ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்-
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திரு விருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திரு வாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்-
வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்
சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்
——————
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-–அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-
ஞானத்துக்கு அடைவு இல்லாத கலி காலத்தில்
யுக வர்ண க்ரம அவதாரம் என்னலாம் படி ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தார் யாயிற்று
க்ருத யுகம் -ப்ராஹ்மண வர்ணம்-தத்தாத்ரியன் —ஸ்ரீ பரசுராமன்
திரேதா யுகம் -ஷத்ரியன்–ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் –
துவாபர யுகம் -முடி உரிமை இல்லா வைஸ்ய பிராயர் ஸ்ரீ வாசுதேவ -சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்த கோபன் இளம் குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனாகவும்-
கலி யுகம் -பராங்குசன்-சதுர்த்த வர்ணம் -காரியாருக்கும் உடைய நங்கையாரும் திருக் குமாரராக
(ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-)
(யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய ||-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)
காசினியோர் தாம் வாழ –
நேரே கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத பூமியில் உண்டான மனுஷ்யர் ஜீவிக்க –(கண்டதே காட்சி -லோகாயுத மதஸ்தர் மலிந்த )
திகழ வகுளத் தாரானை
விளங்கா நின்ற திரு மகிழ் மாலையைத் திரு மார்பிலே உடையவரை
தண் துளபத் தாரானை -என்னுமா போலே –
சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பாராங்குசனோ நாரணனோ
தாமம் துளபமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளதோ பெருமான் உனக்கு –என்னக் கடவது இறே-
பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ;
பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,-
மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும்.
பரன் என்று பரம புருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது.
அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *
“வலக்கை யாழி இடக் கைச் சங்க மிவை யுடை மால் வண்ணனை,
மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச் செய்தார்.
சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச்
செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே
ஸர்வேஸ்வரன் அதுகண்டு நடுங்கி
“நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,
ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியை யிட்டு
அவ் வெம்பெருமானாகிற களிற்றை ஓட வொட்டாதே நிலை நிறுத்திப்
பரத்வ ஸ்தாபனம் பண்ணின படியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.
நாள் கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன் —திருவாய் -4-10-11-என்னும்படியான நம்மாழ்வாரை
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -18-என்னும்படி
ஸூபாஸ்ரயமாகக் பாவித்து
பக்தி பண்ணி வைத்து விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்
அவரும் ஊழி தொரு ஊழி ஓவாது வாழிய வென்று யாம் தொழ இசையுங்கொல்–ஸ்ரீ திருவாசிரியம் -4-என்றார் இறே
இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே ஸூபாஸ்ரயம் என்னுமத்தையும்
மங்களாஸான விஷயம் என்னுமத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –
விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்-
மங்களமான புகல் இடம்-பவித்ரானாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..
———-
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இவர் அபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப் போகாது -அதுக்கு அடி
சர தல்பத்திலே கிடந்த ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு சிறிது வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தால் போலே
இவரை இடுவித்து சில பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்து சம்சாரத்தைத் திருத்த நினைத்தவன் ஆகையால் –
இங்கே வைக்கலாம் படி அல்லவே இவருடைய த்வரை-
இவர் தாம் நிர்பந்தம் பண்ணுகிறதும்
அவ் வருகே போய் குண அனுபவம் பண்ணுகைக்காக இறே
இவை தன்னை அனுபவிப்போம் என்று பார்த்து-தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
தேஹத்தினுடைய தன்மையை அனுசந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையே யாகிலும்
அவ் வருகே போய்-பரம பதத்தில் சென்று – அனுபவிப்பதும் ஓர் அனுபவம் உண்டு என்று தோற்றாதபடி
ஒரு வைஸ்யத்தைப் பிறப்பிக்க அவற்றிலே அந்ய பரராய் அனுபவிக்கிறார் –
அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது-நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள-இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்-புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.
அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும்
மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று
இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.
இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளை யுடையது,
எல்லா வடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.
எல்லா வடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.
இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசை யாசிரியப் பாக்கள்.
4,5,7-ஆம் பாசுரங்கள் நிலை மண்டில வாசிரியப் பாக்கள்.
அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.
—————
ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.
ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –
இனி இவ் வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –
ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி ரூபம் தன்னையும் விட்டு
உபமானத்திலே இழிந்து அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–
ஆனையைக் கண்டார் -ஆனை-ஆனை -என்னுமா போலே –
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமையாலே ஏத்துகிறார்-
செக்கர் மா முகில் உடுத்து-முகில்-மா முகில்-செக்கர் மா முகில்-
மிக்க செம் சுடர் பரிதி சூடி –சஹஸ்ர கிரணங்கள் என்றால் போலே ஒரு ஸங்க்யை உண்டு இறே ஆதித்யனுக்கு —
அப்படி பரிச்சின்ன கிரணன் அன்றிக்கே அநேக ஆயிரம் கிரணங்களை யுடையான் ஒரு ஆதித்யன் வந்து
உதித்தாலே போல் ஆயிற்று திரு அபிஷேகம் இருப்பது –
அம் சுடர் மதியம் பூண்டு
தன்னுடைய -ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள பிரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கிற
ஆதித்யனைப் போலே அன்றிக்கே
சீதளமான கிரணங்களை யுடையவனாய் –
குறைதல் -நிறைதல்-மறு உண்டாதல் இன்றிக்கே -வைத்த கண் வாங்காதே கண்டு
இருக்க வேண்டும்படியான அழகை யுடைய சந்திரனைப் பூண்டு
(பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு இது கழுத்துக்கு ஆபரணம் -கண்டிக ஆபரணம் )-
பல சுடர் புனைந்த
மற்றும் பல நக்ஷத்ரங்களையும் -( க்ரஹங்களையும் -போன்ற) ஜோதிகளையும்
ஆபரணங்களாகப் )பூண்டு
சாய்வது போல் என்ன அமைந்து இருக்க உபமானத்திலும் கூசி கண் வளர்வது போல் -என்கிறார் –
திருமலை நம்பி எம்பெருமானார்க்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற இடத்தில்–
( மென்மையான காதை உடையவர் என்று சொல்லும் இடத்தில் ) பொன்னாலே தோடு பண்ணினால் இட
ஒண்ணாத படியான காதை யுடையராய் இருக்குமவரை அறிந்து இருக்கை யுண்டோ -என்றாராம் –
இங்கு உபமானத்தைச் சொல்லும் இடத்தில் உபமேயத்தைப் போலே
அங்கு உபமேயத்தைச் சொல்லும் பொது உபமானத்தை இட்டுச் சொன்னார் –
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6—ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து
பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் – ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே
இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்-
மேதகு
ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை –
மேன்மைக்குத் தக்கபடி என்றபடி –
மேவித் தகுதியாக என்றுமாம்-
இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ஸ்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.
மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமே யன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.
ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.
செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.
மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.
கவர் தலை-பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான் ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –
படுக்கையிலே ஏறுகிற இது தான் தம் பேறாக இருக்கையாலே –
ஸ்ரீ நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை சாதாரமாகப்
பார்த்து ஏறி அருளுமா போலே பெரிய ஆதாரத்தோடு யாயிற்று ஏறி அருளுகை –
தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –
நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –
மூ வுலகு அளந்த -தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்
சேவடியோயே –
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-
திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலை யிட்டுக் கிடக்கிறார்.
கண்ணழி வற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –
———
த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹ வை லக்ஷண்யம் சொன்னார் முதல் பாட்டில் –
அந்த த்யேய வஸ்துவினுடைய பக்கல் பிறக்கும் பரபக்தி தொடங்கி ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கையாலே
தத் விஷய பக்தியே அமையும் என்கிறது இரண்டாம் பாட்டில் –
முதல் பாட்டில் –வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று –அவை கர்ம ஞானங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க –
அனந்தரம் பிறக்கும் பரபக்தி பர ஞான பரம பக்தியை இறே உத்தேச்யமாகச் சொல்லிற்று –
அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அனுபாஷிக்கிறார் –உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை-என்கிற இவ்வளவாலே-
இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;-பரம பக்தர்களுடைய அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–
உருகி யுக்க அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்
நேரிய காதல் -அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது
அன்பில் இன்பு–பக்தியினால் உண்டான பரமபக்தி ரூபமான ப்ரீதியில் உள்ள இனிமை என்ன
ஈன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு-
இவைகளில் உள்ள இனிமையின் வை லக்ஷண்யம் ஆகிற அமுதக் கடலில் மூழ்கி –
ஒரு ரஸ சாகரமாய் இருக்கும் இறே –
விலக்ஷண விஷயமாகையாலும் –
இவனுடைய ருசியாலும்
ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் படியான மேன்மையை விட்டு-
மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெறுகைக்கு நினைக்குமோ-
உலகு படைத்து
ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத–சாந்தோக்யம் –62-3–
(அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது) என்கிற
சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் உண்டாக்கி –
உண்ட
உண்டான இவற்றுக்கு பிரளய ஆபத்து வர –
இவற்றை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷித்துப் பண்ணி அருளிய
வியாபாரத்தால் கண்ணழிவு அற்ற மேன்மை சொல்லுகிறது
எந்தை
ஸ்வாமித்வ ப்ரயுக்தமான மேன்மையை உடையனாய் இருந்து வைத்து –
மூ உலகு அளந்த
எத்தனை யேனும் தம்மைத் தாழ நினைத்து இருந்தபடியால்-தம்மை விஷயீ கரித்தவத்தால் வந்த நீர்மை சொல்லுகிறார்
மூ உலகு அளந்த –
இதனுடைய எல்லை தாமாக நினைத்து இருக்கிறார்
அறை கழல் சுடர் பூம் தாமரை
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தாய் அத்யுஜ்ஜ்வலமாய்
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளை
இத்தால் அழகு -சொல்லுகிறது
இம் மேன்மையாலும்
நீர்மையாலும்
வடிவு அழகாலும் விளைந்த-பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –
தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே
கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31-
(திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம்
இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான்
அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே
சூடுதற்கு அவாவு ஆர் உயிர்-சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –
உருகி யுக்க-அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்
அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்-ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்
நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது
அன்பில் இன்பு
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே
சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே
அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது
ஆகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி -சத்வ ஸூத்தவ் தருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் 7-26-2-
(உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது)
இத்யாதிகளை நினைக்கிறது –
நிலை நின்ற நினைவு என்னும் பக்தி அவஸ்தை -என்றபடி –
ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய ரஸ்யத்தையாலே இது தானே ரசிக்கும் இறே –
அது தான் என் போலே என்னில்
ஈன் தேறல்
அமுத சமுத்ரத்தில் கடைந்த அம்ருதம் போலே போக்யமாய் இருக்கும் –விஷயத்தினுடைய வை லக்ஷண்யத்தாலே –
விலக்ஷண விஷயமாகையாலும் -இவனுடைய ருசியாலும் ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் இறே
அமுத வெள்ளத்தானாம்
இன்ப வெள்ளத்திலே உளனாகையாகிற-இன்பத்தில் திளைத்துத் திக்கித் திணற வைக்கும் அன்றோ என்றபடி –
சிறப்பு விட்டு
இந்த பரம பக்திகளை யுடையனாகை யாகிறது இறே ஐஸ்வர்யம் —-அத்தை விட்டு
ஒரு பொருள்க்கு
இத்தை விட்டால் இனிப் பெற நினைப்பது இவ்வருகே சிலவை இறே –
அவை யாகிறன– தர்ம அர்த்த காம மோக்ஷங்களில் சொல்லுகிறவை இறே –
அவற்றை ஒன்றாக நினைத்து இராத அநாதரம் தோற்ற ஒரு பதார்த்தம் என்கிறார் –
அசைவோர் அசைக
அவை தான் இது போல் ஸூலபமாய் இராது யத்னித்து பெற வேண்டுமதாய் –
பெற்றாலும் பிரயோஜனம் அல்பமாய் இருக்கும் – அவற்றுக்கு ஆசைப்படுவோர் அங்கனம் கிலேசப்படுக –
புத்திமான்கள் இவற்றை ஸ்வீ கரிப்பதாக மநோ ரதிப்பார்களோ
திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு
ஐஸ்வர்யம் நிலை நின்று அது தானே யாத்ரையாய் இருப்பது – இத்தாலும் பலம் இல்லை இறே
-இத்தோடு அடுத்து
நல் வீடு பெறினும்
நல் வீடு என்று உத்தம புருஷார்த்தத்தைச் சொல்லுகையாலே
நடுவில் கைவல்ய புருஷார்த்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று
பெறினும்
இது தான் பெறக் கடவது என்று இருக்கை அன்றிக்கே-இதிலே தோள் மாறும்படி யானாலும்
மநோ ரதமாக இல்லாமல் பெற்றே தீர்ந்தாலும்
கொள்வது எண்ணுமோ
இவை ஸ்வீ கரிக்கக் கடவதான மநோ ரத சமயத்திலே தான் உண்டோ
ஐஸ்வர்யம் அஸ்திரம் ஆகையால் கழி யுண்டது –
ஆத்ம லாபம் பரிச்சின்னம் ஆகையால் கழி யுண்டது –
பகவத் புருஷார்த்தம் ஆசைப்பட்ட உடம்பை ஒழிய வேறு ஒரு உடம்பைக் கொண்டு போய் அனுபவிக்குமதாகையாலே கழி யுண்டது
அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே
இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )-விசார விஷயமோ –
ஆனாலும் சிலரும் நினையா நிற்கிறார்கள் என்னில்
தெள்ளியோர் குறிப்பு எண்ணுமோ
சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல
சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்
சார அசார விவேகஞ்ஞா காரீயம் சோ விமத்சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம் –நிகமன ஸ்லோகம்
(சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக் காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்யப்பட்டது) -என்றவாறு
கேடில் சீர் வரத்தானாம் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத் தன் நாடு நண்ணினும்
வீட தான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடும் ஆசை யல்லது ஓன்று கொள்வனோ குறிப்பில் –ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -108- இத்யாதிகளை இங்கே அனுசந்திக்கத்தக்கவை –
எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,-
அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.
இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனை என்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகு நாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்குவதே பரம ப்ராப்யம் என்றாதாயிற்று –
“அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.
“எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
“இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.
தெள்ளியார் அனுபவம் இங்கேயே தானே-விண்ணுளாரிலும் சீரியர் இறே
ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.
————
முதல் பாட்டில் அவன் வடிவு அழகைப் பேசி அனுபவித்தார் –
இவன் தன்னைப் பெற்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும்
பக்தியே இனிது என்றார் இரண்டாம் பாட்டில்
இப்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் அவன் தொடங்கி
ததீய சேஷத்வ பர்யந்தமாக -என்கிறது –
குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–
இவர்களும் தன்னோடு சமானருமாய்-அவனோ ஈஸ்வரன் -இவர்களோ ஈஸ்வரர்கள் -என்று கண்டவர்க்கு
இவர்கள் பக்கலிலேயும் ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி இறே தான் இவர்களுக்குக் கொடுத்து வைத்து இருக்கும் தரம்
அவர்களுடைய சரீரத்துக்கு ஆத்மாவுக்கும் நியாமகனாய் –
தன் அளவிலே அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நின்று –
அதுக்கு நியாமகனாய் –
அவர்களுக்கும் காரண பூதன் என்றவாறு-
உலகம் மூன்று நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ்–ஸ்ருதி பிரசித்தம் –-மூல பிரமாணத்தில் பறை சாற்றுவதாய் இருக்குமே
அகலம்-திரு மார்பு-சுடர் விளங்கு-கடையும் காலத்தில் திரு மார்பு ஆபரணம் அசைய அதற்க்கும் மங்களா ஸாஸனம்
வரை புரை-இத்யாதி–
அவன் ஆஸ்ரித அர்த்தமாகச் செய்யும் செயல்களில் இது ஒன்றும் அமையாதோ-இவனே ஆஸ்ரயணீயன் என்பதற்கு-
நளிர் கடல்-பொறி எழக் கடையச் செய்தேயும் அவனுடைய கடாக்ஷ மாத்திரத்தாலே கடல் குளிர்ந்த படி
கடந்த வேகத்தால் குமுறாதபடி நடுங்க என்னுதல்
நளிர் –குளிர்ச்சியையும்-நடுக்கத்தையும் காட்டும்
அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து
அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு--ஒப்பூண் உண்ணாமல்-
ஆள் ஆகவே-சேஷ பூதராக-சேஷத்வமே வடிவாக-
ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து–“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.–
ஓவாதே-ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –ஓவாது -ஒரு ஷணமும் விடாமல்
ஊழி தோறு ஊழி -சகல காலமும் என்றபடி –
ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க
கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்
இனி சேஷித்த காலமாகிலும் இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் சேஷ பூதராக ஆளாகவே ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –
அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது
இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி-
————
கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –
சர்வேஸ்வரன் தொடங்கி –ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது –
அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய வென்று-அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –என்று ஆயிற்று இருப்பது
ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி -அது தன்னைப் பலவாகி-ஆயிரமாக்கி –
அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் –
இவர் அவ்வளவு அமையாமல் முதலிலே கல்பத்தை விவஷித்து அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –
சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து
ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து
அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-
தனி வித்து ஒரு தானாகி –தான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.
தனி வித்து ஒரு தான் ஆகி–நிமித்த உபாதான சஹகாரி காரண த்ரயமும் தானே யாய்
வித்து -என்கையாலே –-காரண வஸ்து என்கை –
தனி -என்கையாலே —ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத்-1-
(நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் பிரமனும் இல்லை சிவனும் இல்லை )- என்றபடி அத்விதீயன் -என்கை
ஒரு -என்கையாலே-இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –
தான் ஆகி –கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்
இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி –இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக-
வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.
மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
“மேலென்றது பண்டென்றபடி,-வருமென்றது போனவென்றபடி.
ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே
ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்
ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் -இது அதுக்கு த்ருஷ்டாந்தம்
மூ உலகம் விளைத்த உந்தி-கீழும் மேலும் நடுவுமான உண்டான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திரு உந்தி யாயிற்று
அவனை ஒழியவே தானே இவை அடைய உண்டாக்கிற்றாயிற்று திரு உந்தி
திரு உந்தி என்ற ஒரு பத்மமாய்-அது அடியாக ஆயிற்று லீலா விபூதி அடைய உண்டாக்கிற்று
மாய கடவுள் — ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை
மா முதல் அடியே -மா முதல் மாயக்கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக்கடவுள் என்னுதல் –
மாயக் கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக் கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி -திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்
அடியே வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -உன் சேவடி செவ்வி திருக்காப்பு –என்றபடி
அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்–
——————–
மூ உலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?-என்றார் கீழே
நமக்கு மங்களா சாசனம் பண்ணப் புக்க உமக்குக் கருத்து என் என்னில் –உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ
மங்களா சாசனம் பண்ண அடுப்பது-என்று இந்தப் பிரசங்கத்தில் திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-
அத்தைப் பேசி அனுபவிக்கிறார்–
முதலிலே இவற்றை உண்டாக்கினோம் –
அநந்தரம் இவற்றுக்குக் காவலாக திக் பாலாதிகளைக் கை யடைப்பாக்கி நோக்கினோம் –
ஆகில் இவை பட்டது படுகின்றன -என்று கை வாங்கி இராதே –
ஸ்ரீ யபதியான உன்னை அழித்து இரப்பாளன் ஆக்கிக் கொடுத்து –
இட்டு வளர்ந்த கையைக் கொண்டு இரந்து- இந்திரன் கார்யம் செய்து –
தலைக் கட்டின செயல் ஒன்றையும் அனுசந்தித்தால்
உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ மங்களா சாசனம் பண்ண (வகுப்பது )அடுப்பது-என்று
இந்தப் பிரசங்கத்தில்-திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-அத்தைப் பேசி அனுபவிக்கிறார்
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5-
ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது-திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே
அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே
மா முதல் அடிப் போது -என்று–பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –அன்றிக்கே
மா முதல் அடிப் போது -என்றது-திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்
ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –
அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்
தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்
கற்பகக காவு பற்பல வன்ன –
பலவான கற்பகச் சோலை -போலே –இப்படி இருக்கிறது எது என்னில்
முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச் சோலை போலே இருக்கிறது –அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –
நெடியோய் –இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் -தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தப்பித்து -மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் –
நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ-மங்களா சாசனம் பண்ண
எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –சொல்லிக் காண்
நெடியோய்-நினைவிலே நெடியான்- திரு மேனியில் நெடியான்–திரு விக்ரமன் சர்வ ஸ்வாமி மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் –
நீ அன்றோ நெடியோன் –அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்-நீ அன்றோ என்றவாறு
———-
லௌகீகரைப் பார்த்தார் அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் –
விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –
நான் என்றும் என்னது என்றும் -பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு
இது இருந்தபடி என்-
தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க -அவர்கள் அது தானும் அறியாது இருக்க
அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை-தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்-–
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–
தன்னோடு ஒத்து இருப்பான் ஒருவனாய் -பவ உபகரண பூதனாய் –நித்ய சம்சாரியாய் இருப்பான் ஒருவனை
ஆஸ்ரயித்துப் பலம் பெறப் பார்த்த இது தான் நித்ய சம்சாரி யாக்கைக்கு கிருஷி பண்ணினான் ஆயிற்று
வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸூ கத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து
அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –இது என்ன படு கொலை என்கிறார்-
ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி-இரா நின்றார்கள்
உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி –
பின்னை கர்ப்பத்தில் தரித்து –
பிரசவ வேதனையை அனுபவித்து –
அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்
அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே
அவளை விட்டு
ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே
இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே
இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே
வகுத்த விஷயத்தை விட்டு
அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்
மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.
மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.
உலகினது இயல்வே
வகுத்த விஷயத்தைப் பற்றி-நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து-அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –
இது என்ன படு கொலை என்கிறார்
தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.
—————-
அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் -நாம் முந்துற முன்னம் இவ்வனர்த்தத்தைத் தப்பி
இவ்வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்
நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க
நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே –
இந்த லாபமே அமையாதோ-என்று-ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –
இப் புன்மை இன்றிக்கே இன்றிக்கே ஒழியப் பெற்ற இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-
இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-
திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் போல்
உகப்பின் மிகுதியால் மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் –
யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது –
தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ
நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-
நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் —முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே
மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி- முதலா யாவகை வுலகமும் யாவரும் அகப்பட –என்றார்.
சுடர் இரு விசும்பும் -என்றது-உண்டாம் இடத்திலே மற்றை நாலுக்கும் முன்னே உண்டாமது ஆகையால்
அழியும் இடத்தில்-அவை அழிந்தாலும் தான் சிறிது காலம் நின்று அழியுமது ஆகையால் வந்த புகரைப் பற்ற
சிறிது டன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்.
(கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்)
சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,
உடன் – ஏக காலத்திலே,
மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.
உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து,சிறிதாகிய உடலிலே –
பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொரு வகை.
நீ சர்வ ஆதார பூதனாம் அத்தனை போக்கி உன்னை ஒழிய புறம்பே ஒன்றுக்கு ஓன்று
ஆதாரமாக வல்லது ஓன்று உண்டோ –
அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார் -என்று–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று-இங்கு நம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் அற்று இருக்க பர்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணாது ஒழிகை இறே
இவள் அவனுக்காகை யாகிறது –
பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் – இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே
ஆகவே ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்
இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.
இதில் ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply