நான்காம் பிரகரணம்-
சூரணை-219-
இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண –
அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –
அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –
அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –
பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –
அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று தேவதாந்த்ரங்கள் பக்கல்
பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —
(ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்
ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்
உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும்
ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )
1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்திகணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-
முதல் பத்தில் ..
பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,
ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப் பால் அவன் -1-7-2–என்றும் ,
அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-
சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –
உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –
1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று
ஸ்வ கேவல கிருபையாலே –ஞான அனுதய –
அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை இவருக்கு வாசனையோடு போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து
தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான
புண்ய பாப கர்மங்களையும் –பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் ,
நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –
அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்று
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –
எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையார் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –
நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –
என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள்
ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி
திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –
திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் –
ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் –
அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து
4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
அதாவது
வீடு மின் முற்றத்திலே –1-2-
-வீடு மின் முற்றவும் –என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்
வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –
இறை சேர்மின் –
இறைபற்று –
திண் கழல் சேர் –
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன் -என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து
5 -எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்
பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலனாய் –
அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்
அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி
6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -என்று தொடங்கி –
உச்சி உளானே -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து
7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் – என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு
-எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –
8-தொழுதால் அரும் பயனாய தரும்
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –
ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று
அதாவது
பிணக்கற -என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா – -ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –
நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,
மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –
10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply