சூரணை -205-
இப்படி விமுகரான சம்சாரிகளைக் குறித்து இவ் ஆழ்வார் உபதேசித்த இது சபலமாய்த்தோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் ..
க்யாதி லாப பூஜ
அபேஷை யற
மலர் நாடி யாட் செய்ய
உய்யக் கொண்டு
ஆரைக் கொண்டு
வாளும் வில்லும் கொண்டு
என்கிற இழவுகள் தீரப் பெற்றது ..
(க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று -மலர் நாடி யாட் செய்ய-
உய்யக் கொண்டு என்கிற இழவும் -ஆரைக் கொண்டு என்கிற இழவும் -வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது )
க்யாதி அபேக்ஷை அற்று-
அதாவது
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-3-3-4 -என்று
தண்மைக்கு எல்லையாகத் தம்மை நினைத்து இருக்கையாலும் ,
லாப அபேக்ஷை அற்று
அதாவது
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -4-9-4–என்று
ஐஸ்வர்யத்தை அக்நி சமமாகக் காண்கையாலும் –
பூஜா அபேக்ஷை அற்று-
அதாவது-
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்-8-9-1- -என்று
பகவத் சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்களுக்கு தம்மை சேஷமாக நினைத்தும் –
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆள் உடையார்கள் பண்டே–9-1-1- -என்று
இப் பிரபந்தத்தில் அன்வயித்தவர்களை தமக்கு சேஷிகளாக நினைத்தும் இருக்கையாலும் —
க்யாதியிலும் லாபத்திலும் பூஜையிலும் அபேஷை அற்று —
மலர் நாடி யாட் செய்ய-
அதாவது-
நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே –
சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று
கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —
உய்யக் கொண்டு என்கிற இழவும்-
அதாவது-
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே-4-10-9- -என்று
சம்சாரிகள் உஜ்ஜீவன நிமித்தமாக உண்டான இழவும் –
ஆரைக் கொண்டு என்கிற இழவும்
உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ–7-3-4- -என்று
தனக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த இழவும் ..
வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும்-
அதாவது–
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–8-3-3-என்று
அவன் சௌகுமார்யம் அறிந்து பரிகைக்கு ஒருவரும் இல்லை என்ற இழவும்
தீரப் பெற்றது என்கை ..
எல்லாரும் உஜ்ஜீவித்து தமக்கு உசாத் துணையாய் –
அவனுக்கு மங்களாசாசனமும் பண்ணுகையாலே -மூன்று இழவும் தீரும் இறே —
மலர் நாடி-என்கிற இதுக்கு
நறிய நன் மலர் நாடி –என்கிற இது சொல்லும் போது
சர்வ வ்யாக்யானங்களிலும் -பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள்
போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே –
இவருக்கு நினைவு ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..
அன்றிக்கே
மலர்நாடி -என்கிற இது –
நாடாத மலர்-1-4-9- -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..
வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே
ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-
————————————-
சூரணை -206-
இப்படி உபதேசம் பலித்ததாகில்-
பரீஷ்ய லோகான் – இத்யாதிப்படியே கர்ம பலமான சம்சார போகங்கள் -அல்ப அஸ்திரத்வாதி தோஷத்தையும் –
நித்யனான பரமாத்வானாவன்- கர்ம சாத்யன் அல்லாமையும் –அனுசந்திக்கையால் உண்டான நிர்வேதத்தோடே
சம தம உபேதனாய்- உபஹார பாணியாய்க் கொண்டு ஸ்ரோத்ரியனாய் –
ப்ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை உபசத்தி பண்ண -அவனும் –
நாசம்வச்தர வாசினே ப்ரப்ரூயாத் -என்கிறபடியே -ஒரு சம்வஸ்தரம் பரீஷித்து பின்னை உபதேசிக்கக் கடவனாக
சொல்லுகிற சாஸ்திர மரியாதையில் சம்சாரிகள் அனுவர்திக்க இவர் உபதேசித்தார் ஆனாலோ என்கிற
சங்கையில் அருளிச் செய்கிறார் –
ப்ரஹ்ம நிஷ்டரும்
சம்வத்சர வாசிகளும் ஆகில்
ஏ பாவம் பயன் நன்றாகிலும்
சேராது-
(உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது -என்றும் –
உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது -என்றவாறு )
உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது
அதாவது
உபதேஷ்டாவான இவர் ச க்ரமமாக உபசத்தி பண்ணினவனுக்கு ஒழிய உபதேசியோம்
என்று இருக்கும் ப்ரஹ்ம நிஷ்டர் ஆகில் –
அப்படி வந்து உபசத்தி பண்ணினவர்களுக்கு ப்ரீதியோடே உபதேசிக்கை ஒழிய –
அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கப் புக்கு –
ஏ பாவம் பரமே -2-2-2–என்றும் ,
ஒ பாவம் எனக்கு இது பரமாவதே -என்று
உபதேச உபக்ரமத்தில் வெறுத்து சொன்ன உக்தி சேராது ..
உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது
அதாவது
இவர் பக்கல் உபதேசம் கேட்டவர்கள் சம்வத்சர வாசிகள் ஆகில் உபஹார பாணிகளாய்
நாம் அனுவர்த்திது அன்றோ பெற்றோம் என்று இருக்கை ஒழிய –
இவருக்கு பிரதம சிஷ்யர் ஆனவர் –
பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்–கண்ணி நுண்-10- -என்று
பிரயோஜன சூன்யர் ஆகிலும் -அவிதரே ஆகிலும் தம்முடைய செயலாலே எல்லாம் நன்றாம் படி திருத்திக் கொள்வார் இவர் என்று –
கிருதக்ஜையாலே உகந்து சொன்ன உக்தியும் சேராது என்கை ..
இப்படி ஆச்சார்ய யுக்தியும் சிஷ்ய யுத்தியும் ஆகையாலே
முன் சொன்ன ஹேதுக்களாலே விமுகரைக் குறித்து உபதேசிக்க –உபதேச சுத்தியாலே சர்வரும் திருந்தி –
இவருடைய இழவுகள் எல்லாம் தீர்ந்தது என்றே கொள்ள வேண்டும் என்றது ஆய்த்து–
——————————————–
சூரணை-207-
இனி இப்படி பரே உபதேசர் ஆன போது பகவத் அனுபவம்
விச்சேதம் ஆகாதோ என்கிற சங்கையில் மேல் அருளி செய்கிறார் —
மெய் நின்று
மங்க ஓட்டுக்கு நடுவு
அநுபவ கர்ப்ப உபதேசம் —
(அநுபவ கர்ப்ப உபதேசம்-அனுபவம் மனசிலே செல்லா இருக்கும் பொழுதே உபதேசம் என்றவாறு )
அதாவது
மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே–திருவிருத்தம் –1- -என்றது முதல்-
மங்க ஒட்டு உன் மா மாயை -திருவாய்-10-7-10–என்கிறது அளவாக
நடு உள்ள நான்கு பிரபந்தங்களும் அனுபவம் உள்ளே நில்லாச் செய்தே இருக்கும் பர உபதேசம் என்கை ..
இவர் தமக்கு அனுபவ கர்பமான உபதேசமும் ,உபதேச கர்ப்பமான அனுபவமுமாகவே செல்லும் என்று இறே
நம் முதலிகள் அருளிச் செய்வது ..
ஆகையால் இவருக்கு அனுபவ விச்சேதம் ஒருக் காலும் இல்லை இறே —
ஆக இப்படி இவருடைய
பர உபதேச விஷயங்களும் –
உபதேச ஹேதுக்களும் –
உபதேச சாபல்யமும் –
உபதேசம் தான் அனுபவத்தை விட்டு இராது
என்னும் இடமும் சொல்லிற்று ஆய்த்து —
——————————————–
சூரணை-208-
இப்படி இவ் ஆழ்வார் உடைய அனுபவ உபதேச ரூபமான பிரபந்த சதுஷ்டயமும் –
ரஹஸ்யர்த்தயார்த்த பிரதி பாதகமாய் இருக்கும் படி பிரகாசிப்பதாக நினைத்து
உபக்ரமிக்கிறார் மேல் —
இவற்றுக்கு
மந்த்ர
விதி
அநுசந்தான
ரஹஸ்யங்களோடே
சேர்த்தி ..
(மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் /விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் /அனுசந்தான ரஹஸ்யம் -த்வயம் )
அதாவது
மெய் நின்று மங்க ஓட்டுக்கு நடுவு –என்று கீழ் பிரஸ்துதமான இப் பிரபந்தங்கள் நாலுக்கும் –
சகல சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும் –சம்சய விபர்யம் அற-பிரதிபாதிக்கு மவையாய் –
சர்வம் அஷ்டாஷர அந்தஸ்தம் -ஸ்ரீ பாஞ்சராத்ரம் – என்னும் படி
சகல சாஸ்திர ஸங்க்ரஹமான திரு மந்த்ரமும் —
சித்தோ உபாய வர்ணத்தை சாங்கமாக விதிக்கும் சரம ஸ்லோஹமும் –
உபாய உபேய வர்ண பிரார்த்தனைகளை -ச க்ரமமாக-பிரகாசிப்பியா நின்று கொண்டு –
கால ஷேபத்துக்கும் –
போகத்துக்குமாக –
சாரஜ்ஞ்ஞராலே சதா அநுசந்தானம் பண்ணப் படும்
த்வயமும் ஆகிய ரஹஸ்யதோடே சேர்த்தி என்கை ..
——————————————
சூரணை-209-
அதில் எந்த பிரபந்தத்துக்கு எந்த ரஹஸ்யத்தோடே சேர்த்தி என்னும்
ஆ காங்க்ஷையில் அத்தை இட்டு அருளிச் செய்கிறார் மேல் —
அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய
பொய் யாதானும் அழுந்தார் என்று
ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –
தாமரை உந்திப் பெரு மா மாயன்
ஆளாகவே வாழிய என்று -பிராப்ய பலங்களையும் –
நெறி காட்டி மனத்துக் கொண்டு
கண்ணனால் அடித்துக்
கண்டிலமால் யாதாகில் என்று
உபாயத்தையும் சொன்னவை
மந்த்ர ஸ்லோஹங்களோடே சேரும் ..
(மந்த்ர ஸ்லோகங்கள் என்றது திருமந்த்ரத்தையும் சரம ஸ்லோகத்தையும் )
அளிப்பான்
அதாவது
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திருவிருத்தம்-1-– என்று
பிரணவத்தில் பிரதம அஷரத்தில் தாத்வர்தமான பகவத் ரஷகத்வையும் —
அடியேன்
அதாவது
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -திருவிருத்தம் -1–என்று
தத் ரஷ்ய பூதமாய் -சதுர்த்தி -உகாரங்களில் -சொல்லுகிற படியே
தத் அநந்யார்ஹ சேஷமாய் -பிரக்ருதே பரமாய் –ஞான ஆனந்த லஷணமாய்-
த்ருதீய அஷரத்தில் சொல்லப் படுகிற ஆத்ம ஸ்வரூபத்தையும் —
அடைக்கலம்
அதாவது
பிரதம அஷரத்தில் சதுர்த்தி சம் பிரதானத்திலேயாய் –
ப்ரஹ்மணே த்வாமஹச ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-தைத்ரியம் -என்ற படி –
பிரணவத்துக்கு ஆத்ம சமர்பணமும் அர்த்தம் ஆகையாலே –விரோதி பயத்தாலே கலங்கின தசையிலே –
அடியேனடி யாவி யடைக்கலம்-திருவிருத்தம்-85- -என்று
அந்த ஆத்ம சமர்ப்பணைத்தையும் –
சூடிய
அதாவது
திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்–திருவிருத்தம்-100–என்று
பிரணவோக்தமான பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் ததீய சேஷத்வத்தையும்-
பொய் யாதானும்
அதாவது
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -திருவிருத்தம்-1–என்றும் ,
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டு ஆப்பு அவிழ்ந்தும் -திருவிருத்தம்-95–என்றும்
ஷஷட் யந்தமான ம காரத்தில் சொல்லப் பட்ட -அஹங்கார மமகாரங்களாகிற –
அனாத்ம அன்யாத்ம புத்யாதி ரூப அவித்யையும்-
தத் கார்யமான அக்ருத்ய கரணாதிகளையும்-
தத் காரயமாக வரும் தேவ மனுஷ்யாதி ரூபமான பிரகிருதி சம்பந்தத்தையும் –
அழுந்தார்-என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –
அதாவது-
இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே –திருவிருத்தம் என்று
தத் நிஷேத வாசியான நஞ்சாலே சொல்லப் பட்ட -அவித்யை முதலாக சம்சார கர்தமம் ஈறாக –
உள்ள விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகையாலே –
சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷமாய் —
ஞான ஆனந்த லஷணமாக ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தையும்
சம்சார ஹேது பூத அவித்யாதிகளான விரோதிகளின் நிவ்ருத்தியையும்
பிரதிபாதிக்கிற –திரு விருத்தம் -பிரதம மத்யம-பதங்கள் இரண்டோடும் சேர்ந்து இருக்கையாலும் –
தாமரை உந்திப் பெரு மா மாயன்-
அதாவது-
தாமரை உந்தி தனிப் பெரும் நாயக –திருவாசிரியம் -1-என்று தொடங்கி
எம் பெரு மா மாயன்–திருவாசிரியம் -5- -என்று தலைக் கட்டுகையாலே –
நாராயண -பதத்தில் சொல்லப் படுகிற -உபய விபூதி யுக்தமான பிராப்ய வஸ்துவையும் –
ஆளாகவே வாழிய என்று-என்று -பிராப்ய பலங்களையும்
அதாவது-
தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல் –திருவாசிரியம் -3 என்றும் –
ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -திருவாசிரியம்-4–என்றும் –
அந்த பதத்தில் சதுர்த்திய அர்த்தமான பல ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே –
பிராப்ய -பலன்கள்- இரண்டையும் சொல்லும் திரு வாசிரியம் —
பிரகிருதி பிரத்யய அம்சங்களாலே –தத் உபய பிரதி பாதகமான த்ருதீய பதத்தோடு
சேர்ந்து இருக்கையாலும் -இரண்டு பிரபந்தமும் -திரு மந்த்ரத்தோடு சேரும் —
நெறி காட்டி-
அதாவது-
நெறி காட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -6–என்று
உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்க்கிறாயோ என்கையாலே –
சர்வ தர்மான் பரித் யஜ்ய–ஸ்ரீ கீதை-18-66 -என்ற உபாயாந்தரங்களின் பரி த்யாஜ்யத்தையும் —
மனத்துக் கொண்டு-
அதாவது-
வெம் கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு -பெரிய திருவந்தாதி-48-– என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை-18-66–என்கிற மானஸ அத்யாவச்ய ரூபமான -உபாய ஸ்வீகாரத்தையும்-
கண்ணனால் அடித்து-
அதாவது-
சீரார் மனத் தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான் -பெரிய திருவந்தாதி-25-என்றும் –
எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து வல் வினையை கானும் மலையும் புகக் கடிவான் பெரிய திருவந்தாதி-26-என்றும்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று
உபாய பூதன் பண்ணும் சர்வ பாப விமோசனத்தையும் —
கண்டிலமால்-
அதாவது-
வானோ மறி கடலோ பெரிய திருவந்தாதி-54-என்று தொடங்கி –வன் துயரை -மருங்கு -கண்டிலமால்–என்று
விரோதிகள் ஆனவை போன இடம் தெரியாத படி தன்னடையே விட்டு போய்த்து என்கையாலே –
நானும் வேண்டா நீயும் வேண்டா – அவை தன்னடையே விட்டு போம் -என்கிற நிஜர்தத்தையும் —
யாதாகில் என்று-உபாயத்தையும் சொன்னவை-
அதாவது-
அடர் பொன் முடியானை–பெரிய திருவந்தாதி-70 -என்று தொடங்கி – யாதாகில் யாதே இனி -என்று –
இனி கர்மம் இருந்து என் -நசித்து என் -எதனால் நமக்கு என் வரும் -என்று
மா ஸூ ச -என்கிற பதத்தால் பலிதமான
நிர் பரத்வ அனுசந்தானத்தையும் – சொல்லுகையாலே
உபாய பிரதி பாதகமாய் இருக்கிற பெரிய திரு அந்தாதி -சரம ஸ்லோகத்தோடே சேரும் என்கை ..
உபாயத்தையும் சொன்னவை-என்று சொன்ன பிரபந்தங்கள் என்ற படி ..
———————————–
சூரணை -210-
சரம பிரபந்தமான திரு வாய் மொழியின் த்வயார்த்த பிரதிபாதகத்வம் விஸ்த்ரேண உபபாதிக்க வேண்டுகையாலும்
தத் விஷயமாக தம்முடைய திருத் தமையனார் பிள்ளை ஒரு பிரபந்தம் முன்பே இட்டு அருளுகையாலும் –
அதிலே தர்சிப்பித்து விடக் கடவோம் என்று மேலே அருளுகிறார் ..
த்வயார்தம்
தீர்க்க சரணாகதி
என்றது
சார சங்கரஹத்திலே-
அதாவது
திருவாய்மொழி பத்து பத்தாலும்
ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக
த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே ,
த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில் என்கை —
அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்-
அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –
பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும்
பிரசித்தமாய் –
சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை –
பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் –
பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது –அதாகிறது –
1-ஸ்ரீ யபதித்வம்
2-நாராயணத்வம்
3-நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான -சரணார விந்த யுகளம்
4-அதினுடைய ப்ராபகத்வம்
5-தத் கோசரமாய் -சேதனகதமாய் இருந்துள்ள -பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம்
6-லஷ்மி தத் வல்லபர் உடைய -நிகில ஆத்ம கைங்கர்ய -பிரதான அர்த்தமான நித்ய சம்பந்தம்
7-கைங்கர்ய பிரதி சம்பந்தியான -ஈஸ்வரனுடைய -நிரதிசய போக்யதை
8-சர்வ ஸ்வாமித்வம்
9-நித்ய கைங்கர்யம்
10-கைங்கர்ய பிரதி பந்தக நிச்சேஷ நிபர்ஹணம் -ஆகிய அர்த்த விசேஷங்கள் ..
ஈத்ரு சார்த்த விசேஷ பிரகாசமான மந்த்ர விசேஷத்தின் உடைய விவரண ரூபமாய் –
பௌருஷேய உபநிஷத்தாய் இருந்துள்ள -திரு வாய் மொழியில் -பத்து பத்தாலும் –
இப் பத்து அர்த்தத்தையும் நம் பூர்வ ஆச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து போருவர்கள்-
அதில் முதல் பத்தால்-
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-1-3-1 -என்றும் ,
மலராள் மைந்தன் -1-5-9–என்றும் ,
திரு மகளார் தனிக் கேள்வன்-1-6-9- -என்றும் ,
திருவின் மணாளன் -1-9-1–என்றும் ,
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3–என்றும் ,
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4–என்றும்
ஸ்ரீ யபதித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து ..
இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7–என்றும் ,
எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–என்றும் ,
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -2-7-2-– என்றும்
நாராயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து-
மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9–என்றும் ,
அம் கதிர் அடியன் -3-4-3–என்றும் ,
அவன் பாத பங்கயம்-3-6-4- -என்றும் ,
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10–என்றும் ,
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியான் -3-8-1–என்றும் ,
நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து ..
நாலாம் பத்தாலே –
இலங்கை நகரம் பெரி உய்த்தவர் -4-2-8–என்றும் ,
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11–என்றும் ,
தொல் வினை தீர-4-4-11 -என்றும் ,
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே-4-5-2- -என்றும் ,
மேவி நின்று தொழுவார் வினை போக-4-5-4- -என்றும் ,
பிறந்தும் செற்றும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்-4-7-7- -என்றும் ,
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணி யே என்று இவை ஒழிய-4-9-7- -என்றும் ,
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திரு வடி கண் கூட்டினை -4-9-9–என்றும் ,
அக்தே உய்யப் புகும் ஆறு -4-1-11–என்றும் ,
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும்
அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட ப்ராப்தி கரத்தவ லஷணமான ப்ராபகத்வம் பிரதிபாத்யம் ஆய்த்து-
அஞ்சாம் பத்தில் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2–என்றும்
ஆர் எனக்கு நின் பாதமே சரணாக -5-7-10–என்றும் ,
உன்னால் அல்லால்-5-8-3- -என்றும் ,
கழல் களையே சரணாக கொண்ட-5-8-11- -என்றும் ,
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென்குருகூர் சடகோபன்-5-9-11 -என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய்-5-10-11- -என்றும்
தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாத்யம் ஆய்த்து-
ஆறாம் பத்தில் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து-6-5-8- -என்றும் ,
அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11–என்றும் ,
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்-6-7-8- -என்றும் ,
என் திரு மார்வற்கு -6-8-10-என்றும் ,
கோலத் திரு மா மகளோடு உன்னை -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரதான அர்த்தமான லஷ்மி தத் வல்லபர்களுடைய நித்ய சம்பந்தம் பிரதி பாத்யம் ஆய்த்து –
ஏழாம் பத்தால் –
கன்னலே அமுதே-7-1-2- -என்றும்
கொடியேன் பருகு இன் அமுதே -7-1-7–என்றும் ,
அலை கடல் கடைந்த ஆர் அமுதே-7-2-5- -என்றும் ,
திரு மாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ-7-9-9- -என்றும் ,
இவ் எழ உலகை இன்பம் பயக்க-7-10-1–என்றும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதி பாத்யம் ஆய்த்து ..
எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய அம்மானே -8-1-3- -என்றும் ,
விண்ணவர் கோன் தங்கள் கோனை-8-2-2- -என்றும் ,
அமர்ந்த நாதனை -8-4-10–என்றும் ,
மூ உலகாளி-8-9-5–என்றும் ,
நேர் பட்ட நிறை மூ உலகுக்கும் நாயகன்-8-9-11- -என்றும்
சர்வ ஸ்வாமித்வம் பிரதி பாத்யம் ஆய்த்து-
ஒன்பதாம் பத்தால்
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -9-2-1–என்றும் ,
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல்–9-2-2–என்றும் ,
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3–என்றும் ,
கொடி வினையேனும் பிடிக்க-9-2-10- -என்றும் ,
உறுவது இது என்று உனக்கு ஆட் பட்டு-9-4-4- -என்றும் ,
ஆட் கொள்வான் ஒத்து-9-6-7- -என்றும் ,
நானும் மீளா அடிமை பணி செய்யப் புகுந்தேன்-9-8-4- -என்று
நித்ய கைங்கர்யம் பிரதி பாத்யம் ஆய்த்து —
பத்தாம் பத்தால் –
துயர் கெடும் கடிது -10-1-8–என்றும் ,
கெடும் இடராய -10-2-1–என்றும் ,
எழுமையும் ஏதமும் சாரா -10-2-2–என்றும் ,
தீரும் நோய் வினைகள் எல்லாம்-10-2-3- -என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5–என்றும் ,
உன் தன திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்-10-3-9- – என்றும் ,
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7–என்றும் ,
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3–என்றும் ,
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-4-9–என்றும் ,
அமரா வினைகளே -10-5-9–என்றும் ,
கடு நரகம் புகல் ஒழித்த -10-6-11–என்றும் ,
பிறவி கெடுத்தேன்-10-8-3- -என்றும் ,
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -10-8-5–என்றும் ,
அந்தி தொழும் சொல்லு-10-8-7- -என்றும் ,
அவா வற்று வீடு பெற்ற-10-10-11- -என்றும்
கைங்கர்ய பிரதிபத்திய நிசேஷ்ய நிபர்ஹணம் பிரதிபாத்யம் ஆய்த்து —
இப்படி ஸ்ரீ யபதித்ய பிரமுகங்களாய் –கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்கண பர்யந்தங்களாய் இருந்துள்ள
–உபாதேயார்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள –
வாக்ய த்வயமும் –திரு வாய் மொழியும் –
பகவத் சரணார்த்தி களாய் – அநந்ய உபாயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு –
கால ஷேப ஹேதுவாகவும்-
போக ஹேதுவாகவும் —
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும் –
யாவச் சரீர பாவம் அனுசந்தேயம் -என்று அருளிச் செய்த இப் பிரபந்தம் என்கை –
இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே –
ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து ..
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply