வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி-உடையநங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.
உடைய நங்கையின் ஊர் திருவண்பரிசாரம்.(இன்றைய திருப்பதிசாரம்).
திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார்.
மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில்
பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.
அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார்.
விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர்.
சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார்.
ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.
இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம்
“எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும்படி, சேனைமுதலியாரை நம்மாழ்வாராக……..
நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி
வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.
ஆழ்வார் புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் வரையிலும் கண் திறக்காமல் எதுவும் பேசாமல் பெருமானைச் சிந்தித்தபடி இருந்தார்.
இது இப்படி இருக்க, ஆழ்வாருக்கு பல வருடங்கள் முன்பே பிறந்து தல யாத்திரையாக வடநாடு சென்றிருந்த மதுரகவி என்பவர்,
அயோத்தியில் இருந்த போது தெற்கே ஒரு பெருந்தெய்வப் பேரொளியைக் கண்டார். அதைப் பின்பற்றி வந்த அவர்
இறுதியில் குருகூரில் திருப்புளியடியில் வீற்றிருந்த ஆழ்வார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார்.
ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.
ஆழ்வாரும் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று அருளினார்.
மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார்.
(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால்
எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.)
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில்
36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில்
சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.
திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை.
எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது.
இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.
நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது.
பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர்.
வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது.
திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள்.
பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது.
நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது
வைணவ குருபரம்பரை.
3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே
எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு.
இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம்.
இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல்
“சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.
4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும்.
அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து.
இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு.
1,12,18,40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும்,
27, 38, 78,79 ஆகியவை உயிர்நிலையையும்,
2,23 31,81 ஆகியன விரோதி சொரூபத்தையும்,
47,48,49,40 ஆகியன உபாய சொரூபத்தையும்,
19,23,80,93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.
ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக (உறுப்புகளாக) அமைத்து
ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,
நம்பெருமாள் – (நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை,பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்–என்பதாக அமைவர்.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால்
மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.
வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில்
‘திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’அற்றது பற்றெனில்’ என்றும்,
ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை
‘களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும்,
‘நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா
ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.
ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில்
அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார்.
அவள், “ ‘கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என
ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள்.
இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.
பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு
இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?–என்று போற்றி மகிழ்ந்தனர்.
————-
ஆழ்வார் திருநகரி:
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளில் ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும்
திருப்பதி இது இன்றுதான். இதிலிருந்தே இதன் ஏற்றம் நமக்குப் புரியும்.
இதன் பழைய பெயர் திருக்குருகூர். குருகு என்றால் பறவை, சங்கு எனப் பல பொருள் உண்டு.
இங்கு சங்கன் எனும் சங்குகளின் தலைவன் இத்தலத்துப் பெருமானை வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது.
ஒருநாள் பிரமன் வைகுந்தம் சென்று திருமாலை வணங்க அவர் “உன்னைப் படைப்பதற்கு முன்னமேயே
நாம் தண் பொருநை நதிக்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே எழுந்தருளியிருக்கின்றோம். அங்கே எம்மை வழிபடு” என்றார்.
‘பிரமனே! இங்கே எம்மை வழிபடுவாயாக’ எனும் பொருள்பட குரு+க+அத்ர+மதர்ச்சனம் என்றதனால்
இத்தலம் குருகூர் என்றாயிற்று என தலபுராணம் கூறுகிறது.
பிரளயகாலம் முடிந்த பின் முதலில் தோன்றியதால் இது “ஆதி க்ஷேத்ரம்” எனப்படுகிறது.
சாளக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இழித்துரைத்து பழித்தான்.
அவன் இழி பிறப்பை அடையட்டும் என அவன் ஆசிரியர் அவனைச் சபித்தார்.
அவனும் மறுபிறவியில் தாந்தன் என்ற இழிபிறப்பினனாய் பிறந்தான்.
ஆயினும் பூர்வ புண்ணியத்தால் குருகூரில் ஆதிநாதர் கோயிலில் புல் செதுக்கி பணி புரிந்தான்.
அங்குள்ள அந்தணர்கள் அவனை வெறுத்து விரட்டினர்.
அவன் தாமிரபரணியின் வடகரையில் இருந்து ஆதிநாதரை வழிபட்டு வந்தான்.
இங்கே அவனை விரட்டியதால் அந்தணர்கள் பார்வை இழந்து குருடாயினர்.
ஆதிநாதர் அவனுக்கு காட்சியளித்து வீடுபேறு அருளினார். அவன் வழிபட்டதால் இத்தலம் ‘தாந்த க்ஷேத்ரம்’ எனப்படுகிறது.
கோயிலின் அர்த்தமண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவன் பொருநை வடகரையில் ஆதிநாதரை வழிபட்ட இடம் ‘அப்பன் கோயில்’ ஆகும்.
இது ‘செம்பொன் மாடத் திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
வராகப் பிரான் இத்தலத்தில் முனிவர்களுக்குக் காட்சியளித்து ‘ஞானப்பிரான்’ என்னும்
திருப்பெயரோடு இருப்பதால் இது ‘வராகக்ஷேத்ரம்’ எனப்படும்.
ராமனின் இறுதிக்காலத்தில் எமன் அவனைச் சந்திக்க வந்தான்.
ராமன், யாரையும் உள்ளே விட வேண்டாம் என லட்சுமணனிடம் கூறிவிட்டான்
அச்சமயம் துர்வாசர் வரவே அவரை உள்ளே போக்கவிட்டான் லட்சுமணன்.
இதையறிந்த ராமன் அவனை புளியமரமாகப் போகும்படி சபித்தான்.
லட்சுமணன் வேண்டவே தானே நம்மாழ்வாராக அவதரித்து புளியமரத்தடியில் இருப்பதாக வாக்களித்தான் ராமன்.
ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன் திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் “சேஷ க்ஷேத்ரம்” எனப்படுகிறது.
சங்கன் வழிபட்ட சங்கணித்துறையை உடையதால் இது “ தீர்த்த க்ஷேத்ரம்” என வழங்கப்படுகிறது.
இப்படி 5 விதங்களாய் போற்றப் பெறுவதால் இத்தலம் “பஞ்ச க்ஷேத்ரம்” எனப் புகழப் பெறுகின்றது.
————
இத்திருப்பதியின் மூலவர் ஆதிநாதர்.
உற்சவர் பொலிந்து நின்ற பிரான்.
தாயார் ஆதிநாதவல்லி.
கோவிந்த விமானம்.
பிரம்ம தீர்த்தம்.
ஆதிப்பிரான் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இவற்றை ‘நவதிருப்பதி’ என்பர்.
இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவகிரகங்களுக்குரிய தலங்களாகக் கருதப்படுகின்றன.
அதில் இத்தலம் புதனுக்குரிய தலமாகும்.
நவதிருப்பதிகளிலும் உள்ள மூர்த்திகளுக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் வரும் பெயர்களே வழங்கப்படுகின்றன.
நவதிருப்பதிகள் ஒவ்வொன்றிலும் எம்பெருமானுடைய குணம் சிறப்பாக விளங்குவதாக ஆசார்ய ஹ்ருதயம் கூறுகின்றது.
அவ்வகையில் ஆழ்வார் திருநகரியில் பெருமானுடைய பரத்வம் விளங்குகிறது.
தினந்தோறும் ஆழ்வார் திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும் சேவாகாலம் நடைபெற்ற பின்னர்
தைலக் காப்பு விநியோகிக்கப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷங்களாகும்.
மார்கழித் திருவத்யயன மகோற்சவத்தில் பத்தாம் நாளிரவு நம்மாழ்வாருக்கு சயனத் திருக்கோலமும்
மாறனடி பணிந்து உய்ந்தவரான ராமாநுஜருக்கு நாயகி திருக்கோலமும் சார்த்தி,
ராமாநுஜர் ஆழ்வாரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதான காட்சியை இங்கு மட்டுமே காண முடியும்.
தொடர்ந்து இராப்பத்தில் மார்கழித் திருவாதிரையன்று ஆழ்வாருக்கும் ராமாநுஜருக்கும் ஒரே ஆசனத்தில்
திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும் ,
வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
கருட சேவை
நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார்.
ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறுகின்றது.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஆன்மீகப் பெரும் திருவிழாக்களில் ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத் தகுந்தது.
வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து ஆழ்வார் கோயிலில் கொடியேற்றப் படும்
இத்திருவிழாவில் 5 ஆம் நாள் உற்சவமே இங்கு குறிப்பிடத் தகுந்தது.
அன்றைய விழாவில் ஆழ்வார்திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளிலிருந்தும் எம்பெருமான்கள் பல்லக்கில்
ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிடுகிறார்கள். ஆதிநாதர் கோயில் முற்றத்தில் நவதிருப்பதி எம்பெருமான்களும்
திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளி அன்று இரவு 11 மணி அளவில் கருட வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.
யாருடைய பாலேய் தமிழிசை கேட்பதற்காக நவதிருப்பதி எம்பெருமான்களும் வந்திருக்கின்றனரோ
அந்த மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அன்னவாகனத்தில் முன்னால் எழுந்தருள்கின்றார்.
வேதத்தின்முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன்முதலோர்
கோதற்ற ஞானக்கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக்கடல் எம் குருகூர்ப் புனிதன் கவியின்முன் ஒரு
பாதத்தின் முன்செல்லுமோ தொல்லைமூலப் பரஞ்சுடரே–என சடகோபர் அந்தாதி கூறிய படி
ஆழ்வாரின் அமுதத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு இன்புறுவதற்காக பச்சைப் பசுங்கொண்டலாகிய நவதிருப்பதி
எம்பெருமான்களும் ஆழ்வாரின் மங்களாசாசனத்தை செவிமாந்தியபடியே கருட வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.
இந்த அழகிய காட்சியை நாம் காணும் போது ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று தான் ஏங்கத் தோன்றும்.
பின்னால் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருள்வார்.
பெருமான்களுக்கு முன்னே தமிழ் வேத பாராயண கோஷ்டியும், பின்னே ஆரிய வேத பாராயண கோஷ்டியும் வரும்.
ஆழ்வார் திருநகரி முழுவதும் அன்றைக்கு உற்சாகம் கரைபுரண்டோடும்.
பாகவதர்களும் அடியார்களும் ஆசாரியர்களுமாய் எங்கும் திருவீதி நிறைந்து காணப்படும்.
ராமாநுஜர் வியந்தபடி “இதுவோ பரமபதத்து எல்லை” எனவே வியக்கத் தோன்றும்.
திருநகரியில் உள்ள அனைத்து மாளிகைகளிலும் திருமடங்களிலும் அனைவருக்கும் ததியாராதனம் எனும்
அன்னதானம் கோலாகலமாக நடைபெறும்.
விசாகத் திருவிழாவில் 8 ஆம் திருநாள் அன்று நம்மாழ்வார் தாமிரபரணி வடகரையில் உள்ள,
தான் பிறந்த அப்பன் கோயிலுக்குச் செல்கிறார். அப்போது அவர் தவழும் கிருஷ்ணன் கோலத்தில் காட்சியளிப்பார்.
மறுநாள் திருத் தேர் கண்டருளுகின்றார்.
அகோபில மடமும் ஆதிநாதரும்
அகோபில மடத்தை நிறுவியவரான ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மகாதேசிகர் ஆழ்வாரை வழிபடுவதற்காக ஆழ்வார்திருநகரி வந்தார்.
அச்சமயம் ஆழ்வார் விக்ரகம் சிலரால் மலையில் உள்ள சுனையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.
ஆழ்வாரைக் காணாத தேசிகர் மனம் வாடி ‘கண்ணிநுண் சிறுத்தாம்பி’னை 1000 முறை ஓதி,
குலசேகர பாண்டியனின் உதவியோடு ஆழ்வாரை மீட்டு கோயிலில் நிலைநிறுத்தினார்.
பொலிந்து நின்ற பிரான் மகிழ்ந்து தேசிகருக்கு ‘வண் சடகோப’ எனும் பெயரை
‘ஆதிநாதர்’ பெயரில் உள்ள ‘ஆதி’ என்பதையும் இணைத்து ‘ஸ்ரீமத் ஆதிவண் சடகோப’ என்னும் பட்டத்தை வழங்கி அருளினார்.
அதற்கான சில மரியாதைகளும் உற்சவ சமயத்தில் அகோபில மடத்து ஜீயர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆழ்வார் தாம் அணிந்திருந்த ஹம்ஸ முத்திரையை ஜீயருக்கே வழங்கினார்.
இன்றளவும் அகோபில மடத்தின் முத்திரையாக ஹம்ஸ முத்திரை இடம் பெற்றுள்ளது.
ஸ்ரீமத் ஆதிவண் சடகோபரின் வாழித் திருநாமத்தில் “ஆழ்வார் தம் க்ருபையான அம்ச முத்திரை வாழியே” என்று குறிப்பிடப்படுகிறது.
——————
ஆழ்வாரின் வைபவங்களை அவர்தம் திருவடியாக இருக்கும் ஸ்ரீமதுரகவிகள் தொடக்கமாக பலர் பேசியுள்ளனர்.
அப்படி பலர் பேசிய ஸ்ரீசுக்திகளையெல்லாம் கொண்டு, ஒன்று திரட்டி ஸ்ரீ பிள்ளை லோகாசாரியரின்
திருத்தம்பியரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார் விஷயமாக செய்த
பெரும் காவியம் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தம். இதுபோல் ஒரு க்ரந்தம் இதற்கு முன் வந்ததில்லை,
இனியும் வர வாய்ப்பில்லை என்னும் அளவிற்கு விஷய பூர்த்தி, சொல்லழகு எல்லாம் ஒரு சேரப் பெற்ற க்ரந்தம்.
இந்த க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் கொண்டு ஆழ்வார் வைபவத்தை ஈண்டுச்சிறிது அனுபவிப்போம்.
ஆழ்வாரின் அவதாரம்:
ஆழ்வாரின் அவதார விஷேஷத்தை பற்றி நம்மிடையே நிலவும் பல கருத்துக்களை ஆராய்கிறார் நாயனார்.
யுகங்கள் தோறும் அரங்கன் ஒவ்வொரு வர்ணத்தில் ஒருவருக்கு பிள்ளையாக அவதரித்தான்.
யுகம்–கிருதயுகம்–அந்தணர் –அத்ரி மஹரிஷ –தத்தாத்ரேயர்–ஜமதக்நி–பரசுராமர்
த்ரேதாயுகம்–தசரத சக்ரவர்த்தி–க்ஷத்ரியர்-ஸ்ரீராமன்
த்வாபரயுகம்–வசுதேவ நந்தகோபர்கள்–வைஸ்யர்–ஸ்ரீக்ருஷ்ணன்
இதன் தொடர்ச்சியாக கலியுகத்தில் வேளாளர் குலத்தில் காரி-உடையநங்கையாருக்கு மகனாக
ஸ்ரீசடகோபராக எம்பெருமானே அவதரித்தானோ? என்று ஒரு சாரார் கருதுவர்.
வேதங்களை தொகுத்தல் போன்ற சில அரிய செயல்களைச் செய்ய வ்யாச பகவான் பேரில் ஆவேசித்தான் அரங்கன்.
அதுபோலே, இவரைக் கொண்டு தமிழ் மறையை வெளிப்படுத்துவதற்காக இவர் பேரில் ஆவேசித்தானோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.
இதெல்லாம் இல்லை; பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளில் ஒருவர் அல்லது முக்தர்களில் ஒருவர்,
அல்லது அந்த ஸ்தானத்திற்கு ஒப்பான “ஸ்வேத த்வீப” வாசிகளில் ஒருவர்,
நம்மைத் திருத்த ஆழ்வாராக அவதரித்தார்களோ ? என்றும் ஒரு சாரார் கருதுவர்.
( “ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ரகசியம்.
அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)
இந்த காரணங்கள் ஏதும் இல்லை,
நம்மைப் போன்று சம்சாரிகளில் ஒருவர் முற்பிறவி பலனாக இப்படி திருந்தினாரோ? என்று கருதுபவர்களும் உண்டு.
இதையெல்லாம் விட சிறந்த காரணமும் ஒன்று உண்டு. யாதொரு காரணத்தையும் பற்றாத எம்பெருமானின்
“நிர்ஹேதுகமான க்ருபை” (causeless mercy) என்னும் அருளின் சிறப்பினால்,
அரங்கன் ஒருவனையே பலனாக, எண்ணியிருந்து பலிக்கப் பெற்றவர் என்று ஆழ்வாரை கருதுவோரும் உண்டு.
ஆக இப்படியெல்லாம் பல கருத்துக்கள் நிலவுவது ஆழ்வாரின் சிறப்பையே காட்டும்.
இன்னதென்று வரையறுத்து சொல்ல முடியாத சிறப்பு அது ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு.
இவரைத் தொடர்ந்து வந்த ஆச்சார்யர்களும் அப்படியே. அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையே உருவானவர்கள்.
பெரிய பெருமாளின் பாதுகையாகவே இருந்து, நமக்கு ஸம்ஸாரமாகிற கடற்கரையில் நின்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.
நம்முடைய பூர்வாச்சார்யர்களை ஒருமனதோடு தியானிப்பதும், அவர்களை நம்முடைய ஸவப்னத்தில் தரிசிக்கப் பெறுதலும்
நமக்கு பகவத்கிருபையைப் பெற்றுத்தரும். ப்ரத்யக்ஷமாக ஸேவிக்க முடியாத இவர்களை நாம் ஆராதிக்க வேண்டியது கூட அவசியமில்லை.
இவர்களிடத்து நம் மனமானது பூர்ணமாக லயித்திருந்தால் போதும். அப்படிப்பட்ட அனுக்ரஹ சீலர்கள் இவர்கள்.
நாதமுனி காலமெங்கே..? நம்மாழ்வார் வாழ்ந்திருந்த காலமெங்கே..?
நம்பிக்கையோடு ஒருமனதோடு தியானித்திருந்த நாதமுனிக்கு நம்மாழ்வார் கடாக்ஷித்துள்ளாரே..?
நம்மாழ்வார் காலம் முடிந்தாலும், நாதமுனிகளுக்கு அணுக்ரகாம் செய்ய, ஒரு “பராங்குச தாசரை” அனுப்பி வைத்தாற்போல்.
பகவத் கடாக்ஷத்தைக் காட்டிலும் ஆச்சார்ய கடாக்ஷம் மிகவும் விசேஷமானது.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆச்சார்யனிடத்து பரம விசுவாசமும் பக்தியும் மட்டுமே.
பதிலாக நமக்கு கிடைப்பதோ பேரானந்தமயமான பரமபத ப்ராப்தி……!
ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.
“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”
ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார்.
நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார்.
அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.
யார் இவர்கள் ?
வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள்,
தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள்,
தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து,
அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.
இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது.
திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள்
“அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார்.
அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.
பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார்.
அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக் கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று.
அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.
இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால்,
அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.
ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி
நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.
ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார்.
மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?
ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.
அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்).
ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார்.
அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர்.
பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது.
இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.
இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும்,
அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில்
இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும்.
ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம்,
அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல்,
அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.
ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து,
ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது.
இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட,
அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.
இனி ஆழ்வாரைப்போலே, எம்பெருமானுக்கு நெருக்கமாக இருந்தவர்களோடு
ஆழ்வாரை ஒப்பிட்டு நோக்கும் நாயனாரின் கருத்துக்களை அநுபவிப்போம்.
இளைய பெருமாள் :
இளைமைக் காலம் தொடங்கி இளையபெருமாள், எம்பெருமானுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் இடைவிடாது
எல்லாக் காலங்களிலும் செய்ய வேண்டும் என்று பாரித்து,
சீதாபிராட்டியின் புருஷகாரமடியாக அக்கைங்கர்யத்தையும் பெற்று ஸ்ரீராமனே தனக்கு செல்வம் என்றிருந்தார்.
ஆழ்வாரும் இவரைப்போலே “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்று சிறு பிராயம் துவங்கி,
“அலர்மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியை” மன்னி, “ஒழிவிலாக் காலமெல்லாம்” எம்பெருமானுக்கு
எல்லாவித கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்று பாரித்தார்.
மேலும், தனக்கு எல்லா உறவும் ஸ்ரீராமனே என்றிருந்த இளைய பெருமாளைப்போலே
இவரும் “சேலாய் கண்ணியரும், அருஞ்செல்வமும், நன் மக்களும் மேலாய் தாய் தந்தையரும் அவரே” என்று
எம்பெருமானே தனக்கு எல்லாம் என்றிருந்தார்.
ஸ்ரீ பரதாழ்வான் :
பரதாழ்வான், தன் தாயான கைகேயி, பெருமாளை வனத்திற்கு அனுப்பினாள் என்ற காரணத்தால்,
அவளை வெறுத்து, வந்த அரசையும் செல்வத்தையும் துச்சமாக நினைத்து பெருமாளைத் தேடிச் சென்று,
அவர்தம் “பாதுகையை” பெற்றுவந்து, அவர் வருமளவும் கண்ணீர் வடித்து காத்திருந்தார்.
அதே நிலையில் ஆழ்வாரும் அரங்கனைப் பிரிந்து வாடும் அவர் பதற்றத்திற்கு இசையாது இருந்த தன் தாயாரை வெறுத்து,
“பெருஞ் செல்வம் நெருப்பு” என்று ஒதுங்கி, எம்பெருமானை வேண்டிச் சென்று,
“திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிகள் கூட்டினை” என்று அவன் திருவடிகளை தலை மேல் தாங்கினார்.
அதோடு எம்பெருமான் தன்னருகே இவரைச் சேர்த்துக் கொள்ளும் அளவும் கண்ணீர் பொங்க அழுது கிடந்தார்.
ஸ்ரீ சத்ருக்நாழ்வான்
சத்ருக்நாழ்வான் மற்ற இருவரைப்போல், இராமனின் வடிவழகிலும் ஈடுபடாது, பரதனுக்கு தொண்டு செய்து,
பரதனுக்கு உகப்பு என்பதற்காக, இராமனின் வடிவழகையும் மனதில் கொண்டார்.
அதே நிலையில் ஆழ்வாரும், ததீயர்களுக்கு அடிமை பட்டிருப்பதை விரும்பி, அவர்களின் உகப்புக்காக,
எம்பெருமானின் த்வ்ய மங்கள விக்ரஹத்தை தன் மனதிலே கொண்டார்.
தாமே இதை “புலன் கொள் வடிவு என் மனத்தாய்” என்றும் பாடியுள்ளார்.
தசரத சக்ரவர்த்தி :
ஸ்ரீராமனின் வடிவழகிலே ஈடுபட்ட தசரதன், எப்போதும் தன் கண் நிறைய அந்த வடிவழகை நெஞ்சில் நிறுத்தி
அநுபவித்து வந்தது போல,
ஆழ்வாரும் “எப்போழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி” என்று அநாதி காலம் வரை அநுபவித்தாலும்,
“அப்போதைக்கப்பொழுது என் ஆராவமுது” என்கிற படி மேன் மேலும் அநுபவிக்க ஆசை கொண்டிருந்தார்.
பிரஹலாதன் :
தன்னை துன்புறுத்திய நெருப்பு, போன்றவைகளைக் கூட எம்பெருமானுக்கு அனுகூலமான வஸ்துவாக நினைத்து,
எம்பெருமானின் அந்தர்யாமித்வத்தை எல்லோருக்கும் உபதேசித்து வந்தார்.
அதே போல் ஆழ்வாரும், “அறிஉம் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்றும் மெய் வேவாள்” என்பது முதலாக,
நெருப்பு முதலான வஸ்துக்கள் எம்பெருமானை உயிராகக் கொண்டிருப்பதனால், அனுகூலமாகக் கொண்டதோடு,
“கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் ”
என்று எம்பெருமான் எங்கும் பரந்திருப்பதை பாடியதாலும் ப்ரஹலாதனோடு ஒப்பாகிறார்.
விபீஷ்ணாழ்வான் :
லங்கா ராஜ்யதோடு கூட, மனைவி, மக்கள் என்று எல்லாவற்றையும் விட்டு,
இராமனின் திருவடிகளே தஞ்சம் என்று பற்றினான் ஸ்ரீவிபீஷ்ணாழ்வான்.
அதே நிலையில், ஆழ்வாரும் ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா உறவுகளையும் அறுத்து விட்டு,
“தயரதற்கு மகன் தன்னைபற்றி மற்றிலேன் தஞ்சமாகவே” என்று இராமபிரானையே எல்லாமாகப் பற்றினார்.
திருவடி :
திருவடி இராமனின் வைபவத்தை தவிற மற்றெதிலும் நெஞ்சு செல்லாதவராய்,
ஸ்ரீராமனைத் தன்னுள்ளே உடையவராய் இருந்தார்.
அதுபோல, ஆழ்வாரும் “ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக உண்” என்று
இராம வைபவத்தை போக்கியமாகவும்,
“திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்” என்று ஸ்ரீராமன் தன்னுள்ளே உறைவதையும் பாடியுள்ளார்.
அருச்சுனன்:
பாரத போரின் இடையில், எம்பெருமானின் விஸ்வரூப சேவைப் பெற்ற அர்ச்சுனன், மகிழ்ச்சியோடு பயமும் கொண்டு,
எப்போதும் போல் நான்கு தோள்களோடே சேவை சாதிப்பாய் என்று ப்ரார்தித்த்தாப் போலே;
ஆழ்வாரும், “ நல்குரவும் செல்வமும் ” என்று பலவகை பொருள்களாலான உலகை உடையவனாய் கொண்ட பெருமாளை,
“கூராராழி வெண் சங்கேந்தி வாராய்” என்று அரங்கனின் சங்கு சக்கரம் தாங்கிய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காண ஆசைப்பட்டார்.
பிராட்டிமார்கள்:
மேற் சொன்னவர்கள் எல்லோரையும் விட, ஆழ்வாரின் மேன்மையை பிராட்டியாரோடு ஒப்பிடுகையில் அறியலாம்.
“பின்னை கொல், நிலமாமகள் கொல், திருமகள் கொல் பிறந்திட்டாள்” என்ற பாசுரத்தில்
ஆழ்வாரை நீளாதேவி, பூமிபிராட்டி, ஸ்ரீரங்கநாச்சியார் என்று தேவிமாரோடும் ஒப்பிட்டு;
மேலும் சில பாசுரங்களால் ஆழ்வாரின் பாவம், கோபியஸ்திரிகளோடும், மதுரா நகரஸ்திரீகளோடும்,
த்வாரகையில் இருந்த பதினாராமாயிரவரோடும் ஒக்கும் என்று சாதிக்கிறார்.
இவர்கள் அனைவரும் தனித் தனியே எம்பெருமானோடு சம்பந்தம் பெற்று, ஒவ்வோர் காரணங்களால் வைபவம் படைத்தவர்கள்.
ஆனால் இவர்கள் வைபவமெல்லாம் ஒரு சேரப் பெற்றவராகையாலே,
இவர்களனைவரையும் விட வைபவம் ஆழ்வாருக்கு உண்டு என்பது அறிய முடிகிறது.
பிராட்டி மார்களைவிடவும் அதிக வைபவம் ஆழ்வாருக்கு என்றால்,
ஆழ்வாருக்கும் அரங்கனுக்குமான நெருக்கம் நமக்கு நன்கு புலப்பட வேண்டும்.
இத்துடன் வைபவம் பெற்ற ஸ்ரீநம்மாழ்வாரின் சம்பந்தத்தை,
அரங்கனின் ஸ்ரீ பாதுகைகள் மூலம் பெற்று, ஆழ்வார் க்ருபைக்கு பாத்திரமாவோம்.
————————–
மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று. இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இது எழுதப்பட்ட
மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், திருப்பதிக்கோவை, மாறன் அலங்காரம் என்னும் நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில் மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
மாறன் அலங்காரம்
மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி விரித்துரைக்கின்றது.
மேற்கோள்களாகத் தம் வழிபடு தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன் மூலம்
சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை அறிய முடிகின்றது.
கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.
மாறன் அகப்பொருள்
மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள் இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்.
ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர் அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு
கி.பி. 1522-இல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழி இலக்கண நூலில் மேற்கோள் வடிவத்தில்
சமயம் இடம்பெறத் தொடங்கிய முறையை அறிகின்றோம்.
எனவே சமயம் சார்ந்த ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.
இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.
மாறன் பாப்பாவினம்
பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம் (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் உள்ள பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை சாற்றுபவை;
சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.
இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்பதற்குச்
சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.
திருப்பதிக் கோவை
திருவரங்கத்தமுதனார் பாடியுள்ள திருப்பதிக் கோவை
வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய தேசங்களை 40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.
அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், ….
வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.
மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.
——————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply