பூரி ஜெகன்னாதா -ஷேத்ரம் செண்பகப் பூ வ்ருத்தாந்தம்
ஒரே புஷ்பம் இருக்க –

ப்ரீதி பக்தி உடன் சமர்பித்ததால் சுமக்க
ராஜ புத்ரர்கள் -செருகாலே த்ரவ்யம் போர ஏத்தி -நினைக்க ஒண்ணாத படி
இட்ட பூ கனம் –
செருக்காலே வார்த்தை –
தொண்டைமான் போன்புஷ்பம் குறும்பு அறுத்த நம்பி மண் புஷ்பம்
செருக்காலே -சுமக்க முடியாதே –
அமர்ந்து -நித்யசூரிகள் சேனாபதி ஆழ்வான்
தேவர்கள் பிரமன் என்றும் கொண்டு பிரயோஜனந்த பரர்
அவர்களையும் அநந்ய பிரயோஜன பரர் ஆக்கும் ஸ்வா பாவம் உள்ள திருமலை
உபகரணங்கள் கொண்டு -தொழுது எழு தமது வாசனை அவர்களுக்கு உண்டு
தங்கட்கு -பிரமாதிகள் பெற்றால் நாம் பெறுவோம்
சமன் கொள் வீடு -சாம்யா பத்தி பரமம் சாம்யம் உபதி
தன்னையே ஒத்த அருள் செய்வான்

சமன் கொள் -ஜீவாத்மாவுக்கு சமமாக
ச்வரூபதுக்கு சேர ஆதமா ஸ்வரூப அநு ரூபமான
தன்னோடு ஒத்த பேற்றை திருமலை கொடுக்கும்
திருவேம்கடமுடையானை தலை மேல் சுமக்கும் அருள் பெறுவோம்
செம்மா பாத பற்பு தலை மேல் ஒல்லை பிரார்த்தித்த  படியே அருளும்

இஷ்டப்படி உலாத்தலாம் படி
சித்ர கூடம் சக்ரவர்த்தி திருமகன் -பரதச்ய வசனம்
குபேர இதி நந்தன -போலே காகுஸ்தன் -வசதி
சுபதக -கிரிராஜன் உபமதி –
வீறு உடைத்தாய் -திரு மலையை போல் ஒத்து இருக்கை
யஸ்மின் வசதி -சக்கரவர்த்தி திருமகன் இருப்பதால்
போகத்துக்கு ஏகாந்தமாக இடம்
விடாமல் விரும்பி வர்த்திக்கிற தேசம்
தடம் குன்றம் -பெருமாள் நித்ய வாசம் செய்யும் பெருமை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading