ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –54– நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் யதார்த்த ஸ்தாபனம் பண்ணி யருளின ஸ்வபாவத்தைக் கண்டு
பாஹ்ய சமயங்களுக்கும் வேதத்துக்கும் ஸ்ரீ திரு வாய் மொழிக்கும் உண்டான
ஆகாரங்களை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணினார் என்றும் –
வேதொத்தரணம்-பண்ணினார் என்றும் –
ஸ்ரீ ஆழ்வார்களுடைய திவ்ய சூக்திகளிலே தானே அவஹாகித்தார் என்றும் -சொன்னீர் –
ஆன பின்பு –
அத்தால் துர் மதங்களுக்கும் -வேதங்களுக்கும் -ஆழ்வாருடைய அருளிச் செயல்களுக்கும் உண்டான
ஆகாரத்தை சொல்ல வேண்டாவோ என்ன –
துர் மதங்கள் அடங்கலும் வேரோடு கூட நசித்துப் போந்தன –
வேதமானது பூ லோகத்தில் எனக்கு யாரும் நிகர் இல்லை -என்று கர்வித்து இருந்தது –
அருளிச் செயல்கள் எல்லாம்-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி நித்யாபிவ்ர்த்தங்களாய் கொண்டு இருந்தன –என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -ஸ்ரீ திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

பத உரை –
மண்ணுலகில் -பூ லோகத்திலே
ஈட்டிய -திரட்டிய
சீலத்து -சீல குணம் உடையரான
இராமானுசன் தன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இயல்வு -ஸ்வபாவத்தை
கண்டு-பார்த்து
நாட்டிய -தங்கள் தங்கள் யுக்தியால் நிலை நாட்டிய
நீசச் சமயங்கள் -கீழ்ப் பட்ட மதங்கள்
மாண்டன -அழிந்தன
நாரணனை-ஸ்ரீ சர்வேஸ்வரனை
காட்டிய -காண்பித்துக் கொடுத்த
வேதம்-வேதமானது
களிப்புற்றது -கர்வம் அடைந்தது
தென்-அழகிய
குருகை-ஸ்ரீ திரு நகரியில் எழுந்து அருளி இருக்கும்
வள்ளல்-வள்ளல் தன்மை வாய்ந்த -ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்த
வாட்டமிலா -ஒரு குறைவும் இல்லாத
வண் தமிழ் மறை -வள்ளல் தன்மை வாய்ந்த திரு வாய் மொழி
வாழ்ந்தது -வாழ்வு பெற்றது .

வியாக்யானம்
ஷூத்ரரான சேதனரோடே தம் பெருமையும் -அவர்கள் சிறுமையும் பாராதே -கலந்து பரிமாறி –
பூ லோகத்திலே மேன்மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஸ்வபாவத்தைக் கண்டு –
ஆதித்ய தர்சனத்தில் அந்தகாரம் நசித்து அம்புஜ ஜாதங்கள்முகம் மலருமா போலே –
ஸ்வ யுக்தி ஸ்தாபிதங்களாய் -வேத பாஹ்யங்கள் ஆகையாலே -தண்ணிதான சமயங்கள் நசித்தன .

பூர்வ பாகம் ஆராதன ஸ்வரூபத்தையும்
உத்தர பாகம் ஆராத்ய ஸ்வரூபத்தையும் -சொல்லுகையாலே
வேதைஸ் ச சர்வைரஹமேவ வேத்ய -கீதை -என்கிற உபய விபூதி யுக்தனான
ஸ்ரீ சர்வேஸ்வரனை பிரகாசிப்பித்த வேதம் ஆனது -நமக்கு இனி ஒரு குறை இல்லை -என்று-கர்வித்தது –

சர்வ பிரகார விலஷண்மான ஸ்ரீ திரு நகரியை தமக்கு வாசஸ்தானமாக உடையராய் –
பகவத் அனுபவ பரீவாஹா ரூபமான ஸ்வ உக்திகளை லோகத்துக்கு உபகரித்து அருளின பரம உதாரரான
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்ததாய் –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யம் ஆகையாலே ஒரு குறை இன்றிக்கே இருப்பதாய் –
ஜ்ஞான ப்ரப்ருதி மோஷ அந்தமான சகல பலங்களையும் கொடுக்கும் ஔ தார்யத்தை உடைத்தாய் இருக்கிற
திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழி ப்ராப்த ஐஸ்வர்யம் ஆயிற்று –

களிப்புறுதல்-கர்வித்தல்
வாட்டம்-சங்கோசம்
ஈட்டுதல்-திரட்டுதல்
இயல்வு-ஸ்வபாவம்–

நாட்டிய -அண்டை கொடுத்து பேசி வைத்த என்றபடி –
பேச நின்ற -ஸூலபத்தில் போக்க முடியாமல் நாட்டிய –
பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் – –
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் -இவை பத்தும் வீடே –
இஹ லோக பர லோக ஸமஸ்த பிரபன்ன ஜனங்களும் மங்களா சாசனம் –
தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே நூற்றாண்டு இரும் ஸ்ரீ சடகோபன் சொல் கேட்டு கை கூப்புகிறோம் வாழி வாழி

நாட்டிய நீசச் சமயங்கள் என்று தொடங்கி-
மண்ணுலகில் –
அஞ்ஞா னத்துக்கு விளை நிலமான பூ லோகத்திலே –

ஈட்டிய சீலத்து –
உபய விபூதி ஐச்வர்யத்தை பெற்ற தம்முடைய மஹாத்ம்யத்தையும் -லௌகிகருடைய சிறுமையும் பாராதே —
1-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே பால வ்ருத்த விபாகம் அற எல்லார்க்கும் குஹ்ய தமமாக தாம் பெற்ற சரம ஸ்லோகார்த்தத்தை வெளி இட்டு –
2–கொங்கில் பிராட்டியையும் -இரட்டை திருப்பதியில் மாடு மேய்க்கும் பெண் பிள்ளையையும் -மேல் நாட்டுக்கு எழுந்து அருளும் போது
3–காட்டிலே ஒரு இடையனையும் -ஊமை முதலானவர்களையும் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து கலந்து பரிமாறி –
மேல் மேல் என திரட்டிக் கொண்ட சௌசீல்யம் உடையவரான –
ஈட்டுதல் -திரட்டுகை –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய –

இயல்வு கண்டு –
பிரதிபஷ பிரதி ஷேபகத்வ தர்ம மார்க்க பிரதிஷ்டாபகத்வாதி ஸ்வபாவங்களைக் கண்டு –
இயல்வு -ஸ்வபாவம்

நாட்டிய நீச சமயங்கள் மாண்டன –
சோழ மண்டலத்தில் இருக்கிற திவ்ய தேசங்களில் ஸ்ரீ கோயில்களில் எல்லாம்-நைஷ்யடிம்பரான பாஷாண்டிகள் பிடுங்கிப் போகட்டு –
சிவாலயங்களை கட்டுவிக்கும் போது -ஸ்ரீ திரு மங்கை மன்னன் திருவவதரித்து அருளி –
அந்த பாஷாண்டிகளுடனே பிரசங்கித்து –அவர்களை வென்று திவ்ய தேசங்களை கட்டடங்க நிர்வஹித்தார் –

ஸ்ரீ ஆள வந்தார் சோழன் சபையிலே ருத்ர பஷ பாதிகளோடே பிரசங்கித்து -அவர்களை வென்று
அந்த ராஜாவாலே அர்த்த ராஜ்யத்தை வென்றார் –

இங்கே அப்படி இன்றிக்கே -இவர் தம்முடைய காலத்தில் -தானே
அவ்யயபதேசன் என்பான் ஒருவன் -சிவாத்பரதரம் நாஸ்தி -என்று சாசனத்தை எழுதி –
இந்த பூ மண்டலத்திலே ஸ்தாபிப்பதாக-அநேக பகவத் பாகவத் ரோகங்களைப் பண்ணி கொண்டு போந்து
நீசரும் மாண்டனர் -என்கிறபடியே –
இவருடைய யத்னம் இன்றிக்கே -இவர் தம்முடைய அதிப்ராத்திமா பிரபாவத்தை கண்ட போதே –
கழுத்திலே புண் பட்டு கிரிமி கண்டனாய் நசித்தான் -என்றும்-

காளஹஸ்தியில் -நின்றும் சைவர்கள் திரண்டு வந்து ஸ்ரீ திரு வேம்கடமுடையானை தங்களுடைய-கந்த நாயனார் -என்று
வழக்கு பிடித்து அக் காலத்திலே-ராஜாவான-யாதவராயனாலேயும் பரிகரிக்க அரிதாம் படி-திருமலையை ஆக்ரமிக்க –
அப்போது ஸ்ரீ திருவேம்கடமுடையானுடைய விஷயீ காரத்தாலே ஸ்ரீ எம்பெருமானார்-எழுந்து அருளி –
அவர்களை பராஜிதர் ஆக்கினவாறே -அவர்கள் எல்லாரும் தலை அறுப்புண்டு போனார்கள் என்றும் –

மேல் நாட்டிலே பௌத்த சமயத்தார் பிரபலராய் அவ்விடத்திலே ராஜாவும் அவர்களுடைய சிஷ்யனாய் –
அத்தேசத்தில்-தத் வ்யதிரிக்தர் இருக்கவும் கூட அரிதாய் போந்து இருந்த காலத்தில் –
இவரும் யதார்ச்சிகமாக அத் தேசத்தில் சில நாள்-எழுந்து அருளி இருக்க -அந்த ராஜாவும் இவருடைய வைபவத்தை சேவித்து –
அந்த பௌத்தருக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் பிரசங்கம் பண்ணுவித்து -அவர்களுடைய குத்ர்ஷ்டி கல்பனத்தையும் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய-சமீசீன கல்பனத்தையும் கண்டு வித்தனை இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்து-
பட்டாசார்யன் காலத்திலும் நசியாதே வேர் பாய்ந்து இருக்கிற பௌத்தருடையவும் ஜைனருடையவும்-தலைகளை யறுப் பித்து
அத்தேசத்திலே அப்படிப்பட்ட நீச சமயங்கள் நடையாடாதபடி பண்ணினார்-என்றும் பிரசித்தம் இறே –

நாட்டிய -இத்யாதி –
ஆதித்ய தர்சனத்தில் அந்தகாரம் நசிக்குமா போலே இவருடைய-வைபவங்களைக் கண்டு
பிரமாண தர்க்கங்கள் அன்றிக்கே -ஸ்வ யுத்தி ஸ்தாபிதங்களாய் –
எத்தனை-தரமுடையவராலும் நிவர்திப்பிக்க அசக்யங்களாய் -வேத பாஹ்யங்கள் ஆகையாலே அதி நீசங்களாய் இருக்கிற-
அவைதிக சமயங்கள் எல்லாம் நிர்மூலமாகப் போயின –

நாட்டிய –சமயங்கள் மாண்டன –
தாமே நிற்கும் தகுதி அற்றவை -பர சமயங்கள் .
அவரவர்கள் தாங்கள் தாங்கள் கற்பித்த யுக்திகளாலே நிலை நிறுத்தப் பட்டவை அவை –
பிரமாண பலத்தாலே நற் பொருளை ஸ்ரீ எம்பெருமானார் நாட்டிய பின்பு
மெய்க்கு எதிரே பொய் போலவும் -கதிரவனுக்கு எதிரே நள்ளிருள் போலவும் –சமயங்கள் தாமாக மாண்டன
மாண்டன –
என்றமையின் -இனி அவை தலை தூக்க மாட்டாமை தோற்றுகிறது

நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது —
நாராயண பர ப்ரஹ்ம தத்வம் நாராயணா பர நாராயணா பரஞ்சோதி ராத்மாநாராயணா –
பர யச்சகிம் சிஜ்ஜகத்-யஸ்மின் தர்ச்யதே ச்ரூயதேபிவா -அந்தர்பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
நாராயணாத் பிரம்மா ஜாயதே -என்று தொடங்கி நாராயண பரத்வத்தை காட்டுகிற வேதமானது-
பூர்வோத்தர பாதங்கள் இரண்டிலும் வைத்துக் கொண்டு –
பூர்வ பாகம் ஆராதன கர்ம ஸ்வரூப பிரதிபாதகம்-ஆகையாலும் –
உத்தர பாகம் ஆராத்ய பிரம்ம ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதி பாதகம் ஆகையாலும்-
இரண்டுக்கும் ஏக சாஸ்த்ரவத்தை இவ் எம்பெருமானார் சமர்த்தித்து –
ஆசேது ஹிமாசல பிரதிஷ்டை-பண்ணுகையாலே -இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை என்று –
தேஜிஷ்டமாய் கோயில் சாந்து பூசிக் கொண்டு-இந்த லோகத்தில் நாவலிட்டு சஞ்சரியா நின்றது –
களித்தல் -கர்வித்தல் –

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது –
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -வேத மயன்-திருவாய்மொழி 2-7 2- – – என்றபடி –
நாரணன் உலகு அனைத்திற்கும் நாதன் –உபய விபூதி நாயகன் -என்றபடி –
வேதத்தில் முற்பகுதி -இறைவனுடைய ஆராதன ரூபமான கர்மத்தையும்
பிற்பகுதி ஆராதிக்கப்படும் இறைவனுடைய ஸ்வரூப ரூபாதிகளையும் காட்டுகையாலே வேதம் நாராயணனைக் காட்டியதாகக் கூறினார் .
முற்பகுதி பிற்பகுதி இரண்டையும் சேர்த்து-ஒரே சாஸ்திரம் என்கிற சித்தாந்தத்தை காட்டி அருளுகிறார் –

ஸ்ரீ நாரணனைக் காட்டிய வேதம் என்கையாலே
ஸ்ரீ நாரணனைக் கூறுவதிலேயே வேதத்திற்கு நோக்கம்-என்று தெரிகிறது –
வேதைஸ் ச சர்வை அஹமேவ வேத்ய -எல்லா வேதங்களாலும் நானே அறியப்-படுகிறேன் -என்று ஸ்ரீ கீதையில்
ஸ்ரீ கண்ணன் அருளிச் செய்ததும் இங்குக் கருதத் தக்கது .
அத்தகைய வேதம் இனி எவராலும் அவப்பொருள் கூறி நம்மைக் குறைப் படுத்த முடியாது என்று-செருக்குக் கொண்டது -என்கிறார்
ஸ்ரீ வேதாந்த தேசிகன்–த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத ப்ரணயிநீ-என்று
மூன்று வகைப் பட்ட வேதமும் சோர்வடைவதைப் போக்கடிப்பதைத் தனக்கு விநோதமாக விரும்புவது -என்று
ஸ்ரீ யதிராஜ சப்ததியில் கூறி உள்ளமை காண்க –

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது –
ஸ்ரீ திருவழுதி நாடு என்றும் –
ஸ்ரீ தென் குருகூர் என்றும் -என்கிறபடி
தென் தேசத்துக்கு எல்லாம் அலங்கார பூதமாய் -தர்சநீயமான-ஸ்ரீ திரு நகரியை தமக்கு திரு அவதார ஸ்தலமாய் உடையராய் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை-அனுபவிக்க அனுபவிக்க உள்ளடங்காமே தத் அனுபவ பரிவாக ரூபங்களாய் –
மொழி பட்டோடும் -கவியமுதின் நுகர்ச்சி உறுமோ முழுதுமே -என்று
தம்மாலே ஸ்லாக்கிக்கப் படுமவையான ஸ்வ ஸூக்திகளை-லோகத்தார் எல்லாருக்கும் சர்வ அதிகாராம் ஆகும் படி உபகரித்தருளும்
பரமோதாரரான ஸ்ரீ நம் ஆழ்வாராலே-அருளிச் செய்யப்பட்டதாய் –
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யம் ஆகையாலே ஒரு குறையும் இன்றிக்கே-இருப்பதாய் –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -என்கிறபடி ஐ ஹிக-புருஷார்த்தத்தையும் –
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே -இவை பத்தும் பிடித்தார் பிடித்தார்-வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -என்கிறபடியே ஆமுஷ்மிகமான பரம புருஷார்த்தையும்
கொடுக்கக் கடவதான ஔதார்யத்தை உடைத்தாய்-இருக்கிற திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழி யானது –
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -என்கிறபடியே-
சமஸ்த பிரபன்ன ஜனங்களும் மங்களா சாசனம் பண்ணும்படி உஜ்ஜ்வலம் ஆய்த்து –
வாட்டம் -சங்கோசம் –

தென் குருகை –வாழ்ந்தது
உதார சந்தர்சயன் நிரமமீத புராண ரத்னம்-என்று பராசரர் என்னும் வள்ளல் எல்லாப் பொருள்களுக்கும் காண்பிப்பதற்காக –
ஸ்ரீ புராண ரத்னம் -என்னும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை-இயற்றி அருளினார் -என்றபடி-
மொழி பட்டோடும் கவி யமுதத்தை உலகிற்கு உபகரித்தமையின்-ஸ்ரீ நம் ஆழ்வாரை வள்ளல்-என்கிறார் .
வேதம் போலே அவப்பொருள் காண்பதற்கு இடம் ஆகாமையின் ஒரு குறையும் இல்லாதது -என்பது தோன்ற –
வாட்டமிலா மறை-என்கிறார் .
பொருள் விளங்கும்படி தமிழில் அமைந்தமையின்-வண் தமிழ் மறை -என்கிறார் .
வள்ளல் தந்த மறையும் -வண் மறை யாயிற்று –
தமிழ் மறைக்கு வண்மையாவது –
ஞானம் முதல் வீடு -வரை எல்லாப் பயன்களையும் அளிக்கும் தன்மை .

கதிரவன் வருகை கண்டதும் -தாமரை மலர்வது போல்
எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது
வண் தமிழ் மறை வாழ்வுற்றது -என்க –
ஆதித்ய தர்சனத்தில் அந்த காரம் நசித்து அம்புஜ ஜாதங்கள்-அம்புஜாதிகள்- முகம் மலருமா போல மலர

மண்ணுலகில் –இயல்வு கண்டே –
சீலம் ஈட்ட வேண்டிய இடம்-மண்ணுலகம் ஆதலின் –மண்ணுலகில் -என்கிறார்
பாமர மக்களிடம் உள்ள சிறுமையையும்-தம்மிடம் உள்ள பெருமையையும் பாராது அவர்களோடு புரை யற
கலந்து பரிமாறி கலந்து-இம் மண்ணுலகத்தில் சீலத்தை ஸ்ரீ இராமானுசர் திரட்டிக் கொண்டார் -என்க
சீல குணம் வாய்ந்தவராய் ஸ்ரீ எம்பெருமானார் பாமரரோடும் பழகி -அவர்களை ஆட் கொள்ளலின்-
நீசச் சமயங்கள் அவர்கள் இடமும் இடம் பெற மாட்டாமல் மாண்டு ஒழிந்தன -என்க –

நாரணனைக் காட்டிய வேதம்
நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் காரணம் கிரிசை கருமம்
இவை முதல்வன் எந்தை –வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் 2-7-2-

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது

வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை –10-6-11-
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை–8-1-11-
வண் குருகூர் சடகோபன் சொன்ன தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்-8-2-11-
தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரத்துள் இவை-7-5-11-
அரியை ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை–7-8-11-
குருகூர்ச் சடகோபன் சொன்ன தூய ஆயிரத் திப்பத்தால்–6-4-11-
தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து–5-2-11-

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading