சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.
பொ – ரை : ‘ஒன்றும் ஒழியாத எல்லாப்பொருள்கட்கும் மூல காரணானான பரஞ்சோதி உருவமாய் இருக்கின்ற இறைவனுக்கு, அமையாது மேலும் மேலும் வளர்கின்ற காதலையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபாராலே அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் நழுவ நில்லாதவர்கள் (கற்று வல்லவர்கள்) வைகுந்தம் அடைதல் உறுதியாம்’ என்றவாறு.
வி – கு : ‘சேராத’ என்பது, பொருள்களின் குறைவின்மையைக் காட்ட வந்தது; சோர்தல் – நழுவுதல். சோரார் – வினையாலணையும் பெயர். கண்டீர் – தெளிவின்கண் வந்தது. திண்ணன – ஐயமின்மையின் கண் வந்தது.
ஈடு : 2‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல், கண்டார் எல்லாம் பகவானைப் பெற்றுக் களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்.
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கு – இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய், இவரோடே வந்து கலந்து அத்தாலே ஒளி உருவனுமாய் இருந்தான். இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின, இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு
முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது; இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார், ‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார். பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்றநின்றானாதலின்‘சோதிக்கு’ என்கிறார். இதனால், ‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இராநின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி. ஆராத காதல் – இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான 1அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார். காதல் குருகூர்ச் சடகோபன் – காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார். ‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், 2தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
சொன்ன அவற்றுள் – இக்காதலோடே அருளிச் செய்த ஆயிரத்துள் அவற்றுள் இவை பத்தும் – அல்லாதவை ஒரு தலையாக, இத்திருவாய்மொழி ஒரு தலையாம் படி அக்காதலை வாய் விட்டுக் கூறிய பதிகமாதலின், ‘அவற்றுள் இவை பத்தும்’ என்கிறார். இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம். இங்கே இருந்து, கண்ணுக்கு இலக்கான பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள், இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் பகவானைப் பெற்றமையால் களிக்கும் நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள். ‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார். ‘திண்ணன’ என்றது, ஐயமின்மையைக் குறிக்க வந்தது. இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்? பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.
இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி, நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட, ‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி, இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக்காட்டினார்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
வாயும் திருமால் மறையநிற்க ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியா தவற்றே டணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply