ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–29-38–

கீழ் எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்தார் –

இனி ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமான ஆழ்வார் -அவரது அருளிச் செயல்களில் ஈடுபட்ட
ஸ்ரீ உடையவர் தமக்குச் செய்து அருளிய உபகார பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார் –

ஸ்ரீ பாஷ்ய ஸூத்ரங்களை இது கொண்டு ஒருங்க விட்டு அருளியதையும் –
ஸ்ரீ பாஷ்யம் அருள ஸம்ப்ராயத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அதற்காகவே
சரண் அடைந்த ஸ்ரீ தேவப்பெருமாள் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் இருந்தமையும் –

எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
அவர்க்கு ஆத்ம குணங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதையும் –

ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும்-

உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –
தன் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்பதையும் –

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் தம்மை அடர்க்க வழி இல்லை என்பதையும் –

நாமும் ஆஸ்ரயிக்கும் படி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்தும் –

நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்பதையும் –

அவரை நோக்கி இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும்
என்ன ஹேது என்று வினவுகிறார் –38-என்பதையும் –

————

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

கூட்டும் விதி –
என்றேனும் பேற்றினைச் சேர்விப்பதான விதி –
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான பாக்யமாக நினைத்து இருப்பது -எம்பெருமானார் உடைய கிருபையையே –
விதி -இங்கே எம்பெருமானார் கிருபையையே -என்க –
தம்மாலும் எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது

தன் பத்தி என்னும் வீடு -என்றார் –
பிறர் கன்னம் இட ஒண்ணாமை இவ்வீட்டுக்கு தனி சிறப்பு
பிறர்-பிரமாணமான வேதத்தை தூஷிப்பவர்களும் பிரமேயான இறைவனைத் தூஷிப்பவர்களும் –

புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை –
அதனை வளர்த்த தாய் இராமானுசன்
அதன் விளையாட்டு எல்லாம் கண்டிடப் பெற்ற பெருமையால் வந்தது அவரது புகழ்-
கண்ணன் குழந்தையாய் இருந்தும் அதி மானுஷமாக விளையாடினது போல திருவாய் மொழியும்
எளிய செம் தமிழாய் அமைந்தும் வட மொழியில் அமைந்து தெளிவு படாத மறைகளை தெளிவு படுத்தியும் –
வேத வியாசர் இயற்றிய பிரம ஸூத்தரதிற்கு உண்மைப் பொருளை உணர்த்தியும் –
கட்புலனாகாத இறைவனை காணுமாறு முன்னே கொணர்ந்து நிறுத்தியும் –
அதி வேதமான -வேதத்தை விஞ்சின -விளையாட்டுக்கள் புரிவதை எல்லாம் கண்டிடப் பெற்றமையால்
அசோதை போல் எம்பெருமானார் புகழ் படைத்தவர் -என்க –

என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே –கூட்டும் விதி என்று கூடும் கொலோ
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண்பயனாவதே -பெருமாள் திருமொழி – – 2-1 –என்றார் குலசேகரப் பெருமாள்-
எம்பெருமானார் காலத்திலே அவர் பக்கலிலே அமுதனார் இருப்பவர் ஆதலின்
காண்கையில் அன்று இவர்க்கு தேட்டம்-கண்டதும் களிப்பினால் கண்கள்
மலர்ந்து இன்புறுதல் இவருக்கு தேட்டம் -இன்புறுதலுக்கு அடியான அன்புடைமை
எம்பெருமானார் அருளாலே தமக்கு வாய்க்க வேணும் -என்கிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
மேலும் இவர் பிரார்த்திப்பது காண்க –பரம புருஷார்த்தமான இது அர்த்தித்துத் தானே பெற வேண்டும் –

————–

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

இன்பம் தரு பெரு வீடு
அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –விசேடித்தத்தார்

தொல் உலகு -என்பதனால் -உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு
பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –

மன் பல் உயிர் -என்பதனால் -சித் தத்துவம் கூறப்படுகிறது-
மன் -என்பதனால்–உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –
பல் உயிர்கள் என்பதனால்-சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது –
உயிர்கள் என்னும் பன்மையினாலே -அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்ப்படுமாயினும் –
பல -என்று மிகை பட கூறியது -ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு இருப்பது பற்றி
அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம் வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –

இறைவன் -சேஷி -அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்தக் கொள்ளும்
உரிமை வாய்ந்தவன் -இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது
ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –

உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் பரப்ரமம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன் –

அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரியத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –

நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் –
பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –நம் ஆழ்வார்

யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம்மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –

அவருடைய உறுதிப்பாட்டினும் அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –

இவர் பேரனான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்றுபாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

—————

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -பாரதம் பாடிய பெறும் தேவனார் –

வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 –

பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப்பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின்
தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக அமைந்த அத்தியூர் என்னும் பேரே சிறந்தது
என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார்

மேலும் ஊரகம் பாடகம் முதலிய பல திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு
காஞ்சி -என்பது பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –
அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் –

கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-

பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-
பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஜீயர் –
திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட
அன்பாளராய் அன்றோ எம்பெருமானார் இருந்தார் –

இனி காண் தகு தோள் அண்ணல் என்பதை
எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும்
அன்பாளன் என்பதனால்
ஆத்ம குணமும் அனுசந்திக்கப் படுகின்றன –

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.

இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண் நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –

————–

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

தனமாய தானே கை கூடும் -முதல் திருவந்தாதி -43 -என்றார் பொய்கையாரும் –
இவ் ஆத்ம குணங்கள் தேட வேண்டியவைகள் அல்ல –எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு தாமாகவே வந்து சேரும் என்கிறார் –
தேஜ துர்ஜனை அனபிபவநீய த்வம்-என்று
தேஜசாவது தீயோரால் அடர்க்கபடாமை என்னும் கீதா பாஷ்யமும் – 16-3 –

ஏனைய அவதாரங்கள் -தேவர் இரக்க வந்தவை –
எம்பெருமானார் ஆகிய ஆச்சார்ய அவதாரமோ -இரப்பார் இல்லாமலே தானே வந்தது –
ஞானக் கை தந்து மேலே எடுப்பவர் ஏனைய ஆசார்யர்கள் –
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணி நா –
அழுந்தினவர்களை சாஸ்திரக்-கையினால் தூக்கி விடுகிறார் -என்று கூறப்படுவதும் காண்க –
எம்பெருமானார் ஆகிற ஆசார்யரோ தம் அரிய தவத்தின் வலுவினால் ஞாலத்தாரை எடுத்து-மீண்டும் விழாது -காத்து அருளுகிறார் –
அத்தகைய அரிய தவம் அவரது –
இங்கு தவம் என்பது-தவங்களுள் சிறந்தது சரணாகதி -என்று சிறந்த தவமாக-ஓதப்படுகின்ற சரணாகதியே
எம்பெருமானார் செய்த சரணாகதியின் பயனாக அவர் தொடர்பை எவ்வகையாலேனும் பெற்ற-
ஞாலத்தவர் -உய்வு பெற்று விடுகிறார்கள்-இவ் வரிய உண்மை அமுதனாரால் இங்கு உணர்த்தப் படுகிறது –

வந்தெடுத்தளித்த அருந்தவன்- க்ருபா மாத்திர ஆசார்யனரான எம்பெருமானார் இன்னருளால் யாவரையும் உய்வித்தது அறிந்ததே .
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் எம்மிராமானுசன் மண்ணின் தலத்துதித்து என்று பின் வரும் பாசுரமும் காணலாம்.
இப்படி காரேய் கருணை இராமானுசனைப் பொருந்திய பின் நமக்கு வரும் மேன்மையை சொல்லி யருள்கிறார் அமுதனார்

———–

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
அழிக்கும் ஆயுதங்கள் – அளிப்பனவாயின என்பது -எல்லாம் பிராட்டி சந்நிதியால் வரும் மற்றம் தான் இது

இராமானுச முனி இடையே யாயின –
இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –
அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-

இனி இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன-
கலியை நீக்க வல்ல இராமனுசராக எம்பெருமானின் திவ்யாயுதங்கள் வந்தவதரித்தன-

ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே –
அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-எம்பெருமானாரைக் கொள்வது மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –
இங்கனம் கொண்டால்-ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் –
பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்- ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை –

———-

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ கலி செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ் எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –

பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் இராமானுசனை
அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா –
இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால் இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-
ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ எனின் –
என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல – ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப் படுகின்றனவாம் –
புத்தகச் சும்மை
யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே
அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது அமுதனார் கருத்து

———-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் ஒரு தெய்வம்
எம்பெருமானாரே தெய்வம் என்பர்-கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –

சில மானிடத்தை
மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி -சில மானிடத்தை –என்று அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார்

கவி போற்றி செய்யேன் –
கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –

இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக –
இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள வ்யாமோகத்தாலே என்கிறார் ஆழ்வான் –
அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு –
பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான அமுதனார் –

இனி திருவரங்கம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-
பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-
வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –

அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று
பெரியவாச்சான் பிள்ளை-அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –

இறைவன் திருநாமங்கள் பல இருக்க பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே எம்பெருமானாருக்கு-மயல் பெருக காரணம் –
தம் ஆசார்யராகிய ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப்பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் –
இவ்விஷயம்பெரிய ஜீயரால் பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில் ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது –
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்-உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க –
திருவரங்கம்-என்கிற நாலைந்து திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் -என்று அருளிச் செய்ய –
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர் –

நயவேன் பிறர் பொருளை நல்லேன் கீழாரோடு
உய்வேன் உயர்ந்தவரோ டல்லால்-வியவேன்
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் நம்மேல் வினை –பொய்கை யாழ்வார் – 35- -என்ற பாசுரத்தொடு இதனை ஒப்பிடுக –

1-பிறர் பொருளை விரும்பேன்-
2-கீழாரோடு சேரேன் –
3–மேலார்கள் உடனேயே பழகுவேன் –
4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –
5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் -நம் மேல் வினை எவ்வாறு வரும்

————–

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே –
முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது –
ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று –
எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து –கண்டு அளித்தான் -என்பது தோன்ற –
கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்

விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே –
அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –

கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-
ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –

ஆருயிர் நாதன் என்று பாடம் –
இந்த உயிர் ஆன்மா அவனுக்கு வசப்பட்டது. என்னும் இயல்பான பொருள் கண்டு அளித்தது புலப்படும்.

சர்வேஸ்வரன் கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் -அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி –யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –

———

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி -மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட
பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –
வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று
வெள்ளமாக-இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –

வெள்ளம் -கடலுமாம் –வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருன்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று
இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

எம்பெருமானாரின் நெஞ்சம் பள்ளமடையாதலால். இந்த பக்தி வெள்ளம் சென்று இராமனச்ர் மனதில் குடி கொண்டது.
அவரும் இராமனின் குணங்களில் ஆழங்கால் பட்டு அதை தன நெஞ்சில் கொண்டு
நம் சம்பிரதாயத்தில் இதன் ஊடே ஆழ்ந்திருந்தது தெரிந்ததே.

ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக எம்பெருமானாரே அமைகிறார் -.ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

——-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

ஆக்கி-என்கிறார் -திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-
நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்-என்றாலே -ஆக்கி யடிமை நிலைப்பித்தது தானே
ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102)
“இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113)
“வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணை
நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க ……
இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க”

அருள் புரிந்தாலும் அத்வேஷமும் இசைவும் இருக்க வேணுமே ?அதற்கும் இந்த அருள் தானே மூலம்.

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading