இரண்டாம் பத்து
முதல் திருவாய்மொழி – ‘வாயுந்திரை’
முன்னுரை
ஈடு : ‘ஒருவன் பெறுதற்குரிய பேறுகளுள் மிக உயர்ந்த பேறு இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டேயாம்,’ என்று அறுதி யிட்டார் முதற்பத்தால்; அவ்வாறு செய்யப்படுந்தொண்டிற்குத் தடைகளாகவுள்ள களைகள் அறுக்கிறார் இந்த இரண்டாம் பத்தால்.
மேல்1 திருவாய்மொழியில் 2‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று இறைவனுடைய எளிமையினையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச்செய்தார். மேல் விழப் பண்ணுகைக்கு இம்மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம். இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம்மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே? ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் அவாமிக்கு எழுந்தது; நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு பிராட்டி, 1ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு, அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.
2‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கரைபுரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில், 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே ‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்; இது அவ்வாறு அன்றி, 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும். அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ 5உகந்தருளின நிலங்கள்? மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று: இத்திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவுபடுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிறார். மேலும், அனுபவிக்கிற இவ்வாழ்வாருடைய தன்மையாலும் இத்திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; ‘யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை 6‘பத்துடையடியவர்’ என்ற அத்திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே; ‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத்திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத்திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன் 7பயிலப்பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?
நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும், கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும், மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும், இருளாகில் பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும், கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும், இங்ஙனம் இவற்றிற்கு இத்தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல், இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.
‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில், 2‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ என்றும், 3ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்,’ என்றும் ஸ்ரீராமாயணத்தில் பேசப்படுவது போன்று, அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் என்னும் வேற்றுமையின்றி எல்லாப் பொருள்களையும் நோவுபடுத்தக்கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! 1உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.
இத்திருவாய்மொழியில், 2இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.
பத்து பத்தின் சாரம் -முன்பு பார்த்தோம்
அடைய வளைந்தான் அரும் பதம் சுருக்கி ஜீயர் அரும் பதமாக இருக்கும்
வாயும் திரைஉகளும் கானல் மடநாராய்!
ஆயும் அமர்உலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே?
பொழிப்புரை : ‘மேலும் மேலும் வந்து பொருந்துகிற அலைகள் தாவுகின்ற கடற்கரைச்சோலையிலுள்ள மடநாராய்! என் தாயும் நித்திய சூரிகளும் தூங்கினாலும், நீ தூங்குகிறாயில்லை; ஆதலால், என்னைப் போன்று நீயும், நோயும் பசலையும் சரீரமெங்கும் பரவும்படி, திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ? கூறுக,’ என்கிறான் என்பதாம்.
விசேடக்குறிப்பு : இப்பாசுரம் ‘தன்னுட் கையாறு எய்திடு கிளவி’ என்ற துறையின்பாற்படும். அதாவது. தனக்கு, நேர்ந்த துன்பத்தை, தன் ஆற்றாமையால் பிறிதொன்றன்மேலிட்டுக் கூறுதல். இவ்வாறு கூறுதற்குப் பயன், களவொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானாய தலைமகன் கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம் புரிந்துகொள்ளச்செய்வாள்; யாரும் கேளாராயின், தலைவி தானே
சொல்லி ஆற்றினளாம். இதனைக் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று கூறுதலுமுண்டு. முதல் ஒன்பது பாசுரங்களும் இத்துறையே எனக் கொள்க. மடம் – கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. ‘நாரை’ என்னும் ஐகார ஈற்றுப் பெயர், விளி ஏற்றலின், ‘நாராய்’ என நின்றது. ஆய் – யாய் என்பதன் மரூஉ. ‘என் தாய்’ என்பது பொருள். ‘யாயும் ஞாயும் யாராகியரோ!’ என்றார் பிறரும். அமருலகு – அமரர் உலகு என்பதன் விகாரம். நோய் – பிரிவாற்றாமையால் மனத்தில் நிகழும் காமநோய்; இது, உடல் மெலிவிற்றுக் காரணம். பயலை – பசலை; காதலன் பிரிவால் தலைவிக்குத் தோன்றுகிற ஒரு நிறவேறுபாடு; இதன் நிறம் பீர்க்கு, கொன்றை இவற்றின் மலர்களின் நிறத்தினைப் போன்றது என்பர். ‘எம்மேபோல்’ தனித்தன்மைப்பன்மை. கோள். – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.
ஈடு : முதற்பாட்டு. 1பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத் திலேயாகையாலே, கடற்கரைச் சோலையின்கண் இவள் பிரிவால் வருந்தி இரங்குகின்ற காலத்தில், ஆங்கு இரைதேடுதல் நிமித்தமாகத் தங்கியிருந்த ஒரு நாரை இவள் கண்ணுக்கு இலக்காக, அதன் உடம்பில் வெளுப்பைக் கண்டு, அதுவும் தன்னைப் போன்று பிரிவாற்றாமையாலே வந்த பசலை நிறத்தோடு இருக்கிறதாகக் கொண்டு, ‘பாவியேன் நான் அகப்பட்ட விஷயத்திலே நீயும் அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயோ?’ என்கிறாள்.
வாயும் திரை உகளும் கானல் மடநாராய் – பெரிய மலை போல வந்து கிட்டுகிற அலைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப்புகுமளவும் சலியாமல் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கின்ற நாரையே! ‘பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமல் இருப்பது போன்று சலியாமல் இருக்கிற நாரையே!’ என்கிறாள். அதாவது,2‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில், மலைகளை மீது கொண்டு வருமீனை’ மறவாது இருப்பார்க்குப் போலியாய் இராநின்றது, அலைகளை மீதுகொண்டு வருமீனை மறவாதிருக்கின்ற இந்நாரையும் என்றபடி. இனி, ‘மீனைக் குறிக்கோளாகக்
கொண்டு சலியாமல் நிற்கின்ற நாரையே! என்று கொள்ளாது, 1‘சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், 2மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே! என்று கோடலும் ஆம். இனி, திரை உகளுதலை மடநாரைக்கு அடைமொழி ஆக்காது, திரை உகளாநின்றுள்ள கானல் (கடற்கரைச் சோலை) என்று, திரை உகளுதலைக் கானலுக்கு அடைமொழியாக்கிக் கூறலும் ஒன்று. 3கிராமணிகள், பிறர்க்குத் துன்பம் செய்துகொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடிந்திட்டுத் ‘தார்மிகர்’ என்னும்படி திரிவது போன்று, நாரையும். 4நினைத்த பெரிய மீன் கைப்புகுமளவும் சிறிய மீன்கள் வந்தாலும் அவற்றில் விருப்பம் அற்று இருத்தலின், ‘மடநாராய்’என்கிறாள். மடப்பமாவது, பற்றிற்று விடாமை.
ஆயும் துஞ்சிலும் – என்பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும். அமர் உலகும் துஞ்சிலும் – தங்கள் சத்தையே பிடித்து உறங்காத 5நித்திய சூரிகள் உறங்கிலும் நீ துஞ்சாயால் – நீ உறங்குகின்றாய்இல்லை. ‘இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்மைக்குக் காரணம் என்?’ என்னில், முன்னர் இவள் இளமைப் பருவத்தில் ‘இவளுக்குத் தக்கானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே!’ என்று கண்ணுறங்காது; பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; 6‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில்
நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.
நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ்விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள். மீதூர – விஷம் ஏறியது போன்று உடம்பிலே பரக்க. எம்மே போல் – ‘இப்படித் துன்பப் படுகைக்கு நான் ஓருத்தியும் என்று இருந்தேன்; நீயும் என்னைப் போல் ஆவதே! துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும். பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும், பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இராநின்றாய்,’ என்றபடி. நீயும் -விரகதாபத்தின் வியசனம் பொறுக்கமாட்டாத மென்மையையுடைய நீயும்.1‘பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ என்கிறாள்.
திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே – ‘நோயும் பசலையும் இருந்தபடி கண்டேனுக்கு, நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயாகாதே! மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள். ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ 2வேர்ப்பற்றிலே நோவுபட்டாய் ஆகாதே! என்பாள், ‘நெஞ்சம் கோட்பட்டாயே’ என்கிறாள்.
ஸ்ரீ ய பதி மயர்வற மதி நலம் அருள .-
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply