ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்- சூர்ணிகை -215/216/217/218..

சூரணை-215-

இனி இப் பத்துகளையும் இவற்றின் சமுதாயமான பிரபந்தத்தையும்
ஆழ்வார் ஸ்லாகித்து பேசின பாசுரங்களில் சாபிப்ராயதையை
சத்ருஷ்டாந்தமாக அருளிசெய்கிறார் —

ஐந்தினோடு
ஒன்பதினோடு
ஒரு பத்து
என்னுமவை போலே
நூறே சொன்ன
பத்து நூறு
ஓர் ஆயிரம்
என்றது
சபிப்ராயம் —

(ஐந்தினோடு-என்னுமது போலே-
ஒன்பதினோடு-என்னுமது போலே–
ஒரு பத்து-என்னுமது போலே–
நூறே சொன்ன என்றதும்
பத்து நூறு என்றதும்
ஓர் ஆயிரம் என்றதும்
சபிப்ராயம் –ஒரு கருத்தை உட்க்கொண்டது -என்றவாறு )

ஐந்தினோடு-என்னுமது போலே
அதாவது
முன்னில் ஓர் ஐந்துக்கு ஒரு கருத்தும் பின்னில் ஐந்து பாட்டுக்கு ஒரு கருத்தும் -ஆகையாலே –
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –10-2-11-என்றும்-
ஒன்பதினோடு-என்னுமது போலே-
அதாவது
ஒன்பது பாட்டுக்கு ஒரு கருத்தும் ஒரு பாட்டுக்கு ஒரு கருத்தும் ஆகையாலே
ஒன்பதோடு ஒன்றுக்கும் —9-5-11- என்றும் –
ஒரு பத்து-என்னுமது போலே-
அதாவது
பத்து பாட்டுக்கும் சேர ஒரு கருத்து ஆகையாலே –
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து-3-4-11 -என்றும் சொன்னவை போலே –
நூறே சொன்ன என்றதும்-
அதாவது-
நூறே சொன்ன ஓர் ஆயிரம் -9-4-11-என்று கிழி கிழியாகக் கொடுப்பாரை போலே –
நூறு நூறு ஆகச் சொன்ன ஆயிரம் என்றும் –
பத்து நூறு என்றதும் –
அதாவது-
பத்து நூற்றுள் இப் பத்து -6-7-11-என்று பத்து நூறு என்றும்
இப்படி பத்துகளை பிரித்து சொன்னதும்
ஓர் ஆயிரம் என்றதும் –
அதாவது-
தெரியச் சொன்ன ஓர் ஆயிரம்–6-9-11 -என்றும் –
மிக்க ஓர் ஆயிரம் –7-6-11-என்றும் –
அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம்-10-10-11 -என்றும் ,
ஆயிரத்தை சேரச் சொன்னதும்-
பத்துகள் தோறும் வெவ்வேறு கருத்தாயும்-ஆயிரத்துக்கும் சேர ஒரு கருத்தாயும்
இருக்கும் படியை நினைத்து ஆகையாலே சாபிப்ராயம் என்கை —

——————————————-

சூரணை-216-

இனி பத்துகள் தோறும் உபதேச பரமான ஓர் ஒரு திருவாய்மொழி
பிரதானமாய் -அவ்வோ பத்துகளுக்கு அவ்வோ திருவாய்மொழியில்
நோக்காய் இருக்கும்படியை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —

பாட்டுக்கு க்ரியையும்
பத்துக்கு கருத்தும் போலே
நூற்றுக்கு உபதேச பத்து —

பாட்டுக்கு க்ரியை போலே
அதாவது
பாட்டானால் க்ரியை (பயனிலை) யோடு தலைக் கட்ட வேண்டும் ஆகையாலே பாட்டுகள் தோறும்
க்ரியா பதம் பிரதானமாக இருக்குமா போலேயும்-
பத்துக்கு கருத்தும் போலே-
அதாவது-
ஒரொரு திரு வாய் மொழிக்கு -பரத்வம்-பஜநீயதை – சௌலப்யம் -அபராத சஹத்வம் என்றாப் போலே –
(உயர்வற உயர்நலம் -பரத்வத்திலே நோக்கு -பிரதான பாசுரம் -1-1-1-/
வீடுன் முற்றவும் -பஜநீயதை – எண் பெருக்கு அந்நலத்து-1-2-10–/
ஸுலப்யம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-/
அபராத சஹத்வம் -எண் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7–)
தனித் தனியே கருத்துகள் ஆகையாலே -பத்துப் பாட்டுக்குக் கருத்தான
நிதானம் சொல்லும் பாட்டு பிரதானமாய் இருக்குமா போலேயும் —

நூற்றுக்கு உபதேச பத்து-
அதாவது
நூறு பாட்டுக்கு பர உபதேசமான பத்துப் பாட்டு பிரதானமாய் இருக்கும் என்கை —
(முதல் பத்தில் வீடுமுன் முற்றவும் /இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை /மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் /
நான்காம் பத்தில் -ஒன்றும் தேவும் /ஐந்தாம் பத்தில் -பொலிக பொலிக / ஆறாம் பத்தில் -நல்குரவு செல்வமும் /
ஏழாம் பத்தில் -இன்பம் பயக்க / எட்டாம் பத்தில் -எல்லியும் காலையும் / ஒன்பதாம் பத்தில் -மாலை நண்ணி /
பத்தாம் பத்தில் -கண்ணன் கழலிணை )

இத்தால் பாட்டுகளுக்கு க்ரியையிலும் –
பத்து பாட்டுகளுக்கு நிதானம் சொல்லும் பாட்டிலும்- தாத்பர்யமாய் இருக்குமோபாதி
நூறு பாட்டுக்கும் பர உபதேசமான பத்து பாட்டிலே -தாத்பர்யமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

பிணங்கி அமரர் பிதற்றும் -1-6-4–என்கிறபடியே –
பேர் அளவு உடைய நித்ய ஸூரிகள் -ஸ்வ ஸ்வ அநுபூத குண தாரதம்யங்களைச் சொல்லி –
சரச விவாத கோலாகலம் பண்ணும்படி இருக்கிற அவனுடைய
பரத்வ சௌலப்ய பிரயுக்தமான குண விசேஷங்களைத் தனித்து தம்மால் புசித்து தலை கட்ட ஒண்ணாமையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-– என்று ‘
கூட்டரான ரசஞ்சரைத் தேடின அளவில் கிடையாதபடி தூரஸ்தராக-
சந்நிஹிதரான சம்சாரிகளுடைய அனாத்ம குணம் பாராதே பகவத் குணங்களில் மூட்டித்
திருத்திக் கூட்டிக்கொள்ள தேட்டமாய் உபதேசத்திலே ஒருப் படுகையாலே அதிலே நோக்காக வேணும் இறே–

——————————————–

சூரணை -217-

இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வரும் அவற்றுக்கு தாத்பர்யம் எது என்னும்
ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் ..

பகவத் பக்த பரங்கள்
ஆஸ்ரயண விதி சேஷங்கள் —

(ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )

பகவத் பக்த பரங்கள்
அதாவது
பயிலும் சுடர் ஒளி -முதலான பாகவத பரங்களான திருவாய்மொழிகள் –
ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -என்கிற விதிக்கு பிரயாஜாதி விதிகள்
சேஷமாய் -அவற்றினுடைய அனுஷ்டானதோடே அது பல பர்யந்தமாய்த் தலைக்கட்டுமா போலே —
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ–4-1-1- –என்றும் ,
நலம் அந்தமில் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோ ஓவாதே -2-8-4–என்று
விதிக்கிற பகவத் ஆஸ்ரயணம் -பாகவத் ஆஸ்ரயணத்தோடு ஒழிய தலைக் கட்டாமையாலே
பகவத் ஆஸ்ரயணீய விதிக்கு சேஷங்கள் என்கை ..
அதவா-
பர உபதேச பரமான இதில் பகவத் குணங்களையும் ஜீவ குணங்களையும்
பிரதி பாதிக்கிறவற்றுக்கு விநியோகம் ஏது என்ன அருளிச் செய்கிறார் —
பகவத் பரங்களாயும் -தத் பக்தரான -ஜீவ பரங்களாயும் -அவ்வவ் குணங்களை பிரதி பாதிக்கிறவை
ஆஸ்ரயண விஷயத்தையும் – ஆஸ்ரயண கர்த்தாவையும்- சொல்லுகிறது ஆகையாலே
ஆஸ்ரயண விதிக்கு சேஷங்கள் இத்தனை என்கை ..

———————————————-

சூரணை -218-

இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி –
பரத்வாதி குண விசிஷ்டனான சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை
பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல் ..

பரத்வ
காரணத்வ
வ்யாபகத்வ
நியந்த்ருத்வ
காருணிகத்வ
சரண்யத்வ
சக்தத்வ
சத்ய காமத்வ
ஆபத் சகத்வ
ஆர்த்தி ஹரத்வ
விசிஷ்டன்
மயர்வை அறுக்க
தத்வ வேதன
மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர
நிஷ்கரிஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
ப்ரேமே பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி
க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி
க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல ப்ராப்தி
மரணா வதியாகப் பெற்று
காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின
தம் பேற்றை பிறர் அறிய
பத்து தோறும் வெளி இடுகிறார் ..

அதாவது
சர்வ ஸ்மாத் பரனாய்-
அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் —
லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –
கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் –
அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே -சர்வ நியந்தாவாய் –
அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணி கனாய் –
இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்–
சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் –
அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் –
அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி –
லீலா விபூதியை ரஷிக்கையாலே -ஆபத் சகனாய் –
இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் –
இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-

மயர்வை அறுக்க தத்வ வேதன மறப்பற்று-
அதாவது-
மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே
பக்தி ரூபான்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத் வேதனத்தில் –
மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து-
அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று -ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –

மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து-
அதாவது-
அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை-
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –

புருஷார்த்த பல அந்ய ஒழிந்து-
அதாவது–
அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக –
ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில்
ருசியைத் தவிர்ந்து –

விரக்தி பல ராகம் கழிய மிக்கு-
அதாவது–
அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –
கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து –

ப்ரேமே பல உபாயத்தே புகுந்து-
அதாவது–
அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே –
அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று
உபாய வரணம் பண்ணி –

சாதன பல உபகார கைம்மாறு இன்றி-
அதாவது-
அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –
உதவி கைம்மாறு என் ஆர் உயிர் -7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் –
என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –

க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை உணர்ந்து-
அதாவது-
அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக –
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி
சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்
-அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –

ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-
அதாவது-
ஆத்ம தர்சன பலமான -பகவத் பிராப்தியை –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று
அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –

காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை
அதாவது-
இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ அர்சிராதிகதிக்கு –
காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி -என்றும் ,
ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே -என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே
துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை

பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..
அதாவது-
பிறர் அறிந்து வாழும் படி –
முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி ..

இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று
பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு
வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து –

மூன்றாம் பிரகரணம் முற்றிற்று.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading