சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியைத்
தீர்ந்தார் தம்மனத்துப் பிரியாது அவர்உயிரைச்
சோர்ந்தே புகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன்முன்னமே.
பொரை : ‘தன்னை அடைத்தவர்களுடைய தீவினைகட்குக் கொடிய விஷமாய் இருப்பவனும், அவ்வடியவர்கட்குத் தன்னாலும் அசைக்க ஒண்ணாத அறிவினைக் கொடுக்குமவனும், தன்னை ஒழியச் செல்லாதவர்களுடைய மனத்தினின்றும் பிரியாமல் அங்கே தங்கியிருந்து அவர்களுடைய உயிரைச் சிற்றின்பங்களால் சோர்ந்து போகும்படி விடாத ஒளியுருவை உடையவனும், சூர்ப்பணகையினுடைய மூக்கினை அறுத்தவனும் ஆன உன்னை, உனக்கு அடியவனான நான் இவ்வுயிர் உள்ள அன்றே அடைந்தேன் அன்றோ?’ என்கிறார்.
வி – கு : தீர்ந்தாய் – எல்லாப் பொருள்களின் ஆசையினின்றும் நீங்கினவர்கள்; அதாவது, அவ்விறைவனை ஒழியச் செல்லாதவர்கள் என்றபடி. தீர்த்தல்- விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம். ( சொல். 318 ), சோர்தல் – ஐம்புலன்களால் தளர்ச்சியினை அடைதல், அல்லது, இறைவனை விட்டுப் பிரிந்து தளர்தல் எனலுமாம். ‘ஈர்ந்தாயை’ என்பது உருபு ஏற்ற முன்னிலைப்
பெயர் முன்னமே என்பதிலுள்ள ஏகாரத்தை ‘அடைந்தேன்’ என்பதனுடனும் கூட்டுக. இவ்வேகாரம், தேற்றத்தின் கண் வந்தது.
ஈடு : ஆறாம் பாட்டு. ‘இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். மேல் திருப்பாசுரத்தில்; ‘இனி என்று தான் விசேடிக்கு வேண்டுமோ? ‘பொய்ந்நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில், அன்றி, சொரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற சொரூபம் இயல்பாகவே அமைந்துள்ளதான சேஷத்துவமேயாய், நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச்செய்கிறார் எனலுமாம்.
சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்; இவர்கள் 2இக்கரை ஏறினவர்கள் அன்றோ? தீவினைகட்கு அரு நஞ்சை – இவர்கள் பேற்றினை அடைவதற்குத் தடையாக உள்ள கர்மங்கட்குக் 3காற்ற ஒண்ணாத நஞ்சானவனை. திண்மதியை – முன்பே சேர்ந்திருக்குமவர்கட்குத் திண்ணியதான மதியைக் கொடுக்குமவனை, அதாவது, 4அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,
‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான். ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.
தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம். அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை – பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாக நின்ற சூர்ப்பணகையைப் போக்கியது போன்று, அவர்களுடைய விரோதிகளைப் போக்கும்படியும். ‘ஆயின், மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே? 3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே – ‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது? இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார். இனி, முன்னர்க் கலவியிலே களித்த தேற்றம் போய் ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் கலங்கிப் பிரிவேயாகிச் சென்றது போன்று, இங்குக் கலவியின் மிகுதியாலே அத்தை மறந்து, ‘முன்னே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார். எனலுமாம். முதன்முன்னம் – பழையதாக என்றபடி.
2. ‘அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்திஉன் பேரருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய்’
என்பது பெரியாழ்வார் திருமொழி.
“புன்பிறப்பாம்
எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இருவிரசைக்கு
அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே”
1. ஸ்ரீராமா. அயோத். 31 : 5.
‘நீருள எனின்உள் மீனும் நீலமும்
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு வாய்’ என்றான்.
என்ற கம்பராமாயணச் செய்யுள் ஈண்டு நினைவிற்கு வருகின்றது.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply