சூரணை -199-
இப்படி இவர்கள் இருவருக்கும் பலகாலம் உபதேசிகைக்கு ஹேது ஏது என்னும்
ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..
கதிர் ஞான மூர்த்திக்கு
உணர்த்துவது பிரேமத்தாலே —
தமஸ் மூடுவாருக்கு
வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே ..
கதிர் ஞான மூர்த்திக்கு-உணர்த்துவது பிரேமத்தாலே
அதாவது
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்–திருவாய்-6-2-8–என்று
சம்ஹ்ருதி சமயத்தில் சகல சேதன அசேதனங்களையும் ஒக்கக் கலசி —
சிருஷ்டி சமயத்தில் ஒருவர் கர்மம் ஒருவர் இடம் கலசாத படி –
பிரித்த இடத்திலும் தன் ஸ்வரூபத்துக்கு ஒரு பேதம் இன்றிக்கே –
அத்வீதியமாய் -அபரிசேத்யமான கீர்த்தி சமுத்ரத்தை உடைத்தாய் இருக்கிற
பிரபா ரூபமான ஜ்ஞானத்தை வடிவாக உடையவன் ஆகையால் சர்வஜ்ஞ்ஞனாய் இருக்கிறவனுக்கு –
உனக்கு ஓன்று உணர்த்துவன்–திருவாய்-6-2-5- -என்று
உபதேசிகிறது —தத் விஷய பிரேமத்தாலே ..
தமஸ் மூடுவாருக்கு-வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே
அதாவது
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள் என்று தம மூடும்-திருவாய்-4-9-4- -என்று
ஐஸ் வர்யம் விநாச ஹேதுவாக காணா நிற்கச் செய்தே
பின்னையும் அத்தை ஸ்வீகரிக்கும் படி தமோ அபிபூதராக நிற்கும் சம்சாரிகளுக்கு –
நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்-76–என்று
தம் உபதேசத்தாலே பகவத் பக்தியை ஜனிப்பிக்கிறது ..
தத் சம்பந்தம் அடியாக அவர்களை விடமாட்டாதே திருத்தி
தம்மோபாதி பகவத் அனுபவ பரராக்க வேணும் என்கிற ஞானத்தாலே என்கை ..
————————————————
சூரணை -200-
இப்படி ஞான பிரேமங்கள் இரண்டும் காரணமாக சொல்லுவான் என் –
பர துக்க அசஹிஷ்ணுத்வம் அன்றோ பர உபதேசத்துக்கு பிரதான காரணம்
என்ன அருளிச் செய்கிறார் மேல் ..
உயிர் மாய்தல்
ஆழும் என் ஆர் உயிர் என்னும்
பர துக்கம் சஹியாமை
இரண்டிலும் உண்டு-
(உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-ஞானத்திலும் உண்டு –
ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை பிரேமத்திலும் உண்டு )
உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-
அதாவது-
கொண்டாடும் குலம் புனைவும் -என்று தொடங்கி-
தமர் உற்றார் விழு நிதியும் வண்டார் பூங்குழலாலும் மனை ஒழிய
உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்று
சம்சாரிகள் பாரிக்கிற பாரிப்பும் -முடிந்து போகிற படியும் -கண்டு ஆற்ற மாட்டுகிறிலேன்
என்கையாலே பரருடைய துக்கம் சஹியாமையும் –
ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை-
அதாவது-
அசுரர்கள் தலைப் பெய்யில் எவம் கொல் ஆங்கு ஆழும் என் ஆர் உயிர்-திருவாய் -10-3-8- -என்று
அசுரர்கள் வந்து கிட்டினால் -அங்கு என்னாய் விளையுமோ என்று -என் ஆத்மாவானது தரைப் படா நின்றது என்கையாலே –
பரனான -ஈஸ்வரனுடைய துக்கம் சஹியாமையும் –
இருவருக்கும் உபதேசிகைக்கு ஹேதுவான சொன்ன ஞான பிரேமங்கள் இரண்டிலும் என்கை ..
இத்தால் ஞான பிரேமங்கள் இரண்டும் பர துக்க அசஹிஷ்ணுவத்தை ஒழிந்து இராது என்றது ஆய்த்து ..
——————————————
சூரணை -201-
இப்படி பிரேம மாத்ரத்தால் அன்றிக்கே –
ஈஸ்வரன் நினைவாலே -அவனுக்கு தாம் ஆத்மா பூதர் ஆகையாலும் –
அவனுக்கு தீங்கு வரப் பொறுக்க மாட்டார் என்னும் அத்தை தர்சிப்பிகிறார் மேல் ..
என்னது உன்னதாவியிலே
அறிவார் ஆத்மா என்று
அவன் மதம் தோன்றும் ..
என்னது உன்னதாவியிலே
அதாவது
என்னது உன்னதாவியும் -திருவாய் -4-9-3–என்று
உன்னுடைய திவ்ய ஆத்மா ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு என்ற இடத்தில் –
அறிவார் ஆத்மா என்று-
அதாவது-
அறிவார் உயிர் ஆனாய் -என்று
அறிவாரை உயிராக உடையவன் என்னும் படி –
ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18–என்று ,
ஜ்ஞானி யானவன் எனக்குத் தாரகனாகவே என்னுடைய மதம் என்று அருளிச் செய்த படியே
இவரை அவன் தனக்கு ஆத்மாவாகவே நினைத்து இருக்கிற ஆகாரம் தோன்றும் என்ற படி ..
ஆகையால் அவனுக்கு ஒரு துக்கம் வரப் பொறுக்க மாட்டார் என்று கருத்து ..
(உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -என்னும் இந்த திருப் பாசுரத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் பொருள் அருளிச் செய்ய
கேட்டிருந்த முதலிகளில் சிலர் -இவ்வாத்மாவின் ஸ்வரூபம் பரமாத்மா இட்ட வழக்கு என்னக்கூடும்-
பரமாத்மாவின் ஸ்வரூபம் ஜீவாத்மா இட்ட வழக்கு என்பது என் -என்று கேட்க
இவன் தன்னை அவனுக்கு ஆக்குவன் என்ற அன்று கர்மம் தடை செய்யவும் கூடும்
சர்வேஸ்வரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடை செய்பவர் இலர் –
ஆனபின்பு அதுவே நிலை நிற்பது –
மேலும் இவன் ஸ்வரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ -என்று
இதிலே காணும் சந்தேகிக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார் )
—————————————————
சூரணை -202-
ஆக ஜீவேச்வரர்களுக்கு பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேதுக்களை
தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ் —
இப்படி இவர் உபதேசிப்பர் ஆனாலும் ,
சிஷ்ய லக்ஷண யோக்யதை இல்லாத ஈஸ்வரன் உபதேசத்துக்கு
முக்ய பாத்ரம் அன்றே என்னும் ஆ காங்க்ஷையில் அருளி செய்கிறார் மேல் —
இருத்தும் எண் தானாய்
பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய்
ஷூத் த்ருட்பீடித
நிர்தனரைப் போல்
கண்டு கொண்டு உண்டு பருகி
பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து
என் செய்வன் என்றே இருந்து
அகில பரத்தையும் சமர்ப்பிக்க
அது சுமந்து அல்லு நன் பகலும் போகு
என்றாலும் அகல்வானும் அல்லனாய்
போகேல் என்றால் உகப்பையும் தவிர்ந்து
விதி வகையே நடத்துமவனே
உபதேச சத் பாத்ரம்-
(ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி
அதாவது
ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு –
த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி
நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு -)
அதாவது –
சஸ் சிஷ்யனானவன் ஆச்சர்யனை
தத் அபிமத ஸ்தலத்திலே வைத்து –
தத் சந்த அனுவர்த்தியாய் –
தத் விக்ரகத்திலே புரை அற்ற விருப்பம் உடையவனாய் –
சகல சிநேகத்தையும் அவன் பக்கலிலே பண்ணி –
தத் இதரங்களிலே சங்கம் அற்று –
மிடியனும் பசியனும் விடாயனும் -தனம் சோறு தண்ணீர் -பெற்றார் போலே –
அத்யபிநிவேசத்தோடே அவனை அனுபவித்து
சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் –விஹகேஸ்வர சம்ஹிதை –என்கிற படியே –
தன் ஆத்மா ஆத்மீயங்களை ஆச்சர்யனுக்கு சமர்ப்பித்து எல்லாம் செய்தாலும் –
க்ருத்ஸ்னாம் வா ப்ருதிவீம் தத்யாத் நதத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே –
ஆசார்யன் பண்ணின மகோ உபகாரத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே -குறைவாளனாய் –
ஆசார்யன் தன்னுடைய தேக யாத்ரா பரம் எல்லாம் தன் மேலேயே பொகட்டு இருக்க –தான் அது அடங்கலும் சுமந்து –
திவாராத்ரா விபாகம் அற-அவனைப் பிரியாதே -அவன் நிக்ரஹித்து போ என்றாலும் போகாதவனாய் —
அவனுக்கு அநிஷ்டம் ஆனால் தனக்கு உகப்பான வற்றையும் விட்டு –
ஆசார்யன் விதித்த படியே நடத்தும் அவன் ஆகையாலே —
எம்பெருமானும் -இருத்தும்-
அதாவது-
இருந்தும் வியந்து என்னை தன் பொன் அடிக் கீழ் –திருவாய்-8-7-1–என்று
இவருக்கு அபிமதமான இடத்தில் இவரை இருத்தி —
எண் தானாய்-
என் எண் தானான்-திருவாய்-1-8-7- –என்று
இவர் நினைவிலே ஒழுகுவானாய்-
பொய் கலவாது-
அதாவது
பொய் கலவாது என் மெய் கலந்தான் திருவாய்-1-8–5–என்று
இவர் திரு மேனியிலே பண்ணும் விருப்பத்தில் புரை இன்றி இருக்க —
அன்பு செய்து
அதாவது
அந்தாமத்து அன்பு செய்து-திருவாய்-2-5-1- -என்று
பரம பதத்தில் பண்ணும் வ்யாமோகத்தை இவர் பக்கலிலே பண்ணி —
பற்றிலனாய்-
அதாவது
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றான்-திருவாய்-1-2-6- -என்று
இவர் பக்கல் சங்கத்தாலே அங்குள்ளார் பக்கல் சங்கத்தை விட்டு –
ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி
(-ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு –
த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி
நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு )
இருந்தான் கண்டு கொண்டு –திருவாய்-8-7-2–என்றும் –
என்னை முற்றவும் தான் உண்டான் -திருவாய்-8-7-2– என்றும் ,
தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய்-9-6-10 -என்று சொல்லுகிறபடி
நிர் தனன் நிதி கண்டார் போலேயும் –
பசித்தவன் சோறு கண்டார் போலேயும் –
தாஹித்தவன் தண்ணீர் கண்டார் போலேயும் –
அத்யந்த அபிநிவேசத்தோடே இவரை அனுபவித்து –
பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து-
அதாவது-
பரிஜன பரிபர்ஹா பூஷணா ந்யாயுதானி ப்ரவர குண கணாச்ச
ஜ்ஞான சக்த்யா தயஸ்தே பரமபதம தாண்டான் யாத்மா தேஹஸ்
ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகரத்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–63–என்றும்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –திருவாய்-2-7-11–என்றும் -சொல்லுகிற படியே
தன் விபூதியையும் தன்னையும் இவருக்குக் கொடுத்து –
என் செய்வன் என்றே இருந்து-
அதாவது–
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி–பெரிய திருவந்தாதி-53- -என்கிறபடியே
இவர்க்கு எல்லாம் செய்தாலும் தான் இழவாளனாய்–
ஆத்மாத்மீய அகில பரத்தையும் -நமஸ் -சப்த முகேன இவர் சமர்ப்பிக்க –
வேம்கடத்து உறைவார்க்கு நமவென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கு–திருவாய்-3-3-6- -என்னும்படி –
பூயிஷ்டாம்-யஜுர் வேதம்-என்கிறபடியே
நம உக்தி தனக்கு கனத்து தோற்றுகையாலே — அவ் வழியாலே அகில பாரத்தையும் சுமந்து –
அல்லு நன் பகலும் போகு-என்றாலும் அகல்வானும் அல்லனாய் –
அதாவது–
அல்லு நன் பகலும் இடை வீடு இன்றி நல்கி என்னை விடான்–திருவாய்-1-10-8- -என்று
இவர் பக்கலில் பண்ணின ஸ்நேகத்தாலே -திவாராத்ரா -விபாகமற -இவரை விட மாட்டாதே –
போகு நம்பீ -திருவாய்-6-2-2–என்று சீறிப் போகச் சொன்னாலும் ,
அகல் வானும் அல்லன் இனி-திருவாய்-2-6-7- -என்கிறபடியே அகலாதவனாய் —
ஆன் பின் போகேல் -திருவாய்-10-3-8–என்று இவர் நிவர்திப்பித்தால் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய்-10-3-10-– என்கிறபடியே-
தனக்கு உகப்பானவையும் தவிர்ந்து –
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–திருவாய்-10-6-1- -என்று
இவர் விதித்த படியே நடத்துகிற
சர்வேஸ்வரனே உபதேசத்துக்கு சத் பாத்ரம் என்கை —
————————————————-
சூரணை -203-
ஆனால் இங்கன் இன்றிக்கே
அஜ்ஞரான சம்சாரிகளுக்கு உபதேசிக்கிற அளவிலே
சம்சார விரக்தராய் –ஆத்ம குண உபேதராய் –சம்யக் உப சன்னரானவர்களுக்கு –உபதேசிக்கும் அர்த்தத்தை
பகவத் விமுகராய் -பிரயோஜனாந்த பரராய் –அனுவர்த்தன ஹீனரானவர்களுக்கு —
வலியப் பிடித்து உபதேசிப்பான் என் என்னும்
ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —
நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே
ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு
உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை
வம்மின் விரோதம் ஈனச் சொல்
எவ் உயிர்க்கும் அறிய என்று
அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது
ஞாலத்தார் பந்த புத்தியும்
அனர்த்தமும் கண்டு
ஆற்றாமையும்
மிக்க கிருபையும் இறே-
(அமாநித்வம் -மேன்மக்களை உபேக்ஷை செய்யாமல் இருப்பது / அதபஸ்கர்-தவம் இல்லாதவர் )
நண்ணாதார் -மெய்யில்- ஊன்- ஆசை நிர்வேதத்தோடே
அதாவது
நண்ணாதார் முறுவலிப்ப–திருவாய்மொழியிலும்-4-9-
மெய்யில் வாழ்க்கை -பெருமாள் திருமொழியிலும் -3-1-
ஊனேறு செல்வத்திலும்–பெருமாள் திருமொழியிலும் -2-1-
ஆசை வாய் சென்ற சிந்தையிலும் -பெரியாழ்வார் -4-5-1—சொல்லுகிற படி –
பகவத் விமுக லோக யாத்ரையிலும் /மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேஹத்திலும் —
கர்ம உபாதிகங்களான தேக அனுபந்திகளிலும் –உண்டான தோஷ தர்சனத்தாலே –
பரீஷ்ய லோகான் கர்ம சிதான் ப்ராம்ஹணோ நிர்வேத மாயாத் நாஸ்தி அக்ருத க்ருதேன -முண்டகம் -2-11-
( செய்யும் செயல்களால் ஈட்டப்படும் பலன்களை ஆராய்ந்த பிராமணன் -செய்யும் செயல்களால் பரம்பொருளை
அடையைப் படுகிறான் இல்லை என்று வெறுப்பை அடைவான் )-இத்யாதிப் படியே பிறந்த நிர் வேதத்தோடே–
ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின-
அதாவது-
ஆஸ்திகோ தர்ம சீலச்ச சீலவான் வைஷ்ணவச் சுசி கம்பீரஸ் சதுரோ தீரஸ் சிஷ்ய இத்ய பிதீயதே –
(சாஸ்திரங்களில் நம்பிக்கை -தர்மங்களைச் செய்ய வேண்டும் என்னும் தன்மை -ஒழுக்கம் விஷ்ணு பக்தி –
தூய தன்மை–காம்பீர்யம் -சாதுர்யம் -தைர்யம் யுடையவனுமான ஒருவன் சிஷ்யன் என்று கொல்லப்படுகிறான்-)என்றும் ,
அமாநித்வ மதம்பித்வ மஹிம்சா ஷாந்தி ஆர்ஜவம் ஆச்சார்யா உபாசனம் ஸௌசம் ஸ்தைர்யம் ஆத்மவி நிக்ரக -ஸ்ரீ கீதை -13-7-
(உயர்ந்தவர்களை அலக்ஷியம் செய்யாமலும் -கர்மாநுஷ்டானங்களைப் பெருமைக்காகச் செய்யாமலும் –
மூன்று கரணங்களாலும் பிறருக்கு துன்பம் செய்யாமலும் -பொறுமையுடனும் -அனைவரையும் சமமாகப் பார்த்தும்
ஆச்சார்யரை வணங்கியும் – ஸாஸ்த்ர நியதிப்படி பரிசுத்தனாகவும் சாஸ்திரங்களில் சொல்லியவற்றை உறுதியுடன் நம்பியும் –
ஆத்மாவிலேயே மனசை வைத்து இருப்பதும் )இத்யாதிகளிலும் சொல்லப் படுகிற –
ஆஸ்திக்யாதிகளும் –அமாநித்வாதிகளும் ஆகிற சிஷ்ய லஷணமான ஆத்மா
குணங்களில் அதிகராய் –
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு-
அதாவது-
ப்ரணி பாத்ய அபிவாத்யச –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-1–என்றும் ,
தத் விததி ப்ரணிபாதேன பர பிரச்நேன சேவையா –ஸ்ரீ கீதை-4-34–என்றும் சொல்லுகிற படி –
பக்ன அபிமானராய் கொண்டு — ப்ரணி பாத அபிவாதன பரி ப்ரஸ்ன சேவை ஆகிய இவற்றில் –
தத் பரராய் –சிரகாலம்-அனுவர்த்தித்தவர்களுக்கு
உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை-
அதாவது-
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –திருவாய்-4-10-9- -என்றும் —
பேசும் அளவன்று இது வம்மின் நமர் ! பிறர் கேட்பதன் முன் -பெரிய திருமொழி -2-4-9-என்றும்
இப்படி அஷட் கரணமாக உபதேசிக்க வேண்டும் அர்த்த விசேஷத்தை —
வம்மின்-விரோதம்-ஈனச் சொல்
அதாவது-
வம்மின் புலவீர் -திருவாய்-3-9-6–என்று வலிய அழைத்து –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ –திருவாய்-3-9-1–என்று –
நான் சொல்லுகிற இது உங்களுக்கு விரோதமாய் தோற்றி இருந்தது ஆகிலும் சொல்லுவேன்
இத்தை கேளுங்கள் என்று அபேஷித்து –
ஈனச் சொல் ஆயினுமாக –திருவிருத்தம் -99–என்கையாலே
ஆகிலுமாக -என்று பொகிடு பொருளாகவும்-
எவ் உயிர்க்கும் அறிய என்று-அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது-
அதாவது–
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்–திருவாய்–9-1-7-என்றும் —
திண்ணம் நாம் அறிய சொன்னோம் -திருவாய்-10-2-5–என்று
சர்வருக்கும் பிரசித்தம் ஆகும் படியாகவும் –இப்படி அடைவு கேடாக –
இதம் தே நாதபஸ்காய நா பக்தாயா கதாசன நஸா ஸூஸ்ரூஷவே வாஸ்யம் நசமாம் யோப்யஸூயதி -ஸ்ரீ கீதை-18-67–
–இத்யாதிகளால் சொன்ன அதிகாரிகளுக்கு உபதேசிக்கிறது ..
ஞாலத்தார் பந்த புத்தியும் அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும் –
அதாவது—
ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும்
கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை கடல் வண்ணா–திருவாய்-4-9-3- -என்று
இவர்கள் சம்சாரத்தில் படும் அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாத ஸ்வாபமும்-
தாவன் மாத்ரம் அன்றிக்கே –மிக்க கிருபையும் இறே-
அதாவது–
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கது–கண்ணி நுண்-8- -என்று ..
ஷிபாமி -என்றும்/ந ஷமாமி-என்றும் ஈஸ்வரன் கை விட்டவர்களையும் திருத்தி அல்லது நிற்க மாட்டாத
கரை புரண்ட காருண்யம் இறே என்கை ..
பந்த புத்தியும் அநர்த்த அசஹத்வமும் இவர் தம்முடைய உக்தி சித்தம் ஆகையாலும் –
க்ருபாதிக்யம் சிஷ்யோக்தி சித்தம் ஆகையாலும் ஆய்த்து இப்படி பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது
(பிரசித்தி தோற்ற இறே-என்று அருளிச் செய்கிறார்-என்றவாறு )..
—————————————————–
சூரணை -204-
மற்றும் இப்படி உபதேசிப்பார் பலரும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் ..
தாய்க்கும்
மகனுக்கும்
தம்பிக்கும்
இவர்க்கும்
இவர் அடி பணிந்தவர்க்குமே
இவை உள்ளது ..
தாய்க்கும்
அதாவது
தன் பக்கலிலே விபரீத புத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷ்டனான ராவணனைக் குறித்து –
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதம்சா நிச்சதா கோரம் த்வயா ஸுபுருஷர்ஷப–ஸூந்தர-21-19-என்றும்
விதிதஸ் சஹி தர்மஞ்ச சரணாகத வத்ஸல தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி -ஸூந்தர-21-20- -இத்யாதிகளாலே
ஹிதோபதேசம் பண்ணின –நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17 -என்கிற
சர்வ லோக ஜனனியான பிராட்டிக்கும் —
மகனுக்கும்
அதாவது
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக சீறி தன்னை அதி குரூரமான தண்டங்களைப்
பண்ணும்படி -பாகவத் அத்யந்த விமுகனாய் -பாபிஷ்ட அக்ராகண்யனான -ஹிரண்யனைக் குறித்து –
சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாத ஜகந்மயே -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-37-என்றும் –
உர்வ்யாமஸ்தி -இத்யாதிகளாலே ஹிதத்தை உபதேசித்தும் –
விமுகரான அசுர புத்ரர்களைக் குறித்து –
அபார சம்சார விவரத்த நேஷு மாயாத தோஷம் பிரசபம் ப்ரவீமி
சர்வத்ர தைத்யாஸ் சமுதாமுபேத சமத்வமாரா தநம் அச்யுதஸ்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-17-89–இத்யாதிகளாலே
ஹிதத்தை உபதேசித்தும் –
மீளவவன் மகனை-பெரியாழ்வார்-1-6-2- -என்கிற ஹிரண்ய புத்ரனான பிரகலாதனுக்கும்-
தம்பிக்கும்
அதாவது
யாவந் னலங்காம் சமபித்ரவந்தி வலீமுகா பர்வத கூட மாத்ரா
தம்ஷ்ட்ரா யுதாச்சைவ நகாயுதாச்ச ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ–யுத்த-14-3–என்றும் –
யாவான் நக்ருஹ்ணந்தி சிராம்சி பாணாராமேரிதா ராஷச புங்கவானாம்
வஜ்ரோபமா வாயு சமான வேகா ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ –யுத்த-14-4–என்று இப்படி
தனக்கு ஹிதம் சொன்னது பொறாமல் –
த்வாம் து திக் குலபாம்சனம்–யுத்த-16-5- -என்று திக்கரித்த க்ரூரனான ராவணனைக் குறித்து –
ஸூலபா புருஷா ராஜன் சததம் பிரிய வாதினா – அப்ரியயச்யது பத்யச்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப–யுத்த-16-20
பத்தம் காலச்ய பாசேன சர்வ பூதாபஹாரிணா நனச்யந்த முபேஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா –யுத்த-16-21-
என்று தொடங்கி ஹித உபதேசம் பண்ணின –
அவன் தம்பிக்கே –திருவாய்-7-6-9–என்கிற ராவண அனுஜனான ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும்–
இவர்க்கும்
அதாவது
பகவத் விமுகராய் –அநந்ய பரராய் திரிகிற சம்சாரிகளை விட மாட்டாமல் –
வீடு மின் முற்றவும்–1-2 -தொடங்கி பல இடங்களிலும் -பல படிகளாலும் உபதேசித்த
இவ் ஆழ்வார் தமக்கும் —
இவர் அடி பணிந்தவர்க்குமே
அதாவது
ஓராண் வழியாக பூர்வர்கள் உபதேசித்து போந்த நியமத்தைக் குலைத்து
பலரையும் உபதேசிக்கப் படி பண்ணியும் –
பல கால் நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தை ஓலக்கமாக வைத்து உபதேசித்தும் —
வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்மசன்ததி -தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ-சாண்டில்ய ஸ்ம்ருதி-
( உனக்குத் தொடர்ந்து வருகிற பல பிறவிகள் பயன் அற்றுப் போயின -அவற்றுள் இது ஒரு பிறவி
என்று நினைத்து இறைவனைச் சரணம் அடைவாய் ) -என்று
ருசி விச்வாஸ ஹீநரையும் நிர்பந்தித்து சரமோ உபாயஸ்தர் ஆக்கியும் –
இப்படி அதிகாரம் பாராமல் அவர்கள் துர் கதியை பார்த்து உபதேசித்து அருளும் ஸ்வபாவராய்-
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்–இராமானுச நூற்றந்தாதி-1- -என்று
நிரூபகமாய் இருக்கும் எம்பெருமானாருக்குமே- இவ் ஆகாரங்கள் உள்ளது என்கை —
இவை என்று கீழ்ச் சொன்ன
சம்பந்த ஞானம்
அநர்த்த அசஹத்வம்
அநவதிக க்ருபை–
ஆகிய மூன்றையும் பராமர்சிக்கிறது –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply