நான்காந்திருவாய்மொழி – ‘ஆடியாடி’
முன்னுரை
ஈடு : மேல் திருவாய் மொழியிலே, ‘பருகிக் களித்தேனே’ என்று ஆனந்தித்தவாய், ‘அதுதன்னைப் பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேண்டும்’ என்று பாரித்து, அதற்கு இவ்வுலகத்தில் ஆள் இல்லாமையாலே, நித்தியவிபூதியிலே நித்தியசூரிகள் திரளிலே போய்ப்புக்கு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக்கொண்டு அனுபவிக்கக் கோலி, நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் துன்புற்றவராய், தம்முடைய நிலையைத் தம்மவர்களான ஸ்ரீவைஷணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை 1அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.
2‘அம் சிறைய மட நாராய்’ என்ற திருவாய் மொழியில் தூது விட 3க்ஷமர் ஆனார்; 4‘வாயுந் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில், கண்ணாற்கண்ட பொருள்களடையப் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவுபட க்ஷமர் ஆனார்; அவ்வளவு அன்றிக்கே, ஆற்றாமை கரை புரண்டு, தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி தசையை அடைந்தவராய், அது தன்னிலும் தம் தசையைத் தாம் வாய்விட்டுப் பேசமாட்டாமல் பக்கலில் உள்ளவர்கள் அறிவிக்க வேண்டும்படியாய், இருத்தல் நடத்தல் படுத்தல். முதலியவைகளில் ஒரு நியதியின்றி மகிழ்ச்சி அற்றவராய் நோவுபட, இப்பெண்பிள்ளை நிலையினை நினைந்த திருத் தாயார் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து, ஆசைப்பட்ட அடியார்களுடைய துன்பங்களையெல்லாம் போக்கக் கடவ நீர், உம்மை ஆசைப்பட்ட இவள் நோவுபடப் பார்த்திருப்பதே!’ என்று, எல்லா வகையாலும் அவனைக் கொண்டே பரிகரித்துக் கொள்ளும் குடியாகையாலே, அவன் திருவடிகளிலே போகட்டு
1‘இவள் இடையாட்டத்தில் நீர் செய்ய நினைத்திருப்பது யாது?’ என்று கேட்கிற பாசுரத்திலே தம்முடைய நிலையினை அருளிச் செய்கிறார்.
‘ஆயின், மேற்கூறிய இரண்டு திருவாய்மொழிகளிற் போந்த பிரிவுத்துன்பங்களைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் பிரிவுத் துன்பம் மிகுந்து இருப்பதற்குக் காரணம் யாது?’ எனின், 2காசினை இழந்தவனுக்கும் பொன்னினை இழந்தவனுக்கும் இரத்தினத்தை இழந்தவனுக்கும் இழந்ததனால் உளதாய துன்பம் ஒத்ததாக இராது வேறுபடுவது போன்று, அங்கும் இங்கும் பிரிவுத் துன்பம் ஒன்றாயினும், துன்பத்தில் வேற்றுமை உண்டு என்க. ‘எவ்வாறு?’ எனின், அவதாரத்தில் 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போதை’ அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமை ‘அஞ்சிறைய மடநாரை’யில், 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்ற அர்ச்சாவதாரத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ‘வாயுந் திரையுக’ளில்; இங்கு, அவ்விறைவனுக்கும் உயிரான நித்தியசூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ஆகையால், அவற்றைக் காட்டிலும் இதற்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்.
‘நன்று; நித்தியசூரிகள் திரளிலே சென்று சேர்ந்து அனுபவிக்கப் பெறாமையால் நோவுபடுகின்றாராயின், பின்னே, அவர்கள் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாமல், 5‘நரசிங்கா’ என்பது போன்ற இறைவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுவது எற்றிற்கு?’ எனின், எங்கேனும் ஒரு காட்டில் இரத்தினங்கள் பறியுண்டால், நாட்டிலே அரசன் வாசலிலே சென்று அவ்வரசன் பெயரினைச் சொல்லிக் கூப்பிடுவது போன்று, நித்தியசூரிகள் திரளிலே தாம் சென்று சேர்வதற்கும் காரணமாக இருப்பவன் இறைவனே ஆகையாலே, அவ்விறைவனுடைய திருப்பெயரினைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.
இனி, 1பகவானுடைய பிரிவிலே உட்புக நின்றால் அன்றோ பாகவத விஸ்லேஷந்தான் தெரிவது?2’இலக்குமணா! மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார் பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே, கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான், குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார் வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது, 5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும் 6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும் படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம். இனி, ‘வாயுந் திரைகளில் துன்பம் வந்து கலந்து கலவி முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது; ஆதலால், வருந்துகிறார் எனலுமாம்
2. ‘காசு’ என்றது, அவதாரங்களை. ‘பொன்’ என்றது, அர்ச்சாவகாரத்தை. ‘இரத்தினம்’
என்றது, அடியார்களை. ‘காசினை மணியை’ ‘செம்பொனே திகழும் திருமூர்த்தியை,’
‘செழுமாமணிகள் சேரும்’ என வருவன கொண்டு தெளிதல் தகும்.’
அந்வய வியதிரேகங்கள்’ என்பதற்குப் பொருள்: – ‘எது இருந்தால் எது இருக்குமோ,
எது இன்றேல் எது இராதோ’ என்பது. ‘யத்சத்வே யத் சத்வம்; யதபாவே யதபாவ:’
என்பது வடமொழி வாக்கியம். இங்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளுடைய
சேர்க்கை உண்டானதனால் இளையபெருமாளோடும் பிராட்டியோடும் சேர்ந்த
சேர்க்கையையும் அவர் உள்ளவரானார். ஸ்ரீ பரதாழ்வான சத்துருக்கனாழ்வான்
இவர்களுடைய சேர்க்கை இல்லாததனால், இளையபெருமாளுடைய சேர்க்கை இருந்தும்
அவர் இல்லாதவரானார் என்க.
ஆடிஆடி அகம்க ரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல் கி,எங்கும்
நாடிநாடி, நரசிங் காஎன்று
வாடி வாடும்இவ் வாள்நுதலே.
பொ – ரை : ஒளி பொருந்திய நெற்றியினையுடைய இவள், நின்ற இடத்தில் நில்லாமல் பல இடங்களிலும் உலாவி, மனமும் கரைந்து, இசையோடு பல காலம் பாடிக்கொண்டு, கண்களில் நீர் நிறையப் பெற்று எல்லா இடங்களிலும் தேடித்தேடி, ‘நரசிங்கனே!’ என்று மிகவும் வாடாநின்றாள்.
வி-கு : ‘வாணுதல், ஆடிக் கரைந்து பாடி மல்கி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்’ என்க. வாணுதல் – அன்மொழித்தொகை. ‘நரசிங்கா என்று வாடும்’ என்றது, ‘பிரஹ்லாதன் விரும்பிய காலத்தில் நரசிங்கமாய் வந்து தோன்றி, அவனுக்கு உதவியைச் செய்த பெருமான் எனக்கு உதவுகின்றிலனே!’ என்று இப்பெண் வருந்துகிறாள் என்று கருத்தை உட்கொண்டு நின்றது.
இத்திருவாய்மொழி முச்சீரடி நான்காய் வருதலின் வஞ்சி விருத்தம் என்பர்.
ஈடு : முதற்பாட்டு. 1‘ஆபத்தே செப்பேடாக அடியானான பிரஹ்லாதன் சூளுறவு செய்த அக்கணத்திலே வந்து உதவும் தன்மையானானவனைச் சொல்லிக் கூப்பிடாநின்றாள்’ என்கிறாள்.
ஆடி – இருத்தல் நடத்தல் கிடத்தல் முதலியவைகளில் ஒரு நியதி இன்றிப் பிரிவுத் துன்பத்தால் படுகிற பாடு திருத்தாயார்க்கு மனத்தைக் கவர்வதாக இருத்தலின், ‘ஆடி’ என்கிறாள்.
ஸ்ரீகௌசல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர்.
ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; 5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் அன்றோ? அகம் கரைந்து -‘மனம் என்னும் பொருள் நீராய் உருகிப்போயிற்று’ என்கிறாள். ஆற்றாமை தூண்டச் சஞ்சரித்தவள், சஞ்சாரம் அடி அற்று இருக்கின்றாள் என்பாள், ‘அகம் கரைந்து’ என்கிறாள். ‘ஆயின், மனம் கரைந்ததை இவள் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின், இவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கானாற்போலே, அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்காய் இருக்கிறபடி. இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை. ‘ஆயின், கூப்பீட்டைப் பாட்டு என்னலாமோ?’ எனின், ஆற்றாமை
யாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனாற்போலே, 1‘பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.
கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? மங்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான்பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.
எங்கும் நாடி நாடி – தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே
இருக்கச் செய்தேயும், வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். ‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, ‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே. நரசிங்கா என்று வாடி வாடும் – பிரஹ்லாதனைப் போலே, ஒரு 4தம்பம் இல்லாதபடி இருக்கையாலே கொம்பை இழந்த தளிர் போலே வாடும். ‘முதல் வாட்டம் – தளிர்’ என்று கூறத் தக்கவாறு இருக்கிறது, அடுத்த கணத்தில் வாட்டம் என்பாள், ‘வாடி வாடும்’ என்கிறாள்.
5‘என்னிடமிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் பொருள்
களும் நானாகவே இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. ‘நரசிங்கா என்று வாடும்’ என்ற தொடரில், ‘தமப்பன் பகையானாலோ உதவுவது?’ நீர் பகையானால் உதவலாகாதோ? ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது? பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ? ஆண்களுக்கோ உதவலாவது? ஆண்களுக்கோ உதவலாவது? பெண்களுக்கு உதவலாகாதோ?2சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது? இருந்தபடியே உதவலாவார்க்கு உதவலாகாதோ? 3ஓர் அதிகாரி நியதி, ஒரு கால நியதி, ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேண்டுமோ இவளுக்கு? இவளுடைய ரக்ஷணத்திற்கு4ஏதேனும் முகம்பண்ண வேண்டுமா?’ என்ற தொனிப் பொருளும் தோன்றும். 5‘தர்மி லோபம் பிறந்தது இல்லை,’ என்பாள், ‘வாடும்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள். ‘வரும்’ என்னும் நசையாலே முடியப் பெறுகின்றிலன் என்பதாம்.
இவ்வாணுதலே – ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில் இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம் முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி.
‘என்னுயிர் நின்னாற் கோறற் கெளியதுஒன்று அன்று; யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றானாயின்
என்னுயிர் யானே மாய்ப்பல்; பின்னும்வாழ்வு உகப்ப லென்னின்
அன்னவற்சூ அடியே னல்லேன்!’ என்றனன், அறிவின் மிக்கான்.
என்ற செய்யுளால் (கம்பரா. இரணியன் வதை. 126) அவன் சூளுறவு அறிதலாகும்.
விலக்ஷண விஷயத்தைப் பிரிந்தால் முடிகையும் அரிது, ஜீவிக்கையும் அரிது;
வைலஷண்யம் ஜீவிக்கவொட்டாது, நசை முடியவொட்டாது’ என்பது இருபத்து நாலாயிரம்.
ஸ்ரீராமா. சுந். 31 : 119. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச் செய்த பொருள்
மேலும் வருமாறு: ‘கீழே பார்த்ததற்குக் கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து
கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், அல்லாத
திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’
என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா
விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் – அவன்
வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து
இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல நெஞ்சையுடைய
வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் – ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்
இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் – பெருமாளுக்குப்
பிராணஹேதுவான பிராட்டிக்குப் பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்
பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் –
இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய உதயத்துக்கு
அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு
‘ஹரி ஹரி’ என்கிறபடியே இருக்கிறது.’
அடியார் குழாம் உடன் கூடுவது என்றுகொலோ
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply