முன்னல் யாழ்பயில் நூல்நரம் பின்முதிர் கவையே!
பன்ன லார்பயி லும்பர னே!பவித் திரனே!
கன்ன லே!அமு தே!கார் முகிலே!என் கண்ணா!
நின்ன லால்இலேன் காண்;என்னை நீகுறிக் கொள்ளே.
பொ – ரை : பழையதாய்ச் சிறந்ததாய் யாழ் விஷயமாகக் கற்கப் படுவதாய் உள்ள யாழ் நூல்களிற் பேசப்படுகின்ற இலக்கணத்தையுடைய நரம்பிலே பிரிந்த முதிர்ந்த சுவை போன்று இனியன் ஆனவனே! சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நித்தியசூரிகள் அனுபவித்தாலும் முடிவு பெறாத இன்பமயமானவனே! பரிசுத்தத்தையுடையவனே! கரும்பின் ரசம் போன்றவனே! அமுதம் போன்றவனே! கார்முகில் போன்றவனே! என் கண்ணா! உன்னை அல்லாமல் வேறு ஒரு கதியினை யுடையேன் அல்லேன்; ஆதலால், என்னை நீ நினைத்தல் வேண்டும்.
வி – கு : பன்னலார் – ஒரு சொல். ‘பன் நல்லார்’ எனப் பிரித்தலுமாம். பவித்திரம் – தூய்மை; அதனையுடையவன் பவித்திரன், கன்னல் – கரும்பு, அஃது ஆகுபெயராய் அதன் சாற்றின் கட்டிக்கு ஆயிற்று.
ஈடு : ஏழாம் பாட்டு. இப்படி, 1தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்; இவ்விஷயத்தினுடைய இனிமையையும் அநு சந்தித்தார்; அநுசந்தித்து, ‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று ஐயங்கொண்டு, ‘தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்; என்னைக் கைவிடாது ஒழியவேண்டும்,’ என்கின்றார்.
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவையே – சாஸ்திரத்தினுடைய பழமையதாய், அதுதான் சிறந்ததாய், யாழ் விஷயமாகக்கற்கப்படுவதாய் உள்ள நூல் உண்டு – சாஸ்திரம்; அந்நூலிற்கூறிய முறைப்படியே நரம்பிலே தடவப்பட்டு, அதிலே பிறந்த பண்பட்ட ரசத்தினைப் போன்ற இனிமையினை உடையவனே! மிடற்றினின்றும் பிறக்கும் இசையானது காலத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு விகாரங்களை அடையுமாதலின், மிடற்று ஒசையினைக் கூறாது, ‘நரம்பின் முதிர் சுவையே’ என்கிறார். இனி, ‘முன்னல்’ என்பதனை ஒரு மொழியாகக் கொண்டு, அதற்கு ‘நினைத்தல்’ என்று பொருள் கூறி ‘நினைத்தலாவது, யாழோசையின் இனிமையாலே ‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருத்தல்’ என்று கூறலுமாம். இனி, ‘முன்னல்’ என்பதனை, முனல் என்ற சொல்லின் விகாரமாகவும், அந்த முனல் என்பதனை ‘முரல்’ என்ற சொல்லின் விகாரமாகவும் கொண்டு, முரல் என்பதற்கு ‘ஒலித்தல்’ என்று பொருள் கூறி, ஒலிக்கின்ற யாழ் என உரைப்பாரும் உளர்.
இவ்வாறு இனிமை குறைவற்று இருந்தால் அவ்வினிமையினை நுகர்கின்றவர்கள் வேண்டும் அன்றே? அவர்களை அருளிச்செய்கிறார் மேல்: பன்னலார் பயிலும் பரனே- 1‘தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்’ என்கிறபடியே, தாம பலராய் இறைவனுடைய நற்குணங்கட்குத் தேசிகராய் இருக்கின்ற நித்தியசூரிகளால் அனுபவிக்கப்படுகின்றவனே! அயர்வு அறும் அமரர்கள் விடாது என்றும் நுகர்ந்தாலும் அதுகாறும் நுகர்ந்த பகுதி அளவுபட்டு, மேல் நுகரவேண்டிய பகுதிகளே மிக்கு இருப்பவன் ஆதலின், ‘பரனே’ என்கிறார். பவித்திரனே – பிறப்பிலே உழன்று திரிக்கின்றவர்களும், நித்திய சூரிகளைப் போன்று உன்னை அனுபவித்திற்குத் தக்கவர் ஆகும்படி அவர்கட்கும் சுத்தியைப் பிறப்பிக்குமவனே! இனி, ‘பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே’ என்பதனை ஒரே தொடராகக் கொண்டு, பன்னலார், -முமுக்ஷூக்கள்; ‘அவர்கள் எப்பொழுதும் அனுபவித்தாலும் தொலையாத இனிமையினையுடையையாய், அவர்கட்கும் உன்னை அனுபவித்தற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் சுத்தி யோகத்தையுடையவனே!’ என்று உரைத்தலும் ஆம்.
கார்முகிலே – வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார். என் கண்ணா – தன்னைக் கொடுத்தபடி. நின் அலால் இலேன் காண் – உன்னை ஒழிய அரைக்கணம் பிழைக்க மாட்டேன். இனி, இதற்கு, ‘உன்னை ஒழிய வேறு ரக்ஷகரை உடையேன் அல்லேன்’ என்று பொருள் கூறலுமாம். என்னை நீ குறிக்கொள் – உன்னை ஒழிந்த அன்று அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை, இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்; திருவுள்ளம் பற்றல் வேண்டும்’ எனலுமாம். கன்னலே – எனக்கு எல்லை அற்ற இனியன் ஆனவனே! அமுதே –2சாவாமல் என்னை உய்வித்துக்கொண்டு போகின்றவனே!
கை விடில் முடிவேன் -உளன் அல்லன் ஆவேன் -என்கிறார் உடனே –
முதல் முன்னமே அடைந்தது -நித்தியமாக அவன் உடனே இருப்பதை தெரிவித்து
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply